World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Germany threatens massive damage to Russia ahead of Crimea referendum

கிரிமியா வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே ரஷ்யாவிற்குப் பாரிய சேதம் அளிக்கப்படும் என்று ஜேர்மனி அச்சுறுத்துகிறது

By Johannes Stern and Alex Lantier 
14 March 2014

Back to screen version

கிரிமியாவின் சுதந்திரம் குறித்த ஞாயிற்று கிழமை பொதுஜன வாக்கெடுப்பிற்கு முன்னதாக, பேர்லின் மற்றும் வாஷிங்டன் ரஷ்யாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களையும் பொருளாதாரத் தடைகள் பிரச்சினையையும் விரிவாக்கிக் கொண்டிருக்கின்றன; இது உக்ரேனில் உள்நாட்டுப் போரையும், ரஷ்யாவுடனான போர் நெருக்கடி ஆபத்தையும் கொண்டுள்ளது.

வியாழன் அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல், ரஷ்யா பின்வாங்காவிட்டால் “பேரழிவு” ஏற்படும் என எச்சரித்தார். “சீமாட்டிகளே, சீமான்களே, கடந்த சில வாரங்களாக கொண்டிருக்கும் அதன் போக்கை ரஷ்யா தொடருமேயானால், இது உக்ரேனுக்கு மட்டும் பேரழிவாக இராது. அதை நாங்கள் காண்பது மட்டுமல்லாது, அண்டை நாடு என்னும் முறையில் ரஷ்யாவையும் அச்சுறுத்தல் எனக் காண்கிறோம். ரஷ்யாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவை மட்டும் இது மாற்றாது ...எனவே இது ரஷ்யாவிற்கும் மகத்தான சேதத்தை பொருளாதார, அரசியல் அளவில் ஏற்படுத்தும்” என்றார்.

மேர்க்கெல், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு 19, 20ம் நூற்றாண்டுகளின் வழிவகைகளை பயன்படுத்துவதாக மாஸ்கோவை குற்றம் சாட்டினார். “காட்டின் சட்டம், சட்டத்தின் வலிமைக்கு எதிராக இருத்தப்படுகிறது; புரிந்து கொள்ளுதல் மற்றும் ஒத்துழைப்புக்கு எதிராக ஒருதலைப்பட்ச பூகோள அரசியல் கவலைகள் இருத்தப்படுகின்றன” என்றார் அவர்.

அதிர்ச்சி அளிக்கும் பாசாங்குத்தனத்துடன் மேர்க்கெல் உண்மையை தலைகீழாக நிறுத்துகிறார். ஜேர்மனியும் அமெரிக்காவும்தான் ஆக்கிரமிப்பாளர்கள் போல் நடந்து கொண்டு, அதுவும் இரண்டாம் உலகப் போரின்போது கொடூர குற்றங்களை இழைத்த நாஜி ஜேர்மனியின் பின்தோன்றல்களின் தலைமையில் உக்ரேனில் பாசிச சக்திகளின் ஆட்சி கவிழ்ப்பிற்கு வகை செய்ய ஏற்பாடு செய்தனர். இவ்வாறு செய்கையில், மேற்கத்திய சக்திகள்தான் 20ம் நூற்றாண்டின் குற்ற வழிவகைகளை தங்கள் புவிசார் மூலோபாய நோக்கங்களை ஐரோப்பாவில் அடைவதற்கு புதுப்பிக்கின்றன. இப்பொழுது பேர்லினும் வாஷிங்டனும் கிரிமியப் பிரச்சினையில் மாஸ்கோ பின்வாங்க வேண்டும் என வலியுறுத்துகின்றன; கிரிமியாவில் ரஷ்ய மொழி பேசும் பெரும்பான்மை உள்ளது, அது ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைக்கு தாயகமும் ஆகும். “அடுத்த சில நாட்களில்” மாஸ்கோ பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படாவிட்டால், ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகளை செயல்படுத்தும் என்று மேர்க்கெல் எச்சரித்தார். மேலும் அவர் கூறுகையில், "அத்தகைய நடவடிக்கைகள் வரக்கூடாது என்றுதான் எங்களில் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். ஆனால் அவைதவிர்க்க முடியவில்லை என்றால் அவற்றிற்கு தயாராக இருக்கிறோம்” என்றார்.

அமெரிக்காவும் நேட்டோவும் இப்பிராந்தியத்தில் இராணுவ சக்திகளை கட்டமைக்கையில், ரஷ்யா உக்ரேனிய எல்லையில் 8,000 துருப்புக்கள் கொண்ட இராணுவப் பயிற்சியை நடத்திய முறையில் இதை எதிர்கொண்டது. ரஷ்ய நட்பு நாடான பேலாரசும் கூடுதல் போர் விமானங்களையும் போக்குவரத்து விமானங்களையும் கோரியுள்ளது.

அவற்றின் போருக்கான உந்துதலில், ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனுக்குள் இருக்கும் மிகத் தீவிர வலதுசாரி சக்திகளை நம்பியுள்ளன. ஒரு தேர்ந்தெடுக்கப்படாத ஜனாதிபதி ஒலெக்சாந்தர் ருர்ஷினோவ், 60,000 பேர் கொண்ட தேசியப் பாதுகாப்பு படையை தோற்றுவிக்க கோரியிருந்த திட்டத்திற்கு நேற்று உக்ரேனிய பாராளுமன்றம் ஒப்புதல் கொடுத்தது. இது, உள்துறை அமைச்சரக துருப்புக்கள், இராணுவ உயர்கல்விக்கூடங்கள் மற்றும் “தற்காப்புப் பிரிவுகளில்” —அதாவது ரஷ்ய ஆதரவு பெற்ற ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பெப்ருவரி 22 ஆட்சி கவிழ்ப்பின் மூலம் அகற்றிய பாசிச வலது பிரிவு அல்லது பிற தீவிர வலதுசாரிப் போராளிகள்— இருந்து அமைக்கப்படும்.

புதன் அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கவுன்சிலின் செயலருமான ஆண்ட்ரி பருபிய் தான் “உக்ரேன் இப்பொழுது முழு அளவு படையெடுப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது எனக் கருத காரணம் உள்ளது” என்று கூறினார். “மைதானில் கூடியிருந்த அனைத்துக் குழுக்களையும் அரச பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு இவற்றை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பயங்கரவாத குழுக்களை அகற்ற வேண்டும்” என்றும் அழைப்புவிட்டார்.

பருபிய் தன் செய்தியாளர் கூட்டத்தை பயன்படுத்தி, உக்ரேனின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் செய்த அவர்களின் உறுதிமொழி கடமைக்கு அமெரிக்காவிற்கும் பேர்லினுக்கும் முறையீடு செய்தார், 1994 புடாபெஸ்ட் குறிப்பை நினைவுகூர்ந்தார்; இக்குறிப்பு உக்ரேனுக்கு, அது அணுவாயுதக் கிடங்கை அழித்துவிட்டால் அதற்கு ஈடாக பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கொடுத்திருந்தது.

உக்ரேனில் பாசிச சமூக-தேசியக் கட்சியின் (Social-National Party) நிறுவனர்களில் பருபிய் ஒருவராவார். இது பின்னர் ஸ்வோபோடா கட்சியாக தன்னை மாற்றிக் கொண்டது. அவர் 2004ம் ஆண்டு மேற்கால் ஆதரவு கொடுக்கப்பட்டிருந்த “ஆரஞ்சுப் புரட்சியில்” ஒரு முக்கிய பங்கை கொண்டிருந்தார். 2014 ஆட்சி கவிழ்ப்புக்கு முன்னதாக, மைதான் சதுக்கத்தில் தன்னார்வ பாதுகாப்புப் பிரிவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார், அதில் போரில் மூத்தவர்கள், ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிகளும் இருந்தனர்.

புதிய அரசாங்கத்தில் பருபியின் உதவியாளராக உள்ள டிமிட்ரி யாரோஷ், பாசிச வலது பிரிவு (Right Sector) ஆயுதக்குழுக்களினதும் மற்றும் அனைத்து உக்ரேனிய அமைப்பு “ட்ரைஜுப்” (Tryzub) உடையதும் தலைவர் ஆவார்; இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களுடன் ஒத்துழைத்த ஸ்டீபன் பண்டேரா என்பவர் பிந்தையதின் மாவீரர் என போற்றப்படுபவராவர்.

புதன் அன்று அமெரிக்க செய்தி இதழ் Newsweek யாரோஷுடனான ஒரு பேட்டியை வெளியிட்டது; அவர் “என் படைகள் உக்ரேன் முழுவதும் இராணுவப் பயிற்சியை தொடர்கின்றன, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி நாட்டை தூய்மைப்படுத்த தயாராக உள்ளன.” என்றார். அவர் மேலும் கூறுகையில்: “எங்கள் நடவடிக்கைகளை, தேசியப் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு துறைகளுடனும் அத்துடன் இராணுவத்தின் பொதுத் தலைமையகத்துடனும் ஒருங்கிணைக்கிறோம். இப்பொழுது எங்கள் படைகளின் முறையான சட்டநிலைப்பாட்டிற்கு பேச்சுக்களை நடத்துகிறோம்.”

வியாழன் அன்று ரஷ்ய எல்லையில் இருக்கும் தொழில் நகரான டோனேட்ஸ்க்கில் மோதல்கள் ரஷ்ய சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் புதிய அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் ஒரு வலதுசாரி குழுவிற்கும் இடையே நடந்தன. குறைந்தப் பட்சம் ஒரு நபர் கொல்லப்பட்டார்.

உக்ரேனின் புதிய ஆட்சி பண்டேரா கொடியை ஏற்றுமா எனக் கேட்கப்பட்டதற்கு யாரோஷ் ஆம் என்று விடையளித்தார். “புரட்சி காலம் முழுவதும் நாங்கள் சிவப்பு, கறுப்பு கொடிகளின் கீழ் நின்றோம். சிவப்பு உக்ரேனிய இரத்தம் கறுப்பு உக்ரேனிய பூமியில் சிந்தியது – அந்தக் கொடி தேசியப் புரட்சியின் சின்னமாக இருக்கிறது. இந்த கொடி எங்களுக்கு சுதந்திரத்தை கொண்டுவரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”

ஞாயிறன்று கிரிமியா உக்ரேனில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்றால் தான் பலத்தை பயன்படுத்த இருப்பதாக யாரோஷ் குறிப்புக் காட்டினார். “வலது பிரிவு (Right Sector), மற்ற அனைத்து உக்ரேனிய குடிமக்களுடன் சேர்ந்து, உக்ரேனின் நிலப்பகுதி முழுமையையும் அனைத்து விதங்களிலும் பாதுகாக்க தயாராக உள்ளது.”

தேசிய பாதுகாப்புப் படைகளை தோற்றுவித்திருப்பது மற்றும் பாசிச அதிர்ச்சி “புரட்சி” துருப்புக்களை உத்தியோகபூர்வ அரசியல் நிறுவனங்களில் மாற்றியிருப்பது ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவைக் கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு படைகளின் மீதான வாக்கு, இடைக்கால உக்ரேனிய பிரதம மந்திரி ஆர்செனி யாட்சென்யுக் வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவை சந்தித்த ஒரு நாளுக்குப் பின் வந்துள்ளது. அவர் அதன் பின் மாஸ்கோவிற்கு புதிய அச்சுறுத்தல்களை வெளியிட்டார்.

உக்ரேனிய தேசிய பாதுகாப்பு படைகள் ரஷ்யாவை இலக்கு கொண்டாலும், அதன் மற்றொரு முக்கிய இலக்கு உக்ரேனிய தொழிலாள வர்க்கம் ஆகும். இது மிகப்பெரிய ரஷ்ய இராணுவத்தோடு ஒப்பிடுகையில் குறைந்த ஆயுத பலத்தை கொண்டாலும், உக்ரேனிய தேசிய பாதுகாப்பு படை, வலதுசாரி ஏகாதிபத்திய ஆட்சி கியேவில் கொண்டுள்ள பிற்போக்குத்தன நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான எதிர்ப்புக்களை மிரட்ட அல்லது நசுக்க போதுமான அளவிற்கு பெரிதாக உள்ளது.

ஒபாமாவைக் காண விஜயம் செய்திருக்கையில், யாட்சென்யுக் IMF கோரிக்கைகளை செயல்படுத்துவதாகவும், எரிவாயு விலைகளுக்கான நிதி உதவியை அகற்றுவதாகவும், “வரலாற்றிலேயே மிகவும் செல்வாக்கற்ற பிரதம மந்திரியாக” இருப்பதாகவும் உறுதியளித்தார். எரிவாயு உதவித்தொகைகள் உக்ரேனிய தொழிலாளர்களுக்கு ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் என்று இருப்பவை, இப்பொழுது பொருளாதாரத்தில் 7.5% சதவிகிதம் இத்தொகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்றுவது மக்களின் பெரும் பிரிவுகளை திவாலாக்கும்.

இந்நடவடிக்கைகளின் செல்வாக்கற்ற தன்மையால், யானுகோவிச் கடந்த இலையுதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டு உடன்பாட்டில் கையெழுத்துப் போடுவதில் இருந்து பின்வாங்கினார்; அதில் இத்தகைய வெட்டுக்கள் இருந்தன; இது எதிர்ப்புக்களைத் தூண்டி அவருடைய ஆட்சி கூட கவிழ்ந்துவிடும் என அச்சம் அடைந்திருந்தார்.