World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை இலங்கை: வெலிவேரிய நீர் மாசடைதல் பற்றிய தொழிலாளர் விசாரணை: வெலிவேரிய ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவது அவசியம் என அமைச்சர் சரத் அமுனுகம கூறுகிறார்
By Rohantha
de Silva தண்ணீர் மாசடைவதற்கு எதிராக ஆகஸ்ட் 1 வெலிவேரியவில் நடத்தப்பட்ட போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டதோடு பெருந்தொகையானவர்கள் காயமடைந்தனர். இந்த தண்ணீர் மாசடைதலுக்கு பொறுப்பு என பிரதேசவாசிகளால் குற்றம் சாட்டப்படும் வெலிவேரிய ரதுபஸ்வலவில் உள்ள டிப்ட் புரடக்ட்ஸ் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்காக ஜனாதிபதி இராஜபக்ஷவின் அரசாங்கமும் ஹேலிஸ் கம்பனி நிர்வாகமும் மேற்கொண்ட முயற்சி இதுவரை தோல்விகண்டுள்ளது. இப்போது இந்த இரு தரப்பினரும் விஷமத்தனமான பிரச்சாரத்தை முன்னெடுத்து இன்னொரு தாக்குதலுக்கு வாய்ப்பு பார்த்திருக்கின்றனர். செவ்வாய் கிழமை, 2013ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் ஆசியா பசுபிக் வர்த்தக மற்றும் முதலீட்டு அறிக்கை வெளியீட்டை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டு, அரசாங்கத்தின் முன்னணி நபரான சர்வதேச நிதி ஒத்துழைப்பு பற்றிய சிரேஷ்ட அமைச்சரும் உப நிதி அமைச்சருமான சரத் அமுனுகம ஆற்றிய உரையில், அரசாங்கத்தின் தயாரிப்பு தெளிவாக வெளிப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை அபிவிருத்தி செய்வதற்காக மிகவும் “சரியான கொள்கையின்” தேவையை பற்றிய அரசாங்கத்தின் உற்சாகத்தை வெளிப்படுத்திய அவர், இலங்கையின் ஒரு பிரதான உற்பத்தியான மற்றும் தொழிற்துறை ஏற்றுமதியில் நூறில் ஒரு வீதத்தை கொண்டுள்ள டிப்ட் புரடக்ட்ஸ் நிறுவனத்தையே உதாரணமாகக் காட்டினார். “கலகக்காரர்களின் செயற்பாடுகளின் விளைவாக, வெனிக்ரோஸ் தொழிற்சாலையை மூடி வைக்க வேண்டியுள்ளது” என அமுனுகம குறிப்பிட்டார். அவரின் இந்த குற்றச்சாட்டு, தொழிற்சாலையில் இருந்து வெளிவிடப்படும் மாசடைந்த நீரின் காரணமாக தமக்கு நோய்கள் வருகின்றன என குற்றம் சாட்டி, அதற்கு தீர்வாக ஆலையை அப்புறப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபடும் வெலிவேரிய மக்களின் மீது சுமத்தும் இழிவான அவதூறாகும். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷவும், வெலிவேரிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த பொய் குற்றச்சாட்டை சுமத்தி, அவர்களை அடக்குவதற்காக இராணுவத்தை அனுப்பினர். ஹேலிஸ் நிறுவனமும் இந்தக் குற்றச்சாட்டையே சுமத்தியது. இது தற்செயலானது அல்ல என்றும் அவ்வாறு இராணுவ வழிமுறையின் மூலம், முதலீட்டாளர்களுக்காக அரசாங்கம் “சரியான கொள்கையை” முன்னெடுக்க வேண்டும் என்றும் அமுனுகம சுட்டிக் காட்டினார். அவர் உதாரணமாக சீனாவைக் காட்டினார். ஊடகங்களின் படி, மிகவும் மலிந்த கூலியுடன் உறுதியான ஆட்சியின் கீழ் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தியின் ஊடாகவே சீனா தனது பொருளாதாரத்தை மாற்றியமைத்தது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீனாவுக்குள் நுழைந்துகொண்டனர். அந்த நாட்டின் அதிகாரத்துவ ஆட்சியின் கொடூரமான ஒடுக்குமுறையை பாராட்டிய அமுனுகம, “எதிர்ப்பாளர்களையும் தொழிற்சங்கவாதிகளையும் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பியே அவர்களுக்குத் தாக்குதல் தொடுத்தது,” என தெரிவித்தார். சீனாவைப் போல் இலங்கையிலும் கலகக்காரர்களுக்கும் குழப்பம் விளைவிப்பவர்களுக்கும் எதிராக கடுமையாக செயற்பட வேண்டும் என அமுனுகம கூறினார். இன்னமும் உண்மையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளிப்படுத்தப்பட்டிருக்கா விட்டாலும், 1989 ஜூன் மாதம் நடத்திய தியனமன் சதுக்க படுகொலையில் 7,000 அளவிலான மக்கள் பெய்ஜிங் அரசாங்கத்தினால் கொன்றொழிக்கப்பட்டனர் என சுயாதீன பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர். மனித உரிமைகள் பற்றிய போலி வாய்ச்சவாடல்களின் மத்தியில், மேற்கத்தைய முதலீட்டாளர்கள், அத்தகைய இரத்தம் கொட்டும் ஒடுக்குமுறையின் மூலம் இலாப சுரண்டலை பாதுகாப்பதற்கு ஆட்சியாளர்கள் பின்வாங்கமாட்டார்கள் என்பது தெளிவான பின்னரே சீனாவுக்கு பாய்ந்தோடி வந்தனர். ஆகஸ்ட் 1, வெலிவேரிய இராணுவத் தாக்குதல், “வாழ்க்கை நிலைமை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக நடத்தப்படுகின்ற மேலும் மேலும் உக்கிரப்படுத்தப்படுகின்ற தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்துக்கு வருகின்ற, நாடு பூராவும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பயமுறுத்துவதற்காக, இராஜபக்ஷ அரசாங்கத்தின் கட்டளையின் கீழ் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாகும்” என சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) ஆரம்பத்தில் இருந்தே சுட்டிக் காட்டி வந்துள்ளது. அமுனுகமவின் கருத்தில் இது நிரூபீக்கப்பட்டுள்ளது போலவே அதையும் தாண்டிச் செல்லும் தாக்குதல் அரசாங்கத்துக்கு அவசியமாக உள்ளது. கலகக்காரர்கள் வெனிக்ரோஸ் ஆலைக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர் என அமுனுகம கூறும் கருத்து, வெலிவேரிய மக்களையும் தொழிலாளர்களையும் பிளவுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தின் பாகமாகும். அதேபோல் அவர்களைத் தனிமைப்படுத்தி தாக்குதல் தொடுப்பதையும் இலக்காக கொண்டதாகும். தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக வேலை நிறுத்தம் செய்யும் போதும், அவர்கள் பொருளாதாரத்தை சீர்குலைக்க செயற்படுவதாகவே அரசாங்கமும் பெரும் வர்த்தகர்களும் கூறுகின்றனர். இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் பெரும் வர்த்தகர்களுக்கும் தொழிலாளர்களின் மற்றும் வெகுஜனங்களின் உரிமைகளைப் பற்றி எந்தவொரு அக்கறையும் கிடையாது. பொருளாதார நெருக்கடி உக்கிரமடையும் இன்றைய நிலையில், அது மேலும் தெளிவாகியுள்ளது. இந்த நிறுவனத்துக்கு இலபம் கிடைக்காமையை பற்றி மக்கள் மீது அமுனுகம குற்றம் சாட்டினார். இரப்பர் பயிரிடுவோருக்கு முதலில் ஒரு கிலோ ரப்பருக்கு 600 ரூபா கிடைத்த போதிலும், இப்போது அவர்களுக்கு 250 ரூபா மட்டுமே கிடைக்கின்றது என, அதற்கான பொறுப்பை வெலிவேரிய ஆர்ப்பாட்டக்கரர்கள் மீது அவர் சுமத்தினார். அமுனுகமவின் கருத்து, வெலிவேரிய மக்களை மட்டும் இலக்காகக் கொண்டதல்ல. தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அரசாங்கத்தின் திட்டத்தையே அது காட்டுகின்றது. இந்த நிலைமையில், சோசக அழைப்பு விடுத்துள்ள வெலிவேரிய நீர் மாசடைதலுக்கு எதிரான விசாரணை மிகவும் அவசியமானதாகும். தொழிலாளர்கள் ஏழைகள் மற்றும் இளைஞர்களும் இந்த விசாரணையுடன் இணைந்துகொள்வது அவசரமாக இருப்பது இந்த காரணத்தினாலேயே ஆகும். அது அவர்கள் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு மட்டுமன்றி அரசாங்கத்தின் திட்டங்களை அம்பலப்படுத்துவதற்கும் பலம்வாய்ந்த வாய்ப்பை ஏற்படுத்தும். |
|