World Socialist Web Site www.wsws.org |
Snowden’s testimony to European Parliament: “Billions of innocents” unlawfully spied upon ஸ்னோவ்டென் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு வழங்கிய சாட்சியம்: “பில்லியன் கணக்கான நிரபராதிகள்” சட்டவிரோதமாக உளவுபார்க்கப்படுகின்றனர்By Robert Stevens வெள்ளியன்று ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் பொதுஉரிமைகள் குழு, அமெரிக்க தகவல் வெளிப்படுத்தியவரும் முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (NSA) ஒப்பந்தக்காரருமான ஸ்னோவ்டெனுடைய எழுத்து மூல சாட்சியத்தை வெளியிட்டது. ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் மீதான பாரிய மின்னணுக் கண்காணிப்பு பற்றிய விசாரணைக்கு சாட்சியம் அளிப்பதாக ஸ்னோவ்டென் ஒப்புக் கொண்டிருந்தார். ஐரோப்பிய பாராளுமன்றம் ஏற்கனவே ஸ்னோவ்டென் பகிரங்கமாக்கியுள்ளதை முற்றிலும் தழுவி அவருடைய பெயர் குறிப்பிடாது அது 60 பக்க அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக ஒப்புக் கொண்டிருந்தது. (See “European Parliament kills call to protect Edward Snowden”). ஐரோப்பிய பாராளுமன்றம் அந்த ஆவணத்திற்கு திருத்தம் ஒன்றை நிராகரித்தது. அத்திருத்தம் ஸ்னோவ்டெனுக்கு ஒரு தகவல் வெளிப்படுத்தியவர் என்றவகையில் பாதுகாப்பை வழங்கியிருக்கும். அமெரிக்க அரசாங்கத்தின் அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமூக ஜனநாயக மற்றும் பழைமைவாத குழுக்களுடைய ஆதரவில் செயல்படுத்தப்பட்டன. ஸ்னோவ்டெனுடைய 12 பக்க சாட்சியம் ஒரு இருபக்க அறிக்கை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்ட ஒரு தொடர் வினாக்களுக்கான விடையைக் கொண்டுள்ளது. அவருடைய சாட்சியம், பரந்த ஒற்றுச் செயல்கள் குறித்து இதுவரை வெளிப்படுத்தப்பட்டவற்றின் சிறப்பான, பரந்தளவிலான தொகுப்பு ஆகும். மேலும் ,அமெரிக்க அரசியல் மற்றும் உளவுத்துறை உயரடுக்குகளும் அவற்றின் ஆதரவாளர்கள் சர்வதேச அளவிலும் அவர் மீது இடைவிடாமல் இலக்கு கொண்டு கூறும் பொய்களையும் மறுக்கும் ஆவணமுமாகும். அமெரிக்க உளவுப் பிரிவுத் தலைவர்கள், ஒருகாலத்தில் “54 பயங்கரவாத தாக்குதல்கள் பாரிய கண்காணிப்பால் நிறுத்தப்பட்டன” என்று கூறியவற்றை ஸ்னோவ்டென் நிராகரித்தார். இத்தகைய கூற்றுக்கள் சரிபார்க்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், “வெள்ளை மாளிகையின் அந்தரங்க குடியுரிமைகள் மேற்பார்வைக்குழு, பாரிய கண்காணிப்புத் திட்டத்தினால் விசாரித்தவை திறனற்றது என தீர்மானித்தது மட்டுமல்லாது அது நிகழவிருந்த ஒரு பயங்கரவாத தாக்குலைக்கூட நிறுத்தவில்லை மற்றும் அதற்கு சட்ட அடித்தளமும் இல்லை என்றார். “அந்த திட்டம் கண்டுபிடித்த மிகப் பெரிய வெற்றி ஒரு வாடகைகார் சாரதி அமெரிக்காவில் இருந்து $8,500 ஐ சோமாலியாவிற்கு 2007ல் அனுப்பியதுதான்” என்று ஸ்னோவ்டென் எழுதுகிறார். முழு மக்களும் கண்காணிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது, போஸ்டன் நெடுந்தொலைவு ஓட்ட நிகழ்வில் குண்டுவீசியவர்கள் தங்களது செயலை நடத்துவதை இது தடுத்து நிறுத்தவில்லை. ஸ்னோவ்டென் எழுதினார்: “ரஷ்யர்கள் குறிப்பாக எங்களுக்கு Tamerlan Tsamaev பற்றி எச்சரித்தாலும், ஒரு தொகை பிரயோசனமற்ற கணிணியை அடித்தளமாக கொண்ட தேடுதல்களை நடாத்தியபோதும் FBI ஒரு பெயரளவு விசாரணைக்கு மேல் செய்யவில்லை. அச்சதிதிட்டத்தை கண்டுபிடிக்கவும் முடியவில்லை. 264 பேர் இதில் காயமுற்றனர், 3 பேர் கொல்லப்பட்டனர். ஒரு உண்மையான விசாரணையை நடாத்த கொடுக்கப்பட்ட வசதிகள் அமெரிக்காவின் ஒவ்வொருவரினதும் தொலைபேசி அழைப்பை கண்காணிக்கத்தான் செலவிடப்படுகிறது. அரசாங்கத்தின் பாரிய கண்காணிப்பு குறித்த ஏராளமான வெளிப்படுத்தல்கள் பல பத்திரிகைகளில் வெளியிடப்பட்டதை ஸ்னோவ்டென் சுருக்கமாகக் கூறுகிறார். குறிப்பாக கார்டியன் “பில்லியன் கணக்கான நிரபராதிகளுடைய உரிமைகள் –இதை மிகைப்படுத்தாமல் நான் கூறுகிறேன்– சட்டவிரோதமாக அகற்றப்பட்டுவிட்டன” என தெரிவித்துள்ளது. NSA இடம் அது விரும்பும் எவரையும் உளவுபார்க்க அசாதாரணமான வழிவகைகளைப் பற்றி விவரித்த ஸ்னோவ்டென் தன் பங்கை உளவுத்துறை பணியாள் என விளக்கினார். “NSA அமெரிக்கா உட்பட உலகெங்கும் தொலைத்தொடர்புகளை கண்காணிக்கும் அதிகாரத்தை எனக்கு வழங்கியது. அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாக ஆணை 12333 மற்றும் அமெரிக்க காங்கிரசின் FAA 702 ஆகியவற்றின் கீழ் இந்த முறைகளைப் பயன்படுத்தி நான் தனிப்பட்டவர்களை இலக்குவைத்தேன்” என்று கூறினார். அவர் மேலும் கூறியது: “எனது நாற்காலியில் இருந்து எழுந்திருக்காமல், நான் இக்குழுவின் உறுப்பினர் எவருடைய தனிப்பட்ட தொலைத்தொடர்புகளையும் படித்திருக்கமுடியும், மற்றும் எந்த சாதாரணக் குடிமகனுடைய தனிப்பட்ட தகவல்களையும் படித்திருக்க முடியும். இது உண்மை என்பதை பொய் சாட்சிய அபராதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நிலையில் இருந்தும் சத்தியம் செய்கிறேன்.” இக்குழுவின் அறிக்கையை தயாரிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குடியுரிமைகள் குழுவின் துணைத்தலைவரான Sophie Int’Veld, ஸ்னோவ்டெனை தகவல் வெளிப்படுத்தும் வழிமுறைகள் முன்னேறியுள்ளன என அவர் நினைத்தாரா என்று கேட்டார். அதற்கு அவர்: “இல்லை. அமெரிக்காவில் இருந்து இதுவரை எந்த சார்பில்லாத தகவல் வெளிப்படுத்துபவரும் வரவில்லை, துரதிருஷ்டவசமாக என் அரசாங்கம் விகிதத்திற்கு மீறிய குற்றச்சாட்டு நடவடிக்கைகளை எனக்கு எதிராக எடுத்துள்ளது” என்று பதிலளித்தார். அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் எந்த விசாரணைக்கும் முன் குற்றங்களை இழைத்தவன் என அறிவித்து, செய்தி ஊடகத்தில் பகிரங்கமாக நான் தூக்கிலிடப்பட வேண்டும் அல்லது தனிப்பட்ட முறையில் கொல்லப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளனர். என்னுடைய கடவுச்சீட்டை முடக்கி ஓர் வெளிநாட்டு விமானநிலைய இடைத்தங்கல் பகுதியில் 6 வாரங்கள் நிறுத்திவிட்டனர். நான் இலத்தின் அமெரிக்காவில் தஞ்சம் நாடிப் பெற முயல்வேன் எனக் கேள்விப்பட்டு நேட்டோவைக் கூட பயன்படுத்தி பொலிவியாவின் ஜனாதிபதி ஈவோ மோரேல்ஸின் ஜனாதிபதி விமானத்தை தரையிறக்கினர்.” இக்குழுவின் அறிக்கையை தயாரிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் Claude Moraes உடைய கேள்விக்குப் பதில் அளிக்கையில், “ஐரோப்பிய ஒன்றிய மக்கள் பற்றிய மொத்தத் தகவல்கள் சேகரிப்பு பரிமாற்றம் குறித்து NSA க்கும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கும் ஒத்துழைப்பு உள்ளது” என்று ஸ்னோவ்டென் விளக்கி அத்தகைய ஒத்துழைப்பு NSA செயற்பாடுகளில் முக்கியமானது என்றார். “NSA உடைய வெளியுறவு விவகாரங்கள் பிரிவு (FAD) முக்கிய செயல்களில் ஒன்று பாரிய கண்காணிப்பு நடத்துவதை சாத்தியமாக்க ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து அல்லது ஊக்கம் கொடுத்து நாட்டுச் சட்டங்களை மாற்றுவதாகும். NSA மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்க தொடர்புகள் தலைமையகத்தில் (GCGQ) இருக்கும் வக்கீல்கள் கடுமையாக சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்புக்களில் இருக்கும் ஓட்டைகளை காண முயன்றனர். இது அவர்கள் சட்டம் இயற்றுபவர்களால் அறிவற்று இசைவு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பற்ற, வலை போன்ற கண்காணிப்புச் செயல்களை நியாப்படுத்த உபயோகிப்பதற்காகும். இப்படித் தெளிவற்ற சட்டங்களில் இருந்து புதிய அதிகாரங்களாக வியாக்கியானம் செய்யும் இம்முயற்சிகள் பொதுமக்கள் எதிர்ப்பையும் மற்றும் சட்டம் இயற்றுபவர்கள் சட்டவரம்புகள் மதிக்கப்பட வேண்டும் என்று கூறுவதையும் தவிர்க்கும் சர்வதேச மூலோபாயம் ஆகும். இம்முயற்சிகளை தனது உள்ளக ஆவணங்களில் CGHQ இதை “பொது விவாதத்தை சேதப்படுத்துவது” என விளக்கியுள்ளது.” உதாரணங்களை கொடுத்த ஸ்னோவ்டென் பின்வருமாறு எழுதினார்: “சமீபத்திய மக்கள் நினைவிலுள்ள, FAD உடைய “சட்டபூர்வ வழிகாட்டி” செயற்பாடுகள் ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்தில் மற்றும் தொலைவிலுள்ள நியூசிலாந்திலும் நடப்பதை நாம் பார்த்துள்ளோம். NSA ஐ திருப்தி செய்ய ஜேர்மனி அதன் G10 சட்டத்தை மாற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டது. இது ஜேர்மனிய மக்களின் உரிமைகளை, அவர்கள் அரசியலமைப்பின்கீழ் கொண்டதை இல்லாதொழித்தது. இந்நாடுகள் ஒவ்வொன்றும் எப்படி அவர்களின் நாட்டின் தொலைத்தொடர்புத்துறை சட்டப்பாதுகாப்புக்களை தரமிறக்குவது என்பது பற்றி NSA ன் உத்தரவுகளைப் பெற்றன. சிலநேரம் அமெரிக்க பாதுகாப்புத்துறை, வேறுபிரிவுகளின் வேடத்தில் இருந்து பெற்றன.” ஐரோப்பாவில் பாதுகாப்பாக பிரயாணம் செய்வதற்கான அல்லது நிரந்தர தஞ்சத்திற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தான் வரவேற்பதாக ஸ்னோவ்டென் எழுதினார். ஆனால் “தேசிய அரசாங்கங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னிடம் கூறியவற்றை நான் மேற்கோளிடுகிறேன், அமெரிக்கா “ஐரோப்பிய ஒன்றிய பங்காளிகளை எனக்கு அரசியல் தஞ்சம் கொடுக்க அனுமதிக்காது....” என்றார். ஸ்னோவ்டெனுடைய சாட்சியம் பற்றிய செய்தி முதலில் கடந்த வெள்ளி காலை வெளியிடப்பட்டது. ஆயினும் குறிப்பிடத்தக்க வகையில் கார்டியன் அதுபற்றிக் கருத்துக் கூறாததுடன், அத்தகைய முக்கிய சாட்சியத்தைப் பற்றிக் குறிப்பிடவும் இல்லை. இச்செய்தித்தாள்தான் ஜூன் 2013ல் இருந்து ஸ்னோவ்டெனுடைய வெளியீடுகளை பிரசுரம் செய்வதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்ற உண்மை இருந்த போதிலும். ஸ்னோவ்டென் (வலைத் தள விபரங்களை வழங்கியதுடன்) ஆறு நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறார். அவை கார்டியனில் பாரிய ஒற்றுச் செயல்கள் உடைய வெவ்வேறு கூறுபாடுகள் வெளியிடப்பட்டது. கார்டியனுடைய வலைத் தளம் வெள்ளியன்று ஸ்னோவ்டெனைக் குறிப்பிட்டு மூன்று கட்டுரைகளை வெளியிட்டது, இன்னும் இரண்டை சனிக்கிழமை வெளியிட்டது. ஆனால் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அவர் கொடுத்த சாட்சியத்தைக் குறிப்பிடவில்லை. கார்டியன் சாட்சியம் வழங்கியதை மறைக்கிறதா, அப்படியானால், ஏன்? இச்செய்தித்தாள் சமீபத்தில் பலகட்டுரைகளையும் தலையங்கங்களையும் அமெரிக்க ஆதரவுடனான உக்ரேனில் உள்ள பாசிச ஆட்சிசதி பற்றி வெளியிட்டு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஆட்சியையும் கண்டித்துள்ளது. அமெரிக்க ஆதரவுடைய ஆட்சிசதியில் பாசிச சக்திகள் தொடர்புடையவை என்பதை கார்டியன் மறுத்துள்ளது, “உலகின் செய்தி ஊடகம் இச்சக்திகள் பற்றி அதிகம் பார்க்கவுமில்லை, கேட்கவுமில்லை.” என எழுதியது. ஸ்னோவ்டென் ரஷ்யாவில் நிர்ப்பந்தமாக தஞ்சமடைந்துள்ளார் என்னும் உண்மையை கார்டியன் பயன்படுத்தி, இது அமெரிக்கா மற்ற சக்திகள் நடத்தும் ஜனநாயக, மனித உரிமைகள் துஸ்பிரயோகத்தை அம்பலப்படுத்தும் அவரின் முயற்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனக் கூறுகிறது. ஜூலை 2, 2013 கார்டியனின் தலையங்கம் ஸ்னோவ்டெனை புட்டின் அரசாங்கம் நடத்தும் மனித உரிமைகள் துஸ்பிரயோகத்துடன் தொடர்புபடுத்த முற்பட்டது. “அவர் விளாடிமீர் புட்டினுடைய ரஷ்யாவில் இருக்கும் வரை, உண்மைப் பிரச்சினை மறைந்துதான் இருக்கும். இது திரு.ஸ்னோவ்டெனுடைய பாதையை சேதப்படுத்தும்” என அது எழுதியுள்ளது. “எனவே அவர் ரஷ்யாவை விட்டு முடிந்த விரைவில் நீங்க வேண்டும்” என்று அது சேர்த்துக் கொண்டது. கார்டியனின் துணை செய்தித்தாள் ஒப்சேர்வரின் வெளியுறவுத்துறை ஆசிரியர் பீட்டர் பியூமான்ட் “ஸ்னோவ்டென், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு பொதுமக்கள் உறவுக்கு விளம்பரம்கொடுத்து, ஒரு பாரிய, தொடர்ச்சியான மனித உரிமைகள் மீறல் நாட்டிற்கு மூடிமறைப்பு கொடுத்துள்ளார்.” என எழுதினார். இது ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி முக்கிய அமைச்சரகங்களை கொண்டுள்ள உக்ரேனில் தேர்ந்தெடுக்கப்படாத ஆட்சி நிறுவப்படுவதற்கு கார்டியனின் முழுஆதரவிற்கான காரணமா? இச்செய்தித்தாள் ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் போர்வெறி கொண்ட நிலைப்பாட்டை கோருவதன் பொருள் ஸ்னோவ்டெனின் குரலை அனுமதிப்பது புத்திசாலித்தனமல்ல என்று அர்த்தப்படுகின்றதா? |
|