World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The CIA spying scandal, Watergate and the decay of American democracy

சிஐஏ உளவுவேலை மோசடி, வாட்டர்கேட் மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சி

Eric London
20 March 2014

Back to screen version

மத்திய உளவுத்துறையின் (CIA) சித்திரவதை திட்டங்களை புலனாய்வு செய்திருந்த செனட் உளவுத்துறை கமிட்டி பணியாளர்களையே CIA உளவு பார்த்ததென்று செனட்டர் டயன் ஃபைன்ஸ்டைன் வெளிப்படுத்தியதில் இருந்து ஒன்பது நாட்களில், அந்த பிரச்சினை அரசியல் ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளது.

ஃபைன்ஸ்டைன் உட்பட, வெள்ளை மாளிகையும் காங்கிரஸூம், அந்த விடயத்தின் எவ்வித மேலதிக விவாதத்தையும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்த முனைந்துள்ளன. ஒபாமா நிர்வாகமும் CIAயும் எதை மூடிமறைக்க முனைந்து வருகின்றனவோ அந்த குற்றம், சித்திரவதை ஆகியவற்றின் அடியிலுள்ளவையும் மற்றும் உளவுவேலைகளும் என இரண்டிலுமே பணயத்தில் இருக்கும் அடிப்படை ஜனநாயக பிரச்சினைகள், எவ்விதத்திலும் பரந்த மக்கள் மத்தியில் ஒலி/ஒளிபரப்பாவதை தடுப்பதே அதன் நோக்கமாகும்.

ஜனாதிபதி உட்பட உளவுத்துறை மற்றும் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குற்ற விசாரணையில் சிக்கக்கூடிய அளவிற்கு அதில் சம்பந்தப்பட்டுள்ளவை பெரிய குற்றவிசாரணைக்கு உட்படுத்தக்கூடிய குற்றங்களாக உள்ளன. செனட் தளத்தில் கடந்த வாரம் அளித்த அவரது உரையில், ஃபைன்ஸ்டைன் அமெரிக்க அரசியலமைப்பில் உள்ளடங்கி உள்ள "அதிகாரப் பகிர்வு" கோட்பாட்டையும், அத்துடன் உள்நாட்டில் உளவு பார்ப்பதற்கு எதிரான அரசியலமைப்பின் நான்காம் திருத்தம் மற்றும் சட்டத்தடைகளையும் கூட CIA மீறியதென குற்றஞ்சாட்டினார். இந்த கருத்துகள் வெளியானதிலிருந்து, வெள்ளை மாளிகை பகிரங்கமாக CIA இயக்குனர் ஜோன் பிரென்னெனை பாதுகாத்துள்ளதோடு, செனட் விசாரணையோடு சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டு தடுத்து வைத்திருப்பதையும் ஒப்புக் கொண்டது.

CIA மற்றும் வெள்ளை மாளிகையின் இன்றைய நடவடிக்கைகளோடு, ஜூலை 27, 1974 இல் பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை கமிட்டியால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஜனாதிபதி ரிச்சார்ட் எம். நிக்சனுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ஒப்பிடுவது அறிவூட்டத்தக்கதாக உள்ளது. 1972 தேர்தல்களோடு சம்பந்தப்பட்ட ஜனநாயக கட்சியின் ஆவணங்களை வாட்டர்கேட் ஹோட்டலின் ஒரு அலுவலகத்திலிருந்து திருட ஒரு குற்றத்தனமான சதியில் ஈடுபட்டதாக நிக்சன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அந்த ஊடுருவலை மூடிமறைக்க மற்றும் அந்த சம்பவம் குறித்த விசாரணையைத் தடுக்கும் விதமாக அரசியல் எதிர்ப்பாளர்களை மிரட்ட, அவர் CIA மற்றும் ஏனைய உளவுத்துறை முகமைகளைப் பயன்படுத்தினார்.

வாட்டர்கேட் ஊடுருவலை மூடிமறைக்க, ஆதாரங்களை அழிக்க மற்றும் அதில் சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற, மற்றும் ஏனைய சட்டத்திற்குப் புறம்பான இரகசிய நடவடிக்கைகளின் வீச்சை மற்றும் அவை உயிர்வாழ்வதை அழிக்க, வாட்டர்கேட் ஊடுருவல் மீதான "விசாரணையை தாமதப்படுத்தும், மற்றும் தடுக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது ஒரு திட்டத்திலோ நிக்சன் பிரத்யேகமாகவோ, அல்லது அவரது நெருங்கிய உதவியாளர்களை மற்றும் முகவர்களை கொண்டோ ஈடுபட்டிருந்தார்" என்ற குற்றச்சாட்டும் அந்த குற்றப்பத்திரிக்கையில் உள்ளடங்கி இருந்தது.

இந்த மூடிமறைப்பை பின்தொடர்வதில், ஏனைய விடயங்களோடு சேர்ந்து, சம்பந்தப்பட்ட மற்றும் ஆதாரபூர்வ ஆவணங்களை அல்லது தகவல்களை சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெற்ற அமெரிக்காவின் விசாரணை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடமிருந்து மறைத்து வைப்பதில்", அரசு அமைப்புகளின் "விசாரணை நடவடிக்கைகளில் தலையிட்டதில் அல்லது தலையிட முயற்சித்ததில்"; மத்திய உளவுத்துறை முகமையை துஷ்பிரயோகம் செய்ய முயன்றதில்; மற்றும் "நிர்வாகத்துறை அதிகாரிகளின் பாகத்தில் இருந்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறைகேடுகளைப் பொறுத்த வரையில் ஒரு முழுமையான மற்றும் நிறைவான விசாரணை நடத்தப்படுமென்ற அமெரிக்க மக்களின் நம்பிக்கையை ஏமாற்றும் நோக்கில் பொது அறிக்கைகள் வெளியிட்டதில் அல்லது பொய்யுரைக்க செய்தமையில் அல்லது அவற்றை திரித்ததில்..." நிக்சன் சம்பந்தப்பட்டிருந்தார் என பிரதிநிதிகள் சபை கமிட்டி குற்றஞ்சாட்டியது.

மாற்ற வேண்டியதை மாற்றி, அதே குற்றச்சாட்டுக்களை இன்று ஒபாமா மற்றும் வெள்ளை மாளிகையின் மீது கொண்டு வர முடியும். பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்பட்டவர்கள் மீதான CIA இன் சித்திரவதை குறித்த ஒளிநாடாக்கள் உட்பட குற்றத்திற்கான ஆதாரம், புஷ் நிர்வாக அதிகாரிகளால் அழிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான ஆவணங்களின் பக்கங்கள் உட்பட "சம்பந்தப்பட்ட மற்றும் ஆதாரபூர்வ பொருட்களை மறைத்து வைத்ததன் மூலமாக" ஒபாமா நிர்வாகம் மூடிமறைப்பில் ஒத்துழைத்துள்ளது. அந்த நிர்வாகம் செனட் உளவுத்துறை கமிட்டியின் "விசாரணை நடவடிக்கைகளில் குறுக்கிடுகிறது அல்லது குறுக்கிட முயன்று வருகிறது", மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளின் "வீச்சை மற்றும் அவை உயிர்வாழ்வதை அழிக்க" CIA உடன் இணைந்து வேலை செய்து வருகிறது.

ஒபாமாவின் செய்தி தொடர்பாளர் ஜே கார்னேயின் கருத்துப்படி, நிர்வாகத்துறையின் அங்கீகரிக்கப்பட்ட நீண்டகால தனியுரிமைகளை மற்றும் இரகசியதன்மையின் நலன்களைக்" காப்பாற்றுவதற்காக ஆவணங்களை உளவுத்துறை கமிட்டிக்கு வழங்காமல் வைத்திருக்க வேண்டி இருப்பதாகவும், வெள்ளை மாளிகையின் வசமிருக்கும் 9,400 ஆவணங்கள் மொத்த ஆவணங்களில் வெறுமனே ஒரு "சிறிய சதவீதமாகும்" என்றும் ஒபாமா வலியுறுத்துவது, தோற்கடிக்கப்பட்டுள்ளன இந்த அறிக்கைகளும் கூட 40 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்களைப் பிரதிபலிக்கின்றன. அவரது குற்றங்களைப் பதிவு செய்திருந்த நாடாக்களை வெள்ளை மாளிகையே வைத்திருப்பதற்கு "நிர்வாகத்துறைக்கு தனியுரிமைகள்" இருப்பதாக நிக்சன் சுட்டிக் காட்டினார், அந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் மதிப்பற்றதென ஒதுக்கித் தள்ளியது. அந்த நாடாக்களில் இருந்து நிக்சன் அழித்த பதினெட்டரை நிமிடங்கள், மொத்த 3,700 மணி நேர பதிவில் ஒரு "சிறிய சதவீதம்" மட்டுமே ஆகும், அந்த வாதங்களும் இறுதியாக தோற்கடிக்கப்பட்டன.

தற்காப்பு, திருட்டு, சட்டவிரோத ஒட்டுகேட்டல், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குதல் மற்றும் தேர்தல் மோசடி உட்பட நிக்சனின் மூடிமறைப்பில் "இழிந்த உத்திகள்" நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டிருந்த நிலையில், ஒபாமா நிர்வாகமோ அதைவிட மேலதிகமாக ஆழமான குற்றங்களை ஜெனீவா தீர்மானங்கள் மற்றும் "கொடூரமான மற்றும் அசாதாரண தண்டனையைத்" தடுக்கும் எட்டாவது அரசியலமைப்பு திருத்தம் ஆகியவற்றை நேரடியாக மீறி நடத்தப்பட்ட அரசு சித்திரவதை மற்றும் படுகொலையின் ஒரு சர்வதேச திட்டத்தை மூடிமறைத்து வருகிறது.

நிர்வாகத்துறையைக் கண்காணிக்கும் ஒரு காங்கிரஸ் அமைப்பை உளவுபார்த்ததன் மூலமாக, ஒபாமா நிர்வாகம் அமெரிக்க புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு கட்டமைப்பிற்கு அடிப்படையாக அமைந்துள்ள அரசின் நிர்வாகத்துறை, நீதித்துறை மற்றும் சட்டமன்றத்திற்கு இடையிலான "அதிகார பகிர்வு" மற்றும் "ஒன்றையொன்று கண்காணித்து கட்டுப்படுத்தும்" ஆட்சிமுறை கோட்பாட்டுகளை மீறி உள்ளது. இது சர்வாதிகாரத்திற்கான பாதையில் ஒரு மைல்கல்லாகும்.

வாட்டர்கேட் நெருக்கடியில், வாஷிங்டன் போஸ்டின் இதழாளர்கள் பாப் உட்வார்டு மற்றும் கார்ல் பேன்ஸ்டைன் ஆகியோருக்கு இரகசியங்களை வெளியிட்டவரான (கடுங்குரல் என்று அழைக்கப்பட்டவரான) William Felt ஆல் வழங்கப்பட்ட கசிவுகள் பரந்த ஊடக கவனத்தை உருவாக்கியதோடு, மில்லியன் கணக்கானவர்கள் காங்கிரஸின் விசாரணையை தொலைக்காட்சியில் பார்க்கும் விளைவையும் ஏற்படுத்தியது, அத்தோடு ஜனாதிபதி மற்றும் அவரது சக-சதிகாரர்களின் மீது ஒரு குற்ற விசாரணையை தொடுக்க முன்னணி அரசியல் பிரமுகர்களிடமிருந்து அழைப்புகளைக் கொண்டு வந்தது. ஆகஸ்ட் 1974இல் நிக்சன் இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார்.

இதற்கு இடைப்பட்ட 40 ஆண்டுகள் ஜனநாயக நிகழ்வுபோக்கின் ஒரு சீரான அழிவைக் கண்டுள்ளன. இன்று உளவுத்துறை முகமைகள் அவற்றின் சொந்த சட்டங்களில் செயல்படுகின்றன. வெள்ளை மாளிகையோ நிதியியல் பிரபுத்துவத்துடனான கூட்டணியில் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஓர் அங்கமாக செயல்படுகிறது, காங்கிரஸோ விலைக்கு வாங்கப்பட்ட முத்திரை குத்தும் அமைப்பு என்பதற்கும் சற்று மேலதிகமாக செயல்படுகிறது. ஊடகங்கள் அரசாங்கத்தின் ஒரு பிரச்சார ஆயுதமாக சேவை செய்கின்றன.

2000ஆம் ஆண்டு தேர்தல்கள் களவாடப்பட்டமை ஒரு திருப்புமுனையாக இருந்தது. ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் நிறுவப்பட்ட பின்னர் வந்த ஆண்டுகள், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பல தொடர்ச்சியான விஸ்தரிக்கப்பட்ட மற்றும் ஒன்றையொன்று முந்தும் அரசியல் சதிகளால் குணாம்சப்பட்டிருந்தன. இவை யுத்தம் தொடங்க, மக்களை உளவுபார்க்க மற்றும் கைது செய்வதற்கான ஆணை போன்ற மக்களின் அடிப்படை உரிமைகளைக் களைவதில் நிர்வாகத்துறையின் அதிகாரத்தை பெரிதும் விஸ்தரிப்பதற்காக, இராணுவ படையைப் பயன்படுத்துவதற்கு அனுமதித்தல், தேசிய பாதுகாப்பு சட்டம், இராணுவ கமிஷன் சட்டம், FISA அரசியலமைப்பு திருத்த சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களில் சட்டமன்ற வெளிப்பாட்டைக் கண்டன.

புஷ்ஷின் கீழ் தொடங்கப்பட்ட ஜனநாயக-விரோத முறைமைகள் ஒபாமா நிர்வாகத்தால் விஸ்தரிக்கப்பட்டும், அமைப்புரீதியில் மாற்றப்பட்டும் உள்ளன. ஒரு பிடியாணையோ அல்லது வழக்கோ இல்லாமல் கொல்வதற்கு ஒபாமா தனக்குத்தானே உரிமம் வழங்கி உள்ளார். முன்னொருபோதும் இல்லாதளவிற்கு இரகசியங்கள் வெளியிடுவோர் மற்றும் இதழாளர்கள் மீதான வேட்டையை அவரது நிர்வாகம் மேற்பார்வை செய்துள்ளது, அரசாங்கத்தின் பொய்கள் மற்றும் குற்றத்தனங்களை அம்பலப்படுத்தியமை தான் அவர்கள் செய்த "குற்றமாக" இருந்தது. இதழாளர்கள் மீது உளவுபார்த்ததன் மூலமாக மற்றும் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று அச்சுறுத்தியதன் மூலமாக ஒபாமா நீதித்துறையானது பத்திரிகை சுதந்திரத்தைத் தாக்கி உள்ளது.

அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள நூறு மில்லியன் கணக்கான மக்களின் பிரத்தியேக தகவல் பரிமாற்றங்களை சேகரிக்கும் மற்றும் சேமித்து வைக்கும் அரசாங்க நடவடிக்கையை தேசிய பாதுகாப்பு முகமையின் இரகசியங்களை வெளியிட்டவரான எட்வார்ட் ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தி உள்ளார். இந்த வாரத்திலேயே, வாஷிங்டன் போஸ்டால் வெளியிடப்பட்ட ஸ்னோவ்டெனிடம் இருந்து வெளியான ஆவணங்கள், ஒரு பெயர் குறிப்பிடப்படாத வெளிநாட்டின் "100 சதவீத" தொலைபேசி அழைப்புகளையும் பதிவு செய்யும் NSAஇன் ஒரு திட்டத்தை அம்பலப்படுத்தின.

இந்த வரலாற்றை ஆய்வு செய்வதிலிருந்து இரண்டு தீர்மானங்களை எட்ட வேண்டி உள்ளது. ஒன்று, ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் மற்றும் இரண்டு பெருநிறுவன கட்சிகளும், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இரண்டுமே, அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பாக உள்ளன.

இரண்டாவதாக, ஜனநாயக உரிமைகளின் அழிவு அடிப்படை சமூக நிகழ்ச்சிப்போக்கில், மிக முக்கியமாக ஆழ்ந்த சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியில் வேரூன்றி உள்ளது. உலக சோசலிச வலைத் தளம் 2000இல் எழுதியது: செல்வம் கொழித்த செல்வந்த மேலடுக்கிற்கும் பரந்த மக்கள் பெரும்பான்மைக்கும் இடையில் அமெரிக்காவின் பிளவானது, இறுதியில், ஜனநாயக ஆட்சி வடிவங்களோடு பொருத்தமற்றதாக உள்ளது, என்று எழுதியது. அப்போதிருந்து, அமெரிக்க சமூகத்தின் உயர்மட்டத்திலிருப்பவர்களிடம் செல்வம் குவிவதும் ஜனநாயக நிகழ்முறைகள் அழிக்கப்படுவதும் இரண்டும் பரந்தளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சமீபத்திய மோசடி முற்றிலுமாக புதைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எவ்வாறிருந்த போதினும், அரசாங்கங்கள் மற்றும் அதன் உளவுத்துறை முகமைகளின் குற்றங்களுக்கான ஒரு நிஜமான கணக்கெடுப்பானது, தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான மற்றும் புரட்சிகர அரசியல் சக்தியாக தலையீடு செய்வதை சார்ந்துள்ளது.