World Socialist Web Site www.wsws.org |
Dave Hyland: A life-long struggle for Trotskyism டேவ் ஹைலண்ட்: ட்ரொட்ஸ்கிசத்திற்கான ஒரு ஆயுட்கால போராட்டம்By
Chris Marsden டிசம்பர் 8, 2013 அன்று காலமான பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னாள் தேசியச் செயலர் டேவ் ஹைலண்டின் நினைவஞ்சலிக் கூட்டம் ஜனவரி 18 அன்று நடைபெற்றது. (காணவும்: “நினைவாஞ்சலிக் கூட்டம் டேவ் ஹைலண்டின் அரசியல் போராட்டத்திற்கு அஞ்சலி செலுத்துகிறது). இதில் பிரிட்டனின் சோசலிச சமத்துவக் கட்சியின் செயலரான கிறிஸ் மார்ஸ்டன் அளித்த பங்களிப்பினை நாங்கள் இங்கு பதிவிடுகிறோம். ******** எனது தோழரும் நண்பருமான டேவ் ஹைலண்டின் இன்றைய நினைவாஞ்சலிக் கூட்டத்தில் எனக்கு பேச வாய்ப்புக் கிட்டியதை பெருமையாகக் கருதுகிறேன். டேவை எனக்கு 30 ஆண்டுகளாய் தெரியும், இவற்றில் அநேக ஆண்டுகள் நான் அவருடன் எத்தனை சாத்தியமோ அத்தனை நெருக்கமாய் வேலை செய்திருக்கிறேன். எனவே எங்களது ஒட்டுமொத்த அனுபவங்களையும் நினைவுகூர்ந்து பட்டியலிடுவதாக இருந்தால், இன்றைய இரவு வரையும் கூடப் போதாது. அது அவசியமில்லை. இந்த அறையில் இருக்கும் பலருக்கும் டேவைத் தெரியும், அவர்களைக் கேட்டால் அவர்களது அனுபவத்தைச் சொல்வார்கள். அவை எல்லாமே வேறு வேறாக இருக்கலாம் என்றாலும் நான் துணிந்து சொல்லக் கூடியது என்னவென்றால் அந்த ஒவ்வொரு கதை சித்தரிக்கும் மனிதருமே அரசியலால் உந்தப்பட்டவராகவும், தனது நம்பிக்கைகளில் முழு உண்மையாக இருக்கின்ற அதேநேரத்தில் அவற்றுக்கான தனது போராட்டத்தில் முழுக் கோட்பாடானவராகவும் இருப்பார் என்பது நிச்சயம். நம்புங்கள், அவர் அவ்வளவு ஒரு மேம்போக்கான மனிதர் கிடையாது. டேவை சுருக்கமாக எந்த வார்த்தையைக் கொண்டு விவரிக்கலாம் என்று நான் முயற்சி செய்தபோது மல்லுக்கட்ட காத்திருப்பவர்(pugnacious)என்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. ஒரு பத்திரிகை ஆசிரியர் யோசிப்பதைப் போல அந்த வார்த்தையை நான் யோசித்துப் பார்த்தேன். மோதலுக்குத் தயாராயிருப்பது, ஆக்ரோஷமாக இருப்பது, விவாத விருப்பமாக இருப்பது எல்லாம் அதே பொருளுடைய சொற்கள் இவையெல்லாம் அவரது குணாம்சத்திற்குக் கொஞ்சம் நெருக்கமாக வருபவை, ஆனால் சண்டைக்கோழி, போர்விரும்பி, அச்சுறுத்தல் விரும்பி என்பவையும் கூட அதேபொருள் தரும் சொற்கள் தான், அவை இவருக்குப் பொருந்தாதவை. என்ன சொல்ல வருகிறேன் என்றால் கட்சி கட்டும் போராட்டத்தில் எல்லோரும் தங்களது முழு வலிமையையும் கொடுக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார், ஏனென்றால் அதைத் தான் அவர் செய்தார். அவர் கடினமானவராகவும் சமரசமற்றவராகவும் இருந்தார் என்றால் அதற்குக் காரணம் அவர் இந்த வேலையை கற்பனை செய்யக்கூடியதில் மிகக் கடினமான அசாதாரணமான சூழ்நிலைகளின் கீழ், எல்லாவற்றுக்கும் மேல் அவர் முன்மாதிரிகளாகக் கொண்டிருந்த தலைவர்கள் காட்டிக் கொடுத்திருந்த நிலைமையை எதிர்கொண்ட சூழலில், எடுத்துக் கொள்ளத் தள்ளப்பட்டிருந்தார் என்பது தான். WRP இன் அரசியல் சீரழிவு மற்றும் அது ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக் கொடுத்தமைக்கு எதிராக டேவிட் நோர்த்தும், வேர்க்கர்ஸ் லீக்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் நடத்திய போராட்டம் என்ற ஒரு பிரமாண்டமான அரசியல் நிகழ்வு டேவின் வாழ்க்கையை வடிவமைத்திருந்தது. இந்த ஆதாரமான போராட்டம் குறித்து நீளமாக நான் பேச முடியாது, ஏனென்றால் இந்த அரங்கத்திலே இன்று அது குறித்துப் பேசும் மிகப் பெரும் திறனும் மிக முழு உரிமையும் உடையவரென்றால் அது தோழர் நோர்த் தான். 1985 அக்டோபர் 9 அன்று வேர்க்கர்ஸ் லீக்கை தொடர்பு கொள்ளும் அதிமுக்கிய முடிவை எடுத்தது தொடர்பாக டேவ் ஹைலண்ட் கூறியதை பின்னர் நான் மேற்கோளிடுகிறேன். உடைவுக்கு முன்பும் பின்பும் டேவ் நிலைப்பாடு குறித்து நானும் சிலவற்றை கூறலாம் என்று நினைக்கிறேன். அப்போது தான் பிரிட்டனிலும் சர்வதேசரீதியாகவும் இயக்கத்தின் வரலாற்றில் எத்தனை முக்கியமான ஒரு ஆளுமையாக அவர் இருந்தார் என்பதை விளங்கப்படுத்த ஏதுவாக இருக்கும். 1983 இல் முதன்முதலில் நான் டேவை சந்தித்தபோது அவர் ஒரு இளம் மாணவரிடம், அந்த வார இறுதியில் நடக்கும் Young Socialists Active Workers கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வரவிருக்கும் தேர்வுகளுக்கு படிப்பதற்கான அவரது நேரத்தை வீணடிக்ககூடாது என்று கூறினார். அந்த சமயத்தில் இயக்கத்தில் டேவின் கடந்த கால வரலாறு குறித்து எனக்கு எதுவுமே தெரியாது, ஆனாலும் அதை தொடர்ந்த அடுத்த வருடங்களில் 1984 பிப்ரவரியில் தொடங்கிய தேசிய சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் சமயத்தில் அவர் காட்டிய முற்றுமுதலான அர்ப்பணிப்பையும் விடாப்பிடியான உறுதியையும் பார்த்து நான் அவரைத் தெரிந்து கொண்டதுடன், அவர் மீது மதிப்பும் கொண்டதுடன் வியந்து பாராட்டவும் செய்தேன். அவர் தனது குடும்பத்தை விட்டு விட்டு யோர்க்ஷயருக்கு வந்திருந்தார் என்பதையும், தரையில் படுத்துறங்கினார் என்பதையும், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் தயவில் தான் உணவருந்தினார் என்பதையும், அத்துடன் அவ்வப்போது அதிர்ஷ்டவசமாக பணம் கிடைக்கப் பெற்று தனது பெட்ரோலுக்கான பணத்தை சேகரித்தார் என்பதையும் கூட தெரிந்து கொண்டேன். பொழுது புலர்வதற்குள் முற்றுகைப் போராட்டக் களத்திற்கு சென்று விடுவார், அரசியல் அறிக்கைகள் தயாரித்தார், WRP தலைமையின் நடவடிக்கைகளால் ஏறக்குறைய அழிக்கப்பட்டு விட்டிருந்த ஒரு கட்சியின் பகுதிக்கு மறு உயிரூட்ட அவரால் முடிந்தது என்பதையும் நான் அறிந்து கொண்டேன். அது வேலை செய்தது. ஏனென்றால் ஜெர்ரி ஹீலியின் நடவடிக்கைகள் குறித்து ஒரு கட்டுப்பாட்டு ஆணையத்தை அமைக்க டேவ் கோரியபோது, அவர் மற்றவர்களைப் போல அகநிலையான நிலைப்பாடுகளால் செயல்படவில்லை மாறாக கோட்பாட்டின் அடிப்படையில் அவ்வாறு கோரினார் என்பதில் என்னுடைய மனதிலோ அல்லது டேவை அறிந்த வேறெவரொருவரின் மனதிலுமோ சந்தேகத்திற்கு துளியும் இடமிருக்கவில்லை. உடைவுக்குப் பிந்தைய டேவ் குறித்தும் கொஞ்சம் சொல்ல ஆசைப்படுகிறேன். அமெரிக்காவில் தோழர் லாரி ரோபர்ட்ஸ் டேவின் குடும்பத்திற்கு அவர் அனுப்பிய இரங்கல் கடிதத்தில் ஒரு முக்கியமான மற்றும் ஆழமான அவதானிப்பை செய்திருந்தார். அவர் எழுதினார்: “கட்சியில் தொழிலாளர்களின் ஒரு தலைவராக இருப்பது என்பது ஒரு விடயம். ஒரு தேசியப் பிரிவில் சர்வதேசியத்திற்கான போராட்டத்தில் நீங்கள் இதுகாறும் மரியாதை அளித்து வந்திருந்தவர்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆதாரவளங்களைக் கொண்டவர்களை எதிர்த்து ஒரு மார்க்சிச தலைவராக உருவெடுப்பது என்பது முற்றிலும் ஒரு மாறுபட்ட சவால். ஒருவர் எடுப்பதற்கு மிகவும் கடினமான ஒரு உயர்ந்த பாதையை டேவ் எடுத்திருந்தார்” நிச்சயம் அவர் செய்தது அதுதான். 14 வயது வரை மட்டுமே முறையான கல்வி பெற்று, WRP இல் முன்னதாக ஒரு தொழிலாளர்-நடவடிக்கையாளராக (worker-activist) கருதப்பட்டு பரிதாபகரமாக நடத்தப்பட்டு வந்திருந்த டேவ், தேசிய செயலராக தனது பாத்திரத்தின் சவாலைப் பூர்த்தி செய்வதற்காக எத்தனை தயாரிப்புடன் இருந்தார் என்பது உண்மையிலேயே அசாதாரணமான ஒன்று. கட்டுரைகள் எழுதினார், அரசியல் விவாதங்களை எழுதினார், அறிக்கைகள் தயாரித்தார் – விடாது வாசித்தார். அவர் அரசியல் பிரச்சினைகளை எத்தனை தீவிரத்துடன் அணுகினார் என்பதற்காகச் சொல்கிறேன், டேவின் நூலகத்தின் எத்தனை புத்தகங்கள் இருக்கும் என எய்லீனிடம் நான் கேட்டேன். அவர் சொன்னார், கவிதை, கலை, தியேட்டர், நாடகம், மருத்துவம், தொழிலாளர் வரலாறு, பொதுவான வரலாறு, உள்ளூர் வரலாறு, சார்ட்டிசம் தொடங்கி முகமது அலி முதல் தோமஸ் பேய்ன் வரையான வாழ்க்கைச்சரிதங்கள் வரை ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இருந்ததாக அவர் கூறினார். தனக்குத்தானே கல்வியூட்டிக் கொண்ட அவர் மற்றவர்களுக்குக் கல்வியூட்ட தன்னால் இயன்ற அத்தனையையும் செய்தார். இவையெல்லாம் குறிப்பிடத்தகுந்த தனிநபர் குணாம்சங்கள் தான், ஆனாலும் அதேபோல அவற்றுக்கு ஆழமான சமூக வேர்களும் இருந்தாக வேண்டும். ICFI நடத்திய போராட்டத்திற்கு டேவ் ஏன் தீர்மானகரமான வகையில் மிகவும் கோட்பாடான அரசியல் பாணியில் பதிலிறுப்பு செய்தார், அதன்பின் மத்திய குழுவில் WRP இன்(சர்வதேச)குழுவை ஸ்தாபித்தார் என்பவை எல்லாம் உடைவின் அமளி எல்லாம் ஓய்ந்த பின்னரே எனக்கு முழுமையாகத் தெரிய வந்தது, நான் பெரிதும் போற்றுவதாக அமைந்தது. ஹீத்தின் டோரி அரசாங்கத்திற்கு எதிராக 1972 மற்றும் 1974 இன் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் உட்பட பிரிட்டனில் தொழிலாள வர்க்கத்தின் முக்கியமான அரசியல் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த ஒரு சமயத்தில் தான் டேவ் WRP இன் முன்னோடியான SLL இல் சேர்ந்தார் என்பதும் அவரே கூட கோடக் மற்றும் மற்ற இடங்களில் போராட்டங்களுக்குத் தலைமை கொடுத்து அதனால் பழிவாங்கப்பட்டு வேலைநீக்கம் செய்யப்பட்டவராக இருந்தார் என்பதும் எனக்குத் தெரியும். IRA வெடிகுண்டுப் பிரச்சாரத்தின் பின்புலத்தில் கோடக்கில் அவர் தனது லாக்கரில் வெடிகுண்டுகள் வைத்திருந்ததாக நிர்வாகமும் தொழிற்சங்கமும் வதந்தியைப் பரப்பின. அவரை தொழிலாளர்களுக்கு முன்னால் பேசவிடாது பாதுகாப்புடன் ஆலைவளாகத்தில் இருந்து வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதுடன் Economic League தொகுத்த கறுப்புப்பட்டியலிலும் வைக்கப்பட்டார். WRP அவரைக் காப்பதற்காக எதுவுமே செய்யவில்லை, இது கட்சி தொழிற்சாலைகளைக் கைவிட்டு திரையரங்குகளை நோக்கி திரும்பியமை நடந்தேறத் தொடங்கிய நிலையில் விளைந்த அரசியல் திருப்பத்தின் வெளிப்பாடாய் இருந்தது. பெருகிய நிதிப் பிரச்சினைகளால் இந்தக் குடும்பம் தொடர்ந்து இடம்பெயர வேண்டியதாய் இருந்தது. பல தொழிற்சாலைகளில் டேவ் யார் என்று அவர்கள் தெரிந்து கொள்ளும் வரை தான் டேவ் அங்கு வேலை செய்ய முடிந்தது. ஒரு தொழிற்சாலையில் ஷிப்டு தொடங்குவதற்கு முன்பாக போலிஸ் காத்திருந்து அவரை வளாகத்தில் இருந்து வெளியில் கொண்டுவந்தது. வழக்கம்போல் தொழிற்சங்கங்கள் எதுவுமே செய்யவில்லை என்பதோடு அநேகமாக நிர்வாகத்திடம் அவரைக் காட்டிக்கொடுக்கும் வேலையை மட்டுமே செய்தன. இந்தக் காரணங்களால் அவரை ஒரு தனித்துவமான பொருளாக, சொந்தவாழ்க்கையில் எத்தனை விலைகொடுப்பதாக இருந்தாலும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியமைப்பதற்கான போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்ட ஒரு மனிதராக அவரை நான் கண்டேன். ஆனால் அவர் வெறுமனே ஒரு போர்க்குணமிக்க போராளி என்பதற்கும் அதிகமானவராய் இருந்தார். அவர் ஒரு ட்ரொட்ஸ்கிசவாதி, அவர் அடிப்படைப் புள்ளியாகக் கொண்டதும், அவரை இயக்குவதுமாய் இருந்தது, பிரிட்டன் தொழிலாள வர்க்கத்தின் கதி மட்டுமல்ல, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கதியும் ஆகும். அவர் ஒருபோதும் தன்னை பிரிட்டிஷ் கட்சியின் உறுப்பினராகக் கருதியதில்லை – அப்படி நிறைய பேர் கருதியிருந்தனர் என்பதை பின்னர் நான் கண்டுகொண்டேன் – மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு உறுப்பினராகவே கருதினார். பிரிட்டிஷ் வரலாறில் மட்டுமல்ல, உலக வரலாற்றின் ஒரு அதிமுக்கியமான திருப்பக் கட்டத்தில் தான் டேவ் ஹைலண்ட் SLL இல் இணைந்தார், உலக நிகழ்வுகள் தான் இறுதியாக அவருக்கு உருவடிவம் கொடுத்தவையாக இருந்தன. SLL இல் இணைய அவருக்கு உறுதி ஏற்படுத்தியது அவர் இடம்பெற்றிருந்த தொழிற்சங்கத்தில் அந்த சமயத்தில் SLL நடத்திய தீர்மானகரமான போராட்டம் மட்டுமல்ல, ஸ்ராலினிசம் குறித்த அதன் பகுப்பாய்வும் அதன் முன்னோக்கிற்கு அது சர்வதேச அடித்தளத்தைக் கொண்டிருந்ததும் தான், இதனை அவர் அவரது மகள் தோழர் ஜூலிக்கு அளித்த நேர்காணலின் போது கூறினார். டேவ் Workers Press பிரதி ஒன்றை வாங்கிவந்தார், அதில் மத்திய கிழக்கு குறித்தும் அதில் வரலாற்று ரீதியாக ஸ்ராலினிசம் ஆற்றியிருந்த பாத்திரம் குறித்துமான ஒரு கட்டுரையை அவர் படித்தார். “அது என் மூளையை உலுக்கி விட்டது” என்று அவர் விளக்கினார். “ஏனென்றால் உலகெங்கும் ஸ்ராலினிசத்தின் பாத்திரத்தை நான் உண்மையாகவே புரிந்துகொண்டேன், ஒரு தேசிய அதிகாரத்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதன் அடிப்படையிலான ஒரு எதிர்ப்புரட்சிகரப் பாத்திரம் என்ற அந்த உலகளாவிய பாத்திரத்தின் பகுதியையே கோடக்கில் ஸ்ராலினிஸ்டுகளிடம் நான் எதிர்கொண்டிருந்தேன் என்பதும் புரிந்தது.” ”அதுதான் என் வாழ்க்கையை மாற்றியது” என்றார் அவர். ICFI இல் ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றிய ஆற்றி வருகின்ற ஒரு தலைமுறையின் ஒரு தனித்துவமான பிரதிநிதியாக டேவ் இருந்தார். சிந்தித்துப் பாருங்கள். நாம் ஆய்வில் கண்டது போல, 1968 முதல் 1975 வரை, உலக முதலாளித்துவம் ஒரு புரட்சிகர நெருக்கடியால் பீடிக்கப்பட்டிருந்தது, இதிலிருந்து தான் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் புத்திஜீவித்தட்டின் மிகச்சிறந்த பிரதிநிதிகள் ICFI இல் இணைந்தனர். அந்த வருடங்களில் தான், டேவ் ஹைலண்ட் போலவே, உலி ரிப்பேர்ட், நிக் பீம்ஸ், பீட்டர் சுவார்ட்ஸ் மற்றும் டேவிட் நோர்த் ICFI இல் இணைவதற்கு வென்றெடுக்கப்பட்டிருந்தனர். உலக இயக்கத்தின் இன்றைய மையத் தலைமையில் இருக்கும் மிகப் பிரபலமான ஆளுமைகளில் ஒரு சிலரை மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். அதனால் தான் டேவிட் நோர்த் தயாரித்து அளித்த அரசியல் விமர்சனத்திற்கு டேவ் பதிலிறுப்பு செய்தார் என்ற உண்மையில் தற்செயலானது எதுவும் இல்லை. அவர் ஒரு உறுதியான ட்ரொட்ஸ்கிசவாதி என்பதால், WRP பின்பற்றிய சந்தர்ப்பவாதப் பாதையின் மீதான ஒரு உண்மையான ட்ரொட்ஸ்கிச விமர்சனமாக அவர் கண்ட ஒன்றிற்கு அவர் பதிலிறுப்பு செய்தார். டேவ் தன்னுடைய இறுதி வாரங்களில் அனுப்பிய இரண்டு கடிதங்களில் இருந்து சில மேற்கோள்களை வாசித்துக் காட்டலாம் என்று நினைக்கிறேன், இந்தக் கடிதங்களில் அவர் தனது சொந்த வாழ்க்கை குறித்த ஒரு கண்ணியமான அரசியல் மதிப்பீட்டைச் செய்திருந்தார். முதல் சாரத்தை நவம்பர் 19 அன்று ஆஸ்திரேலியாவில் இருக்கும் லின்டா ரெனென்பாமுக்கு அவர் எழுதிய கடிதத்தில் இருந்து வாசிக்கிறேன். அவர் எழுதினார்: ”என்னுடைய நோய்நிலை குறித்து ஜூலி அநேகமாக உங்களிடம் கூறியிருப்பார். எனக்காக சில சொட்டுக் கண்ணீர்கள் சிந்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தம்பட்டம் அடிக்க விரும்பவில்லை, இருந்தாலும் சொல்கிறேன், ICFI இன் தலைமையின் பகுதியாக நான் பெற்ற தத்துவார்த்த மற்றும் அரசியல் கல்வியின் காரணத்தால், நான் அரசியல்ரீதியாக மிகவும் அற்புதமான திருப்திகரமான மற்றும் மனமகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். "இந்த வருடங்களில் இயக்கத்தில் பல நெருக்கமான தோழர்களையும் நண்பர்களையும் நான் சம்பாதித்திருக்கிறேன், அத்துடன் எய்லீன் மற்றும் ஒரு அன்பான குடும்பத்தின் சங்கடமற்ற உதவியால் ஏறக்குறைய எழுபது வருடங்கள் எனும் பெரிய எதிர்பார்ப்பையும் கூட என்னால் தொட முடிந்திருக்கிறது. “பழைய WRP இன் ஹீலி-பண்டா-சுலோட்டர் ஆகிய சீரழிந்த அரசியல் தலைமைக்கு எதிரான தத்துவார்த்த போராட்டத்தில் தலைமை கொடுத்ததன் காரணத்தால் டேவிட் நோர்த் தான் 1985 முதல் எனது அரசியல் வாழ்க்கை முழுவதும் ஆதிக்கம் செலுத்தியவர். அத்துடன், சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்குள்ளாக மார்க்சிச தத்துவம், இலக்கியம் மற்றும் கலாச்சாரத்திற்குப் புத்துயிரூட்டுவதற்கும், ஸ்ராலினிசப் பொய் மற்றும் புரட்டுகளுக்கு எதிரான புறநிலை வரலாற்று உண்மைக்காகவும், அத்துடன் உலக சோசலிச வலைத் தளம் என்ற மார்க்சிசக் கல்வி மற்றும் புரட்சிகரப் பரப்புரைக்கான பிரம்மாண்டமானதொரு ஆயுதத்தை அற்புதமாக வளர்த்தெடுப்பதற்காகவுமான போராட்டத்திலும் கூட அவர் தலைமை கொடுத்திருந்தார்”. நவம்பர் 9 அன்று பெட்டினா ரிப்பேர்ட்டுக்கு அவர் எழுதினார்: “ எனக்காக துயரப்படவேண்டிய அவசியமில்லை. என் குடும்பத்தையும் தோழர்களையும் விட்டுச் செல்ல எனக்கு விருப்பமும் இல்லை, ஆனால் நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு சில விடயங்கள் இருக்கின்றன. ”முடக்குவாதம் (Rheumatoid arthritis) ஹைலண்ட் குடும்பத்தை விடாமல் தாக்கி வருகிறது. என் பாட்டி தனது 30வது வயதில் இந்த வியாதியால் மிக மிக மோசமாய் பாதிக்கப்பட்டார். எனக்கு 40 வயதாகும்போது எனக்கு இது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, கடந்த 26 வருடங்களாய் இந்த முடக்குவாதம் தொடர்பான மருத்துவச் சிக்கல்களுக்கு எதிராக நான் போராடி வருகிறேன். தனியாக அல்ல என்பதையும் நான் சேர்த்துக் கொள்ள வேண்டும். “உலகெங்கிலும் இருந்து எனக்கான மிகச்சிறந்த மருத்துவக் கவனம் கிடைக்கப் பெற தோழர்கள் டேவ், லிண்டா மற்றும் உலி அனைத்துலகக் குழுவின் சார்பாக முயற்சி மேற்கொண்டார்கள். WRP இன் தலைமை அதன் சந்தர்ப்பவாத அரசியல் சீரழிவின் பிந்தைய காலகட்டங்களின்போது காரியாளர்களை நடத்திய விதத்தைக் கொஞ்சம் ஒப்புநோக்கிப் பாருங்கள். “காரியாளர்களின் ஆரோக்கியம் குறித்த விடயத்தில், நாளுக்கு நாள் அக்கறை குறைந்த அந்த மனப்பான்மையானது தமது மிக அவலட்சணமான வெளிப்பாடுகளைக் காட்டியதையும், அது மார்க்சிசம் மற்றும் சர்வதேச சோசலிச முன்னோக்கிற்கான போராட்டத்தில் இருந்து பின்வாங்கியதுடன் பிணைந்ததாக இருந்தது என்பதையும் நாம் அறிவோம். ஹீலி-பண்டா-சுலோட்டர் தோற்கடிக்கப்பட்டு மார்க்சிசத்திற்கு புத்துயிரூட்டப்பட்டது முதல் இந்தப் பிரச்சினைகளை ICFIயும் அதன் பிரிவுகளும் எத்தனை மாறுபட்ட வகையில் கையாண்டிருக்கின்றன. “இந்த வரிகளை எழுதிக் கொண்டிருந்த போது தான் உலி வந்தார். உலகின் அத்தனை விடயங்களையும் குறித்தும் மணிக்கணக்காய் பேசினோம். நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது உடைவு மற்றும் அதனையடுத்து உடனடியாக பின்வந்த காலத்தின் போது அன்றாடம் புதிய அரசியல் பாடங்களைக் கற்றுக் கொண்டிருந்த அந்த ‘பழைய நாட்கள்’ குறித்து நாங்கள் பேசினோம். கற்றுக் கொள்வது என்றால் பள்ளிக்கூட அறையில் கற்றுக் கொள்வது போலவோ, அல்லது முற்றுகை வரிசையில் நிற்கும் ஒரு தொழிலாளி போலவோ இல்லை, பாட்டாளி வர்க்கம் நிவர்த்தி காண வேண்டிய அரசியல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கான மார்க்சிச உலக சோசலிச முன்னோக்கிற்கு விசுவாசமான புரட்சிகரவாதிகளாக. ”இது அனைத்துலகக் குழுவிற்குள்ளாக ‘மாறுபாடற்ற மற்றும் மாறுபாடுள்ள’ அபிவிருத்தியின் ஒரு நிகழ்வாக இருந்தது. WRP தலைமையுடன் நாம் நெருக்கமாக இருந்ததன் விளைவாக, பிரிட்டிஷ் பிரிவில் இருந்த நாம் நமது மார்க்சிச தத்துவார்த்த நனவில் ஏற்பட்ட பெரும் ‘சேதாரம்’ என்னும் விலையை செலுத்த வேண்டியதானது. “மாறாக, ட்ரொட்ஸ்கிசம் அதன் வேர்களை பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தில் கொண்டிருந்தது, இந்த வேர்களில் பலவும் 1950கள், 60கள் மற்றும் 1970களின் ஆரம்பத்தில் பப்லோவாதத்தின் பல்தரப்பட்ட அரசியல் வடிவங்களுக்கு எதிராக ஜெர்ரி ஹீலி நடத்திய வரலாற்றுப் போராட்டத்தின் மூலமாக அங்கு வேரூன்றச் செய்யப்பட்டவை ஆகும். “நான் ஒரு உலகக் கட்சியின் உறுப்பினர் என்ற உண்மை எனக்கு நன்கு புரிந்ததாய் இருந்தது, அதனால் தான் நான் அதனை நோக்கித் திரும்ப வேண்டும் என உணர்ந்தேன், தோழர் டேவிட் நோர்த்துக்கு தொலைபேசி அழைப்பை செய்தேன். ”அதனால் தான், அத்தனை சாதகமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், WRP இல் இருந்து ஒரு உண்மையான ட்ரொட்ஸ்கிச போக்கு எழுந்து வந்ததோடு WRP தலைவர்களின் ‘திருத்தல்வாத நிலைப்பாடுகள்’ குறித்து தோழர் டேவிட் நோர்த் செய்த தத்துவார்த்த மற்றும் வேலைத்திட்ட விமர்சனங்களுக்கும் அது பதிலிறுத்தது என்று நான் கருதுகிறேன்.” அந்த சித்தரிப்புக்கு மேலாக முக்கியமாக சேர்க்க வேண்டியது எதுவுமில்லை. இறுதியாக, அதே கடிதத்தில், பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் இப்போதிருக்கும் அரசியல் நெருக்கடியான காலகட்டம் குறித்த ஒரு சுருக்கமான சித்திரத்தையும் டேவ் வழங்குகிறார். அவர் எழுதினார்: “2008 நெருக்கடியானது ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையையும் இன்னும் மேலதிகமாய் ஸ்திரம்குலைத்து விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உறவுகள் ஒரு சிக்கலான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. NSA இன் உளவு வேலைகள் குறித்த ஸ்னோடனின் அம்பலப்படுத்தல்கள் ஜேர்மனியில் ஏற்படுத்தியிருக்கக் கூடிய தாக்கங்களைக் கவனித்து வருகிறேன். மேர்க்கெல் அரசாங்கம் எரிச்சலுறும் விதமாக ஸ்னோவ்டென் ஒரு உண்மையான நாயகனாக ஆகியிருக்கிறார். “பிரிட்டனில், டோரி/லிபரல் அரசாங்கத்தின் பின்னால் நின்று கொண்டு, முதலாளித்துவ வர்க்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தமது இரக்கமற்ற தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது, அவ்வாறு செய்கையில் நடுத்தர வர்க்கத்தின் பெரும் அடுக்குகளுக்கு முன்பிருந்த வசதியான வாழ்க்கை நிலைமைகளையும் அது அழித்துக் கொண்டிருக்கிறது. “அவர்கள் முழுமையாக வெறி பிடித்தவர்களாக ஆகி விட்டது போல் தோன்றுகிறது, ஏனென்றால் தமது ஆட்சியைப் பராமரிக்க அவசியமாய் கருதி அவர்கள் கட்டியெழுப்பிய ஒவ்வொரு முட்டுத் தூணையும் எந்த தயவுதாட்சண்யமும் இல்லாமல் அவர்களே உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். சீர்திருத்தவாத சமூக வேலைத்திட்டங்கள் தொடங்கி கலாச்சார நிதியாதாரத்தை வெட்டுவது - இது குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லதாய் ஆகியிருக்கிறது - வரை இது நீள்கிறது. ஆளும் வர்க்கமானது சர்வதேசப் போட்டியாளர்களுக்கு எதிரான அதன் சண்டையில், முன்பிருந்த சுகாதார, பாதுகாப்பு மற்றும் கட்டிட வரைமுறைகள் அத்தனையையும் அகற்றிக் கொண்டிருக்கிறது. ”இவை அனைத்தும் அதிகமான பித்துப்பிடித்த ஒரு அரசியல் சூழலுக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகப் பாத்திரத்தின் காரணத்தால் தான் இந்த சூழல் தொடர்ந்து காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. “ஆனால் இது எப்போதைக்குமாய் நீடித்து நிற்க முடியாது, எந்தவொரு விடயமும் மேலதிக அரசியல் வெடிப்புகளுக்கு இட்டுச் செல்லக் கூடும். ஒட்டுமொத்த சூழலும் இங்கிலாந்திலும் மற்றும் உலகெங்கிலும் நமது இயக்கத்தின் வளர்ச்சிக்கான அரசியல் சாத்தியக்கூறுகள் நிரம்பியதாக இருக்கிறது. “நாம் வெல்வதற்கான ஆபத்துகளோ இடைஞ்சல்களோ இல்லை என்பதாய் நான் சொல்ல வரவில்லை, ஆனால் நான் மிக நம்பிக்கையுடன் இருக்கிறேன். “உங்களுக்குத் தெரியும், ஒரு புரட்சியாளனின் வாழ்க்கை அத்தனை சுலபமானதல்ல. அவ்வாறின்றி வேறு எப்படி இருக்க முடியும்? கடந்த காலத்தின் முற்போக்கான அத்தனை விடயங்களையும் பாதுகாக்கின்ற அதேசமயத்தில் இற்றுப் போய் விட்ட, வரலாற்றுரீதியாக திவாலாகி விட்ட முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கிவீசுவதற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுகின்ற தொடர்ச்சியான போராட்டத்தில் நாம் இருக்கிறோம். நாம் சமூகத்தை மாற்றுவதற்கும் சோசலிசத்தின் கீழ் மானுட அபிவிருத்தியிலான ஒரு புதிய கட்டத்தைத் திறந்து விடுவதற்குமாய் போராடிக் கொண்டிருக்கிறோம். “இயக்கத்துக்குள்ளாக நல்ல தோழர்களையும் நண்பர்களையும் சம்பாதித்திருக்கிறேன், அத்துடன் எனது கட்சிக்கும் எனது வர்க்கத்திற்குமான எனது புரட்சிகரக் கடமையை செய்திருப்பதாகவும் உணர்கிறேன்.” இந்த மிக நெகிழ்ச்சியான பத்தி குறித்து ஒரு இறுதியான அவதானிப்புடன் நிறைவுசெய்ய அனுமதியுங்கள். டேவின் தலைமுறைக்கு நான்காம் அகிலத்தின் அங்கத்தவர்களாகும் வழி அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. தொழிலாள வர்க்கம் அப்போதும் வெகுஜன சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளாலும் மற்றும் தொழிற்சங்கங்களாலும் செல்வாக்கு செலுத்தப்பட்டதாய் இருந்தது, அவற்றுக்கு பல்வேறு போலி-இடது குழுக்களின் ஆதரவும் இருந்தது. எப்படியிருந்தபோதிலும் ஒரு புரட்சிகர நெருக்கடி மற்றும் உலக வர்க்கப் போராட்ட வெடிப்பின் நிலைமைகளின் கீழ் ஆகச் சிறந்த அங்கத்தவர்கள் ட்ரொட்ஸ்கிசத்துக்கு வென்றெடுக்கப்பட்டனர். டேவ் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்ததைப் போல, 1968க்கும் 1975க்கும் இடையில் வெடித்த அரசியல் நெருக்கடியின் வீச்சை எல்லாம் சிறிதாக்கி விடுகின்ற அளவுக்கான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் ஒரு புதிய காலகட்டத்திற்குள் இன்று உலக முதலாளித்துவம் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு புதிய தலைமுறை புரட்சிகரப் போராட்டத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்பதோடு அது ICFI ஐ நோக்கி இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் சக்திகளிடையிலான மிக மாறி விட்ட ஒரு உறவின் கீழ், அதாவது லியோன் ட்ரொட்ஸ்கியின் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக உண்மையான சமகால வெளிப்பாடாக சவாலற்ற இடத்தில் ICFI வீற்றிருக்கும் நிலையின் கீழ் தான், இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கத்தில் மார்க்சிசப் போராட்டத்திற்கான தொடர்ச்சி என்பது பெரும்பாலும், அத்துடன் சரியாகவும், மிக முக்கியமான பகுப்பாய்வுகள் மற்றும் விவாதங்களின் ஒரு கல்வியாகவே சீர்தூக்கிப் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த எழுதப்பட்ட ஆவணங்களின் பின்னால் அந்த வரலாற்றை உருவாக்கிய மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் தம்மையே அர்ப்பணித்து தமது மன மற்றும் உடல் ஆற்றல்கள் அத்தனையும் சமர்ப்பித்த ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். எனக்கும் 1980களில் அரசியலில் செயலூக்கத்துடன் இயங்கியவர்களுக்கும் டேவ் தான் புரட்சிகரவாதிகளின் முந்தைய தலைமுறைக்கான முதல் அதிமுக்கியமான இணைப்பு ஆகும். அவர்கள் ஹீலியாலும் அவரது தலைமுறையாலும் ஈர்க்கப்பட்டவர்களாகவும் கல்வியூட்டப்பட்டவர்களாகவும் இருந்தனர். அந்த அனுபவத்தின் சாதகமான அனைத்தையும் பாதுகாத்து வைத்துக் கொண்டு செய்த தவறுகளில் இருந்து பாடங்களையும் கற்றுக் கொண்டிருந்தனர். நான்காம் அகிலத்தை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கான போராட்டத்தில் டேவ் ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றினார். இந்த நிகழ்வின் படிப்பினைகள் தான் இன்றுவரை ஒரு உலகக் கட்சியாக நாம் செய்யும் அனைத்தையும் தீர்மானிப்பதாக இருக்கின்றன. இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வரக் காண்கிறோம். புரட்சிகரவாதிகளின் இந்த புதிய தலைமுறையானது மானுடத்தின் சோசலிச விடுதலைக்கான ஒருவரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு என்ற டேவ் ஹைலண்ட் ஏற்படுத்தித் தந்திருக்கும் முன்னுதாரணத்தை சிறந்த வகையில் பின்பற்றும். |
|