தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lankan workers and youth praise International May Day rally இலங்கை தொழிலாளர்களும் இளைஞர்களும் சர்வதேச மே தின பேரணியை பாராட்டுகின்றனர்By our correspondents Use this version to print| Send feedback கடந்த ஞாயிறன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏற்பாடு செய்திருந்த இணையவழி மே தின கூட்டத்திற்கு பதிவு செய்திருந்த பலர் மத்தியில் இலங்கையின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் அடங்குவர். உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் இந்த வரலாற்று நிகழ்வில் கலந்து கொண்ட சிலருடன் பேசினார். அது ஒரு சக்திவாய்ந்த மற்றும் புதிய அனுபவம் என்று அனைவரும் கூறினர். அமெரிக்க, பிரிட்டன், ஜேர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை பேச்சாளர்களின் உரைகளை முழுமையாக கிரகித்துக்கொள்ளும் பொருட்டு நிகழ்வை மீண்டும் கேட்க முடியுமா என்று சிலர் கேட்டனர். கொழும்பில் இருக்கும் ஒரு ஆசிரியரான குணரத்ன கூறியதாவது: "ஒரு உலகப் போர் எங்களுக்கு எதிராக வந்துகொண்டிருக்கின்றது என்பதை பற்றி கேட்கும்போது அது ஒரு உண்மையான எச்சரிக்கையாகும். கிறிஸ் மார்ஸ்டன், ஏகாதிபத்திய சக்திகள் குறிப்பாக கருங்கடல் பகுதியில் தமது இராணுவ கட்டமைப்பைக் கொண்டு எப்படி ரஷ்யாவை இராணுவரீதியில் சுற்றிவளைக்கின்றன என்ற முக்கிய விவரங்களை வழங்கினார். ரஷ்யாவுடன் விரைவில் ஒரு போர் வெடிக்கக் கூடும். "டேவிட் நோர்த், உலக பொருளாதாரம் மற்றும் தேசிய அரசு முறைக்கும் இடையேயான முரண்பாட்டிலேயே போர்களுக்கான காரணம் உள்ளது என்று சுட்டிக்காட்டினார். தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே இந்த தேசிய அரசு அமைப்பு முறையை ஒழிக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். இவை கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள். "2,000க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்திற்கு பதிவுசெய்துள்ளனர் என்பதை கேள்விப்பட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். என் 17 வயது மகனும் கூட பெரும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்ததோடு உக்ரேன் நிலைமையை கண்டுபிடிக்க வரைபடங்களை தேடிக்கொண்டிருந்தார். ஒரு வர்க்கம் என்ற முறையில் உலகம் முழுவதும் எம்மை போன்று சிந்திப்பவர்கள் உள்ளனர் மற்றும் ஒரு பெரிய பணியைப் பற்றி கலந்துரையாட ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்றுகூடினார்கள் என்று தெரிந்துகொள்ளும் போது மகிழ்ச்சியாக உள்ளது." ஒரு மாணவரும் பகுதி நேர ஆசிரியருமான மகேஷ் தெரிவித்ததாவது: "உலகம் முழுவதும் அமெரிக்காவால் வேகமாக ஒரு அணுவாயுத யுத்தத்தை நோக்கி இழுபட்டுச் செல்வது பற்றி ஒரு நல்ல புரிதலை இந்தக் கூட்டம் வழங்கியது. இந்த ஆபத்துக்கான அடிப்படைக் காரணம், அனைத்து நாடுகளிலும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் உலகின் உயர்மட்டத்தில் உள்ள 85 முதலாளிகள் உலக மக்கள் தொகையில் பாதிப்பேரின் சொத்துக்களின் மதிப்பை விட அதிகமான தொகையை வைத்துள்ளதே என்று பேச்சாளர்கள் விளக்கினர். உலகப் போருக்கான தயாரிப்பு உட்பட ஒவ்வொரு முடிவும், முதலாளிகளின் இந்த சிறிய அடுக்கினரின் நலன்களுக்கு ஏற்பவே எடுக்கப்பட்டு வருகிறது. "முதலாளித்துவம் இந்த சமத்துவமின்மையை ஒழிக்க அல்லது உலகப் போரை தடுக்க இலாயக்கற்றது என்று மே தின பேச்சாளர்கள் சுட்டிக்காட்டினார். நான் பேச்சாளர்கள் விளக்கிய பிரதான கருத்துடன் உடன்படுகின்றேன் -எங்கள் தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த அமைப்பு முறைமையை சீர்திருத்த முடியாது. மக்கள் விடுதலை முன்னணி [எதிர்க் கட்சி] போன்ற கட்சிகள், முதலாளித்துவ ஆட்சியை சீர்திருத்த முடியும் என்று கூறுகின்றன." இலங்கையின் தெற்கில் மாத்தறையில் வசிக்கும் சம்பத், மூன்று நாட்களுக்கு முன்னர் கொழும்பில் நடந்த மே தின விரிவுரையில் கலந்துகொண்ட பின்னர், இணையவழி கூட்டத்தில் பங்கேற்க முடிவுசெய்திருந்தார். "நான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச மே தின கூட்டம் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்துக்கு முக்கியமானதாக இருக்கும் என்று நினைத்தேன், என் பெயரை பதிவு செய்தேன். நான் என் மனைவி மற்றும் சில நண்பர்களையும் கூட பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டதோடு நேற்றிரவு நாம் அனைவரும் என் வீட்டில் ஒன்றாக இருந்து உரைகளை கேட்டோம்," என்று அவர் விளக்கினார். "உங்கள் பேச்சாளர்கள் சக்திவாய்ந்த முறையில் முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாடுகள் மற்றும் ஏகாதிபத்திய உட் பகைமைகளையும் பற்றி விளக்கினார். அதே நேரத்தில், அவர்கள் வளர்ந்துவரும் சமூக சமத்துவமின்மைக்கும் போருக்கும் இடையிலான உறவு பற்றி விரிவாக கூறினர். இந்த அறிவு எனக்கு மிகவும் புதியதாக உள்ளது. "இந்த கூட்டத்திற்கு முன், நான் அமெரிக்கா, சீனா, ஜேர்மனி மற்றும் ரஷ்யா அனைத்தும் ஒரு நிலையில் இருந்து செயற்படுவதாக நினைத்தேன், சில நேரங்களில் நான் சீனா மற்றும் ரஷ்யாவை ஆத்திரமூட்டல்காரர்களாக பார்த்தேன். ஆனல் உங்கள் பேச்சாளர்கள் காட்டியது போல், இவை முதலாளித்துவ ஊடகங்கள் மற்றும் போலி இடது கட்சிகளால் உந்தப்பட்ட கருத்துக்களாக இருக்கின்றன. அவற்றுக்கு மாறாக, அமெரிக்கா முக்கிய ஆத்திரமூட்டல்காரனாக இருப்பதோடு உக்ரேனிலான நெருக்கடி இந்த ஆத்திரமூட்டல்களின் ஒரு நேரடி விளைவாகும். பேச்சாளர்கள் விளக்கியது போல், இந்த நடவடிக்கைகள் ஒரு அணுவாயுத போருக்கு வழிவகுக்கும். அது நிறுத்தப்பட வேண்டும். "உங்கள் சர்வதேச கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆமாம், இது போன்ற ஒரு பேரழிவு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்துடன் மட்டுமே நிறுத்தப்பட முடியும், நான் இந்த கூட்டத்தின் மூலம் அந்த வலிமையை பார்த்தேன்." இலங்கையின் வடமேற்கு பகுதியில் உள்ள சிலாபத்தில் வசிக்கும் ஒரு மீனவர், ஒரு சக தொழிலாளியுடன் சர்வதேச மே தின கூட்டத்தை கேட்டிருந்தார். இது "தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல அனுபவம்," என்று அவர் கூறினார். "பேச்சாளர்கள் கூறிய எல்லாம் உண்மை மற்றும் திரையில் காட்டப்பட்ட படங்கள் நிலைமையை புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இலங்கையில் உள்நாட்டு போர் தமிழீழ விடுதலைப் புலிகளை இராஜபக்ஷ அரசாங்கம் தோற்கடித்ததுடன் முடிவடைந்த போதிலும், மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இப்போது, இலங்கை அரசாங்கம், இந்திய கடற்படை இரண்டும் ஒவ்வொரு நாளும் மீனவர்களை கைதுசெய்கின்றன. எங்களுக்கு இந்த நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை." மத்திய மலையக பகுதியில் பண்டாரவளையில் உள்ள ஒரு ஆசிரியர் கூறியதாவது: "நான் உங்களிடம் இருந்து கிடைக்கும் எல்லா கட்டுரைகளையும் வாசிப்பேன். என் மனைவி மற்றும் ஒரு நண்பருடன் இணைந்து நாங்கள் இறுதி வரை மே தின உரைகளை கேட்டோம். நாம் ஆங்கிலத்தில் அந்தளவு பரீட்சியமானவர்கள் அல்ல. ஆனாலும் எங்களால் ஓரளவிற்கு கூட்டத்தை புரிந்துகொள்ள முடிந்தது. "நாங்கள் இதற்கு முன் உங்கள் மே தின உரைகள் கேட்டதில்லை. ஆனால் அவை நாங்கள் ஊடகங்களில் படிப்பவற்றை விட மிகவும் வேறுபட்டவை. உலகில் ஒரு மாற்றம் இருக்க வேண்டும். வேறு ஒரு உலகம் இருக்கிறது என்பதை மாணவர்கள் அறிய வேண்டும் என்பதற்காக நான் மாணவர்களுடன் இந்த பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி வருகிறேன். மக்கள் இந்த அமைப்பு முறையின் கீழ் துன்பப்படுகின்றார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். இந்த அமைப்பு முறையை மாற்ற முடிந்தால் மட்டுமே ஒரு மாற்றம் வரும் என்று நான் நினைக்கிறேன்." கொழும்புக்கு வடக்கே கட்டுநாயக்கவை சேர்ந்த சமிந்தவுக்கு அனைத்து உரைகளையும் கேட்க முடியவில்லை. ஆனால் டேவிட் நோர்த்தின் உரையையும் நிக் பீம்ஸின் உரையில் ஒரு பகுதியையும் கேட்டிருந்தார். தான் முழு மே தின நிகழ்வையும் கேட்க விரும்புவதாக கூறிய அவர், சோசலிச சமத்துவக் கட்சி மேலும் பிரச்சினைகளை பற்றி விவாதிக்க எப்போது கூட்டம் நடத்தும் என்று கேட்டார். "நான் ஒரு சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினருடன் பேசிய பின்னர் ஒரு சர்வதேச மே தின யோசனையால் கவரப்பட்டு விட்டேன். டேவிட் நோர்த் அமெரிக்காவில் நெருக்கடி பற்றியும் இந்த சமூக அமைப்புமுறை நல்லது அல்ல அதை மாற்ற வேண்டும் என்றும் விளக்கினார்," என்று அவர் தெரிவித்தார். "இங்கு இலங்கையில், அரசாங்கங்கள் மாறலாம், ஆனால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டாது, இப்போது நிலைமை மோசமடைந்து வருகிறது. நான் உக்ரேன் அபிவிருத்தியை பற்றி படித்துள்ளேன், உக்ரேன் ஒரு வெடிபுள்ளியாகி வருகின்றது என்ற நோர்த்தின் விளக்கத்துடன் உடன்படுகின்றேன். ஒரு போர் வெடித்தால் என்ன நடக்கும்? அது உலகம் முழுவதும் பேரழிவாக இருக்கும்." |
|
|