World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Ukraine, the United States and international law

உக்ரேனும், அமெரிக்காவும், சர்வதேச சட்டமும்

Joseph Kishore
11 March 2014

Back to screen version

உக்ரேனின் கிரிமியா பகுதியில் ஒரு பிரிவினை திட்டங்கள் மீதான ஞாயிறன்று நடக்க உள்ள சர்வஜன வாக்கெடுப்பு, ரஷ்யா மீது ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளால் அதிகரிக்கப்பட்டிருக்கும் தாக்குதல்களின் குவிமையமாக உள்ளது. அப்பகுதிக்குள் கூடுதல் இராணுவ படைகள் நகர்த்தப்பட்டு, தடைகளுக்கான புதிய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த ரஷ்ய மொழி பேசும் பெரும்பான்மையினரைக் கொண்ட சுயஅதிகார குடியரசில் நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பானது உக்ரேனின் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாக, சர்வதேச சட்டமீறலாக அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் பிரிட்டன் கண்டித்துள்ளன. உக்ரேனுக்கான அமெரிக்க தூதர் ஜியோபெரி பயாட் திங்களன்று கூறுகையில், அமெரிக்கா "அதுபோன்றவொரு சர்வஜன வாக்கெடுப்பை" அங்கீகரிக்காது என்று தெரிவித்தார். ரஷ்ய சார்பிலான குண்டர்களின் கூட்டம்" அந்த பகுதியில் ரோந்து சுற்றி வருவதாகவும், உக்ரேனில் பிரிவினையைத் தூண்டிவிட ஒரு சுறுசுறுப்பான பிரச்சாரம்" அங்கே நடந்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பயாட்டின் கருத்துக்கள் ஒபாமாவின் மற்றும் பிரிட்டன், ஜேர்மனின் உயர்மட்ட அதிகாரிகளின் கருத்துக்களை எதிரொலித்தன, ஒபாமா கூறுகையில், எந்தவொரு சர்வஜன வாக்கெடுப்பும் "உக்ரேனிய அரசியலமைப்பை மீறுவதாகும், சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்" என்று அறிவித்துள்ளார். ஜேர்மன் அதிபர் அங்கெலா மெர்கேலுக்கும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூனுக்கும் இடையே ஞாயிறன்று இரவு நடந்த ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, டோவ்னிங் வீதியிலிருந்து ஒரு அறிக்கை வெளியானது. பரிந்துரைக்கப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு "சட்டவிரோதமானதாக இருக்கும் என்பதோடு அதன் முடிவை சட்டப்பூர்வமாக்க ரஷ்யாவால் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் மேலதிக விளைவுகளைக் கொண்டு வரும், என அந்த அறிக்கை அறிவித்தது. ரஷ்ய நடவடிக்கைகள் "வெளிப்படையான சர்வதேச சட்டமீறலாக" இருப்பதாக முன்னதாக கேமரூன் அறிவித்திருந்தார்.

அதுபோன்ற கருத்துக்கள் மேற்கத்திய அதிகாரங்களின் பொய் மற்றும் போலித்தனத்தின் அளவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு வருகின்றன. இராணுவ-உளவுத்துறை எந்திரத்தினையும் மற்றும் குறுகிய நிதியியல் நலன்களை மட்டுமே தமது ஆதரவு அடித்தளமாக கொண்டிராது பொதுமக்கள் ஆதரவிற்கும் அழைப்புவிடுவதை அவசியமாக கருதும் அரசாங்கங்கள், இத்தகைய தமது கருத்துக்களின் கொள்கை மாறாமை மற்றும் பொருந்தும் தன்மை பற்றி சிந்திகின்றன. ஆனால் சர்வதேச சட்டத்தின் ஆதரவாளர்கள் என்று கூறிக் கொள்ளும் இலண்டன், பேர்லின் மற்றும் வாஷிங்டனில் உள்ளவர்களுக்கு இதுவொரு விடயமே அல்ல.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தை அரசியலமைப்பு முறைக்கு விரோதமாக தூக்கியெறிவதில் மற்றும் பெப்ரவரி 22 பதவி கவிழ்ப்பிற்கு யாருடைய கையாட்கள் அதிரடி துருப்புகளாக சேவை செய்துள்ளனரோ அந்த நவ-நாஜிக்களை உள்ளடக்கிய ஒரு தீவிர வலது ஆட்சியை நிறுவுவதில் அமெரிக்கா தான் முறைப்படி உக்ரேனின் தேசிய இறையாண்மையை மீறி உள்ளது.

அனைத்திற்கும் மேலாக, திரு. பயாட் தான் ஐரோப்பிய மற்றும் யுரேஷிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை செயலர் விக்டோரியா நூலாந்துடன் கடந்த ஆண்டு இறுதியில் வெளியில் கசிந்த தொலைபேசி உரையாடலில் பங்கு பெற்றிருந்தவர். அதில் அந்த இரண்டு அதிகாரிகளும் உக்ரேனிய எதிர்ப்பு இயக்கத்தை ஒரு புதிய அரசாங்கத்திற்குள் "சேவை செய்விக்க" வேண்டிய அவசியத்தைக் குறித்து விவாதித்திருந்தனர். இதுவரையில் பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள அர்செனி யாட்சென்யுக்கை, அவர்கள் "யாட்ஸ்" (Yats – செல்ல நாய்குட்டியைக் குறிப்பிடும் சொல்) என்று குறிப்பிட்டதையும், அமெரிக்காவின் ஒரு தலையாட்டியாக அந்நாட்டை கொண்டு நடாத்துவதற்கு அவருக்கு "பொருளாதார அனுபவமும்", ஆளும் அனுபவமும்" இருப்பதாக குறிப்பிட்டதையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

ஸ்வோபோடா கட்சி மற்றும் Right Sector போன்ற பாசிச அமைப்புகளோடு இணைந்த எதிர்ப்பு சக்திகளுக்கு பில்லியன் கணக்கிலான டாலர்கள் நிதியுதவி வழங்கி அமெரிக்காவும், ஐரோப்பிய சக்திகளும் உக்ரேனில் தலையிட்டதோடு சேர்ந்து தான், சட்டவிரோதமான ஒட்டுமொத்த ஆட்சி மாற்ற நடவடிக்கை நடத்தப்பட்டது. பிரிவினையை அதிகரிக்க ஒரு சுறுசுறுப்பான பிரச்சாரத்தை" நடத்திய இத்தகைய வெறி கொண்ட உக்ரேனிய தேசியவாதிகள் யூத-விரோத வசைமொழிகளை உமிழ்ந்து வருவதோடு, ரஷ்ய மொழி பேசும் உக்ரேனியர்களை மற்றும் ஏனைய சிறுபான்மையினரை அச்சுறுத்தியும், தாக்கியும் வருகின்றனர். அதன் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக, புதிய நாடாளுமன்றம் ரஷ்ய மொழி பேசுவோரின் மொழி உரிமைகளைப் பறித்தது.

அமெரிக்க பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டின் உலகளாவிய நலன்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய அரசாங்கங்களைக் கவிழ்க்க, உள்நாட்டு குழப்பங்களைத் தூண்டிவிட்டும், அவற்றில் தலையீடு செய்தும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, "பிரிவினைகள் கிளறுவதிலும்" ஒரு நீண்ட மற்றும் இழிந்த வரலாறைக் கொண்டுள்ள ஓர் அரசாங்கத்திற்காக, பயாட் பேசுகிறார்.

வெறும் 110 ஆண்டுகளுக்கு முன்னர், பனாமாவை கொலாம்பியாவிடம் இருந்து அபகரிப்பதற்காக ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் "பனாமா புரட்சிக்கு" ஊக்கங் கொடுத்து உதவினார். பிரெஞ்சு பொறியியலாளர் பிலிப்-ஜோன் போனோவ்-வரிய்யா உடன் வேலை செய்து ரூஸ்வெல்ட் நிர்வாகம் புதிய நாட்டின் அரசியலமைப்பை வடிவமைத்ததோடு, புதிய அரசாங்கத்திற்கு நிதியுதவியும் வழங்கியது. பனாமா கால்வாய் கட்டுவதற்கு ஒப்புதல் முத்திரை வழங்கவோ அல்லது அமெரிக்க கட்டுப்பாட்டிற்கு அது இணங்கவோ தயங்கினால், அமெரிக்க இராணுவ ஆதரவு திரும்ப எடுக்கப்படும் (கொலாம்பிய படைகள் திரும்பி வரும்) என்று அந்த புதிய அரசு அச்சுறுத்தப்பட்டது.

கொலாம்பியாவிடம் இருந்து பனாமாவை வளைத்து அபகரித்தமை, ஸ்பானிய-அமெரிக்க யுத்த எச்சசொச்சங்களின் பாகமாக பிலிப்பைன்ஸை அமெரிக்கா எடுத்துக் கொண்டதற்கு வெறும் ஒருசில ஆண்டுகளுக்கு பின் நடந்ததாகும். அந்த பிலிப்பைன்ஸ் அபகரிப்பு, அதன் உள்நாட்டு மக்களுக்கு எதிராக ஒரு மூர்க்கமான யுத்தத்தைத் தொடர்ந்து நடந்திருந்தது, அதில் ஒரு மில்லியன் சாமானிய மக்கள் கொல்லப்பட்டனர். பனாமா சம்பவத்திற்கு ஓராண்டிற்குப் பின்னர், ரூஸ்வெல்ட் மொன்ரோ கொள்கையை "விரிவாக்கி" மேற்கத்திய பகுதி மீது (அமெரிக்காவின் கொல்லைப்புறம்”) வாஷிங்டனின் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் உரிமைகோரலை விஸ்தரித்தும், அதற்கடுத்த கால் நூற்றாண்டில் டஜன் கணக்கான இராணுவ தலையீடுகளுக்கு அடித்தளத்தை உருவாக்கினார். .

மிக சமீபத்தில், அமெரிக்கா அதன் நலன்களைப் பாதுகாக்க உலகில் எந்தவொரு நாட்டின் மீதும் தலையீடு செய்யும் உரிமையை உறுதிப்படுத்தி உள்ளது. வலிந்துதாக்கும் யுத்தத்திற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபை சாசனம் மற்றும் ஏனைய சர்வதேச தடைகளை நேரடியாக மீறிய விதத்தில், அது முன்கூட்டி தாக்கும் யுத்தக் (preemptive war) கொள்கையை உத்தியோகபூர்வமாக நிறைவேற்றி உள்ளது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியில் இருந்து, சர்வதேச உறவுகளின் அஸ்திவாரமாக விளங்கும், தேசிய இறையாண்மை ஒதுக்கி வைக்கப்பட்டு விட்டதை அமெரிக்கா துல்லியமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

1991இல் சுலோவேனியா மற்றும் குரோஷியாவை ஜேர்மன் அங்கீகரித்ததில் இருந்து தொடங்கி, 1990களில் யூகோஸ்லேவியாவில், அமெரிக்காவும் ஜேர்மனியும் தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஒதுக்கி தள்ளியதோடு, அந்நாட்டை உடைக்க இன மற்றும் மத பிரிவினைகளைத் தூண்டிவிட்டன. 1999இன் குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில், கொசோவோவைத் துண்டாடுவதற்காக, பெல்கிரேடில் [சேர்பியாவின் தலைநகர்] இருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தை எதிர்த்து, அமெரிக்காவும் நேட்டோவும் சேர்பியா மீது 78 நாள் விமான தாக்குதல் நடத்தின, பின்னர் 2008இல் கொசோவோ சுதந்திரம் அடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. வாஷிங்டனும் ஐரோப்பிய சக்திகளும் உடனடியாக அதை ஒரு சுதந்திர அரசாக அங்கீகரித்தன.

2011இல், அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் மௌம்மர் கடாபியைத் தூக்கியெறிய மற்றும் ஒரு எடுபிடி ஆட்சியை நிறுவ லிபியாவில் ஓர் உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டிவிட்டு, பின்னர் குண்டை வீசியது. புதிதாக பிரகடனப்படுத்தப்பட்ட "பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு" கொள்கை (responsibility to protect), தேசிய இறையாண்மையைக் கவனத்தில் எடுப்பதை கை விடுகிறது என்ற அடித்தளத்தில் இந்த நவகாலனித்துவ நடவடிக்கை நியாயப்படுத்தப்பட்டன. அந்த சமயத்தில் எந்தவொரு தற்காப்பு பிரச்சினையும் (இது மட்டுமே சர்வதேச விதியின் கீழ் ஓர் இராணுவ தாக்குதலுக்கான ஒரே சட்டப்பூர்வ அடித்தளமாகும்) அதில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதை ஒபாமா ஒப்புக் கொண்டார், ஆனால் அமெரிக்காவின் "நலன்களும், மதிப்புகளும்" பணயத்தில் இருப்பதன் அடிப்படையில் அந்த யுத்தத்தை அவர் நியாயப்படுத்தினார். இவ்விதத்தில் எந்தவொரு நாட்டையும், மக்களையும் இராணுவத்தைக் கொண்டு தாக்குவதற்கு ஒரு ஏதேச்சதிகார மற்றும் கட்டுப்பாடில்லா உரிமையை அவர் உறுதிப்படுத்தினார்.

அதே ஆண்டில், வட ஆபிரிக்காவில் சீனாவின் செல்வாக்கிற்கு குழிபறிக்க, அமெரிக்கா எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடானின் பிரிவினையை ஊக்குவித்தது. அங்கே சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பை ஆதரித்ததோடு, யுத்த இருளுக்குப் பின்னர், ஒரு புதிய விடியலின் ஒளி சாத்தியமாகும்" என்பதற்கு அதை ஒரு நிரூபணமாக ஒபாமா அறிவித்தார். அந்த சுதந்திரம் எண்ணெய் துறையை திறந்துவிட்டதோடு மட்டுமல்ல, மாறாக எரிசக்தி வளம் மிகுந்த பிராந்தியங்களில் எல்லைக்கான யுத்தங்களையும் திறந்துவிட்டுள்ளது.

இதுபோன்ற எண்ணிலடங்கா சான்றுகளை எடுத்துக் காட்ட முடியும். ஈராக்கின் பாரிய பேரழிவுகரமான ஆயுதங்கள் குறித்த பொய்களின் அடிப்படையில் (ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் தீர்மானம் கூட இல்லாமல்) 2003இல் அது ஈராக் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் அது அந்த ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் குறுங்குழுவாத கோஷ்டிகளைத் தூண்டிவிட்டும் உள்நாட்டு யுத்த நிலைமைகளை உருவாக்கியும் "பிரித்தாளும்" மூலோபாயத்தைப் பயன்படுத்தியது. அப்போதைய செனட்டரும், தற்போதைய துணை ஜனாதிபதியுமான ஜோசப் பைடன் அந்நாட்டை வெவ்வேறு இன பிரதேசமாக பிரிக்க ஒரு திட்டத்தை ஊக்குவித்தார்—அந்த திட்டம் பெரியளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டும் உள்ளது.

வாஷிங்டன் சிரியாவில் ஒரு உள்நாட்டு யுத்தத்தைத் தூண்டிவிட்டது, அதுவும் ஆக்ரோஷமாக தொடர்கிறது. அது தேசிய இறையாண்மையை முற்றிலுமாக நிராகரித்து டிரோன் தாக்குதல்களை நடத்துகிறது (இது ஐ.நா. சிறப்பு அறிக்கையால் சர்வதேச சட்ட மீறலாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு கொள்கை ஆகும்).

உக்ரேன், இந்த சட்டமீறல் கொள்கையின் ஒரு தொடர்ச்சியாகும். உலக மேலாதிக்கத்திற்கான அதன் உந்துதலில், அமெரிக்க ஏகாதிபத்தியம்—அதன் ஐரோப்பிய சமபலங்களோடு சேர்ந்து—மனிதகுலத்தை பேரழிவுகரமான பாதையில் இழுத்து வருகிறது. வெறுமனே கிரிமியா மட்டுமல்ல, உக்ரேன் மக்களைப் பொறுத்த வரையில், தீவிர வலது மற்றும் பாசிச இயக்கங்களின் எழுச்சி என்பது நச்சுத்தன்மை வாய்ந்த இன மோதல்களை எரியூட்டுவதை, மற்றும் வங்கிகளாலும் சர்வதேச நாணய நிதியத்தாலும் ஆணையிடப்படும் இரக்கமற்ற சிக்கன நடவடிக்கைகளுக்கான தயாரிப்பு என்பதை குறிக்கிறது.

உக்ரேனிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் ஏகாதிபத்தியத்தின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகளானது, மேற்கத்திய சக்திகள் மற்றும் அணு ஆயுதமேந்திய ரஷ்யாவிற்கு இடையே, கணக்கிட முடியாத விளைவுகளோடு, ஒரு மோதலைப் பற்ற வைக்க அச்சுறுத்துகிறது.

கிரிமியாவின் பிரிவினையோ, அல்லது உக்ரேனில் ரஷ்ய தலையீடோ இந்த நெருக்கடிக்கு எந்தவொரு தீர்வும் வழங்கப் போவதில்லை. ஊழல்மிக்க செல்வந்த மேற்தட்டுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புட்டின் ஆட்சி, அதன் மிகவும் சக்திவாய்ந்த விரோதிகளோடு ஒரு இணக்கத்தைக் கோரி வருகின்ற போதினும், அது ரஷ்ய பேரினவாதத்தை ஊக்குவிப்பதிலும் மற்றும் இராணுவ உபாயங்களிலும் தங்கி உள்ளது. அது ரஷ்ய அல்லது உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்க இலாயக்கற்று உள்ளது.

கிழக்கு ஐரோப்பா மீதான ஒரு புதிய ஏகாதிபத்திய சுற்றி வளைப்பை மற்றும் மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி சரிவதை எதிர்ப்பதில், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த மாற்றீட்டை—அதாவது ஏகாதிபத்தியம், யுத்தம் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்க்கும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்பட்ட ஒரு போராட்டத்தை—முன்னெடுக்க வேண்டும்.