World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French unions use May Day marches to cover for Hollande government பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மே தின ஊர்வலங்களை ஹாலண்ட் அரசாங்கத்திற்கான பாதுகாப்பு மறைப்பாகப் பயன்படுத்துகின்றன
By Antoine Lerougetel சோசலிஸ்ட் கட்சியின் (PS) சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிரான பரந்த மக்களின் கோபத்தை திசைதிருப்புகின்ற நோக்கத்துடன், நான்கு தொழிற்சங்கக் கூட்டமைப்புகளின் ஒரு கூட்டணி, ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் போலி-இடது கூட்டாளிகளின் ஆதரவுடன், பிரான்ஸ் எங்கிலும் வியாழனன்று மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. பாரிஸ் ஆர்ப்பாட்டத்திற்கான கூட்டறிக்கை, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியால் (PCF) வழிநடத்தப்படும் CGT, கல்வித் துறையில் இருக்கும் பெரும்பான்மை தொழிற் சங்கமான FSU, FO, மற்றும் Solidaires ஆகியவற்றின் பாரிஸ் பிரிவுகளால் விநியோகிக்கப்பட்டது. இத் தொழிற் சங்கங்கள் பிரதான முதலாளிகள் கூட்டமைப்பான Medef ஐ சிடுமூஞ்சித்தனமாய் விமர்சித்திருந்தன. உண்மையில் அதனுடன் தான் இவை PS’ இன் வெட்டுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்-ஆதரவு கொள்கைகளுக்காக PS அரசாங்கத்தை நெருக்கி வருவதாகவும், “நமது அணிதிரள்வு எதனையும் மாற்றமுடியும்” என்றும் கூறி அவை மோசடித்தனத்தில் ஈடுபடுகின்றன. PS இன் கொள்கைகள் “அரசியல் செவிட்டுத்தன”த்தால் உத்தரவிடப்படுவதாக தொழிற்சங்கங்கள் கூறுவது ஒரு சிடுமூஞ்சித்தனமான பொய் ஆகும். சோசலிஸ்ட் கட்சி அது ஸ்தாபிக்கப்பட்டது முதலாகவே ஒரு முதலாளித்துவக் கட்சியாகவே இருந்து வந்திருக்கிறது. 1983 இல் அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரான்சுவா மித்ரோனின் “சிக்கன நடவடிக்கைத் திருப்பம்” முதலாகவே அது தொழிலாளர்-விரோத கொள்கைகளை பகிரங்கமாக முன்னெடுத்து வந்திருக்கிறது. தான் என்ன செய்கிறோம் என்பது அதற்கு மிக நன்றாகவே தெரியும். தாயகத்தில் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துவது வெளிநாட்டில் ஏகாதிபத்திய போர்களை நடத்துவது இதனைத் தான் அது செய்து வருகிறது. தொழிற்சங்கங்களின் ஐக்கியத்திற்காக அவற்றைப் பாராட்டி அவற்றின் பாத்திரத்தை போற்றிப் புகழ புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) முயன்றது: “பாரிஸ் பிராந்தியத்தில் 2002க்குப் பின்னர் முதன்முறையாக மே 1 க்காக FO ஆனது, CGT, FSU மற்றும் Solidaires ஆகியவற்றுடன் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கிறது.” “அவற்றுடன் ஒன்றுசேர்வதற்காக...” CFDT போன்ற PS உடன் இணைந்த மஞ்சள் தொழிற்சங்கங்களையும் அது பாராட்டுகிறது. “போராடுவதற்கான ஐக்கியத்திற்காக ஒரு ஆழமான அபிலாஷை இருப்பதை இது சந்தேகத்திற்கிடமில்லாமல் வெளிப்படுத்துகிறது” என்றது. எத்தனை வெறுமையான பொய்கள்! உண்மையில் இது, PS உடன் வெட்டுகளுக்கான பேச்சுவார்த்தை நடத்தவும் PSக்கு எதிராகவும் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் அபிவிருத்தி காணக் கூடிய தொழிலாளர்களின் எந்தவொரு சுயாதீனமான போராட்டத்தையும் தடுத்து நிறுத்தவும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கும் NPA போன்ற அதன் போலி-இடது ஆதரவாளர்களுக்கும் இருக்கும் ஆழமான ஆசையையே வெளிப்படுத்துகிறது. இத்தகையதானதொரு போராட்டத்திற்கான மிகப்பெரும் முட்டுக்கட்டையே, இதே போலி-இடது சக்திகள் தான். இவை தான், தங்களது கூர்மையற்ற ஆர்ப்பாட்டங்களும் தாம் PS உடன் அணிவகுப்பதுமே இடது அரசியலின் ஒரே சாத்தியமான வடிவம் என்பதான பொய்யான அத்துடன் விரக்தியளிக்கக் கூடியதொரு கூற்றை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த இற்றுப் போன குட்டி முதலாளித்துவ அரசியல்தான் நவ-பாசிச FN பிரான்சின் ஒரே எதிர்க்கட்சியாக காட்சி தந்து அதிகமான ஆதரவை வென்றெடுப்பதை அனுமதிக்கிறது. இதைப் போல போலி-இடது Lutte ouvrière (தொழிலாளர் போராட்டம்) குழு, போராடுவதற்கு தொழிற்சங்கங்களுக்கு அழுத்தமளிக்கும் பொருட்டு ஊர்வலம் நடத்த தொழிலாளர்களை அழைக்கிறது. “நடவடிக்கைகள் மிகுந்த இந்த நாட்களில் தொழிலாளர்களின் ஒரு வலுவான பங்கேற்பு... அது மட்டுமே தொழிற்சங்கத் தலைவர்களை மற்ற நடவடிக்கை முன்மொழிவுகளை செய்வதற்குக் கொண்டுவர முடியும், அது மட்டுமே எல்லாவற்றுக்கும் மேல் அரசாங்கத்தினை பின்வாங்க வைக்க முடியும்.” இது முழு அபத்தமானது. அரசாங்கத்திற்கு பின்வாங்கும் எண்ணமில்லை என்பது மட்டுமல்ல, PS உடன் சிக்கன நடவடிக்கை கொள்கைகளை திட்டமிடுவதிலும் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் தொழிற்சங்க அதிகாரத்துவம்தான் செயலூக்கத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தை “பின்வாங்கச்” செய்வது அவற்றின் நோக்கமாக இல்லை, மாறாக தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்ப்புக்கு முகம் கொடுக்கும் நிலையிலும் PS தனது தாக்குதல்களை தொடர்ந்து முன்னெடுக்க உதவுவதே அவற்றின் நோக்கமாய் இருக்கிறது. PS' பொறுப்புடைமை ஒப்பந்தம், முதலாளிகளுக்கான 35 பில்லியன் யூரோ வரிச் சலுகை மற்றும் 50 பில்லியன் யூரோ செலவின வெட்டுகளுடன், மார்ச் 5 அன்று தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் கையெழுத்தாகியிருக்கிறது. CGT மற்றும் FO இதில் கையொப்பமிட மறுத்தன, ஆனாலும் ஒப்பந்தத்தை தாங்கள் எதிர்க்கவில்லை என்பதைத் தெளிவாக்கி விட்டன. ஒப்பந்தம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டிருந்த சமயத்தில், CGT தலைவரான தியரி லுபோன் தனது அமைப்பு அணிதிரட்டுவது “பொறுப்புடைமை ஒப்பந்தத்திற்கு எதிராக அல்ல, மாறாக ஊதியங்கள், வேலைகள், மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான நிதியாதாரம் ஆகியவை குறித்தாகும்” என்று உறுதியளித்தார். PS முற்றிலுமாக மதிப்பிழக்கின்ற நிலைமைகளின் கீழான கட்டுப்படுத்தவியலாத சமூக வெடிப்பு குறித்து மிரட்சியுற்று, இந்த தொழிற்சங்கங்களும் அவற்றின் போலி-இடது ஆதரவாளர்களும் PS ஐ ஊக்குவிக்க சிடுமூஞ்சித்தனத்துடன் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். PS அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஏறக்குறைய இரண்டாண்டுகள் தாக்குதல் நடத்தி விட்டிருந்ததற்குப் பின்னர், PS உடன் நூற்றுக்கணக்கான நகரங்களில் கூட்டணி வைத்திருந்த PCF உடன் இணைந்து, ஜோன்-லுக் மெலன்சோனின் இடது கட்சியும் மற்றும் NPAவும் நகராட்சித் தேர்தல்களின் பட்டியலில் இடம்பிடித்திருந்தன. இத்தேர்தல் PSக்கு ஒரு படுதோல்வியை உருவாக்கித் தந்ததோடு நவ-பாசிச FNக்கு ஒரு கணிசமான முன்னேற்றத்தையும் அளித்தது. இதுவரை கேள்விப்பட்டிராத 12 சதவீத ஒப்புதல் தரமதிப்பீட்டைக் கொண்டுள்ள ஹாலண்ட் இதற்குப் பதிலிறுப்பாக ஒரு சிக்கன-நடவடிக்கை ஆதரவு, சட்டம்-ஒழுங்கு களத்தின் அடிப்படையில் மானுவேல் வால்ஸை பிரதமராக நியமனம் செய்தார். நாடாளுமன்றத்தில் வால்ஸின் அரசாங்கத்திற்கு பாரிய அளவில் வழிமொழிந்த அதே நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஒரு மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்பதாய் மெலன்சோன் கூறிக் கொண்டார். ஞாயிறன்று அவர் தொலைக்காட்சியில் தெரிவித்தார், “மானுவேல் வால்ஸ் சிறுபான்மையாக ஆக்கப்பட்டு, அதே பிரதிநிதிகளைக் கொண்டு இன்னொரு பெரும்பான்மை உருவாக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்”. “இடது முன்னணி வாக்காளர்கள், பசுமைக் கட்சி வாக்காளர்கள், மற்றும் PS வாக்காளர்கள்” மூலம் அவரது கட்சியின் பரிந்துரையிலேயே பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர் என்பதை பார்வையாளர்களுக்கு அவர் நினைவூட்டினார். மெலன்சோன் பாரிஸில் ஏப்ரல் 11 அன்று, கிரேக்க தீவிர இடது கூட்டணி (SYRIZA) தலைவரான அலெக்சிஸ் சிப்ராஸ் மற்றும் ஐரோப்பிய ஆணையத்திற்கான தலைவர் பதவிக்கான ஐரோப்பிய இடது கட்சி (PEL) வேட்பாளர் ஆகியோருடன் இணைந்து PEL இன் ஐரோப்பிய தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடக்கி வைத்தார். தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களை அடித்து நொருக்குகின்ற ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இறையாண்மைக் கடனை மறுதலிப்பதற்கெல்லாம் வெகு அப்பால், சிப்ராஸ், அக்கடன் பெரும்பாலும் திருப்பி செலுத்தப்பட்டு விடும் என்று வங்கிகளுக்கு மறு உறுதி அளிக்கிறார் ஆனால் அதன் ஷரத்துகளை மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தையும் யூரோவையும் பாதுகாக்க அவர் உறுதியளித்துள்ளார். ஐரோப்பியத் தேர்தல்களில் இந்தக் கட்சிகளுடன் இணைந்து பிரச்சாரம் செய்ய NPA அழைப்பு விடுத்திருக்கிறது. உக்ரேனில் ஒரு பாசிசத் தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான ஒரு அரசாங்கத்தை அமர்த்துவதில் ஜேர்மன் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களுடன் கூட்டுச் சேர்ந்து ஹாலண்ட் அரசாங்கம் செய்கின்ற நடவடிக்கைகளுக்கும் அது முழு ஆதரவைக் கொடுத்து வந்திருக்கிறது. பெருவணிகம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் இந்த அத்தனை “இடது” முட்டுத்தூண்களில் இருந்தும் தொழிலாள வர்க்கமும் இளைஞர்களும் முறித்துக் கொள்வதன் மூலமும் புதிய போராடும் அமைப்புகளின் உருவாக்கத்தின் மூலமும் மட்டுமே தொழிலாளர்கள் தங்களது உரிமைகளையும் சமூக நலன்களையும் பாதுகாக்க முடியும். மே 11 ஞாயிறன்று பாரிஸில் நடைபெறவிருக்கும் ICFI இன் ஐரோப்பிய தேர்தலுக்கான கூட்டத்தில் கலந்து கொள்ள அத்தனை வாசகர்களும் அழைக்கப்படுகிறார்கள். விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். |
|