தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Anti-Russia propaganda and the fabrication of a new pro-war consensus ரஷ்யாவிற்கெதிரான பிரச்சாரமும், ஒரு புதிய யுத்த-ஆதரவு கருத்தொற்றுமையை உருவாக்குவதும்
Alex Lantier Use this version to print| Send feedback உக்ரேனில் இருந்து பிரிந்து ரஷ்யாவில் மீண்டும் இணைவதற்கு கடந்த ஞாயிறன்று கிரிமியா வாக்களித்ததில் இருந்து, அமெரிக்க அதிகாரிகளும், அமெரிக்க ஊடகங்களும் ரஷ்யாவிற்கு எதிராக, உலக அமைதி, சர்வதேச சட்டம் மற்றும் சிறிய நாடுகளின் உரிமைகளினது பாதுகாவலர்களாக காட்டிக் கொண்டு, ஓர் காதடைக்கும் பிரச்சார பரப்புரையை நடத்தி வருகின்றன. இந்த பிரச்சாரத்தில், கடந்த மாதம் பாசிச தலைமையிலான அரசியல் சதியிலிருந்து உதித்த உக்ரேனிய ஆட்சிக்கான ஆதரவை நியாயப்படுத்த எந்த பொய்யும் கூறப்படவில்லை என்பது முற்றிலும் அபத்தமானதாகும். நேற்று ரஷ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை அறிவித்ததோடு, ஜனாதிபதி ஒபாமா ரஷ்யாவுடன் கிரிமியா இணைக்கப்பட்டதை நிராகரித்தார். “நாடுகள் பெரிதாகவோ அல்லது சக்தி வாய்ந்தவையாகவோ உள்ளன என்பதற்காகவே அவை எல்லைகளை மாற்றி அமைக்க கூடாது என்பது போன்ற, உலக அரசாங்கங்களுக்கு இடையிலான அடிப்படை கோட்பாட்டு கருத்துக்கள், 21ஆம் நூற்றாண்டில் காப்பாற்றப்பட வேண்டும்,” என்று ஒபாமா ஓதினார். இதே வரிசையில் எழுதுகையில், வாஷிங்டன் போஸ்ட் தலையங்கம் குறிப்பிட்டதாவது: “ஐரோப்பிய ஒன்றியம் அல்லது நேட்டோ போன்ற கூட்டணிகளில் அதன் அண்டை நாடுகள் சேர்கின்றனவோ இல்லையோ மற்றும் அவற்றின் அரசியல் நிலைநோக்கில் ரஷ்யாவிற்கு அதன் கருத்தை தெரிவிக்க உரிமையுள்ளது என்ற திரு. புட்டினின் கூற்று முற்றிலுமாக ஏற்க இயலாததாகும்,” என்று எழுதியது. இந்த முட்டாள்தனத்தை யார் நம்புவார்கள்? மேற்கத்திய உலகில் அரைக்கோளத்தினுள் துர்ப்பாக்கியவசமாக அதன் "அண்டை நாடுகளாக" உள்ளவற்றின் மற்றும் உலகின் ஏனைய ஒவ்வொரு நாட்டினதும் மற்றும் அரசியல் நிலைநோக்கை தீர்மானிக்கும் சவாலுக்கிடமற்ற உரிமையை அமெரிக்கா கொண்டிருக்கிறது என்பதே அமெரிக்க வெளியுறவு கொள்கையை ஆளும் கோட்பாடாக உள்ளது. 1823இல் மொன்ரோ கொள்கை (Monroe Doctrine) உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, ஒட்டுமொத்த மேற்கத்திய அரைக்கோளமும் அதன் செல்வாக்கு பகுதியாக உரிமை கோரிய அமெரிக்கா, அது ஐரோப்பிய சக்திகளோடு என்ன மாதிரியான தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டு வந்தது. தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கரீபியன் நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் இரத்தத்தில் ஊறிய அமெரிக்க தலையீடுகளின் ஒரு சுருக்கமான வரலாற்றிற்கே, டஜன் கணக்கான தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு தகவல்களஞ்சிய படைப்பு தேவைப்படும். தெற்கில் அதன் அண்டைநாடுகளுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்திய சூறையாடலின் ஒரு பகுதியான பட்டியலே, 1914 மற்றும் 1917க்கு இடையில் மெக்சிகோவிற்குள் அதன் திடீர் படையெடுப்பு, ஹைட்டி மற்றும் நிகாரகுவா மீதான இராணுவ முற்றுகைகள், 1954இல் குவாத்தமாலாவில் ஆர்பன்ஸ் (Arbenz) அரசாங்கத்தை தூக்கி வீசியமை, 1961இல் கியூபாவின் Bay of Pigs ஆக்கிரமிப்பு மற்றும் காஸ்ட்ரோவிற்கு எதிரான எண்ணற்ற CIA இன் படுகொலை திட்டங்கள், மற்றும் சிலியில் அலன்டே ஆட்சியை 1973 இல் கவிழ்த்தமை ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். சிலியில் ஆட்சியை தூக்கி வீசியதற்கு மற்றும் ஜனாதிபதி சல்வடோர் அலன்டேயின் படுகொலை ஆகியவற்றிற்கு வாஷிங்டனின் ஆதரவை நியாயப்படுத்தி, அப்போதைய வெளியுறவு விவகாரத்துறை செயலர் ஹென்றி கிஸ்ஸிங்கர் ஆத்திரமூட்டும் விதத்தில் பின்வரும் கருத்துரைத்தார்: “ஒரு நாட்டின் சொந்த மக்களின் பொறுப்பற்றத்தன்மையால் அது கம்யூனிச நாடாக மாறுவதை நாம் ஏன் ஒதுங்கி இருந்து பார்த்து கொண்டிருக்க வேண்டுமென்று எனக்கு தெரியவில்லை. சிலியன் வாக்காளர்களாலேயே தீர்மானிக்கப்பட வேண்டுமென்பதற்கும் மேலாக அந்த பிரச்சினைகள் மிக மிக முக்கியமானவையாக உள்ளன” என்றார். ஆனால் "கடந்தகால வரலாற்றோடு" ஏன் நம்மைநாமே ஆழமாக ஈடுபடுத்திக்கொள்கிறோம்? கடந்த 31 ஆண்டுகளுக்குள், கிரெனடா, பனாமா மற்றும் ஹைட்டியின் அரசாங்கங்களை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ளது மற்றும் பதவிகவிழ்ப்பு செய்துள்ளது. அது நிகாரகுவா, எல் சல்வடோர் மற்றும் குவாத்தமாலாவில் இரத்தந்தோய்ந்த கிளர்ச்சிகளை மற்றும் எதிர்-கிளர்ச்சி நடவடிக்கைகளை ஏற்படுத்தி உள்ளது. ஹோண்டுராஸில் சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை 2009இல் தூக்கியெறிய வாஷிங்டன் ஆதரவளித்தது. மேலும் 2002இல் இருந்து, வெனிசூலாவில் அரசாங்கத்தைத் தூக்கி வீச இடைவிடாத முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளது. இதில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதி தோல்வியடைந்ததும் உள்ளடங்கும். ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜேர்மனில் உள்ள மேர்க்கெல் அரசாங்கத்திற்கு, ரஷ்யாவின் எல்லைகளில் அதற்கு விரோதமான மேற்கத்திய கைப்பாவை ஆட்சி நிறுவப்பட்டதற்கு அது காட்டிய எதிர்வினை குறித்து பெரும்பாலும் ஆச்சரியமாக இருந்திருக்காது. கிரிமியா மீதான கட்டுப்பாட்டை தக்கவைக்க புட்டின் செயல்பட்ட வேகத்தால் அவை ஓரளவிற்கு ஆச்சரியமடைந்திருந்தாலும், அவை சமீபத்திய நிகழ்வுகளை முற்றிலுமாக எதிர்மறையானதாக பார்க்கவில்லை. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தலைவர்களின் சமீபத்திய அறிக்கைகளும், செல்வாக்கு மிக்க பண்டிதர்களின் கருத்துரைகளும் தெளிவுபடுத்துவதைப் போல, புட்டினின் பாதுகாப்பு நடவடிக்கைகள், பரந்துபட்ட மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இழந்துள்ள ஓர் இராணுவவாத நிகழ்ச்சிநிரலுக்கு புதிய வடிவத்தை கொடுக்கவும், புதிய சட்டபூர்வதன்மையை வழங்கவும் ஒரு வாய்ப்பளித்திருக்கின்றன. 9/11 தாக்குதல்களின் மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்" தாக்கம் மங்கிப் போய்விட்டன, மற்றும் ஈராக் மீது ஆக்கிரமிப்பு தொடங்க பயன்படுத்தப்பட்ட பேரழிவுகரமான ஆயுதங்கள் குறித்த பொய்களால் தொழிலாள வர்க்கத்திடையே யுத்தம் மதிப்பிழந்து போயுள்ளது. கடந்த செப்டம்பரில் பெரும்பாலான மக்கள் யுத்தத்தை நிராகரித்ததன் காரணமாக சிரியாவின் மீது அவர்களால் குண்டுவீச்சை தொடங்க முடியாதுபோனது என்பதை ஏகாதிபத்திய சக்திகள் ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டிருந்தன. தொழிலாள வர்க்கத்திடையே நிலவும் பரந்த யுத்த-விரோத உணர்வை மற்றும் அது அவர்களின் வெளியுறவு கொள்கைகள் மீது கொண்டு வரும் தடைகளை முகங்கொடுத்திருக்கின்ற நிலையில், ஏகாதிபத்திய மூலோபாயவாதிகளும் அவர்களின் ஊடக முகவர்களும் மக்களின் கருத்தை மாற்ற, உக்ரேனில் அவர்களால் தூண்டிவிடப்பட்ட நெருக்கடியைச் சுரண்ட முனைந்து வருகின்றனர். இது தான், “கிரிமியாவில் புட்டினின் அதிகார பறிப்பு நம்மை ஒன்று சேர்க்குமா?” என்ற தலைப்பில் புதனன்று வாஷிங்டன் போஸ்டில் வெளியான கட்டுரையாளர் E. J. Dionne எழுதிய கட்டுரையின் மைய விடயமாக இருந்தது. எவ்வாறு ஒரு "யுத்த-சோகை பீடித்த மக்களை தட்டியெழுப்புவது, அணிதிரட்டுவது" என்று அக்கட்டுரையில் அவர் அதிசயிக்கிறார். உக்ரேனில் அமெரிக்கா "கூடுதலாக சம்பந்தப்படக்கூடாது" என்ற கண்ணோட்டத்திற்கு 56 சதவீத அமெரிக்க மக்களின் ஆதரவை, மற்றும் வெறும் 29 சதவீத மக்களின் எதிர்ப்பைக் தெரிவிக்கும் புள்ளிவிபரங்களைக் காட்டி அவர் புலம்புகிறார். அவர் எழுதுகிறார்: “நாம் புட்டினை எதிர்க்க வேண்டும், ஆனால் இதற்கு தற்போது காணாமல்போயுள்ள ஒரு வெளியுறவு கொள்கை கருத்தொற்றுமை தேவையாக உள்ளது. ஈராக்கில் ஈடுபடுவதற்கு முன்னரே தயாரிக்கப்பட்டதைப் போன்ற மற்றும் அமெரிக்க சக்தியை மிகவும் அளந்து பயன்படுத்தும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு புதிய கருத்தொருமைப்பாடு அமைக்கப்பட வேண்டும். இவ்விதத்தில் முரண்படும் செய்தி என்னெவெனில், இந்த கருத்தொற்றுமையை மறுகட்டுமானம் செய்யத் தொடங்க புட்டின் ஒபாமாவிற்கு வாய்ப்பளித்துள்ளார். ஜனாதிபதி அதை செய்ய முனைவதற்கு முடிவெடுத்தால், அவரது விமர்சகர்கள் அதைச்செய்ய அவருக்கு உதவ தயாராக இருக்கவேண்டும்” என்று எழுதுகிறார். ஆகவே ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் குறித்து கூறப்பட்ட பொய்களை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க அவசியப்படும், ஒரு புதிய யுத்த-சார்பு பொது இணக்கப்பாட்டை உருவாக்குவதே இப்போது நடந்துவரும் பிரச்சார பரப்புரையின் நோக்கமாக உள்ளது. |
|
|