World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Five years of Obama’s “recovery”

ஒபாமா "மீட்சியின்" ஐந்து ஆண்டுகள்

Patrick Martin
8 March 2014

Back to screen version

லெஹ்மன் பிரதர்ஸ் முதலீட்டு வங்கி பொறிந்ததோடு வெடித்த நிதியியல் முறிவின் கீழ் நியூ யோர்க் பங்குச்சந்தை அதன் குறைந்தபட்ச குறியீட்டை எட்டியதிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆனதை இந்த வாரம் குறிக்கிறது. மார்ச் 6, 2009இல் டோவ் ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு, பொறிவுக்குப் பிந்தைய அதன் மிகக் குறைந்தளவாக 6,443 புள்ளிகளை எட்டியது. அதற்கு மூன்று நாட்கள் கழித்து, மார்ச் 9, 2009இல் எஸ்&பி 500 அதன் பொறிவுக்குப் பிந்தைய குறைந்தளவாக 676 புள்ளிகளை எட்டியது.

நேற்று, இந்த வாரத்திற்கான பங்கு வர்த்தகம் முடிந்த போது, டோவ் ஜோன்ஸ் சராசரி குறியீடு 16,452 புள்ளிகளில் நிறைவுற்றது, இது ஐந்து ஆண்டுகளில் 10,000 புள்ளிகள் அல்லது 154 சதவீத பிரமாண்ட உயர்வாகும். எஸ்&பி 500 குறியீடு 1,878 புள்ளிகளில் இருந்தது, இது டோவ் குறியீட்டை விட இன்னும் வேகமாக உயர்ந்து, ஐந்து ஆண்டுகளில் 170 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

அமெரிக்க நிதியியல் பிரபுத்துவத்தால் 2008 நிதியியல் முறிவானது செல்வ வளத்தின் ஒரு வரலாற்று மறுபங்கீட்டைச் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக, இவை சமீபத்திய வாரங்களில் அறிவிக்கப்பட்ட சரமாரியான புள்ளிவிபரங்களில் மிகவும் மலைப்பூட்டுபவை மட்டுமே ஆகும்.

பங்குகள், பத்திரங்கள், ஹெட்ஜ் நிதியங்கள் மற்றும் ஏனைய நிதிய சொத்துக்களைப் பெருமளவிற்கு சொந்தமாக்கி வைத்திருக்கும் ஒட்டுண்ணிகளின் செல்வம், இந்தளவிற்கு ஒருபோதும் அதிகரித்ததில்லை என்பதோடு ஒரு சாதனையளவிலான வேகத்தில் அதிகரித்தும் வருகிறது. அமெரிக்க மக்கள்தொகையின் 1 சதவீத செல்வந்தர்கள் 2009 மற்றும் 2012க்கு இடையே மொத்த வருவாயில் 95 சதவீதத்தைத் திரட்டு எடுத்துக் கொண்டுள்ளனர். இந்த வாரத்தின் தொடக்கத்தில் WSWS எடுத்துக்காட்டியதைப் போல, உலக பில்லியனர்கள் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் அவர்களின் மொத்த செல்வ வளத்தில் 1 ட்ரில்லியனுக்கும் அதிகமாக உயர்வைக் கண்டனர்.

அமெரிக்க கருவூலம் மற்றும் பெடரல் ரிசர்விடம் இருந்து ரொக்கம், கடன்கள் மற்றும் கடன் உத்தரவாதங்களில் இருந்து ஆதாயமடைந்த வங்கிகளைப் பொறுத்த வரையில், பங்குகளின் விலைகள் மற்றும் வருவாய்கள் இரண்டுமே வானளாவிய அளவுகளுக்கு திரும்பி உள்ளன.

அமெரிக்க தொழிலாள வர்க்கத்தைப் பொறுத்த வரையில்தற்போது சம்பளத்திற்கு வேலை செய்து வருபவர்கள், அல்லது வேலைவாய்ப்பின்றி வேலை கோரி வருபவர்கள், அல்லது ஓய்வூ பெற்று அவர்களின் கடந்தகால ஊதிய பிடித்தங்களில் இருந்து வழங்கப்படும் ஓய்வூதியத்தை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களைச் சார்ந்து வாழ்பவர்கள், மக்கள்தொகையில் மேலதிக பெரும்பான்மையாக உள்ள இவர்களின்நிலைமை மிகவும் வேறுவிதமாக உள்ளது.

உண்மையில் மார்ச் 2009இல் இருந்து அமெரிக்க மத்தியதட்டு குடும்ப வருமானம், பணவீக்கத்திற்கேற்ப பொருத்திப் பார்த்தால், 6 சதவீத அளவிற்கு, 52,297 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஐம்பதாவது சதமானத்தில் வாழும் குடும்பமான மத்தியதட்டு குடும்பம் நிதியியல் பொறிவில் மூழ்கி, இவ்வாறு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இன்று மோசமடைந்துள்ளது.

வேலைவாய்ப்பின்மை விகிதம் மிகச் சிறியளவில் மட்டுமே மீட்சி அடைந்துள்ளது, அதுவும் ஏனென்றால் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தொழிலாளர் சந்தையிலிருந்து விலகிச் சென்றதோடு, வேலை கோருவோராக பதிவு செய்யாததால் ஏற்பட்டதாகும். நம்பிக்கை இழந்த" மற்றும் பகுதி-நேர தொழிலாளர்களையும் உள்ளடக்கினால், உண்மையான வேலைவாய்ப்பின்மை விகிதம் 15 சதவீதத்திற்கு அதிகமாக, மந்தநிலை அளவின் அருகாமையில், நிற்கும்.

தொழிலாளர்களின் நிஜமான ஊதியங்கள் தேக்கமடைந்திருக்கின்ற நிலையிலும் கூட, கடந்த ஐந்து ஆண்டுகளில் வாழ்க்கைச் செலவுகள் சீராக உயர்ந்து வந்துள்ளன. 2009இல் 2.40 டாலராக இருந்த ஒரு கேலன் எரிவாயுவின் விலை இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக 3.60 டாலருக்கும் கூடுதலாக உயர்ந்துள்ளது. 2003இல் 2,412 டாலராக இருந்த குடும்ப மருத்துவ காப்பீட்டில் பணியாளரின் பங்களிப்பு, கடந்த தசாப்தத்தில் அண்ணளவாக இரண்டு மடங்கு அதிகரித்து, கடந்த ஆண்டு 4,565 டாலருக்கு வந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளைப் பொறுத்த வரையில், கடைகளில் பொருட்கள் வாங்கும் எவரொருவரும் பால், மாமிசம், பழங்கள், காய்கறிகள், மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை நன்கு அறிந்திருப்பார்கள்.

உழைக்கும் மக்கள் அவர்களின் அன்றாட செலவுகளைச் சமாளிக்கவே மேலும் மேலும் கடன்கள் வாங்க வேண்டி உள்ளது. 2013இன் நான்காம் காலாண்டில் வீட்டுத்துறை கடன் 241 பில்லியன் டாலர் உயர்ந்து, 11.52 ட்ரில்லியனை எட்டி உள்ளது. மொத்த குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கினரால் கடந்த ஆண்டு ஒரு அமெரிக்க வெள்ளி நாணயத்தைக் (dime) கூட சேமிக்க இயலவில்லை.

மிகப்பெரிய கடனுயர்வாக இருப்பது மாணவர்-கடன் நிலுவைகள் ஆகும், அது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 114 பில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளது. இளம் தலைமுறையினர் கல்வி செலவுகளில் ஒரு பாரிய உயர்வைக் கண்டு வருகின்றனர், அதேவேளையில் குறைவூதியம், பாதுகாப்பற்ற வேலைவாய்ப்பு ஆகியவற்றின் ஒரு அச்சமூட்டும் எதிர்காலத்தை அவர்களுக்கு வழங்கி வரும் ஒரு வேலைவாய்ப்பு சந்தையை அவர்கள் முகங்கொடுத்துள்ளனர்.

பெரும் செல்வந்தர்களின் செல்வசெழிப்பிற்கும் பாரிய பெரும்பான்மையினரின் போராட்டங்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு எந்தளவிற்கு மிகவும் கூர்மையாக மற்றும் மிகவும் பரவலாக மாறி உள்ளதென்றால், பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மற்றும் பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகளாலும் கூட அதை விவாதிக்காமல் இருக்க முடியவில்லை. அரை மனதோடு மற்றும் எந்தவொரு ஆழ்ந்த கொள்கை பரிந்துரைகளும் இல்லாமல், ஒபாமாவும் ஜனநாயக கட்சியினரும் கூட அவர்களின் எதிர்தரப்பு குடியரசு கட்சியினருக்கு எதிராக பொருளாதார சமத்துவமின்மை பிரச்சினையை உயர்த்த முனைந்துள்ளனர்.

ஒபாமா நிர்வாகத்தின் கடந்த ஐந்தாண்டு காலம் மேலே காட்டப்பட்ட புள்ளிவிபரங்களால் தொகுத்தளிக்கப்படுகின்றன என்பதால், சமத்துவமின்மைக்கு எதிரான ஒபாமாவின் "பிரச்சாரம்" முற்றிலும் எரிச்சலூட்டுவதாக மற்றும் நேர்மையற்றதாக உள்ளது. டோவ் ஜோன்ஸ் சராசரியில் 10,000 புள்ளிகளின் உயர்வு என்பது ஒரு தற்செயலான விபத்தோ, அல்லது சந்தை சக்திகளால் ஏற்பட்ட குருட்டுத்தனமான விளைவோ அல்ல. அது அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க செய்ய மற்றும் வங்கிகள், ஊக வணிகங்களுக்கு பிணையெடுப்பு வழங்க, புஷ் மற்றும் ஒபாமாவால், ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினரால், திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின் விளைவாகும்.

சமத்துவமின்மையானது பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் பரவுகிறது. அது ஆளும் வர்க்க அரசியல் சித்தாந்தத்தின் நிரந்தர உட்கூறாக விளங்கும் இரக்கமற்ற யுத்த உந்துதலிலும் பெரும் பங்கு வகிக்கிறது. உள்நாட்டில் நிலவும் ஆழ்ந்த சமூக பிளவுகளைக் குறித்து நன்கறிந்துள்ள பெருநிறுவன மற்றும் நிதியியல் மேற்தட்டுக்கள் பதட்டங்களை வெளியில் திருப்பிவிட முனைகின்றனதற்போது அது, அணு ஆயுதமேந்திய அரசுகளுக்கு இடையிலான ஓர் இராணுவ மோதலின் அச்சுறுத்தலோடு, உக்ரேன் மீது ரஷ்யா உடனான ஒரு மோதலின் வடிவத்தில், உள்நாட்டு யுத்தத்திற்குள் மூழ்கடிக்க அச்சுறுத்துகிறது.

அடுத்து சமத்துவமின்மையோ அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகளைச் சிதைப்பதில் வேரூன்றி உள்ளது. பெருமளவிற்கு இவை பெருநிறுவன ஊடக செய்திகளில் கைவிடப்பட்டுள்ள நிலையில், NSAஇன் இரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோவ்டெனிடம் இருந்து ஒவ்வொரு வாரமும் பாரிய பொலிஸ்-அரசு உளவுவேலை திட்டங்களின் புதிய வெளியீடுகள் அம்பலமாகி வருகின்றன. இந்த திட்டங்களில் பரந்தளவிலான உழைக்கும் மக்கள் பிரதான இலக்கில் வைக்கப்பட்டுள்ளனர்.

பெரு வர்த்தக அரசியல்வாதிகளிடம் இருந்து, அவர்கள் ஜனநாயக கட்சியினராக இருந்தாலும் சரி அல்லது குடியரசுக் கட்சியினராக இருந்தாலும் சரி, வர்க்க யுத்த கொள்கைகளின் ஒரு தொடர்ச்சியையும், அவற்றைத் தீவிரப்படுத்துவதையும் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக எதிர்புரட்சியையும் தவிர இவர்களிடம் இருந்து தொழிலாள வர்க்கம் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.

முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் பாதுகாவலர்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ஐக்கியம் மட்டுமே ஒரு முன்னோக்கிய பாதையை வழங்குகிறது. இதற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.