தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Imperialist hypocrisy on Crimea கிரிமியாவும் ஏகாதிபத்திய போலித்தனமும்
Joseph Kishore Use this version to print| Send feedback கிரிமியாவில் ஞாயிறன்று நடந்த சர்வஜன வாக்கெடுப்பை அடுத்து, ஒபாமா நிர்வாகத்தினதும் அமெரிக்க ஊடகங்களினதும் ஒரு தொடர்ச்சியான கண்டனங்கள் பின்தொடர்ந்தன. உக்ரேன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஏகாதிபத்திய தாக்குதலைத் தீவிரப்படுத்த அது பயன்படுத்தப்பட்டு வருவதுடன், அதன் இறுதி நோக்கம் ரஷ்யாவிற்கெதிரான ஆட்சி மாற்றம் அல்லது யுத்தத்தை செய்வதாகும். அமெரிக்கா அதன் வெளியுறவுக் கொள்கையைக் கொண்டு செல்வதில், நாஜி பிரச்சாரகர் ஜோசப் கோயபல்ஸால் உச்சரிக்கப்பட்ட, ஒரு பொய் போதுமானளவிற்கு பெரிதாகவும், போதுமானளவிற்கு மீண்டும் மீண்டும் கூறப்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்ற கோட்பாட்டில் செயல்படுகிறது. அந்த வாக்கெடுப்பு உக்ரேனிலிருந்து பிரிந்து செல்வதற்கும் மற்றும் ரஷ்யாவிற்குள் இணைவதற்கும் சாதகமாக இருக்குமென்பதை முன்னரே அனுமானித்து, அமெரிக்காவும் ஐரோப்பாவும் முன்கூட்டியே அதை சட்டத்திற்குப் புறம்பானதாக மற்றும் “சட்ட விரோதமானதாக" அறிவித்தன. “சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு ரஷ்ய இராணுவ தலையீட்டின் வன்முறை அச்சுறுத்தல் மற்றும் அச்சுறுத்தலின் கீழ் அந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதென" வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை குறிப்பிட்டது. என்னவொரு போலித்தனம்! பத்து ஆயிரக்கணக்கான அமெரிக்க துப்பாக்கிகள், டாங்கிகள், யுத்த விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை உள்ளூர் மக்களை நோக்கி நிறுத்தி வைத்து, அமெரிக்கா அது அடிபணிய செய்திருந்த மற்றும் இராணுவரீதியில் ஆக்கிரமித்திருந்த நாடுகளில் [உதாரணமாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான்] தேர்தல்களை நடத்தி உள்ளதோடு, அந்த வாக்கெடுப்புகளை ஜனநாயகத்திற்கான முன்மாதிரிகளாகவும் அது புகழ்ந்திருந்தது. சர்வஜன வாக்கெடுப்பைக் கண்டிக்கும் ஒரு தீர்மானத்தின் மீது சனியன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நடந்த ஒரு வாக்கெடுப்பைத் தொடர்ந்து, அதில் ரஷ்யா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இருந்த நிலையில், ஐ.நா.விற்கான அமெரிக்க தூதர் சமந்தா பாவர் “இன்று வீட்டோ அதிகாரத்தில் ஒரேயொரு நாடு மட்டுமே [ரஷ்யா] எதிராக வாக்களித்திருக்கிறதென்றால்,சர்வதேச எல்லைகள் என்பது வெறும் கருத்துரை என்பதற்கும் மேலானவை என்று உலகம் நம்புகிறது,” என்றார். சர்வதேச எல்லைகளை அமெரிக்கா மீறும் அளவிற்கு தைரியமாக அங்கே வேறெந்தவொரு நாடும் மீறுவதில்லை. தற்போது ரஷ்யாவிற்கு எதிராக கூறிவரும் அதே தேசிய இறையாண்மை மற்றும் நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய கோட்பாடுகளை, அதன் உலகளாவிய புவிசார் மூலோபாய மற்றும் பொருளாதார நோக்கங்களுக்கு ஒரு இடையூறாக கருதும் ஆட்சிகளை கையாள்வதென்று வரும் போது, அவற்றை கருத்துரைகளாக இல்லாது, மாறாக பொருத்தமற்றவையாக எடுத்துக் கொள்கிறது. சர்வதேச சட்டத்தின் கீழ் ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமாக தடை செய்யப்பட்ட வலிந்துதாக்கும் யுத்த கொள்கையை, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்கு முன்னர், வாஷிங்டன் உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதோடு, எந்தவொரு நாட்டிலும் அந்நாட்டு அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் ஆளில்லா விமானங்களான டிரோன்களைச் செலுத்தவோ அல்லது மக்களைக் கொல்லவோ அதற்கு உரிமை உள்ளதென்று அரசு கொள்கையின் ஒரு கருப்பொருளாக கொண்டுள்ளது. இந்த நிலைப்பாட்டை 2013இல் ஓர் உயர்மட்ட ஐ.நா. அதிகாரி சட்டவிரோதமென்று அறிவித்தார். ஒபாமாவின் கீழ், அதுபோன்ற படுகொலைகளும், மக்கள் மீதான கொலைகளும் பாரியளவில் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. அது பல நாடுகளில் அமெரிக்க பிரஜைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களை பலி வாங்கி உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கேரி அவரது ரஷ்ய எதிர்பலம் செர்ஜெ லாவ்ரொவ் உடனான கடந்த வாரயிறுதியில் நடத்திய ஒரு தொலைபேசி உரையாடலில், கிழக்கு உக்ரேனிய நகரங்களில் நிலவும் "சிக்கல்கள்" “ரஷ்யாவால் ஊக்கப்படுத்தப்படுகின்றன, ஏன் ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளாலும் கூட வழி நடத்தப்படுகின்றன... அவை புதிய உக்ரேனிய அரசாங்கத்திற்கு குழிபறிக்கும் ஒரு வழியில் நடத்தப்படுகின்றன, மேலதிகமாக ரஷ்ய இராணுவ தலையீட்டிற்கான ஒரு போலிக்காரணத்தை உருவாக்குவதற்காக கூட இருக்கலாம்,” என்றார். அரசாங்கங்களைக் கவிழ்க்கும் மற்றும் கைப்பாவை ஆட்சிகளை நிறுவும் நோக்கத்தோடு "மனித உரிமை" தலையீடுகள் என்ற போலிக்காரணத்தை உருவாக்குவதற்கான உள்நாட்டு மோதல்களைத் தூண்டுவதை அமெரிக்க ஏகாதிபத்தியம் தாராளமாக முன்னர் செய்துள்ளது. இந்த கொள்கை மிக சமீபத்தில் சிரியா மற்றும் லிபியாவில் பின்பற்றப்பட்டுள்ளது. 1991இல் சோவியத் ஒன்றிய கலைப்பிற்குப் பின்னர், முன்னாள் கிழக்கு அணி நாடுகளையும், முன்னாள் சோவியத் குடியரசுகளையும் அமெரிக்க செல்வாக்கு சுற்றுவட்டத்திற்குள் கொண்டு வரும் அதன் மூலோபாயத்தின் பாகமாக வாஷிங்டன் யூகோஸ்லேவியாவை உடைக்கத் தொடங்கியது. 1990களின் மத்தியில் பொஸ்னியா மற்றும் குரோஷிய யுத்தங்களை ஆதரித்த அது, 1999இல் கொசோவோவை சேர்பியாவில் இருந்து பிரிப்பதற்காக சேர்பியாவிற்கு எதிராக, 78 நாட்கள் வான்வழி போருக்கு இழுத்துச் சென்றது. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அது பின்னர் நீண்டகால சேர்பிய மாகாணத்தை ஒரு சுதந்திர அரசாக அங்கீகரிப்பதில் போய் முடிந்தது. மாஸ்கோ “குழப்பங்களை" தூண்டி வருவதாகவும், உக்ரேனிய அரசாங்கத்திற்கு குழிபறிப்பதாகவும் குற்றஞ்சாட்டும் கேரி, தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-சார்பிலான விக்டொர் யானுகோவிச் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து இறக்குவதற்காக, கியேவில் எதிர்ப்புகளைத் சூழ்ச்சியாக கையாளவும், மற்றும் அது பாசிச சக்திகளால் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்படுவதையும், நவ-நாஜி மற்றும் யூத-விரோத மந்திரிகளால் நிரம்பிய அமெரிக்க-சார்பு ஆட்சி நிறுவப்படுவதையும் மேற்பார்வையிட்டு வருகிறார். உக்ரேனிய நெருக்கடியில், அமெரிக்க மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் தான் ஆக்கிரமிப்பாளர்களாக உள்ளனர். அவர்கள் ரஷ்யாவிற்கு பாதிப்பேற்படும்வகையில் அப்பிராந்தியத்தில் அதிகார சமநிலையை தீவிரமாக மாற்ற தலையீடு செய்துள்ளனர். அவர்கள் ரஷ்யாவை பலவீனப்படுத்தும் மற்றும் இறுதியில் துண்டாடும் நோக்கில் உக்ரேனை அமெரிக்க மற்றும் நேட்டோ இராணுவ படைகளுக்கான மற்றும் முடிவில்லா ஆத்திரமூட்டல்களுக்கான ஒரு முன்னணி அரங்கமாக மாற்ற முனைகின்றனர். அமெரிக்க யுத்தகப்பல்கள் அப்பிராந்தியத்தற்கு அனுப்பப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவோடு அணிசேர்ந்த லித்வேனியா மற்றும் போலாந்து உட்பட, இங்கே துணை ஜனாதிபதி ஜோசப் பேடன் இந்த வாரம் விஜயம் செய்ய உள்ள நிலையில், அப்பிராந்திய நாடுகள் அதிகளவில் உதவிகளைப் பெற்று வருகின்றன. பெலாரஸ் மற்றும் கஸாக்ஸ்தான் போன்று ரஷ்யாவுடன் மிக நெருக்கமாக உள்ள நாடுகள், ஆட்சி மாற்றத்திற்கான அடுத்த இலக்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்வதென்பது புட்டின் ஆட்சிக்கோ அல்லது மேற்கத்திய ஆத்திரமூட்டல்களுக்கு விடையிறுப்பாக வரும் அதன் நடவடிக்கைகளுக்கோ எந்தவிதத்திலும் அரசியல் ஆதரவளிப்பது என்றாகாது. சோவியத் ஒன்றிய கலைப்பிலிருந்து முன்னாள் அரசு சொத்துக்களைத் திருடியதன் மூலமாக தங்களைத்தாங்களே செழிப்பாக்கி கொண்ட குற்றஞ்சார்ந்த செல்வந்த மேற்தட்டுக்களை ரஷ்ய அரசாங்கம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதன் நலன்களை முன்னெடுப்பதில், உக்ரேன் மற்றும் ரஷ்யா இரண்டிலும் ரஷ்ய பேரினவாதத்தை ஊக்குவிப்பதில் அது தங்கி உள்ளது. அது ரஷ்யா, உக்ரேன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகின் எந்த பகுதியிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த மற்றும் ஆழ்ந்த யுத்த-எதிர்ப்பு உணர்வுகளுக்கு அழைப்பு விடுக்க இலாயக்கற்று உள்ளது. உக்ரேனிய நெருக்கடி தொடர்கின்ற நிலையில், ரஷ்யாவிற்கு ஒரு அவமானகரமான தோல்வியை அளிப்பதும், அதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான சக்திகளின் உறவினை நிரந்தரமாக மாற்றுவதும் அமெரிக்காவின் நோக்கமாக உள்ளதென்பது மிகவும் தெளிவாகி வருகிறது. ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்டில் பிரசுரமான ஒரு தலையங்கம், “மேற்கு தண்டிக்கும் குறிக்கோள்களையும், பின்னர் காலப்போக்கில், திரு. புட்டின் ஆட்சியைப் பலவீனப்படுத்தும் குறிக்கோள்களையும் கூட அரவணைக்க வேண்டுமென" அறிவித்தது. கியேவிற்கு விஜயம் செய்திருக்கும் இருகட்சிகளின் செனட் பிரதிநிதிகள் குழுவில் தற்போது இடம் பெற்றிருக்கும் அமெரிக்க செனட்டர் ஜோன் மெக்கிரென், சனியன்று நியூ யேர்க் டைம்ஸில் பிரசுரமான ஒரு கருத்துரையில், அமெரிக்க ஆளும் வர்க்கத்தில் செல்வாக்கு மிக்க பிரிவுகளின் அடிப்படை மூலோபாயத்தைக் கோடிட்டு காட்டினார். “[புட்டினின்] ஆட்சி கவர்ச்சிகரமாக தோன்றலாம், ஆனால் அது உள்ளே அழுகி வருகிறது,” என்று மெக்கிரென் எழுதினார். அவர் தொடர்ந்து எழுதுகையில், “விக்டொர் எப். யானுகோவிச் விடயத்தில் உக்ரேனியர்கள் எவ்வாறு கணக்குத்தீர்த்துக்கொண்டார்களோ இறுதியில் அதை வழியில் திரு. புட்டின் விடயத்தில் ரஷ்யர்கள் வருவார்கள்,” என்று எழுதினார். வெறுமனே கிரிமியாவில் அதன் நடவடிக்கைகளுக்காக மட்டுமல்ல, மாறாக ரஷ்ய பிரஜைகள் மீதான "மனித உரிமை" மீறல்களுக்காகவும் ரஷ்யாவிற்கு எதிராக மேலதிகமான மற்றும் கடுமையான தடைகளை விதிக்க அழைப்பு விடுக்குமளவிற்கு அவர் சென்றார். இந்த கருத்து ஈரான்-பாணியில் தனிமைப்படுத்துவதற்கான ஒரு பகிரங்க அழைப்பாகும். உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் மால்டோவா ஆகியவற்றை நேட்டோவின் கீழ் கொண்டு வரவும் அவர் கூடுதலாக அழைப்பு விடுத்தார். மெக்கிரெனும், ஜனநாயக கட்சியின் விப் டிக் டர்பின் உட்பட ஏனைய செனட்டர்களும், புதிய உக்ரேனிய அரசாங்கத்திற்கு உடனடியாக ஆயுதங்கள் வழங்கும் வழிவகைகளை ஆராய அழைப்பு விடுத்துள்ளனர். அந்த உக்ரேனிய "புரட்சி" ரஷ்யாவின் எல்லையோரத்தில் உள்ள ஒரு நாட்டில் அதன் செல்வாக்கை இல்லாதொழிப்பதை நோக்கமாக கொண்டதாகும். அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒன்று, ரஷ்யா எதிர்வினை காட்டாது என்று அனுமானித்து, கிரிமியா மீது கட்டுப்பாட்டைத் தக்க வைக்கும் புட்டின் ஆட்சியின் முயற்சிக்கு கடுஞ்சீற்றத்தோடு விடையிறுப்பு காட்டி உள்ளது அல்லது கிரிமிய நடவடிக்கையை அனுமானித்தே, அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைத் தீவிரமாக்க ஒரு சந்தர்ப்பமாக அதை பயன்படுத்தி உள்ளது. எந்தளவிற்கு செல்ல அமெரிக்கா தயாராக உள்ளது? உக்ரேன் தொடர்பாக அதன் உடனடி நோக்கங்கள் என்னவாக இருந்தாலும், ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகள் ஒரு தீர்க்கமான தர்க்கத்தைக் கொண்டிருக்கின்றன. உக்ரேனில், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அதிதீவிர-வலது மற்றும் பாசிசவாத துணைஇராணுவப்பிரிவுகளை ஊக்குவித்துள்ளதோடு, அவை அங்கே தற்போது அரசு அதிகாரக் கைப்பற்றும் நிலைமைகளில் உள்ளன. அவை ரஷ்யாவிற்கு எதிராக ஒரு மேற்கத்திய யுத்தத்தைத் தூண்டுவதற்கு வளைந்துள்ளதோடு அந்நாட்டிற்குள் எழும் அனைத்து எதிர்ப்புகளையும் ஒடுக்கி வருகின்றன. புதிய அரசாங்கத்தால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு தேசிய படை "புரட்சியின்" போதிருந்த அதிரடி துருப்புகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட படைகளாக மாற்ற உள்ளது. எந்த ஒருசில நடவடிக்கையும் பிரதான சக்திகளை உடனடியாக விரைவாக ஒரு நேரடி யுத்தத்திற்குள் இழுத்துச்செல்லக்கூடும் என்கிற அளவிற்கு அங்கே சூழ்நிலை அதிதீவிர ஸ்திரமின்மையில் உள்ளது. தற்போதைய நெருக்கடி ஒரு அணுஆயுத உலக போரைத் தூண்டுமா? அதற்கான ஒரு நிஜமான சாத்தியக்கூறு உள்ளது. ஒரு விடயம் நிச்சயமானது: தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட சர்வதேச நடவடிக்கையால் ஏகாதிபத்தியம் நிராயுதபாணியாக்கப்பட்டு தோற்கடிக்கப்படாவிட்டால், அது முடிவில்லா நெருக்கடிகளை உருவாக்கும் என்பதோடு அதில் ஏதாவதொன்று ஓர் அணுஆயுத மனிதயின அழிப்பின் கொடூரங்களுக்குள் உலகை மூழ்கடிக்கும். தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்களில் அதனால் உருவாக்கப்பட்ட குரலொலிகளை கடமையுணர்ச்சியோடு எதிரொலிப்பதற்கு வெளியே இருந்து வரும் ஒரு மக்கள் கருத்தை அமெரிக்க ஆளும் வர்க்கம் அங்கீகரிக்காது. இருப்பினும், என்ன நடந்து வருகிறதென்பதை அமெரிக்க தொழிலாளர் வர்க்கம் அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு, அது ஆழ்ந்த விரோதத்தோடு உள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கிய யுத்தங்கள் அமெரிக்க மக்களின் நனவில் ஓர் ஆழ்ந்த பாதிப்பை விட்டு வைக்காமல் மறைந்துவிடவில்லை. அந்த எதிர்ப்பானது, ஆளும் வர்க்கம் மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக, மற்றும் அவர்கள் பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக, தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தின் பாகமாக அணிதிரட்டப்பட்டு அதற்கு நனவுபூர்வமான அரசியல் வடிவம் வழங்கப்பட வேண்டும். |
|
|