தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The CIA, the Senate and the breakdown of American democracy சிஐஏ, செனட் மற்றும் அமெரிக்க ஜனநாயகத்தின் முறிவு
Patrick Martin Use this version to print| Send feedback மத்திய உளவுத்துறையின் நீண்டகால அனுதாபிகளில் ஒருவரான, செனட் உளவுத்துறை கமிட்டியின் தலைவர் டேயன் பெய்ன்ஸ்டீனால் செவ்வாயன்று சிஐஏ மீது கூறப்பட்ட அசாதாரணமான பகிரங்க குற்றச்சாட்டு, அமெரிக்க ஜனநாயகத்தின் தீர்க்கவியலா நெருக்கடியின் ஒரு வெளிப்பாடாகும். இந்தளவிற்கு ஒரு பகிரங்க அறிவிப்பை வெளியிட ஆழ்ந்த தீவிர சூழ்நிலைகள் மட்டுமே கலிபோர்னியாவின் அந்த ஜனநாயக கட்சியாளரை நிர்பந்தித்திருக்கக்கூடும். "அமெரிக்க அரசியலமைப்பின் அதிகார பகிர்வு கோட்பாடுகளை", CIA நிச்சயமாக "மீறி இருக்கலாம்", மேலும் "உள்நாட்டில் தேடல் நடவடிக்கைகள் அல்லது உளவு வேலைகளைச் செய்வதில் CIAக்கு தடைவிதிக்கின்ற, நான்காம் அரசியலமைப்பு திருத்தம், கணினிவழி குற்ற மற்றும் துஷ்பிரயோக சட்டம், அத்தோடு நிர்வாக ஆணை 12333” ஆகியவற்றையும் கூட அது மீறி இருக்கலாம் என்று அவர் அறிவித்தார். இரகசிய ஆவணங்களை அனுமதியின்றி பயன்படுத்தியமைக்காக உளவுத்துறை கமிட்டியின் பணியாளர் மீது, மற்றும் சாத்தியமானால் செனட் அங்கத்தவர்கள் மீதும் கூட, வழக்கு தொடுக்க கோரி CIA நீதித்துறைக்கு ஒரு குற்ற பரிந்துரையை அனுப்பியதால், ஐயத்திற்கிடமின்றி, செனட் மீது நடத்தப்பட்ட CIA உளவுவேலை மீதான அவரது எதிர்ப்பைக் காட்டுவதில் பெய்ன்ஸ்டீன் உந்தப்பட்டிருந்தார். CIAஇன் சித்திரவதைக் குறித்து கமிட்டியால் தயாரிக்கப்பட்ட ஒரு பாரிய அறிக்கை மீதிருந்த பல மாதகால பூசலின் உச்சக்கட்ட நிகழ்வாக அது இருந்தது. செனட் தளத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பேசுகையில், பதட்டமாகவும் பார்ப்பதற்கு பயந்தும் காணப்பட்ட பென்ஸ்டீனுக்கும், CIA இயக்குனர் ஜோன் பிரென்னெனுக்கும் இடையிலான உளறல்களில் ஒரு கூர்மையான முரண்பாடு இருந்தது. பென்ஸ்டீனின் உரைக்கு ஒருசில மணி நேரங்களுக்குப் பின்னர் ஒரு வெளிநாட்டு சிந்தனைக்கூடத்திற்கு அளித்த உரையில் ஜோன் பிரென்னென் முறைகேடு குறித்த அப்பெண்மணியின் வாதங்களைக் கடுமையான விதத்தில் மறுத்துரைத்த பின்னர், அதற்குப் பிந்தைய ஒரு பத்திரிகையாளர் நேர்காணலுக்காக ஏளன புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்தார். டிரோன் ஏவுகணை தாக்குதலைப் பயன்படுத்தி CIAஆல் நடத்தப்பட்ட படுகொலைகளில் இருந்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (Patriot Act) கீழ் FBIஇன் துஷ்பிரயோகங்கள் வரை, ஒட்டுமொத்த உலகின் மீது NSAஇன் தொலைபேசி மற்றும் இணைய தொடர்புகளை முறையாக சேகரித்தமை வரையில், அமெரிக்க உளவுத்துறை எந்திரத்தால் நடத்தப்பட்ட எண்ணிலடங்கா சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்குப் புறம்பான நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தாத பாதுகாவலராக பென்ஸ்டீன் இருந்துள்ளார். NSAஇன் இரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னொவ்டென், “மில்லியன் கணக்கான சாமானிய மக்களின் உரிமைகள் நமது உளவாளிகளால் மீறப்படுவதைக் குறித்து ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகி முற்றிலும் கவலைப்படாத ஓரிடத்தில், ஆனால் அதே விடயம் அவர்களுக்கு நடந்து வருவதை ஓர் அரசியல்வாதி திடீரென கண்டறியும் போது, அதுவொரு மோசடி என்றாகிவிடுகிறது,” என்று குறிப்பிட்டதைப் போல, அங்கே போலித்தனத்தின் ஒரு சக்திவாய்ந்த கூறுபாடு உள்ளது. ஆனால், அமெரிக்க அரசின் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தால், ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு செயல்முறைகளுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறதென்ற மிகவும் அடிப்படையான விடயம் அங்கே பணயத்தில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகைக்கும் காங்கிரஸிற்கும் இடையிலான அரசியல் உட்பூசல், அல்லது உச்ச நீதிமன்றத்தின் முடிவுகளுக்காக அர்பணிக்கப்பட்ட அனைத்து ஊடக விளம்பரங்களைப் பொறுத்த வரையில், அமெரிக்காவின் உண்மையான அதிகாரம் பெண்டகன், CIA, NSA, FBI மற்றும் இதர அதுபோன்ற அமைப்புகள் உட்பட ஒரு கணக்கில்லா, வன்முறை, ஆத்திரமூட்டல் மற்றும் உளவுபார்க்கும் படுகொலை எந்திரத்தின் கரங்களில் உள்ளது. "மேற்பார்வையிடும்" பல்வேறு செனட் மற்றும் சபை கமிட்டிகள், இந்த பரந்த மற்றும் இரகசிய எந்திரத்தின் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் முத்திரை குத்தும் அமைப்புகள் என்பதையும் விட சற்று மேலதிகமாகவே உள்ளன. ஆனால் சிறியளவில் ஜனநாயகரீதியிலான கண்காணிப்பின் சாயல் கூட, உளவாளிகள் மற்றும் படுகொலையாளர்களின் இராணுவங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அதிகாரிகளால் அவமதிப்பாக பார்க்கப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளிநாட்டு இலக்குகளுக்கு எதிராக பயன்படுத்துவதைப் போன்றே அவர்கள் அவர்களின் உள்நாட்டு விமர்சனகர்களுக்கு எதிராகவும் அதே முறைகளைப் பயன்படுத்த தயாராக உள்ளனர். ஜனாதிபதி ஒபாமா அந்த எந்திரத்தின் தலைமையில் "தலைமை தளபதியாக" விளங்குகிறார், மற்றும் வெள்ளை மாளிகையின் ஒரு செய்தி தொடர்பாளர், பிரென்னென் மீது ஜனாதிபதி முழு நம்பிக்கை கொண்டுள்ளார் என்று அறிவித்து, செனட்டிற்கு எதிராக வெளிப்படையாக CIA தரப்பில் சாய்ந்தார். பிரென்னென், ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கீழ் CIA இரகசிய சிறைகளில் சித்திரவதை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டதில் இருந்து, ஒபாமாவின் வெள்ளை மாளிகையில் டிரோன் ஏவுகணை படுகொலை திட்டத்தின் தலைவராக வேலை செய்தது வரையில், CIAஇன் தலைமை பொறுப்பிற்கு ஒபாமாவால் உயர்த்தப்பட்டது வரையில் — அவரது சொந்த முன்னேற்றங்களே அம்பலப்படுத்துவதாக உள்ளது. அவர் ஜனாதிபதி மாற்றி ஜனாதிபதி, ஒரு பெரு வியாபார கட்சி மாற்றி ஒரு கட்சியின் இராணுவ-உளவுத்துறை எந்திர நடவடிக்கைகளின் தொடர்ச்சிக்கு உருவகமாக விளங்குகிறார். கடந்த தசாப்தத்தின் போக்கில் — எப்போதும் வன்முறை மற்றும் ஜனநாயக-விரோதமானதாக இருந்துள்ள — இந்த வலையமைப்பின் நடவடிக்கைகள் பாரியளவில் குற்றத்தனமான சுபாவத்திற்கு மாறி உள்ளன. தற்போதைய மோதல் இத்தகைய குற்றங்களின் மோசமானவைகளில் ஒன்றிலிருந்து தொடங்குகிறது, அதாவது “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்ற போர்வையில் பிடிக்கப்பட்டவர்களை எங்கே கொண்டு சென்று சித்திரவதை செய்ய முடியுமோ, எல்லையில்லாமல் விசாரிக்க முடியுமோ, அரை டஜன் நாடுகளில் உள்ள அந்த இரகசிய CIA சிறைகூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதில் இருந்து வருகிறது. அந்த சிறைகூடங்கள் புஷ்-செனெ நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, நீதித்துறையில் இருந்த புஷ்-சகாப்திய வழக்கறிஞர்களால் எழுதப்பட்ட இழிந்த "சித்திரவதை குறிப்புகளைக்" கொண்டு அனுமதி வழங்கப்பட்டு, ஆயிரக்கணக்கான CIA அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் ஏனைய பெடரல் முகவர்களால் செயல்படுத்தப்பட்டு, 9/11 தாக்குதல்களை அடுத்து ஸ்தாபிக்கப்பட்டன. ஜெனிவா தீர்மானங்கள் உட்பட முறையாக இத்தகைய அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டமீறல்களுக்கு பொறுப்பான எவர் மீதும் வழக்கு தொடரப்படாமல் தடுப்பதே, பதவியேற்றதும் ஒபாமாவின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. பென்ஸ்டீன் அவரது செனட் உரையில் விவரித்ததைப் போல, செனட் உளவுத்துறை கமிட்டியின் வரைவு அறிக்கைகளை தடுக்கவும் அதன் பிரசுரங்களைத் முடக்கவும் CIA முனைந்திருந்த நிலையில், காங்கிரஸின் சம்மன்களை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக சித்திரவதையின் வீடியோ ஆவணங்களை திட்டமிட்டு அழித்தமை, பின்னர் ஆண்டு கணக்கில் தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தமை உட்பட மூடிமறைப்பு குற்றமானது சித்திரவதைக் குற்றத்தைப் பின்தொடர்ந்தது. இது இறுதியில், அதன் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக இருந்த கமிட்டியின் பணியாளர்கள் மீதே முன்பில்லாத வகையில் CIAஆல் உளவு பார்க்கப்பட்டதில் போய் முடிந்தது. இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் குற்றத்தன்மையானது அதிகார பகிர்வு (separation of powers) போன்ற அடிப்படை விதிமுறைகள் உட்பட அரசியலமைப்பு கோட்பாடுகளை வெளிப்படையாக தாக்குவதில் பரவி வருகின்றது என்பதற்கு இந்த மோதல் போக்கு ஓர் அச்சுறுத்தும் எச்சரிக்கையாகும். பென்ஸ்டீனோ அல்லது வாஷிங்டனில் உள்ள வேறெந்த முதலாளித்துவ அரசியல்வாதியோ, அது ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அல்லது குடியரசு கட்சியினராக இருந்தாலும் சரி, அமெரிக்காவில் ஒரு பொலிஸ் அரசு எழுப்பப்படுவதற்கு ஆழ்ந்த எதிர்ப்பைக் காட்ட இலாயக்கற்றவராக உள்ளனர். அங்கே அரசியல் கோழைத்தனம் மற்றும் நேர்மையின்மை ஏராளமாக இருந்தாலும் கூட, அது வெறுமனே அவற்றால் மட்டுமே உருவானதல்ல. அவர்களால் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முடியாது, ஏனென்றால் கட்டுக்கடங்கா சமூக சமத்துவமின்மை மற்றும் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியால் குணாம்சப்பட்ட முதலாளித்துவ இலாபகர அமைப்புமுறையோடு ஜனநாயக உரிமைகள் அதிகளவில் பொருத்தமற்று உள்ளது. மக்கள்தொகையின் பரந்த பெரும்பான்மையினர் வேலைநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் ஆகியவற்றோடு ஓய்வூதியம், மருத்துவ உதவிகள் மற்றும் பொதுச்சேவைகளின் சீரழிவு ஆகியவற்றை முகங்கொடுத்து வருகின்ற அதேவேளையில் ஒப்பீட்டளவில் விரல்விட்டு எண்ணக்கூடிய பில்லினியர்கள் மற்றும் பல மில்லியன் மில்லினியர்கள் தங்களைத்தாங்களே செல்வ வளத்தில் குவித்து வருவதோடு சேர்ந்து, வர்க்க கோடுகளின் மிக ஆழ்ந்த துருவமுனைப்பாடு கொண்ட ஒரு சமூகத்தில், ஜனநாயகத்தின் ஒரு சாயலைக் கூட காப்பாற்றி வைப்பது சாத்தியமில்லை. ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தில், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையான தொழிலாள வர்க்கத்தை ஒன்றுதிரட்டுவதே ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே அடித்தளமாகும். |
|
|