சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Police attack Hanwella villagers protesting against water pollution

இலங்கை: நீர் மாசுபடுத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஹங்வெல்ல கிராமவாசிகளை பொலிஸ் தாக்கியது

By our correspondents
18 March 2014

Use this version to printSend feedback

ஞாயிறு காலை, கொழும்பில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் கிழக்கே உள்ள ஹங்வெல்லையில் உள்ள ஹங்வெல்ல இரப்பர் புரடக்ட்ஸ் (எச்ஆர்பீ) நிறுவனத்துக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸ் மிருகத்தனமான தாக்குதல் நடத்திய போது, பல கிராம மக்கள் கடும் காயமடைந்ததுடன் 60 பேர் கைது செய்யப்பட்டனர். இரப்பர் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் ஒரு பாகமான இந்த ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாக கிராமவாசிகள் குற்றஞ்சாட்டுவதோடு, பல்வேறு தோல் நோய்கள் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

இந்த நீர் மாசுபாடு நேரடியாக துன்னான பிரதேசத்துக்கு அருகில் உள்ள பல கிராமங்களைப் பாதித்துள்ளது. ஏறத்தாழ 3,000 கிராமவாசிகள் ஆலை அகற்றப்பட வேண்டும் என்று கோரி பெப்ரவரி நடுப்பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்தனர். சுமார் 300 கிராம மக்கள் பங்குபற்றிய சமீபத்திய எதிர்ப்பு, எச்ஆர்பி ஆலைக்கு வெளியே சனிக்கிழமை தொடங்கி அன்று இரவும் தொடர்ந்தது. ஞாயிறு அதிகாலையில், மூன்று பஸ்களில் வந்த சுமார் 150 பொலிசாரும் சில இராணுவத்தினரும் ஆலையில் குவிக்கப்பட்டனர்.

சுமார் காலை 5.30 மணிக்கு நிராயுதபாணியான போராட்டக்காரர்களை தாக்கிய பொலிஸ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்றும் பாராமல் பொல்லுகள் மற்றும் துப்பாக்கி குழாய்களிலும் தாக்கியதுஅந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிய கிராமவாசிகள் துரத்தப்பட்டு அவர்களது வீடுகளில் வைத்து தாக்கப்பட்டனர். அருகிலிருந்த பௌத்த கோவிலுக்குள் பாதுகாப்பு நாடியவர்களும் தாக்கப்பட்டதோடு தாக்குதலில் கட்டிடத்தில் ஒரு பகுதியும் சேதமடைந்தது. குழந்தைகளை தூக்கி வைத்திருந்த சில பெண்களும் தாக்கப்பட்டனர் .

ஒரு பெண் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களிடம் கூறியதாவது: "நான் ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் ஐந்து மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டேன். திடீரென்று மூன்று பேருந்துகள் எங்களுக்கு முன் நிறுத்தப்பட்டன. 125 க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் இறங்கி வந்து, எந்த எச்சரிக்கையும் இல்லாமல் எம்மை தாக்கத் துவங்கினர். அவர்கள் பொல்லுகள், துப்பாக்கிகள் மற்றும் கம்பிகளையும் பயன்படுத்தினர். சிலர் கறுப்பு சீருடைகளை அணிந்திருந்தனர். சந்திரவதி என்ற பெண் என் கண்முன் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

"கிட்டத்தட்ட 15 பேர் காயமடைந்தனர். சிலர் கடும் காயமடைந்தனர். அனைவரும் பாதுகாப்பு தேடி ஓடினர். சிலர் கோவிலுக்குள் சென்றனர். அவர்கள் அங்கு பாதுகாப்பாக இருக்கும் என நினைத்தனர். ஆனால் பொலிஸ் கோவிலுக்குள்ளும் நுழைந்து அவர்களை தாக்கியது. இது மிகவும் கொடூரமானது. அவர்கள் கண்ணீர்ப்புகையும் வீசினர். கண்ணீர் புகையில் இருந்து தப்ப ஒரு தாய் தனது கைகளில் ஒரு குழந்தையையும் தூக்கிக்கொண்டு ஓடுவதை நான் பார்த்தேன்."

கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்கள் ஹோமாகம, பாதுக்க மற்றும் ஹங்வெல்ல பொலிஸ் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதோடு, ஞாயிறு முழுவதும்  அவர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்தன. ஆத்திரமடைந்த கிராம மக்கள் மரங்களை வெட்டித் தள்ளி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கொழும்பு-அவிசாவளை நெடுஞ்சாலையை தடுத்தனர்.

அரசாங்கம் கனரக ஆயுதங்கள் தாங்கிய 1,500 பாதுகாப்பு படையினரை நிலைநிறுத்தி முழு பகுதியையும் அடைத்ததோடு அவர்கள் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தத் தொடங்கினர். மோதல்களின் போது ஒரு பொலிஸ் அதிகாரி காயமடந்ததோடு பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், உடனடியாக அரச அடக்குமுறையை தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்த இதனைப் பற்றிக்கொண்டது.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண, பொலிஸ் அதிகாரியின் மரணம் "திட்டமிட்ட வன்முறைச் செயலா" என்பதை கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை ஆராய்கின்றது என ஒரு ஊடகத்திடம் கூறினார். இந்த ஆர்ப்பாட்டம் "திடீரென சீர்குலைக்கும் மற்றும் ஆத்திரமூட்டும் செயல்... சர்வதேச ரீதியில் அரசாங்கத்தை மற்றும் பொலிஸை இழிவுபடுத்த விரும்பும் குழு அல்லது குழுக்களால் நன்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

அவிசாவளை நீதிமன்றத்தின் நீதவான் கடந்த வெள்ளிக்கிழமை ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதை அடுத்தே கடந்த வார ஆர்ப்பாட்டம் தொடங்கியது. நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஆலையை ஏன் மூடக் கூடாது என்று விளக்குமாறு எச்ஆர்பி நிர்வாகத்துக்கு 14 நாட்கள் கால அவகாசம் கொடுத்தது. ஆயிரக்கணக்கான கிராமவாசிகள் எதிர்பார்த்ததைப் போல், ஆலை மூடலுக்கு கட்டளையிடுவதற்குப் பதிலாக, நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அதன் சொந்த காலக்கெடுவை புறந்தள்ளிவிட்டு எச்ஆர்பிக்கு பதில் தர அதிக காலம் கொடுத்தது.

ஞாயிறு நடந்த பொலிஸ் பாய்ச்சல், தொழில்துறை மாசுபடுத்தலுக்கு எதிராகப் போராடும் உழைக்கும் மக்கள் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் ஆகும்.

கடந்த
ஆகஸ்ட் மாதம், இராஜபக்ஷ அரசாங்கம், வெனிக்ரோஸ் டிப்ட் புரடக்ட்ஸ் தொழிற்சாலையினால் உள்ளூர் நீர் விநியோகம் மாசுபடுத்தப்படுவதை எதிர்த்து வெலிவேரிய பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்த ரதுபஸ்வல கிராமவாசிகளுக்கு எதிராக இராணுவத்தை திரட்டியிருந்தது. மூன்று இளைஞர்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதுடன் பலர் கடும் காயமடைந்தனர். எச்ஆர்பி தொழிற்சாலை போலவே, வெனிக்ரோசும் ரப்பர் கையுறைகள்
தயாரிக்கிறது.

சமீபத்திய பொலிஸ் வன்முறையானது, மாசுபடுத்தும் கையுறை ஆலைகளுக்கும் மற்றும் இப்போது உள்ளூர் மக்களைப் பாதிக்கும் கடுமையான சுகாதார பிரச்சினைகளுக்கும் எதிரான எவ்வித எதிர்ப்புக்களையும் அரசாங்கம் பொறுத்துக் கொள்ள முடியாது என்று இராஜபக்ஷ அரசாங்கம் விடுக்கும் மற்றொரு எச்சரிக்கை ஆகும்.

அரசாங்கம், கடந்த ஆகஸ்ட் இராணுவ தாக்குதலை தொடர்ந்தும் மூடிமறைப்பதோடு வெனிக்ரோஸ் ஆலை உள்ளூர் நீர் விநியோகத்தை மாசுபடுத்துவதற்கான தெளிவான ஆதாரம் இருந்தும், தயக்கமின்றி கையுறை உற்பத்தி ஆலைகளை பாதுகாக்கின்றது.

உள்ளூர் வெகுஜன எதிர்ப்பு காரணமாக வெனிக்ரோஸ் தொழிற்சாலை மூடப்பட்டபோது, நீர் மாசுபடுதல் பற்றி எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இதைத்தவிர, அரசாங்கம் மாசு தடுக்கும் எந்தவொரு முறையையும் அறிவிக்காமல், கையுறை தயாரிப்பு ஆலையை பியகம விசேட பொருளாதார மையத்துக்கு அனுமதித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மோதல்கள், வளர்ந்து வரும் பொதுமக்களது எதிர்ப்பு பற்றி ஆளும் உயரடுக்கின் கவலைகளை தூண்டியுள்ளது. "அனர்த்தம் நடக்க காத்திருக்கிறது" என்ற தலைப்பில் வந்த ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் தெரிவித்துள்ளதாவது: "அரசாங்கம் ரதுபஸ்வல நீர் பிரச்சினையில் அதன் கால்களை வாரிக்கொண்டதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் மாசுபடுத்தலுக்காக சரியாகவோ அல்லது தவறாகவோ குற்றம்சாட்டப்பட்ட தொழிற்சாலைக்கு சார்பாக இருப்பதாக காட்டிக்கொண்டது. இது வெளிப்படையாக ஹங்வெல்லையிலும் அதே தவறை செய்துள்ளது."

மாசுபடுத்தும் கையுறை தயாரிப்பாளர்களையும் பிற தொழிற்துறைகளையும் அரசாங்கம் பாதுகாப்பதன் முயற்சிகளுக்குப் பின்னால், பூகோள நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதும் முதலீட்டை ஈர்ப்பதுவுமே உள்ளன. இலங்கையை கூட்டுத்தாபன முதலீட்டுக்கான ஒரு "சர்வதேச போட்டித்தன்மை கொண்ட" இடமாக ஆக்கும் உந்துதலுக்கு முதலில் இரையாவது, மாசுபடாத தண்ணீர் மற்றும் பிற அடிப்படை சுகாதார மற்றும் பாதுகாப்பு  தரங்களே ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி வெலிவேரிய நீர் மாசுபாடுதல் பற்றி ஒரு சுயாதீன தொழிலாளர் விசாரணையை முன்னெடுத்துள்ளதோடு, அந்தப் பிரதேசத்திலும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் உள்ள கிராம மக்கள் மற்றும் தொழிலாளர்களின் பெருகிய ஆதரவைத் திரட்டி வருகிறது.

கடந்த ஆகஸ்ட் இராணுவ தாக்குதலின் பின்னர் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள், மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு எவரும் பொறுப்பாக்கப்படவில்லை. அதேபோல், குடிநீரை தொழில்துறை மாசுபடுத்தல் மற்றும் அதனால் இலங்கை மக்களுக்கு ஏற்படும் சுகாதார தாக்கங்களை பற்றி எந்தவொரு சுயாதீன விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.

நாம், வெலிவேரிய நீர் மாசுபடுத்தல் தொடர்பான சுயாதீன தொழிலாளர் விசாரணையை ஆதரிக்குமாறு இலங்கை பூராவும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஹங்வெல்ல ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஞாயிறன்று நடத்தப்பட்ட தாக்குதல் இந்த விசாரணையின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.