World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German media seeks to paint Putin as new Hitler

ஜேர்மனியின் செய்திஊடகம் புட்டினை புதிய ஹிட்லர் எனச் சித்தரிக்க முனைகிறது

By Ulrich Rippert 
22 March 2014

Back to screen version

புதன் அன்று ஜேர்மனியின் Bild செய்தித்தாள் தற்போது பேர்லின் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறும் உக்ரேனிய அரசியல்வாதியும் ஓர் தன்னலக்குழு உறுப்பினருமான யூலியா திமோஷெங்கோவுடன் நடத்திய நேர்காணலை வெளியிட்டது.  அவரிடம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய சமீபத்திய உரை பற்றி என்ன நினைக்கிறார் எனக் கேட்கப்பட்டபோது அவர் 1938க்குப்பின் உலகம் கேள்விப்படாத சொற்கள் போன்றவற்றை புட்டின்  கூறுகிறார் என்று திமோஷெங்கோ தெரிவித்தார்.

புட்டின் அப்பட்டமான பாசிசத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார், இவை ஹிட்லரின் தேசிய சோசலிசத்தை விட மிக ஆபத்தானது. ஏனெனில் இதை அவர் மக்களுக்கு இடையே நட்பு போன்ற சொற்களால் மூடிமறைக்கிறார் என்றார் திமோஷெங்கோ. உலகின் வரைபடத்தைப் போர்கள், பாரிய மக்கள் படுகொலை, குருதி ஆகியவற்றின் மூலம் மறுபடியும் மாற்ற புட்டின் விரும்புகிறார்.  இது புட்டினின் Mein Kampf ஆகும்.

கிட்டத்தட்ட அன்றாடம் 2.5 மில்லியன்  விற்பனையாகும் ஜேர்மனியில் மிகஅதிகம் விற்பனையாகும் நாளேடு 12 மில்லியன் வாசகர்களை சென்று அடைகிறது. அது இத்தகைய பிரச்சாரத்தைப் பரப்புவது என்பது அதன் ஆசிரியர்களின் அலுவலகங்களில் அரசியல் சீரழிவு எந்தமட்டத்தில் உள்ளது என்பது பற்றி பாரியளவு கூறுகிறது.

நேற்று  திமோஷெங்கோவின் அறிக்கைகள் அவருடைய மனநிலை பற்றிய சந்தேகங்களை எழுப்புகின்றன என எழுதிய வணிக நாளேடான Handelsblatt ஐத் தவிர வேறு எந்த ஜேர்மன் அரசியல் மற்றும் செய்தி ஊடகமும் அவருடைய புட்டின்-ஹிட்லர் ஒப்பீட்டை நிராகரிக்கவில்லை.

ஜேர்மன் ஆளும் வர்க்கத்தின் பொதுக்கருத்து தமது விருப்பத்திற்கேற்ப வரலாற்று உள்ளடக்கத்தையும் உண்மைகளையும்  திரிபுபடுத்துவது அனுமதிக்கப்படலாம் என்று உள்ளது. ஜேர்மனிய இராணுவவாதத்திற்கு பிரச்சாரம் செய்பவர்கள் பார்வையில் அவற்றின் அரசியல் திசை சரியாக இருந்தால் அறிக்கைகளில் உண்மை என்பது தேவையற்றது. புட்டினுடைய நடத்தை அல்ல மாறாக இத்தகைய வரலாற்று உண்மை குறித்த பொறுப்பற்ற திரித்தல்தான், எவரும் தைரியமாக அவற்றை எதிர்க்கவில்லை என்பதால் நாஜி வெளியீடுகளான மக்களின் அவதானி (Volkische Beobachte), கோயபல்ஸ் வெளியிட்ட இழிந்த தாக்குதல் (Der Angriff) ஆகியவை கொடூரப் பொய்களையும் தூண்டிவிடும் கட்டுரைகளையும் வெளியிட்டு பரப்பியதை நினைவுபடுத்துகிறது. .

திமோஷெங்கோவின் கருத்துக்கள் நாஜிசத்தை ஒரு சாதாரண குற்றமாக்கி ஜேர்மன் சட்டங்களின் அடிப்படையில்; அரசாங்க வழக்குதொடுனர் இதை விசாரிக்க வேண்டும் என்று அர்த்தப்படுகின்றது. ஜேர்மனியின் குற்றவியல் தொகுப்பின் 130வது பத்தியின்படி, இனப்படுகொலை அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற தேசிய சோசலிச ஆட்சி நடத்திய செயலை எவரேனும் மறுத்தாலோ, தீயவையல்ல என்றாலோ அது ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதங்கள் தண்டனையாக கிடைக்கும்.

கிரிமிய மக்களின் தெளிவான ஆதரவான வாக்களிப்பை அடித்தளமாக கொண்டு கிரிமியாவை ரஷ்யா இணைத்துள்ளதை திமோஷெங்கோ சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஹிட்லரின் அழித்தல் போருடன் சமப்படுத்துகிறார். அதில் 20 மில்லியன் சோவியத் மக்கள் கொல்லப்பட்டனர். மில்லியன் கணக்கான யூதர்கள், கம்யூனிஸ்ட்டுக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். உக்ரேனிலும் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த ஒப்புமை மிகமோசமான மனிதப்படுகொலைகளை (Holocaust)  மறுபவர்கள் மாதிரியில் நாஜிசத்தைச் சாதாரணப்படுத்துதல் இல்லையென்றால் என்றால், பின் இது என்ன? இது திமோஷெங்கோவின் மனநிலையைத் தெளிவாக்குகிறது. இவர் மேற்கு செய்தி ஊடகத்தில் பல ஆண்டுகள் உக்ரேனிய ஜனநாயகத்தின் அடையாள பெருமிதச் சின்னமாக பாராட்டப்பட்டுள்ளார். அவருடைய வலதுசாரி தந்தைநாடுக் கட்சி இப்பொழுது பாசிசக் கட்சியான ஸ்வோபோடாவுடன் மே மாதம் திட்டமிட்டுள்ள தேர்தல்களுக்கு ஒரு கூட்டு அமைத்துள்ளது.

ஜேர்மனியின் தொழிலதிபர்கள் ஹிட்லருக்கு நிதியளித்தனர். ஜனாதிபதி பௌல் வான் ஹிண்டென்பேர்க் ஹிட்லரை ஜனவரி 1933ல் சான்ஸ்லராக நியமித்தார். இதற்கு காரணம் அவர் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இரண்டு விடயங்களை உறுதியளித்தார்: முதலாவது, ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தை ஒரேயடியாக சிதைத்தல், இரண்டாவது சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகப் போர் தொடுத்தல்.

அதன் கிழக்குப்புற நடவடிக்கையினால் ஹிட்லரின் இராணுவம் (Wehrmacht) சிறிதும் இடைவெளியின்றி ஜேர்மன் குடியரசின் முதலாம் உலகப் போரின் நோக்கங்களை பின்பற்றியது. போரின் ஆரம்பத்தில் ஜேர்மனிய அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிராகப் போரிடுமாறு  உக்ரேனில் எழுச்சியை தூண்டிவிட்டது. கியேவில் ஜேர்மனிய சார்பான அரசாங்கம் அதிகாரத்திற்குக் கொண்டுவர பேர்லின் உக்ரேனிய எதிர்த்தரப்புக் குழுக்களுக்கு ஆதரவு கொடுத்தது,

நாஜிக்கள் இந்த ஆக்கிரமிக்கும் கொள்கையை கிழக்கில் உயிர்வாழும் இடம் என்ற கோஷத்தின் கீழ் தொடர்ந்தனர். மீண்டும் அப்பொழுது சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த உக்ரேன் ரஷ்ய மத்திய பகுதிக்குள் நுழையும் இடமாக உதவியது. மீண்டும் ஜேர்மனி உக்ரேனின் பெரும் பண்ணை நிலம் மற்றும்  இயற்கை வளங்களை அதன் போர்ப் பொருளாதாரத்திற்கு பயன்படுத்த முற்பட்டது. மீண்டும் அது உள்ளூர் ஒத்துழைப்பாளர்களை நாடியது.

ஸ்டீபன் பண்டேராவின் OUN எனப்படும் உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு இதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. அவர் இப்பொழுது ஸ்வோபோடா கட்சியால் ஒரு முன்மாதிரியாகவும், வீரராகவும் பாராட்டப்படுகிறார். பண்டேராவிற்கும் நாஜிக்களுக்கும் இடையே ஒத்துழைப்பு மனிதப்படுகொலைகள் (Holocaust) வரை தொடர்ந்தது. ஜூன் 30, 1941இல் ஜேர்மன் துருப்புக்கள் படையெடுக்கு முன், OUN உடைய பிரிவு எல்விவ் நகரத்தில் பண்டேராவின் தலைமையில் வழிநடத்தப்பட்டு 7,000 கம்யூனிஸ்ட்டுக்களும் யூதர்களும் கொல்லப்பட்டனர்.

இப்பொழுது நாம் ஜேர்மனிய ஏகாதிபத்தியம் உயிர்வாழும் இடத்தை (Lebensraum), மூன்றாம் முறையாக அடையும் முயற்சியைக் காண்கிறோம். வேறுவிதமாகக் கூறினால், கிழக்கில் சந்தைகள் மற்றும் மூலப்பொருட்களுக்கான ஆதாரங்களைப் பெறுவதற்கு முனைவதை காண்கின்றோம். கடந்த காலத்தில் குற்றங்களை மனத்திற்கொண்டு, இப்புதிய தாக்குதல் ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய சொற்களின் பின்னே மறைக்கப்படுவதுடன், இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ நட்பு நாடுகளின் நெருக்கமான ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது.

ஆனால், அனைத்து பிரச்சாரங்களுக்கும் மாறாக, ஜேர்மனியின் செல்வாக்கை கிழக்கே விரிவாக்குவது என்பது மீண்டும் பாசிச கட்சிகளுடன் நெருக்கான ஒத்துழைப்பை அடித்தளமாக கொண்டுள்ளது. இதில் ஸ்வோபோடாவும் அடங்கும். அது ஜேர்மன் தேசியக் கட்சி (NPD) என்னும் பாசிச அமைப்பால் ஐரோப்பாவில் மிக முக்கியமான வலதுசாரிக் கட்சிகளில் ஒன்று என கொண்டாடப்படுகிறது. இத்துடன் பிரித்தானிய தேசியக் கட்சியுடனும் (BNP), ஹங்கேரியின் Jobbik, இத்தாலியின் Fiamma Tricolore, பிரான்சின் தேசிய முன்னணி (FN) ஆகியவற்றுடன் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியாக நெருக்கமாக உள்ளது. சாக்சனி மாகாண சட்டசபையில் கடந்த ஆண்டு NPD  யின் பிரிவு ஸ்வோபோடாவில் இருந்து ஒரு தூதுக்குழுவை வரவேற்று உபசரித்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஓலே தியானிபோக், ஸ்வோபோடாவின் தலைமையை எடுத்துக் கொண்டபோது அவர் ஓர் உரையில் தன் ஆதரவாளர்களிடம் பின்வருமாறு கூறினார்: துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ளுங்கள், ரஷ்யப் பன்றிகள், ஜேர்மனியர்கள், யூதப் பன்றிகள் மற்றும் பிற தீய விலங்குகளுடன் போரிடுக. நமது உக்ரேனியத் தாய்நாட்டிற்காக போராடுங்கள்.

இவர்கள்தான் ஜேர்மனிய அரசாங்கத்தின் கூட்டினராக உள்ளனர். அவருடைய கூற்றுப்படியே கியேவில் இருக்கும் ஜேர்மனியின் தூதர் தியானிபோக்கை கடந்த ஆண்டு பல முறை சந்தித்தார். கொன்ராட் அடினவர் அறக்கட்டளையுடன் உடன் பிணைந்துள்ள கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி ஸ்வோபோடா உறுப்பினர்களை பேர்லினுக்கு ஆய்வுப் பயணங்களுக்கு அழைத்தது.

ஆண்டு தொடக்கத்தில் ஸ்வோபோடா மைதான் (சுதந்திரச் சதுக்கம்) இல் நடந்த எதிர்ப்புக்களில் மிக முக்கியமான அரசியல் சக்தியாக இருந்தது. அதன் பாசிசக் குண்டர்கள் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் முக்கிய பங்கையும் கியேவில் வலதுசாரி ஆட்சிசதியை அமைப்பதிலும் முக்கியப் பங்கைக் கொண்டிருந்தனர். இதற்கு ஈடாக அக்கட்சியின் மூன்று முக்கிய உறுப்பினர்கள் செல்வாக்கு படைத்த அரசாங்க பதவிகளை பெற்றுள்ளனர்.

யூலியா திமோஷெங்கோ இந்த உண்மைகளை நன்கு அறிவார். அவருடைய தந்தை நாடு கட்சி பாசிச, யூத எதிர்ப்புக் கருத்துக்களில் இருந்து சற்றுத்தான் வேறுபட்டுள்ளது. ஸ்வோபோடாவுடன் அவர் கொண்டுள்ள தேர்தல் கூட்டு ஜேர்மனிய அரசாங்கத்தின் நெருக்கமான ஆலோசனையால் நிகழ்வுற்றது.

Bild  பத்திரிகையுடன் நடத்தப்பட்ட திமோஷெங்கோவின் விந்தையான பேட்டி ,ஜேர்மனிய அரசாங்கம் பாரிய சமூக வெட்டுக்களை செயல்படுத்தவும் பேர்லினுடைய ஏகாதிபத்திய நலன்களை நடைமுறைப்படுத்த தேவைப்பட்டால் இராணுவ பலத்தை செயல்படுத்த பாசிசக் கட்சிகளுடன் ஒத்துழைத்து வருகிறது என்னும் உண்மையை மறைக்கிறது.

இப்போக்கை எதிர்க்க உரிய நேரம் வந்துவிட்டது. இதுதான் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) ஐரோப்பிய தேர்தல்களில் கலந்துகொள்வதின் முக்கியத்துவமாகும். PSG அதன் பிரித்தானிய சகோதர கட்சியான சோசலிச சமத்துவக் கட்சியுடன் (SEP) சேர்ந்து ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முற்படுகிறது.