World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lanka: SEP election campaign explains danger of war இலங்கை: சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் பிரச்சாரம் யுத்த ஆபத்தைப் பற்றி விளக்கியது
By our
correspondents சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐவைஎஸ்எஸ்இ) அமைப்பினதும் உறுப்பினர்கள், கொழும்பு தலைநகரில் இருந்து 59 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அவிசாவளையில் தொழிலாளர்கள், இளைஞர் மற்றும் மாணவர் மத்தியில் கடந்த வாரம் பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டனர். மே 29 நடக்கவுள்ள மேல் மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 43 வேட்பாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி நிறுத்தியுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரைகள் உட்பட சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை பிரச்சாரக் குழுவினர் விநியோகித்தனர். சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நகர்வுகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள யுத்த அபாயம் பற்றிய சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்களின் எச்சரிக்கையையிட்டு குறிப்பாக மாணவர்கள் ஈர்க்கப்பட்டனர். தனியார் வகுப்புகளுக்கு செல்லும் மாணவர் குழுவினருடன் பிரச்சாரக் குழுவினர் நடத்திய கலந்துரையாடலில், “மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கிய [உலக] அபிவிருத்திகள் பற்றி நீங்கள் குறிப்பிட்டது உணர்வைத் தூண்டுகிறது” என ஒரு இளம் மாணவர் தெரிவித்தார். யுத்த அச்சுறுத்தல் என்ற விடயம் இலங்கை மக்களுக்கு “முக்கியமானதாக” இருப்பது ஏன் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள விரும்பினர். “அத்தகைய விடயங்களை நான் செய்தியில் பார்த்ததில்லை” என ஒரு மாணவன் கூறினார். உக்ரேனில் அமெரிக்க ஆதரவு சதி சம்பந்தமாக ரஷ்யாவுடனும், மற்றும் கிழக்கு மற்றும் தென் சீனக் கடல் பரப்பிலான பிராந்திய முரண்பாடுகள் சம்பந்தமாக சீனாவுடனும், வாஷிங்டனில் உள்ள ஒபாமா நிர்வாகம் முன்னெடுக்கும் ஆத்திரமூட்டல்களைப் பற்றி இலங்கை ஊடகங்களும் ஏனைய அரசியல் கட்சிகளும் மௌனம் காப்பதால், மக்கள் அதைப் பற்றி அறியாமல் இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல. இந்த புவிசார்-அரசியல் பதட்டங்களுக்குள், குறிப்பாக சீனாவை இராஜதந்திர ரீதியிலும் இராணுவ ரீதியிலும் தனிமைப்படுத்தி சுற்றி வளைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசியாவுக்கான திருப்பத்திற்குள் ஏற்கனவே இலங்கையும் இழுக்கப்பட்டுள்ளது என்பதை பிரச்சாரக் குழுவினர் விளக்கினர். பெய்ஜிங்குடனான கொழும்பு அரசாங்கத்தின் வளர்ச்சியடைந்துவரும் உறவை கைவிடுமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க, தமிழ் பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கடைசி கட்டத்தில் இலங்கை அரசாங்கம் இழைத்த யுத்தக் குற்றங்களை அமெரிக்கா பாசாங்குத்தனமாகப் பயன்படுத்திக்கொள்கின்றது. ஒரு மாணவன் தெரிவித்ததாவது: “நீங்கள் விளக்கும் வரை அதை [மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை மீதான அமெரிக்க அழுத்தத்தை] பற்றி நான் அவ்வாறு பார்க்கவில்லை.” இலங்கை அமெரிக்காவுக்கு நெருக்கமாக நகர்ந்தால் “அதுவும் யுத்த பதட்டங்களுடன் நெருக்கமாகின்றது” என்பதை தான் புரிந்துகொண்டதாக இன்னொரு மாணவன் கூறினார். அவிசாவளைக்கு அருகில் உள்ள ஹங்வெல்லையில் தண்ணீர் மாசடைவது தொடர்பாகவும் பிரச்சாரக் குழு கலந்துரையாடியது. அது ரப்பர் கையுறைகள் தயாரிக்கும் டிப்ட் புரடக்ட்ஸ் தொழிறைசாலையினாலேயே இடம்பெறுகிறது என கிராமத்தவர்கள் சந்தேகிக்கின்றனர். கடந்த மாதம் இந்த நீர் மாசடைதலுக்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் பல தடவை போராட்டங்கள் நடத்தியிருந்தனர். இதே கம்பனிக்கு சொந்தமான, வெலிவேரியவில் உள்ள வெனிக்ரோஸ் தொழிற்சாலையும் தண்ணீர் மாசடைதல் சம்பந்தமாக இதே போன்ற போராட்டங்களை எதிர்கொண்டது என்பது உள்ளூர் மக்களுக்கு தெரிந்த விடயமே. கடந்த ஆகஸ்ட்டில், அரசாங்கம் அனுப்பிய இராணுவம் வெலிவேரிய ஆர்ப்பாட்டத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து மூன்று இளைஞர்களைக் கொன்றது. குடி தண்ணீர் மாசடைந்திருப்பதால் ஏற்கனவே சுகாதாரப் பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக கிராமத்தவர்கள் சந்தேகிக்கின்றனர். டிப்ட் புரடக்ட் தொழிற்சாலையில் சாரதியாக கடமையாற்றும் ஒருவரின் மனைவி தெரிவித்ததாவது: “நீர் மாசடைவதால் நாங்கள் அனைவரும் தொழிற்சாலையை எதிர்க்கின்றோம். ஆனால் தொழிற்சலை மூடப்பட்டால் நாம் அனைவரும் பாதிக்ப்படுவோம். அதைப் பற்றி எவரும் கதைப்பதில்லை. தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு எதிராக கிராமத்தவர்களை இருத்த சிலர் முயற்சிக்கின்றனர். எங்களுக்கு துப்பரவான தண்ணீர் அவசியம், எங்களுக்கு தொழிலும் தேவை. அவற்றை எப்படி பாதுகாப்பது என்பது எமக்குத் தெரியவில்லை.” வாழ்க்கையின் சகல அங்கங்களையும் கூட்டுத்தாபனங்களின் இலாபத்துக்காக அடிபணியச் செய்யும் முதலாளித்துவ அமைப்பு முறையையே தூக்கிவீசப் போராடாமல், சுற்றுச் சூழலையோ தொழில்களையோ பாதுகாக்க முடியாது என பிரச்சாரக் குழுவினர் விளக்கினர். அவிசாவளை, புவக்பிடியவில் உள்ள எல்ஸ்டன் ரப்பர் பெருந்தோட்டத்துக்கும் பிரச்சாரக் குழு சென்றது. இலங்கையில் உள்ள தொழிலாள வர்க்கத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் மோசமாக சுரண்டப்படும் தட்டினராவர். தொழிற்சங்கமாக செயற்பட்டுவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இதொகா) உறுப்பினரான ஒரு தொழிலாளி, கொடூரமான தொழில் நிலைமைகளை சுமத்துவதில் நிர்வாகத்துக்கு ஆதரவாக அதன் செயற்பாட்டை விவரித்தார். ஜனாதிபதி இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் இதொகா பங்காளியாக இருப்பதோடு, அந்த தொழிற்சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஒரு அமைச்சரவை அமைச்சருமாவர். “எங்களில் அநேகமானவர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள்” என ஒரு பெருந்தோட்டத் தொழிலாளி விளக்கினார். “நாளொன்றுக்கு சேகரிக்கப்பட வேண்டிய 7 கிலோகிராம் இரப்பர் பாலை எங்களால் சேகரிக்க முடியாவிட்டால், எங்களுக்கு அரை நாள் சம்பளமே கிடைக்கும். அதேபோல், கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடும் போது தொழிற்சங்கங்களும் நிர்வாகங்களும் அறிவித்த 450 ரூபா நாள் சம்பளத்தையும் எங்களால் பெற முடியாது. ஒரு மாதம் நாங்கள் 25 நாட்கள் வேலை செய்யாவிட்டாலும், எங்களுக்கு வருகைக்கான கொடுப்பனவு கிடைக்காது.” வெயில் நாட்களில், இரப்பர் பால் சேகரிக்கும் இலக்கை அடைய முடியாது. ஏனைய தொழிலாளர்கள் பெருந்தோட்ட வரிசை வீடுகளுக்கு குழுவினரை அழைத்தனர். அவர்கள் அங்கு மிகவும் ஆபத்தான முறையில் சேதமடைந்துள்ள வீடுகளில் நெருக்கமான நிலைமைகளில் வாழ்கின்றனர். அவிசாவளை பிரதானமாக இரப்பர் உற்பத்தி செய்யும் பிரதேசமாகும். இங்கு பிரமாண்டமான கம்பனிகளும் அதேபோல் சிறு தோட்ட உரிமையாளர்களும் பெருந்தோட்டங்களை வைத்திருக்கின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி தசாப்தங்களில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போதே இரப்பர் பெருந்தோட்டங்கள் நிறுவப்பட்டன. அநேகமானவர்கள் தமிழ் பேசும் தொழிலாளர்களாவர். இவர்கள் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்காக தென் இந்தியாவில் தமிழ் நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்டவர்களின் பிள்ளைகளாவர். இந்தப் பிரதேசம் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் கோட்டைகளில் ஒன்றாக இருந்தது. பிலிப் குணவர்தன மற்றும் என். எம். பெரேரா உட்பட போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் (பிஎல்பீஐ) பல தலைவர்கள், 1930களின் கடைப் பகுதியில் இந்தப் பிரதேசங்களில் தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். எனினும் பிஎல்பீஐ 1951ல், லங்கா சமசமாஜக் கட்சியுள் (லசசக) கரைத்து விடப்பட்டது. நீண்டு வந்த சீரழிவை அடுத்து, 1964ல் கூட்டரசாங்கம் ஒன்றில் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்த லசசக, தொழிலாள வர்க்கத்தையும் சோசலிச முன்னோக்குக்கான போராட்டத்தையும் காட்டிக்கொடுத்துவிட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை அவிசாவளை நகர மண்டபத்தில் சோசலிச சமத்துவக் கட்சி கூட்டமொன்றை நடத்தியது. யுத்த ஆபத்தையும் மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநயாக உரிமைகள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல்களுடன் அது தொடர்புபட்டிருப்பதையும் பேச்சாளர்கள் விளக்கினர். ஏனைய கட்சிகளின் பிரச்சாரத்தைப் போல், சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் வாக்குகளை “சுரண்டிக்கொள்ளும்” பிரச்சாரம் அல்ல, மாறாக அது “சோசலிச வேலைத் திட்டத்தை விளக்குவதன் மூலம் எதிர்வரும் போராட்டங்களுக்கு வெகுஜனங்களைத் தயார் செய்கின்றது” என சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் வேட்பாளர் சிசில் கமகே தெரிவித்தார். உக்ரேனில் அமெரிக்க தலைமையிலான ஆத்திரமூட்டல்களை சுட்டிக்காட்டிய ஐவைஎஸ்எஸ்இ குழு உறுப்பினர் சஞ்ஜய ஜெயசேகர, இளஞர்களுக்கு யுத்தத்தையும் வறுமையையும் மட்டுமே முதலாளித்துவம் வழங்கியுள்ளது எனத் தெரிவித்தார். ஸ்ராலினிச அதிகாரத்துவத்தினரால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்துள்ள விளாடிமிர் புட்டின் தலைமையிலான ரஷ்ய அரசின் பிற்போக்கான மற்றும் அரசியல் ரீதியில் வங்குரோத்தான பண்பையும் அவர் சுருங்கக் கூறினார். உக்ரேனிய, ரஷ்ய மற்றும் உலகத் தொழிலாளர்களும் அரசியல் ரீதியில் சுயாதீனமாக போராட வேண்டியதன் அவசியத்தை விளக்கிய அவர், “அனுவாயுத யுத்தத்தை நோக்கிய நகர்வை நிறுத்துவதற்கான ஒரே வழி, உலக சோசலிச வேலைத் வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதே” எனத் தெரிவித்தார். ஜெயசேகர பல்கலைக்கழகங்களில் வெட்டுக்களையும் கண்டனம் செய்தார். களனிப் பல்கலைக் கழகத்தில் சுமார் 800 மாணவிகள் தமது தங்குமிட வசதியை இழந்தனர். பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அரசாங்கம் வழங்கும் ஒரே பதில் அடக்குமுறையை அதிகரிப்பதே என அவர் எச்சரித்தார். இந்தத் தேவைக்காக பொலிசும் துருப்புக்களும் விசேடமாக பயிற்றப்படுகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி அரசியல் குழு உறுப்பினர் W.A. சுனில், உலக அபிவிருத்திகள் மற்றும் உழைக்கும் மக்கள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை விவரித்தார். சோசலிச சமத்துவக் கட்சி அதன் தேர்தல் பிரச்சாரத்தின் மையத் தொனிப்பொருளாக இராணுவவாத மற்றும் யுத்த அச்சுறுத்தலை எடுத்துக்கொண்டது ஏன் என அவர் விளக்கினார். உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியே இந்த யுத்தப் பதட்டங்களுக்கு பின்னால் உள்ள காரணியாகும். “ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் கவிழ்க்காமல், ஒரு புதிய உலக யுத்த ஆபத்தில் இருந்து எங்களால் மீள முடியாது” என அவர் கூறினார். சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு நனவுபூர்வமான யுத்த விரோத இயக்கத்தின் அவசியத்தை சுனில் விளக்கினார். சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே இந்த முன்னோக்கை அபிவிருத்தி செய்கின்றது, என அவர் கூறினார். “இராஜபக்ஷ அராசங்கத்தின் சிக்கன மற்றும் பொலிஸ் அரச வழிமுறைகளை எதிர்த்துப் போராட, தொழிலாள வர்க்கத்துக்கு சர்வதேசிய சோசலிச முன்னோக்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கம் தேவை,” என அவர் முடிவுரையாக தெரிவித்தார். |
|