World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India: Demanding pay rise, 200,000 power-loom operators continue strike இந்தியா: கூலி உயர்வு கோரி, 200,000 விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது
By Sasi
Kumar and Moses Rajkumar கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 38,000 சிறிய மற்றும் நடுத்தர விசைத்தறி கூடங்களில் பணியமர்த்தப்பட்ட 200,000கும் மேலான ஜவுளித்துறை தொழிலாளர்கள், கண்ணியமான ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளைக் கோரி பெப்ரவரி 21இல் இருந்து காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்த மாவட்டங்கள், ஜவுளித்துறை தொழிலகங்களின் மிகப்பெரும் அமைவிடமாக இருப்பதால், “இந்தியாவின் மான்செஸ்டர்" என்று அழைக்கப்படுகின்றன. முதுகெலும்பு உடையும் வேலைகளுக்கு ஒரு அற்பமான வருவாய் பெற்று வரும் இந்த தொழிலாளர்கள், அவர்களின் நெசவுக்கேற்ப வழங்கப்படும் கூலியில் (piece-rate pay) 80 சதவீத கூலியுயர்வைக் கோரி வருகின்றனர். அவர்கள் ஓய்வூதிய சேமிப்பு நிதித்திட்டம் (வருங்கால வைப்பு நிதி) மற்றும் ESI என்றறியப்படும் மருத்துவ நல உதவிகளை ஸ்தாபிக்கவும், மற்றும் ஊதியத்துடன் கூடிய விழாக்கால விடுமுறைகளையும் கோரி வருகின்றனர். வாரத்திற்கு ஆறு வேலை நாட்களோடு, பெரும்பாலும் நாளொன்றுக்கு பன்னிரெண்டு மணி நேரம் இந்த தொழிலாளர்கள், அடைசலான, தூசி படிந்த மற்றும் பாதுகாப்பற்ற வேலையிட நிலைமைகளில் வேலை செய்கின்றனர். இந்த வேலைநிறுத்தம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் கூலி-வேலை விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பால் முதலில் அழைப்பு விடுக்கப்பட்டது, இது சிறிய மற்றும் நடுத்தர விசைத்தறியாளர்களின் கூட்டமைப்பாகும் அதாவது தமக்கு சொந்தமான கூடத்தில் அல்லது கூடங்களில் அவற்றின் உடமையாளர்களும் கூட வேலை செய்கின்றனர். இந்த உடமையாளர்களாக இருக்கும் விசைத்தறியாளர்கள் மாநில தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பெரிய ஜவுளி உற்பத்தியாளர்களோடு எட்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர், அதன் பின்னரும், அவர்களின் அதிக சதவிகிதத்திற்கான கோரிக்கை மீது எந்தவொரு முன்னேற்றத்தையும் காட்டாததால் இந்நடவடிக்கையை எடுத்தனர். ஏறக்குறைய 8 மில்லியன் டாலர் மதிப்பிலான, சுமார் 12 மில்லியன் மீட்டர் சாம்பல் நிறத் துணிகள் இந்த தொழிலாளர்களால் ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த தறி ஓட்டும் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் முதலில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர், அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களும் அதிக சதவிகிதத்திற்கான தமது சொந்த கோரிக்கைகளுடன் வேலை நிறுத்தத்தில் இறங்கினர், அதற்கு காரணம் விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளமானது, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக, இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள விசைத்தறி கூடங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்துள்ளனர். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஜவுளி உற்பத்தியோடு ஏதோவொரு விதத்தில் பிணைந்துள்ள அண்டை மாவட்டங்களின் வேலைகளும், வேலைநிறுத்தத்தின் விளைவாக நின்று போயுள்ளன. உள்ளூர் விசைத்தறி தொழிலகங்களின் கூலி உடன்படிக்கைகள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஒரு கடுமையான, சிலவேளைகளில் மாதக்கணக்கான, போராட்டமின்றி எந்தவொரு உடன்படிக்கையும் எட்டப்படவில்லை. ஆகஸ்ட் 2011இல் இருந்து அக்டோபர் வரையில் மூன்று மாத கால வேலைநிறுத்தத்திற்குப் பின்னர், நெசவுக்கேற்ப கூலி விகிதத்தில் ஒரு நாற்பது சதவீத உயர்வோடு முந்தைய உடன்படிக்கை வென்றெடுக்கப்பட்டது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, அத மிகவும் சுரண்டப்படும் அடுக்காகவும் ஒரு சிக்கலான பொருளாதார வலைப்பின்னலில் உள்ளனர், அது பெரிய ஆலைகளை உலக சந்தையுடனும் சிறு விசைத்தறியாளர்களுடனும் இணைக்கிறது. பெரிய ஜவுளி ஆலைகள் பெரும்பாலும் பருத்தியிலிருந்து நெசவு நூல்களை உருவாக்கின்றன,அத்துடன் GAP மற்றும் IZOD போன்ற மிகப்பெரும் மேற்கத்திய சில்லறை விற்பனையாளர்களுக்கு தங்களின் தயாரிக்கப்பட்ட ஜவுளி உற்பத்தியின் குறைந்தபட்சம் ஒரு பகுதியை ஏற்றுமதி செய்கின்னர் - பெரிய ஜவுளி ஆலைகள், நெசவுக்கேற்ப கூலி என்ற விதத்தில் அவர்களுக்கு நிறைய இலாபம் கிடைப்பதால், நெசவின் பெரும் பகுதியை சிறிய மற்றும் நடுத்தர விசைத்தறியாளர்களிடம் கொடுத்து வேலை வாங்குகின்றனர். இந்த விசைத்தறி தொழிலகங்கள், வழக்கொழிந்து போன ஒரு தொழில்நுட்பமான, பாவு நூற்கும் முறையை (shuttle looming) அடிப்படையாக கொண்டவையாகும். விசைத்தறி உரிமையாளர்கள் பெரும்பாலும் தாங்களே வேலை செய்கின்றனர், அத்தோடு இதர தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதும் உண்டு. பெரிய ஜவுளி ஆலைகள், அவற்றின் நெசவுகளுக்காக இத்தகைய விசைத்தறியாளர்களுக்கு ஒரு சிறிய அற்பமான தொகையை வழங்குகின்றன, பின்னர் அவர்கள் அதிலிருந்து மிக மிக சொற்ப தொகையை தொழிலாளர்களுக்கு கூலிகளாக வழங்குகின்றனர். ஒரு சராசரி விசைத்தறி கூடம் 10 முதல் 12 வரையிலான நெசவு இயந்திரங்களைக் கொண்டிருக்கும் மற்றும் ஏறக்குறைய ஐந்தில் இருந்து ஆறு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும். போட்டித்தன்மை, ஏற்பட்டிருக்கும் உலக பொருளாதார நெருக்கடியால் சந்தை சுருங்கி இருப்பது, மற்றும் பருத்தி மூலப்பொருளின் விலையுயர்வு ஆகியவற்றைக் காரணங்காட்டி, பெரிய ஜவுளி ஆலைகள் வேலைநிறுத்தக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துள்ளன. இரண்டு பிரதான ஸ்ராலினிச கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ-எம்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றோடு இணைப்பு பெற்ற முறையே CITU மற்றும் AITUC தொழிற்சங்க கூட்டமைப்புகள், விசைத்தறி தொழிலாளிர்களின் போராட்டத்தை மட்டுப்படுத்த மற்றும் ஒடுக்க முயன்று வருகின்றன. அவர்களிடமிருந்து சுயாதீனப்பட்டு அந்த வேலைநிறுத்தம் வெடித்ததில் இருந்து, அவர்கள் அந்த வேலைநிறுத்தத்தை "ஒழுங்கமைக்க" ஒரு கூட்டு கமிட்டியை உருவாக்கினர். கூட்டு கமிட்டி என்றழைக்கப்படும் இது தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளின் மற்றும் இந்தியாவின் தொழிலாளர் வர்க்க ஆதரவை ஒன்றுதிரட்டவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அந்த தொழில்துறை பகுதியில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் ஆதரவை ஒன்றுதிரட்ட கூட எந்தவொரு பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை. உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் சமீபத்தில் திருப்பூர் பயணித்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் விசைத்தறியாளர்கள் மற்றும் சிறு-தறி உரிமையாளர்களோடு பேசினர். 35 வயது நிரம்பிய ஒரு விசைத்தறி தொழிலாளர் செல்வன் WSWSக்கு கூறினார்: “எனது தொழில்வழங்குனரிடம் 16 விசைதறிகள் உள்ளன. என்னுடன் மேலும் ஏழு தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நான் எட்டு விசைத்தறிகளை ஓட்டுகிறேன். எனக்கு நாளொன்று ரூ. 300 (4.90 அமெரிக்க டாலர்) கிடைக்கும். வேலைகேற்ப கூலி என்ற விதத்தில் வழங்கப்படுவதால், இந்த தொகையை சம்பாதிக்க எனக்கு 12 மணி நேரம் எடுக்கிறது. எங்களுக்கு வருங்கால வைப்பு நிதியோ அல்லது மருத்து உதவிகளோ எதுவும் கிடையாது. “வேலை செய்தால் சம்பளம்" என்ற கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள். ஊதியத்துடன் கூடிய விழாக் கால விடுமுறை எதுவும் எங்களுக்கு கிடையாது. தங்கியிருந்து வேலை செய்யும் சில தொழிலாளர்கள் இதையும் விட நீண்ட நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர், ஏனெனில் தங்குமிடம் வழங்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது," என்றார். வேலைநிறுத்தத்தில் பங்கு பெற்றுள்ள 45 வயது நிரம்பிய ஒரு தொழிலாளர் முருகன் கூறுகையில், “எங்களுக்கு நாளொன்று ரூ. 300 கிடைக்கின்ற நிலையில், விடுமுறை நாட்களில் எங்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பதால், அத்தோடு மின்வெட்டுக்கள் மற்றும் எந்திர கோளாறுகள் காரணமாக எந்திர இயக்கம் தடைபடுவதால், எங்களால் வாரத்திற்கு சராசரியாக ரூ. 1,500 வரை மட்டுமே சம்பாதிக்க முடியும். இரவு 7 மணி முதல் காலை 9 மணி வரை நீடிக்கும் இரவு நேர வேலைகளைப் பொறுத்த வரையில், பகல் நேரத்தில் வேலை செய்வதை விட அதிகமான ஊதியம் கிடைக்கும். எங்களால் எங்கள் குழந்தைகளுக்கு ஒரு கண்ணியமான கல்வியைக் கூட அளிக்க முடியவில்லை. எங்கள் குழந்தைகளை நாங்கள் தரங்குறைந்த பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டி இருப்பது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது," என்றார். முருகன் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் அனைவரும் கைக்கும் வாய்க்குமாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். திமுக மற்றும் அஇஅதிமுக இரண்டின் ஆட்சியையும் நாங்கள் நீண்டகாலமாக அனுபவித்து வருகிறோம். (இவை மாநில அரசாங்கத்தில் பல தசாப்தங்களாக மாற்றி மாற்றி அதிகாரத்தைக் கைப்பற்றி வந்துள்ள பிற்போக்குத்தனமான பிராந்திய கட்சிகளாகும்.) அவை இரண்டுமே எங்கள் வாழ்க்கை நிலைமைகளில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. நீங்கள் கூறியதைப் போல, தொழிலாளர்களின் ஓர் அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும்,” என்றார். 52 வயதான கதிர்வேலன் கூறுகையில், “12இல் இருந்து 14 மணி நேரம் வரையில் வேலை செய்தும் எங்களால் வாழ்க்கைக்குத் தேவையானளவிற்கு சம்பாதிக்க முடியவில்லை,” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஆகவே, எங்களில் பலர் வேலையை மாற்றிக் கொள்ளவும், வேறு நகரங்களுக்கு குடிபெயரவும் முயன்று வருகிறோம். பெரும்பாலான தொழிலாளர்கள் கடன்களில் மூழ்கி உள்ளனர். எனக்கே ரூ. 100,000 இலட்சம் (ஏறத்தாழ $1,650 டாலர்) கடன் உள்ளது,” என்றார். ஒரு சுமை தூக்கும் தொழிலாளர், தொழிற்சங்கங்கள் எப்போதும் தொழிலாளர்களை காட்டிக்கொடுப்பதில் போய் முடிக்கின்றன என்று கூறி, தொழிற்சங்கங்களை விமர்சித்தார். “தொழிற்சங்க தலைவர்கள் தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் இறங்குமாறு பின்னாலிருந்து தூண்டிவிடுகிறார்கள், பின்னர் எங்கள் முதுகுக்குப் பின்னர் முதலாளிமார்களோடு பேரம் பேசுகிறார்கள். பின்னர் நாங்கள் தான் தவிக்கிறோம், காட்டிக்கொடுக்கப்படுகிறோம்,” என்று அவர் கூறினார், மின் கட்டணங்கள் மற்றும் ஏனைய உற்பத்தி செலவுகளில் ஏற்பட்டுள்ள உயர்வுகளுக்கு பெரிய ஜவுளித்துறை ஆலைகள் ஈட்டுதொகை வழங்க தயாராக இல்லாத நிலையில், வேலை செய்து பிழைக்கும் சிறிய விசைதறி உரிமையாளர்களும் நெருக்கடிக்குள் இழுத்து வரப்பட்டுள்ளனர். வேலை செய்து பிழைக்கும் ஒரு சிறிய விசைத்தறி உரிமையாளர் கோவிந்தசாமி WSWSக்கு தெரிவித்தார்: “நாங்கள் தற்போது ஒரு மீட்டருக்கு 4.30 ரூபாய் (7 அமெரிக்க செண்ட்) பெறுகிறோம். இதிலிருந்து நாங்கள் ஒரு தொழிலாளருக்கு மீட்டருக்கு 1.40 ரூபாய் வழங்குகிறோம். மின்சார கட்டணம், உதிரி பாகங்கள் என இதர செலவுகள் போக, எங்களுக்கு வெகு சொற்பமான இலாபங்கள் தான் நிற்கிறது,” என்றார். வேலை செய்து வரும் விசைத்தறி உரிமையாளர்களில் பலர் வங்கிகளில் கடன் பெற்றுள்ளதோடு, அவர்களில் பலர் திவாலாகி விட்டதால் ஆலையை மூடும் நிலைக்கு வந்துள்ளனர். வேலைநிறுத்தத்திற்கு ஆதரவை ஒன்றுதிரட்ட ஸ்ராலினிஸ்டுகள் தவறியமை குறித்து, AITUCஇன் திருப்பூர் மாவட்ட செயலாளர் சேகரை WSWS செய்தியாளர்கள் எதிர்கொண்ட போது, அவர் எமது விமர்சனங்களைத் ஒதுக்கி தள்ளியதோடு, அந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுமென்று அறிவித்தார்: “நடந்துவரும் பேச்சுவார்த்தைகளில் ஒரு சாதகமான தீர்வு கிடைக்குமென்று நாங்கள் நம்பிக்கையோடு உள்ளோம்,” என்றார். திருப்பூர் மாவட்டத்திற்கான CITUஇன் துணை தலைவர் வேலுச்சாமி, அவர் பங்கிற்கு தொழிலாளர்களைக் குற்றஞ்சாட்டினார். “நூறு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு காட்டினாலும் கூட, அங்கே வெறும் ஒரு சில ஆயிர தொழிலாளர்கள் மட்டுமே போராட்டத்தில் செயலூக்கத்தோடு பங்கெடுக்கின்றனர்,” என்றார். சிபிஎம் மற்றும் சிபிஐ எந்த அடிப்படையில் அஇஅதிமுக போன்ற ஒரு பரம-பிற்போக்குத்தனமான மற்றும் தொழிலாளர் வர்க்க விரோத கட்சியோடு ஒரு தேர்தல் கூட்டணியை அமைக்கிறதென்று விளக்குமாறு கேட்ட போது, வேலுச்சாமி கூறினார், “இந்தியாவில் பல வேறுபட்ட நிலைமைகள் உள்ளன, குறிப்பாக அதில் ஜாதி பிரச்சினையும் உள்ளது. இந்த நிலைமைகளின் கீழ், தனியாக போட்டியிட்டு, போராட்டத்தை வெல்ல இயலாது. அதனால் தான் நாங்கள் ஜனநாயக சக்திகளோடு இணைந்து போராடுகிறோம். 2003இல் ஜெயலலிதாவின் அஇஅதிமுக'விற்கு எங்களின் ஆதரவானது வகுப்புவாத சக்திகள் தமது தலையை தூக்க விடாமல் தடுப்பதற்காக அமைத்தது!” என்றார். பிற்போக்குத்தனமான பெருவணிக கட்சிகளுடன் சேர்வதன் மூலமாக வகுப்புவாதத்திற்கு எதிராக போராடுவதென்ற இந்த கட்டுக்கதை தான் எப்போதும் ஸ்ராலினிஸ்டுகளால் முன்னெடுக்கப்படுகிறது. இந்த வசந்தகால தேசிய தேர்தலுக்குப் பின்னர் இந்து மேலாதிக்க பிஜேபி தலைமையிலான ஒரு கூட்டணி அரசாங்கத்திற்குள் நுழைய தங்கள் கரங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டுமென்பதற்காக, அஇஅதிமுக சமீபத்தில் சிபிஐ மற்றும் சிபிஎம் உடனான அதன் தேர்தல் உடன்பாட்டை ஏற்க மறுத்தது. வேலுச்சாமி தொடர்ந்து கூறினார், “சோசலிச புரட்சி சாத்தியமில்லை என்றாலும் கூட, அது எங்கள் திட்டப்பட்டியலில் உள்ளது,” என்றார். ஒரு கண்ணியமான வருமானம் மற்றும் வேலையிட நிலைமைகளுக்கான விசைதறி தொழிலாளர்களின் போர்குணமிக்க போராட்டம் பெருநிறுவனங்களின் இலாப நலன்களோடு அடிப்படையிலேயே முரண்படுகிறது. உலகளாவிய மந்தநிலையை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், இந்திய மற்றும் உலகளாவிய பெருவியாபாரங்கள் தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் சலுகைகளைக் குறைக்க மற்றும் அவர்களின் சுருங்கிவரும் இலாப விகிதங்களைச் சரிகட்ட ஓர் இரக்கமற்ற உந்துதலை நடத்தி வருகின்றன. ஒரு சர்வதேச சோசலிச அரசியல் வேலைதிட்டத்தோடு தங்களைத்தாங்களே ஆயுதபாணி ஆக்குவதன் மூலமாக மட்டுமே, தொழிலாளர்களால் நீண்டகாலமாக காலந்தாழ்த்தப்பட்டு வரும் ஓர் எதிர்தாக்குதலைத் தொடுக்க முடியும். |
|