World Socialist Web Site www.wsws.org |
What is behind the warmongering of the German media? ஜேர்மன் ஊடகங்களின் யுத்தவெறியூட்டலுக்கு பின்னால் இருப்பது என்ன?
Peter
Schwarz இதற்கு முன்னர் ஜேர்மன் ஊடகங்கள் அரிதாகத்தான் இந்தளவிற்கு ஒரேமாதிரியான போக்கிற்குள் இழுத்து வரப்பட்டுள்ளன. பாசிசவாதிகளின் ஆயுதமேந்திய கும்பலால் உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், பத்திரிகைகளும் ரஷ்யாவை நோக்கிய பேர்லினினதும் மற்றும் வாஷிங்டனினதும் மோதல் போக்கிற்கு ஆதரவு வழங்குவதில் உண்மையில் கருத்தொருமித்துள்ளன. எந்தவொரு விமர்சனரீதியிலான குரலையும் கேட்க முடியாதுள்ளது. அதற்கு மாறாக, அந்த மோதலைத் தூண்டிவிடுவதில் பத்திரிகைகள் ஒன்றையொன்று விஞ்ச முனைந்துள்ளதுடன், அரசாங்கம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு எதிராக ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென அவை கோரிக்கைவிடுகின்றன. Süddeutsche Zeitung நாளிதழ், “பேச்சுவார்த்தைகளுக்கு" மாறாக "அச்சுறுத்தல்கள் மற்றும் தண்டனைகளை" கோருகிறது, அதேவேளையில் Frankfurter Allgemeine நாளிதழ், “அச்சுறுத்தும் வழிவகைகளை" பயன்படுத்த "சுதந்திர உலகத்திற்கு" அழைப்பு விடுக்கிறது. ஊடகங்கள் கிட்லரின் பிரச்சார மந்திரியான கோயபெல்ஸின் பிரச்சார உத்திகளை ஞாபகப்படுத்தும் திரித்தல்கள் மற்றும் பொய்களில் தங்கியுள்ளன. அவை கியேவ் பதவிக்கவிழ்ப்பின் போது பாசிச ஆயுதக்கழுக்களின் பாத்திரத்தை, அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆதரிக்கப்பட்ட புதிய அரசாங்கத்தில் மூன்று பாசிச மந்திரிகள் நியமிக்கப்பட்டிருப்பதை ஒன்று குறைத்துக் காட்டின அல்லது மூடிமறைத்தன. அவர்கள் மூவரும் ஸ்வோபோடா கட்சியின் அங்கத்தவர்கள் ஆவர். அது ஜேர்மனின் தீவிர-வலது தேசிய ஜனநாயக கட்சி (NPD), ஹங்கேரியின் ஜோபிக் கட்சி (Jobbik), பிரெஞ்ச் தேசிய முன்னணி (National Front) மற்றும் ஏனைய ஐரோப்பிய நவ-பாசிச கட்சிகளுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டதாகும். டிசம்பர் 2012க்கு மிக அண்மையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் ஸ்வோபோடாவை "இனவாத, யூத-விரோத மற்றும் வெளிநாட்டவர் மீது விரோதம்" கொண்ட ஒரு கட்சியாக விவரித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றியது, மேலும் "அந்த கட்சியோடு இணையவோ, ஆதரிக்கவோ அல்லது கூட்டணிகளை உருவாக்கவோ" வேண்டாமென அது வெர்கோவ்னா ராடாவில் [உக்ரேனிய நாடாளுமன்றம்] இருந்த ஜனநாயக-ஆதரவு கட்சிகளிடம்" முறையிட்டது. பதினைந்து மாதங்களுக்குப் பின்னர், ஸ்வோபோடா தலைவர்களும் மந்திரிகளும் ஐரோப்பிய அரசாங்க அலுவலகங்களுக்கு வழக்கமாக வந்து செல்வோர்களாக உள்ளதோடு, அவர்கள் ஜனநாயக சுதந்திரபோராட்ட போராளிகளாக கொண்டாடப்படுகின்றனர். அனைத்திற்கும் மேலாக, உக்ரேனில் ஜேர்மன் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வரலாற்று பின்புலங்களை ஊடகங்கள் மறைத்து வருகின்றன. அந்நாடு முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்களில் என இரண்டு முறை ஜேர்மன் துருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அது பேசப்படாத குற்றங்களின் காட்சியாக இருந்தது. கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான ஒப்பீடுகள் அதிர்ச்சியூட்டுகின்றன. ஆகஸ்ட் 11, 1914இல், முதல் உலக யுத்தம் வெடித்து வெறுமனே ஒருசில நாட்களுக்குப் பின்னர், வியன்னாவின் ஜேர்மன் தூதருக்கு எழுதப்பட்ட ஓர் உத்தரவில், ஜேர்மன் சான்சலர் தியோபால்ட் வொன் பெத்மான்-ஹோல்வெக் (Theobald von Bethmann-Hollweg) “உக்ரேனில் ஒரு கிளர்ச்சியைக் கொண்டு வருவது" — அதாவது ஜேர்மனுக்கு சார்பான ஓர் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரும் நோக்கத்தோடு ஒரு எழுச்சியைத் தூண்டிவிடுவது — ஒரு முக்கிய யுத்த குறிக்கோளாகும், மேலும் அது "ரஷ்யாவிற்கு எதிரான ஆயுதமாகும்" என்று எழுதினார். வரலாற்றாளர் பிரிட்ஸ் பிஷ்ஷர், முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனியின் குறிக்கோள்கள் என்ற அவரது நூலில், அந்த விடயத்தைக் குறித்த தொல்சீர் படைப்பான அதில், “ஆகவே 1918இன் தொடக்கத்தில் ஜேர்மன் குடியரசின் தலைமை Brest-Litovsk நகரில் ஒரு சுதந்திர உக்ரேனிய அரசை உருவாக்கும் யோசனைக்கு முதலில் வந்திருக்கவில்லை, ஆனால் ஏற்கனவே யுத்தத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்த போது ரஷ்யாவிலிருந்து உக்ரேனைப் பிரிப்பது மற்றும் ஒரு கட்டாய போர்நிறுத்தம் ஏற்பட்டால் அப்போதும் அதை ஒரு நீண்ட-கால இலக்காக தொடர்வது, உத்தியோகப்பூர்வ ஜேர்மன் கொள்கையின் இலக்காக இருக்குமென அறிவித்தது,” என்று எழுதுகிறார். மார்ச் 1918இல், Brest-Litovsk உடன்படிக்கையில், உக்ரேன் மீதான அதன் உரிமைகோரலைக் கைவிட இளம் சோவியத் அரசால் ஜேர்மன் குடியரசு நிர்பந்திக்கப்பட்ட பின்னர், அது தீர்க்கமானரீதியில் வேலை செய்ய முனைந்தது. அதிகாரமற்ற உக்ரேனிய ராடா அதனை "உதவிக்கு" அழைக்கும் நிலையில் விட்ட பின்னர், ஜேர்மன் உக்ரேனை ஆக்கிரமித்து, அங்கே பேர்லினைச் சார்ந்த ஒரு போலி-ஜனநாயக அரசாங்கத்தை ஸ்தாபித்ததோடு, விவசாயம், இரும்பு கனிமம் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள், ரயில்வே மற்றும் வங்கிகளை ஜேர்மன் பொருளாதார நலன்களுக்கேற்ப ஒழுங்கமைக்க தீர்மானகரமாக செயல்படத் தொடங்கியது. ராடா உடன் கருத்துவேறுபாடுகள் வெடித்த போது, ஜேர்மன் இராணுவம் ஓர் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தியதோடு, கூடுதல் அதிகாரத்தைக் கொண்டு முன்னாள் ஜாரிச பாதுகாப்பு அதிகாரியும், நிலச்சுவான்தாரருமான பாவ்லோ ஸ்கோரோபாடஸ்கியை (Pavlo Skoropadski) உக்ரேனின் "இராணுவ தலைவராக" நியமித்தது. மேற்கு போர்முனை தோல்வி மற்றும் ஜேர்மனியில் நவம்பர் புரட்சியோடு மட்டும் தான் அந்த பேயாட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் நாடுகளை வெற்றி ஆக்கிரமிப்பதற்கான நாஜிக்களின் கொள்கை, முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மன் யுத்த குறிக்கோள்களோடு மிகச் சரியாக பொருந்துகின்றன. மீண்டுமொருமுறை, தற்போது சோவியத் ஒன்றியத்தின் பாகமாக இருந்த உக்ரேன், ரஷ்ய இருதயதானத்திற்கு எதிரான சம்பவங்களுக்கு அரங்காக மாறியது. மீண்டுமொருமுறை, ஜேர்மனி அதன் யுத்த பொருளாதாரத்திற்கு சேவை செய்ய உக்ரேனின் மிகப் பரந்த விவசாய நிலங்களையும், இயற்கை வளங்களையும் கைப்பற்ற முனைந்தது. மீண்டுமொருமுறை, அது உள்நாட்டு கூட்டாளிகளின் ஆதரவில் தங்கி இருந்தது. ஸ்டீபன் பாண்டெராவின் உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பால் (OUN) அதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கப்பட்டது. அவர் தற்போது ஸ்வோபோடாவால் ஒரு முன்மாதிரியாக, வீரபிரதாபியாக போற்றப்படுகிறார். பாண்டெராவிற்கும் நாஜிக்களுக்கும் இடையிலான கூட்டுறவு வெறுமனே ஒரு தந்திரோபாய சுபாவம் மட்டுமே கொண்டதல்ல, மாறாக இனப்படுகொலை அளவிற்கு நீண்டிருந்தது. இதற்கு சான்றாக, 30 ஜூன் 1941இல், வழக்கமான ஜேர்மனிய துருப்புகளின் தாக்குதல்களுக்கு முன்னர், பாண்டெரா தலைமையிலான OUN பிரிவு லிவ் நகரில் (Lviv) படுகொலைகளை நிகழ்த்தியது. அதில் சுமார் 7,000 கம்யூனிஸ்டுகளும், யூதர்களும் கொல்லப்பட்டனர். இதுபோன்ற நாஜி கூட்டாளிகளை போற்றுவோரோடு ஜேர்மன் அரசாங்கம் கூட்டு சேர்ந்துள்ளதென்ற உண்மை, எந்தவொரு விமர்சனரீதியிலான இதழியியலில் இருந்தும் எச்சரிக்கையையும் எழுப்பவில்லை. இன்று அது, நடப்பது நடக்கட்டுமென்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது, குறைத்துக் காட்டப்படுகிறது, நியாயப்படுத்தப்படுகிறது. இவையனைத்தும் ஒரு கொள்கை நலனுக்காக செய்யப்படுகின்றன. அந்த கொள்கை நலன் வெறுமனே அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தை ஸ்திரமின்மைப்படுத்தி வருகிறது என்பது மட்டுமல்ல, மாறாக ஒரு சர்வதேச ஆயுதமேந்திய மோதலின் மற்றும் அழிவார்ந்த அணுஆயுத யுத்தத்தின் அபாயத்தையும் உயர்த்தி உள்ளது. இந்த மாற்றத்தை எவ்வாறு விவரிப்பது? முதலாவதாக, இது நீண்ட காலமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 1991இல் ஜேர்மன் மறுஐக்கியத்தில் இருந்தே, பேர்லின் அதன் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை முறையாக கிழக்கை நோக்கி விஸ்தரித்துள்ளது. முன்னாள் கிழக்கு அணி நாடுகள் அனைத்துமே இன்று ஏறத்தாழ ஐரோப்பிய ஒன்றிய மற்றும் நேட்டோவின் அங்கத்துவ நாடுகளாக உள்ளன. அவை சீனாவை விட ஓரளவிற்கு குறைந்த ஊதியங்களோடு ஜேர்மன் தொழில்துறைக்கு ஒரு விஸ்தரிக்கப்பட்ட உழைப்புமேடையாக சேவை செய்கின்றன. ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வேட்கை முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் எல்லைகளோடு நிற்கவில்லை. நீண்டகாலமாக — ஆனால் வெற்றி அடைய முடியாமல் — ரஷ்ய செல்வந்த மேற்தட்டின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புட்டின் ஆட்சியோடு கலந்தாலோசித்து, ஜேர்மன் அதன் வியாபார நலன்களை அங்கே பின்தொடர முயன்றது. இது தவிர்க்கவியலாமல் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் தோல்வி அடைந்தது. அமெரிக்கா புவிசார் மூலோபாய காரணங்களுக்காக — அதுவும் குறிப்பாக சிரியா மற்றும் ஈரான் வழியில் புட்டின் தலையிட்டதற்குப் பின்னர், மற்றும் இரகசியங்களை வெளியிட்டவரான எட்வர்டு ஸ்னோவ்டெனுக்கு தஞ்சம் வழங்கியதற்குப் பின்னர் — ரஷ்யாவின் சர்வதேச பலத்தைக் குறைக்க விரும்புகிறது. தற்போது ஜேர்மனின் வெளியுறவு கொள்கை, ரஷ்யா உடனான ஒரு மோதல் போக்கை நோக்கி திரும்பி வருவதோடு, அதன் வரலாற்று பாரம்பரியங்களோடு மீண்டும் இணைக்க தொடங்கி உள்ளது. இரண்டாவதாக, அந்த ஆக்ரோஷமான வெளியுறவுக் கொள்கையானது ஜேர்மனியிலும், ஐரோப்பா முழுவதிலும் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதோடு நெருக்கமாக பிணைந்துள்ளது. 2008 நிதியியல் நெருக்கடியில் இருந்து, ஜேர்மன் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது சிக்கன முறைமைகள் மற்றும் தொழிலாளர் சந்தை கொள்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, மக்கள்தொகையின் பெரும் பகுதியினரை சுருங்கிவரும் ஊதியங்களோடு மேலும் மேலும் கடினமாக உழைக்க நிர்பந்தித்துள்ளது. அது கிரீஸில் ஒரு முன்னுதாரணத்தை அமைத்துள்ளது, அங்கே பரந்த பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை தரங்கள் ஒருசில ஆண்டுகளில் 40 சதவீத அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளன. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரேனுடனான ஐக்கிய உடன்படிக்கை பாரிய சமூக வெட்டுக்கள் மற்றும் மூன்று மடங்கு எரிவாயு விலை உயர்வு ஆகியவற்றோடு இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்களில் மேலாதிக்கம் செலுத்தும், ஒரு சிறிய மேல் அடுக்கு அசாதாரணமான அளவிற்கு செல்வங்களைத் திரட்டி உள்ளதோடு, அதன் ஆட்சியை பாதுகாக்க அது பகிரங்கமாக முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு சர்வாதிகார முறைகளில் ஈடுபடுகின்றது. தற்போது அது அதன் வெளியுறவு கொள்கையில் அதே அசுரத்தனத்தைக் காட்டி வருகிறது. வெளிநாட்டில் யுத்தமும், உள்நாட்டில் வர்க்க யுத்தமும் பிரிக்கவியலாதபடிக்கு பிணைந்துள்ளன. மூன்றாவதாக, வெளியுறவு கொள்கையின் வலதுசாரி திருப்பம் சித்தாந்தரீதியாக தயாரிக்கப்பட்டுள்ளது. நாசிசத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து காட்டும் அவரது நடவடிக்கைகளோடு சேர்ந்து, historikerstreit ("வரலாற்றாளர்களின் விவாதம்”) என்றழைக்கப்பட்டதை 1986இல் தொடங்கியவரான வரலாற்றாளர் எர்னஸ்ட் நோல்டுக்கு, ஜேர்மன் மறுஐக்கியத்தைத் தொடர்ந்து முறையாக மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. 2000இல், அவருக்கு ஜேர்மன் அமைப்பான Deutschland Stiftungஇன் Konrad Adenauer விருது வழங்கப்பட்டது. அந்த விருது அவருக்கு முன்னர் ஹெல்முட் ஹோல் (Helmut Kohl) மற்றும் வொல்வ்காங் ஷொய்பிள (Wolfgang Schäuble) ஆகியோருக்கு வழங்கப்பட்டதாகும். இந்த ஆண்டின் பெப்ரவரியில், நோல்ட்டிற்கு மறுவாழ்வளித்து Der Spiegel ஒரு நீண்ட கட்டுரை பிரசுரித்தது. ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் கிழக்கு ஐரோப்பிய வரலாற்று பேராசிரியரான ஜோர்க் பாபரொவ்ஸ்கி கூறியதை அது மேற்கோளிட்டு காட்டியது: “நோல்டுக்கு ஒரு அநீதி இழைக்கப்பட்டிருந்தது. வரலாற்றுரீதியில் உரைப்பதானால், அவர் தரப்பு சரியாக இருந்தது.” அதே கட்டுரையில், பாபரொவ்ஸ்கியின் சக பேராசிரியர் ஹேர்ஃபிரீட் முன்ங்லர், ஜேர்மன் யுத்த குறிக்கோள்கள் மீதான பிரிட்ஜ் பிஷ்ஷரின் ஆய்வை "கோட்பாட்டுரீதியில், மூர்க்கமானதாக," விவரிக்கிறார். உலக சோசலிச வலைத்தளத்திற்கு அப்பாற்பட்டு, அத்தகைய அதிர்ச்சியூட்டும் அறிக்கைகளை எவரொருவரும் கண்டிக்கவில்லை. அவை — குறைந்தபட்சம் கல்வித்துறை உலகில் மற்றும் ஊடகங்களில் — எந்தவொரு எதிர்கருத்தும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளன. பாசிச போக்குகளோடு கூடி வேலை செய்யும் வழியும், ஆக்ரோஷ இராணுவ வெளியுறவு கொள்கைக்கான ஆதரவும் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளன. 1914 மற்றும் 1945க்கு இடையிலான அவர்களின் பாட்டன்மார் பெற்ற அனுபவங்களைப் போன்ற அதேமாதிரியான பேரழிவுகளோடு, இன்றைய இளம் தலைமுறையினரை அச்சுறுத்துகின்றன இந்த அபிவிருத்திகளை எதிர்க்க, இது அதிமுக்கிய தருணமாகும். இதற்கு சமூக சமத்துவம், தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் ஆகியவற்றோடு யுத்தம் மற்றும் சமூக எதிர்புரட்சியைத் தவிர வேறொன்றையும் மனிதயினத்திற்கு வழங்க முடியாத முதலாளித்துவ அமைப்புமுறையை ஒழிப்பதற்கான போராட்டத்தில் ஒருமுனைப்பட்ட ஓர் அரசியல் முன்னோக்கு அவசியமாகும். |
|