World Socialist Web Site www.wsws.org |
The criminalization of political opposition in America அமெரிக்காவில் அரசியல் எதிர்ப்பை குற்றமாக்குதல்
Patrick
Martin “தற்போதைய கண்மூடித்தனமான ஜனநாயக விரோத முறைமைகள் குடியுரிமை-இல்லாதவர்களை, முக்கியமாக மத்திய-கிழக்கில் இருந்து வந்தவர்களை இலக்கில் வைக்கின்ற அதேவேளையில், அவை ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை உரிமைகள் மீதான ஒரு அடிப்படை தாக்குதலையும் உள்ளடக்கி உள்ளன. இத்தகைய தாக்குதல்கள் அமெரிக்க பிரஜைகளை நோக்கி, குறிப்பாக அரசாங்க கொள்கைகளை எதிர்ப்பவர்களுக்கு எதிராக, உடனடியாகவோ அல்லது வரவிருக்கும் காலத்திலோ, விஸ்தரிக்கப்படும்.” இவ்வாறு உலக சோசலிச வலைத் தளம் ஒரு டஜன் ஆண்டுகளுக்கு முன்னர், தேசிய பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றபட்டமை (Patriot Act) குறித்தும், புஷ் நிர்வாகத்தின் இராணுவ தீர்ப்பாயங்களின் ஸ்தாபிதம் குறித்தும் எழுதுகையில் அறிவித்தது. அந்த எச்சரிக்கையை, ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகள் முழுவதுமாக நிரூபணம் செய்துள்ளன, புஷ்ஷின் கீழ் நடத்தப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதை ஒபாமா நிர்வாகத்தின் "பயங்கரவாதத்திற்கு எதிரான" கொள்கைகள் பிரதிநிதித்துவம் செய்கின்றன. நியூயோர்க்கின் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டங்களின் போது ஒரு பொலிஸ்காரரைத் தாக்கினார் என்பதன் மீது 25 வயதான சிசிலி மெக்மில்லனுக்கு மே 5ல் வழங்கப்பட்ட தீர்ப்பு, மற்றும் சிகாகோ பொலிஸ் உளவாளிகளால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறை மீதான விவாதங்களில் பங்கெடுத்தமைக்காக மூன்று நேட்டோ-விரோத போராட்டக்காரர்களுக்கு ஏப்ரல் 25இல் விதிக்கப்பட்ட நீண்ட கால சிறை தண்டனை ஆகியவற்றோடு, அமெரிக்காவின் அரசியல் எதிர்ப்பாளர்களைக் குற்றவாளிகளாக்குவது கடந்த மாதம் ஒரு புதிய கட்டத்திற்கு வந்திருந்தது. அந்த இரண்டு விடயங்களின் சூழல்களுமே மூர்க்கத்தனமாக உள்ளன, குற்றவாளிகள் அல்லாத தனிநபர்கள் மீது கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருவதோடு, ஒபாமா நிர்வாகம் மற்றும் பெருநிறுவன அமெரிக்காவின் கொள்கைகளை எதிர்க்கும் அரசியல் எதிர்ப்பாளர்கள், அதற்காக பொலிஸ் வன்முறை மற்றும் ஆத்திரமூட்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நியூ யோர்க் மற்றும் சிகாகோ நகரில் அமைதியான, சட்டபூர்வமான போராட்டங்களில் பங்கெடுத்தவர்களோடு சம்பந்தப்பட்ட அந்த விவகாரங்கள், வெறுமனே ஜோடிக்கப்பட்டவை என்பதோடு கடுமையான குற்றங்களுக்கு வழங்கபடும் தண்டனை வழங்கப்பட்டது. மார்ச் 17, 2012இல் மன்ஹட்டன் ஜூக்கோட்டி பூங்காவில் நடந்த ஓர் ஆர்ப்பாட்டத்தைக் கலைத்த பொலிஸ் நடவடிக்கையின் போது, முரட்டுத்தனமாக சிசிலியைப் பிடித்து இழுத்தபோது ஒரு நியூ யோர்க் நகர காவல்துறை சிப்பாய் மீது கவனக்குறைவாக அவரது முழங்கை பட்டதற்காக சிசிலி மெக்மில்லன் ஏழு ஆண்டுகால சிறை தண்டனையை முகங்கொடுக்கிறார். இந்த ஆர்ப்பாட்டம் பெருநிறுவன பேராசை மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிரான வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டங்கள் முடிய இருந்த தறுவாயில் நடந்தது. தீர்ப்பு மே 19ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மெக்மில்லன் அவரது காயங்களை ஆதாரமாக காட்ட அந்த வழக்கின் நீதிபதி மறுத்துவிட்டார், அதேவேளையில் பெயர் வெளியிடாமல் யூ-டியூபில் வெளியான அந்த சம்பவம் மீதான ஒரு தெளிவில்லாத வீடியோவைக் காட்ட வழக்கறிஞரை அனுமதித்தார், அந்த வீடியோ பொலிஸ் தரப்பிற்கு ஆதரவாக சம்பவத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. மெக்மில்லனின் விவகாரத்தில் எந்தளவிற்கு அநீதி மிக வெளிப்படையாக இருந்ததென்றால், பன்னிரெண்டு நீதிமன்ற நடுவர்களில் ஒன்பது பேர் அப்பெண்மணிக்கு ஒரு சிறை தண்டனை வழங்குவதற்கு மாறாக நன்னடத்தைக் காலத்தில் வைக்க வேண்டுமென கோரி நீதிபதிக்கு எழுதி இருந்தனர். நேட்டோ 3 விவகாரத்தில், அரசாங்க பொய் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மூன்று இளைஞர்கள், 22 வயதான பிரைன் சர்ச், 26 வயதான பிரென்ட் பெட்டர்லி மற்றும் 28 வயதான ஜேர்டு சேஸ். அவர்களுக்கு முறையே ஐந்து, ஆறு மற்றும் எட்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களின் "குற்றம்" இரண்டு இரகசிய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது, அந்த பொலிஸார் மே, 2012இன் சிகாகோ நேட்டோ உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, அம்மூன்று பேரையும் குடிக்க வைத்து, பொலிஸ் நிலையங்கள், ஒபாமா தேர்தல் பிரச்சார அலுவலகம், மற்றும் மேயர் ராஹ்ம் எமானுவேலின் வீட்டில் மொலொடொவ் கலவையை (எரிபொருள் நிறைந்த போத்தல்) எறிவதாக பேச வைத்தனர். அவர்கள் மூவரும் சில வெற்று பீர் பாட்டில்களில் எரிவாயுவை நிரப்ப தூண்டப்பட்டனர், ஆனால் அந்த சட்டவிரோத ஆயுதங்களில் எதுவும் ஒருபோதும் அவர்கள் தங்கியிருந்த அந்த வீட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்படவில்லை. அவர்கள் மூவரும் உண்மையில் அதுபோன்ற தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தார்கள் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் அங்கே காட்டப்படவில்லை. ஆயினும், அவர்களை பயங்கரவாதிகளாக காட்டுவதில் இருந்து மற்றும் பெடரல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மாதிரியில் அமைந்த இலிநோய் மாநில சட்டத்தின் அடிப்படையில் அவர்களைத் தண்டிப்பதில் இருந்து அது ஒன்றும் வழக்கைத் தடுத்துவிடவில்லை. உள்ளூர் நடுவர்கள் அவர்களை பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தனர், ஆனால் ஆபத்தான சாதனங்களை — பீர் பாட்டில்கள் — குறைந்தளவிலேனும் வைத்திருந்தமைக்காக அவர்களைக் குற்றஞ்சாட்டினார்கள், அதற்காகவே அவர்களுக்கு கணிசமான சிறை தண்டனைகள் வழங்கப்பட்டன. இந்த பொய் வழக்குகள், இப்போது வழக்கமாக மாறிவிட்ட ஒரு வடிவத்தைப் பின்பற்றி வருகின்றன, அதன்படி தனிநபர்கள் அரசியல்ரீதியாக செயல்பட்டு வந்தாலோ அல்லது ஆத்திரமூட்டுபவர்களாக இருந்தாலோ இலக்கில் வைக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக ஜோடிக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலோ அல்லது பொலிஸ் முகவர்களின் தூண்டுதல் இல்லாமல் இருந்திருந்தால் ஒருபோதும் நடந்திருக்காத நடவடிக்கைகளுக்காகவோ தண்டிக்கப்படுகிறார்கள். அவற்றில் சில முக்கிய சமீபத்திய சம்பவங்கள்: * நியூ யோர்க் நகரில் குறிப்பிட்ட இடங்களில் குண்டு வைக்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கண் பார்வை இல்லாத ஷேக், ஒமர் அப்துல்-ரஹ்மானுக்காக வழக்காடிய வழக்கறிஞர் லென்னி ஸ்டீவர்டுக்கு 2010இல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை நெறிமுறைகளை மீறி, ஸ்டீவர்டு அவரது கட்சிக்காரரின் செய்திகளைப் பொதுமக்களிடம் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டார், பின்னர் கேன்சரால் மரணத்தை எதிர்கொண்டிருந்த நிலையில், அவரது 74வது வயதில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்த பெண்மணி விடுவிக்கப்படுவதற்கு முன்னர் நான்காண்டுகள் அவர் சிறையில் கழித்திருந்தார். * மினியாபொலிஸ் மற்றும் சிகாகோவில் இருந்த இரட்டை நகர யுத்த எதிர்ப்பு குழு மற்றும் சுதந்திர பாதை சோசலிச அமைப்பு அங்கத்தவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் செப்டம்பர் 2010இல் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அந்த குழுவோடு சம்பந்தப்பட்டவர்களில் சிலர் கொலம்பியா மற்றும் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்திற்கு விஜயம் செய்திருந்ததாக அதில் "குற்றச்சாட்டு" கூறப்பட்டது. ஒபாமா நிர்வாகம் அந்த தேடுதல் வேட்டைகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் வகைமுறைகளின்படி "பயங்கரவாதத்திற்கான பொருள்வகை ஆதரவின்" கீழ் நியாயப்படுத்தியது. * ஏறத்தாழ நேட்டோ 3 விவகாரங்களுக்கு ஒத்த சூழலின் கீழ், ஒரு நெடுஞ்சாலை பாலத்திற்கு குண்டு வைக்கும் ஒரு சதித்திட்டம் என்று கூறி, கிளெவ்லாந்தில் ஐந்து இளைஞர்களை "அரச-நிராகரிப்பாளர்கள்" என்பதாக 2012இல் சிறையில் அடைக்கப்பட்டு குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு இரகசிய உளவாளியைப் பயன்படுத்தி அந்த "சதித்திட்டம்" உருவாக்கப்பட்டது. வோல் ஸ்ட்ரீட் போராட்டக்காரர்களில் செயலூக்கத்தோடு இருந்தவர்கள் சிக்க வைக்கும் நடவடிக்கைகளில் இலக்கில் வைக்கப்பட்டனர். இரகசிய செயல்பாட்டாளர்களிடம் இருந்து அவர்கள் வெடிமருந்துகள் வாங்கியதாக அந்த ஐவரையும் ஒப்புக் கொள்ள செய்ய ஆறு மாதங்கள் தேவைப்பட்டது, அது தான் பின்னர் கைது நடவடிக்கைகளுக்கு இட்டு சென்றது. கைது செய்யப்பட்ட ஐவரில் இருவருக்கு மனநோய் பிரச்சினைகள் இருந்ததாக கூறப்பட்டது. அவர்களுக்கு 6இல் இருந்து 11.5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. * போலாந்து, ஓர்லோன் மற்றும் சீட்டெல் மற்றும் ஒலெம்பியா, வாஷிங்டனில் நடந்த வோல் ஸ்ட்ரீட் விரோத போராட்டக்காரர்களின் வீடுகளில் ஜூலை 2012இல் FBIஆல் சோதனைகள் நடத்தப்பட்டன. 2010 சோதனைகளைப் போலவே, கனரக ஆயுதங்களைத் தாங்கிய டஜன் கணக்கான ஆயுதமேந்திய பெடரல் முகவர்கள் கதவுகளை உடைத்ததோடு, தகர்க்கும் வெடி மருந்துகளைப் பயன்படுத்தினார்கள், அங்கிருந்தவர்களை அவர்களின் துப்பாக்கி முனையில் படுக்கையில் இருந்து இழுத்து வந்தார்கள், கணினிகள், இலக்கியங்கள், பதாகைகள் மற்றும் இதர வெளிப்படையான அரசியல் சார்ந்த பொருட்களைக் கைப்பற்றினார்கள். ஒரு வீட்டிற்கு காட்டப்பட்ட ஒரு உத்தரவாணை, “அரசாங்க விரோத அல்லது அரசு-நிராகரிப்பு இலக்கியம் அல்லது ஆவணங்களை" பறிமுதல் செய்வதற்காக என்று மேற்கோளிட்டு காட்டியது. இந்த அனைத்து விவகாரங்களின் அரசியல் முக்கியத்துவம் என்னவென்றால் அவை நேரடியாகவோ அல்லது எப்பீஐ, நீதித்துறை மற்றும் பெடரல் அரசாங்கத்தின் இதர அமைப்புகளின் அரசியல் ஆசிர்வாதத்துடனோ ஒபாமா நிர்வாகத்தால் நடத்தப்பட்டன. மேலே அளிக்கப்பட்ட சான்றுகள் வெறுமனே தனித்தனியான சான்றுகள் அல்ல, மாறாக ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிராக மற்றும் உள்நாட்டில் வேலைகள், வாழ்க்கை தரங்கள் மீதான இடைவிடாத தாக்குதல்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் மத்தியில் ஒரு பரந்த இயக்கம் எழும் போது பரந்தளவில் எடுக்கப்படக் கூடிய ஒடுக்குமுறை முறைமைகளுக்கு பரிசோதனை விடயங்களாக இவை அமைகின்றன. அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரிவோ அல்லது, நீதித்துறை உட்பட முதலாளித்துவ அரசின் எந்தவொரு அமைப்போ இதுபோன்ற ஜனநாயக உரிமைகள் மீதான வலிமை மிக்க தாக்குதல்களுக்கு எதிராக சுண்டு விரலைக் கூட உயர்த்தாது. இதில் யாருக்கேனும் ஐயமிருந்தால், கடந்த ஆண்டு போஸ்டன் தொடர் ஓட்ட போட்டி குண்டுவெடிப்பிற்குப் பின்னர் போஸ்டனில் நடத்தப்பட்ட இராணுவ-பொலிஸ் அடைப்பை நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். அவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்ற நீதியரசர் அண்டொனின் ஸ்காலியா, இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானிய-அமெரிக்கர்களின் பாரிய கைது நடவடிக்கையை மேற்கோளிட்டு கூறியதையும் குறிப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது அவர் கூறுகையில், ஒரு மிகப் பெரிய அமெரிக்க யுத்த நிலைமைகளின் கீழ் "அதே போன்றவை நிகழாது என்று நீங்கள் நினைத்தால் உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள்" என்று அறிவித்தார். 1980களின் மத்தியில், ரீகன் நிர்வாகம் நூறு ஆயிரக் கணக்கான மத்திய அமெரிக்க புலம்பெயர்ந்தோர்கள், நிகாரகுவா மற்றும் எல் சால்வடார் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பாளர்களாக இருக்கக் கூடியவர்களின் பாரிய கைது நடவடிக்கைக்கு திட்டங்களை (ஆப்ரேஷன் ரெக்ஸ் '84) வகுத்திருந்தது. ஈரான் மீதான ஒரு அமெரிக்க தாக்குதல் அல்லது சீனா அல்லது ரஷ்யா உடனான யுத்தம் போன்ற வரக்கூடிய சம்பவங்களுக்கும், அதே போன்ற திட்டங்கள், அதைவிட இன்னும் அபிவிருத்தி செய்யப்பட்ட வடிவத்தில், இப்போதும் இருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்தவொரு நபரையும் உலகின் எந்தவொரு இடத்திலும் கைது செய்ய மற்றும் பிடித்து வைக்க தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் (2012) திட்டவட்டமாக அமெரிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வழங்குகிறது, எந்தவித குற்றச்சாட்டுக்களோ, ஆதாரங்களோ, அல்லது வழக்குகளோ இல்லாமல் "பயங்கரவாத" குற்றச்சாட்டுக்களின் மீது அமெரிக்காவிற்கு உள்ளேயே இதை நடத்துவதும் இதில் உள்ளடங்கும். மேலும் எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளியீடுகள் எடுத்துக்காட்டுவதைப் போல, அமெரிக்க அரசாங்கம் அதுபோன்ற ஒடுக்குமுறைக்கு இலக்கில் வைக்கப்பட்ட தனிநபர்களின் மீது அரசியல் ஆவண கோப்புகளை உருவாக்க அதன் பரந்த உளவுப்பிரிவு மற்றும் தரவு திரட்டும் எந்திரத்தைப் பயன்படுத்தி வருகிறது. அரசியல் பொய் வழக்குகளின் அடிப்படையில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள நேட்டோ 3 மற்றும் சிசிலி மெக்மில்லன் மற்றும் ஏனைய அனைவரையும் விடுவிக்குமாறு சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது. ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பும், பொலிஸ்-அரசு முறைமைகளை இல்லாதொழிப்பதும், பெருநிறுவன மற்றும் நிதியியல் பிரபுத்துவத்தின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அவர்கள் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான எதிர்ப்பில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக ஒன்று திரட்டுவதோடு இணைக்கப்பட வேண்டும். |
|