தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
CIA caught spying on US Senate அமெரிக்க செனட் மீது உளவு பார்த்ததில் சிஐஏ பிடிபட்டது
Tom Carter Use this version to print| Send feedback சட்ட நெறிமுறைகள் மற்றும் அரசியலமைப்பின் அதிகாரப் பிரிவினையை மிக வெளிப்படையாக மீறியதோடு, அதனை, மத்திய உளவுத்துறையை (CIA) மேற்பார்வையிடும் மற்றும் நெறிப்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ள சட்டபூர்வ அமைப்பான செனட் உளவுத்துறை கண்காணிப்பு கமிட்டியை அது சட்டவிரோதமாக உளவு பார்த்து வந்திருப்பது, கடந்த பல நாட்களில், வெளிப்பட்டுள்ளது. கண்காணிக்கப்படாமல் விடப்படும் அரசின் போக்கு இயல்பாக நிர்வாக கொடுங்கோன்மையை நோக்கி செல்லும் என்பதை அமெரிக்க அரசு அமைப்புமுறையை ஸ்தாபித்த புரட்சியாளர்கள் அவர்களின் அடிப்படை கருத்துருக்களின் மத்தியில் ஓர் உறுதியான நம்பிக்கையாக கொண்டிருந்தார்கள். அத்தகைய போக்கை எதிர்கொள்ள அந்த ஸ்தாபகர்கள் ஒரு முறையை வடிவமைத்தனர், அதன்படி அரசு அதிகாரம் வெவ்வேறு அரசு துறைகளுக்கு இடையே பிரித்தளிக்கப்பட்டது. “கட்டுப்பாடுகள் மற்றும் சமன்படுத்துதல்களைக்" கொண்ட ஒரு அமைப்புமுறையின் கீழ், வேறு வேறு துறைகள் இதர துறைகளின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி இருந்தன. உளவுத்துறை உட்பட பெடரல் அமைப்புகளின் மீதிருந்த சட்டபூர்வ கண்காணிப்பு, இந்த கருத்துருவின் ஒரு வரலாற்றுரீதியிலான வளர்ச்சியாக இருந்தது. காங்கிரஸ் மீது மத்திய உளவுத்துறை முகமை உளவுப்பார்த்தது குறித்து வெளியான தகவல்கள், அமெரிக்கா மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு பொறுப்பற்ற இராணுவ/உளவு எந்திரங்களால் செயல்படுத்தப்படுகிறது என்ற உண்மையை அடிக்கோடிடுகிறது. வாஷிங்டனின் உத்தியோகபூர்வ கொள்கைக்கு உத்தரவிடுகின்ற, பெருநிறுவன நிதியியல் மேற்தட்டுகளோடு சேர்ந்துள்ள, எந்த அரசியல் கட்சி அதிகாரத்தில் இருக்கிறது என்பதைச் சாராமல், இந்த எந்திரம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த எந்திரத்தை செயல்படுத்துபவர்களின் கண்ணோட்டம், முழு விலக்கீட்டுரிமை பெற்றுள்ள ஒன்றாக, அடிப்படை ஜனநாயக கோட்பாடுகளை புறக்கணிப்பதாக உள்ளது. உளவு பார்த்தல், சூழ்ச்சி, ஊடுருவல், நேர்மாறாக புரட்டுதல், சித்திரவதை, படுகொலை என உளவுத்துறை முகமையின் அன்றாட நடவடிக்கைகளின் மீது அரசியலமைப்பால் மற்றும் உரிமைகள் சாசனம் மற்றும் தற்போதைய சட்டங்களால் கொண்டு வரப்பட்ட கட்டுப்பாடுகள் வெறுமனே தட்டிக் கழிக்கப்பட வேண்டிய அல்லது தூக்கியெறியப்பட வேண்டிய இடர்களாக பார்க்கப்படுகின்றன. ஜனநாயக உரிமைகள் மீதான இந்த அவமதிப்பானது, ஒட்டுமொத்தமாக மக்களின் கண் முன்னால் அதன் பிற்போக்குத்தனமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற ஓர் அரசியல் அமைப்புமுறையோடு இணக்கமாக பொருந்தி உள்ளது, பெருமளவிலான மக்களோ அதை எதிர்க்கின்றனர். 2001 செப்டம்பர் 11ஐ அடுத்து வந்த காலகட்டத்திலிருந்து ஆட்கடத்தல்கள் (“வெளிநாட்டிடம் ஒப்படைத்தல்”), இரகசிய சிறைகூடங்கள் (“மறைப்பிடங்கள்") மற்றும் சித்திரவதை ஆகிய சிஐஏ செயல்முறைகளுக்குள் ஒரு செனட் புலனாய்வு தொடங்கியதில் இருந்து சிஐஏ உளவுபார்ப்பு மோசடி அதன் தோற்றுவாயைக் கொண்டுள்ளது. இத்தகைய சிஐஏ நடைமுறைகள் முற்றிலும் சட்டவிரோதமாக, அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டம் இரண்டையும் மீறுவதாக இருந்தன, இருக்கின்றன என்பது வெளியில் கூறப்படாமல் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று வரையில், “பின்னோக்கி அல்ல முன்னோக்கி பார்ப்போம்" என்ற ஒபாமா நிர்வாகத்தின் கோஷத்தின் கீழ், இவற்றில் சம்பந்தப்பட்ட ஒருவர் கூட குற்றவியல்ரீதியாக வழக்கின் கீழ் வரவில்லை அல்லது பொறுப்பாக்கப்படவில்லை. மாறாக, அந்த முகமையின் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தும் எவரொருவர் மீதும் வழக்கு தொடுக்க ஒபாமா நிர்வாகம் அச்சுறுத்தி உள்ளது, உண்மையில் வழக்கும் தொடுத்துள்ளது. இத்தகைய குற்றங்களை ஆவணப்படுத்தி செனட் உளவுத்துறை கண்காணிப்பு கமிட்டி 6,300 பக்க அறிக்கை ஒன்றை உருவாக்கி உள்ளது, ஆனால் அது பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. சிஐஏ அதன் நடவடிக்கைகளை மூடிமறைக்கும் ஒரு முயற்சியில் செனட் உளவுத்துறை கண்காணிப்பு கமிட்டியிடம் பொய்யுரைத்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில், ஜனாதிபதி ஒபாமாவால் நியமிக்கப்பட்ட சிஐஏ இயக்குனர் ஜோன் பிரென்னன், கமிட்டியின் அறிக்கைக்கு 122 பக்க பதிலுரையை தாக்கல் செய்தார், அது கமிட்டியின் கண்டுபிடிப்புகளை மறுத்துரைத்தது. ஆனால் பிரென்னனுக்கு முன்னர் அந்த பதவியில் இருந்த லியோன் பனெட்டாவிற்காக தயாரிக்கப்பட்ட சிஐஏ நடைமுறைகளைக் குறித்து மீளாய்வு செய்யும் ஒரு ஆவணம் செனட் கமிட்டிக்கு கிடைத்த போது, அந்த பதிலுரை ஒரு மோசடியென்பது அம்பலமானது. CIAஆல் ஏற்படுத்தப்பட்ட ஒரு வசதியை அணுக செனட் பணியாளர்கள் நேரடியாக வரவேண்டும் என்றரீதியில், சில குறிப்பிட ஆவணங்களைப் பெறுவதில் செனட் உளவுத்துறை கண்காணிப்பு கமிட்டிக்கு சிஐஏ இடர்பாடுகளை ஏற்படுத்தி, புலனாய்விலிருந்து பனெட்டா ஆவணத்தை அது மூடிமறைக்க முயன்றிருந்தது. கமிட்டியின் ஓர் அங்கத்தவரான செனட்டர் மார்க் உதால் கூறுகையில், "பனெட்டாவின் ஆவணம் "[செனட்] உளவுத்துறை கண்காணிப்பு கமிட்டியின் அறிக்கையோடு பொருந்துகிறது. கமிட்டியின் அறிக்கைக்கு அளிக்கப்பட்ட CIAஇன் உத்தியோகபூர்வ விடையிறுப்போடு முரண்படுகிறது,” என்றார். இறுதியாக, இத்தகைய குற்றங்களைச் செய்ததோடு பின்னர் அவற்றைக் குறித்து பொய் கூறியுள்ள நிலையில், CIA செனட் உளவுத்துறை கண்காணிப்பு கமிட்டி பணியார்கள் குறித்து உளவு பார்த்தமை மற்றும் அவர்களின் கணினிகளைக் கண்காணித்தமை குறித்த பனெட்டா ஆவணத்தை யார் பார்வையிட்டனரோ அவர்களுக்கு எதிராக அது பதில் நடவடிக்கை எடுத்தது. காங்கிரஸ் மீதான நிர்வாகத்துறை உளவுவேலைகள் வெளியாகி இருப்பது 1972-74இன் வாட்டர்கேட் மோசடியை நினைவூட்டுகிறது, அதில் நிக்சன் நிர்வாகம் அரசியல் எதிர்ப்பாளர்களை உளவுபார்க்கும் மற்றும் மதிப்பிழக்கச் செய்யும் சட்டவிரோத முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. அந்த மோசடியை அடுத்து, 43 நபர்களுக்கு குறைவில்லாமல் அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு, குற்றத்திற்கான தீர்ப்பு வழங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அதேவேளையில் நிக்சனே கூட காங்கிரஸால் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கும் மற்றும் குற்றப்பழி சுமத்தப்படுவதற்கும் அருகாமையில் இருந்த நிலையில், பதவியிலிருந்து இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் 40 ஆண்டுகளுக்குப் பின்னர், நிர்வாகத்துறை குற்றத்தின் வெளிப்பாடு மிகவும் வேறுபட்ட விடையிறுப்பால் வரவேற்கப்படுகிறது. ஊடகங்கள் அந்த செய்தியை அலட்சியத்தோடு எடுத்துக்காட்டி உள்ளன, அந்த அத்தியாயம் அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளே எங்கிருந்தும் எந்தவொரு முக்கிய விடையிறுப்பையும் உருவாக்கி இருக்கவில்லை. சிஐஏ நடவடிக்கைகள் மீது குற்ற வழக்கு தொடர்வதற்கான வாய்ப்பிருப்பதை செனட் உளவுத்துறை கண்காணிப்பு கமிட்டி நீதித்துறைக்கு எடுத்துக்காட்டி இருந்தது. ஆனால் சிஐஏ மீது வழக்கு தொடுப்பதற்கு மாறாக, “இரகசிய" ஆவணங்களை குற்றமான முறையில் "அனுமதியின்றி அணுகியதற்காக" செனட் பணியாளர்கள் மீது நீதித்துறை வழக்கு தொடுக்க வேண்டுமென கோரிய விதத்தில், CIAஇன் ஆத்திரமூட்டும் விடையிறுப்பு இருந்தது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஓர் அணுஆயுத மோதலின் விளிம்பிற்கு பொறுப்பற்ற விதத்தில் உலகை கொண்டு வந்த, தீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளால் உக்ரேனில் நடத்தப்பட்ட ஓர் ஆயுதமேந்திய ஆட்சிக்கவிழ்ப்பை, சமீபத்திய வாரங்களில், அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் ஆதரித்தது. அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் கட்சிகளில் ஒன்றான ஸ்வோபோடா, அனைத்து "ரஷ்ய மொழி பேசும் புத்திஜீவிகளையும்" மற்றும் அனைத்து "உக்ரேனிய-விரோத அரசியல் கட்சிகளின் அங்கத்தவர்களையும்" கூடுதல் அதிகாரத்தின் கீழ் படுகொலை செய்ய அழைப்புவிடுத்துள்ளது. அதேவேளையில் அது யூதர்களை உக்ரேனிய மக்களின் எதிரிகளாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது. வெளிநாட்டில் இதுபோன்ற கூட்டணிகளை ஒன்றிணைக்கும் ஒரு அரசாங்கத்தால் நிச்சயமாக உள்நாட்டிலும் அதேபோன்ற சக்திகளை வளர்த்தெடுக்க முடியும். ஐசன்ஹோவர் 1961இல் எதற்கு எதிராக எச்சரித்தாரோ அந்த "இராணுவ-தொழில்துறை கூட்டு" அதன் அளவிலும், சக்தியிலும் பாரியளவில் அதிகரித்துள்ளது. எண்ணிக்கையில், ஆதாரவளங்களில், செல்வ வளத்தில், தகவல் தொடர்புகளில் மற்றும் மேலாதிக்கத்தில் என ஐசன்ஹோவர் நினைத்து பார்த்திருந்திருக்கக்கூடிய எதுவொன்றையும் 21ஆம் நூற்றாண்டு அமெரிக்க இராணுவ/உளவுத்துறை/பெருநிறுவன-நிதியியல் கூட்டு விட்டு வைக்கவில்லை. காங்கிரஸ் அதன் முன்னால் மண்டியிட்டு, வலுவற்று உள்ளது. ஜனாதிபதியோ பெருமளவிற்கு அதன் மக்கள் தொடர்பு பிரதிநிதியாக, செயல்பாட்டாளராக செயல்பட்டு வருகிறார். முன்பில்லாத அளவிற்கு அமெரிக்காவின் பொறுப்பற்ற மற்றும் ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கையில் உள்ள ஒரு பிரதான காரணி, முன்னொருபோதும் இல்லாத விதத்தில் அந்நாட்டிற்குள் நிலவும் சமூக சமத்துவமின்மையும், அது உருவாக்குகின்ற வெடிப்பார்ந்த சமூக நிலைமைகளும் ஆகும். சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை வெளியே திருப்பிவிடும் விருப்பமே தொடர்ச்சியான இராணுவ தலையீடுகளுக்கு பின்னால் உள்ள நோக்கமாகும். அதே நேரத்தில், சமூகத்தின் ஒரு துருவத்தில் கற்பனைகெட்டாத செல்வந்த அடுக்கின் உயர்வும், மற்றொரு துருவத்தில் முன்னொருபோதையும் விட அதிகமாக வறுமை மற்றும் அவலமும் ஜனநாயக ஆட்சி வடிவங்களோடு பொருந்துவதாக இல்லை. அனைத்திற்கும் மேலாக முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள் ஓர் இயக்கம் அபிவிருத்தி அடையக்கூடுமென அமெரிக்க ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது. NSA உளவுவேலை, டிரோன் படுகொலைகள், வழக்கு விசாரணையின்றி கடுங்காவலில் வைப்பது, வெளி நாட்டிடம் ஒப்படைப்பது என அதிகரித்து வரும் பொலிஸ் அரசு முறைமைகளின் பட்டியல் மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளன. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அண்டோனின் ஸ்காலியா சமீபத்தில் ஹவாயில் ஒரு கூட்டத்தினர் முன் பேசுகையில், “உங்களை நீங்களே ஏமாற்ற நினைத்தால்", இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானிய-அமெரிக்கர்கள் சிறையில் அடைக்கப்பட்ட விதத்தில் அமெரிக்காவில் மக்களை சிறையில் அடைக்க முடியாது என்றார். ஐயத்திற்கிடமின்றி, “அரசு எதிரிகளின்" “இரகசிய" பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விட்டது. அமெரிக்க அரசியல் காரியஸ்தர்கள் "சுதந்திரம், ஜனநாயகம்" குறித்த வெற்று வனப்புரைகளைப் பேசி வருகின்ற போதினும், உக்ரேனில் அப்பட்டமான பாசிசவாதிகளுக்கு அவர்களின் வெளிப்படையான ஆதரவு அவர்கள் உண்மையிலேயே எங்கே நிற்கிறார்கள் என்பதை குறித்துக்காட்டுகிறது. இராணுவ/உளவுத்துறை கூட்டு நிரந்தரமாக உடைக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும் என்பது ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கு அவசியமாகும். அனைத்து உளவுத்துறை முகமைகளும் கலைக்கப்பட்டு, அவற்றின் அனைத்து "இரகசிய" கோப்புகளும் பகிரங்கமாக்கப்பட வேண்டும் என்பதோடு அவற்றின் சட்டவிரோத உளவுவேலை நடவடிக்கைகளின் அனைத்து நச்சு பொருட்களும் அழிக்கப்பட வேண்டும். இத்தகைய அவசியமான வேலையைச் செய்வதற்கு, இந்த கூட்டை உருவாக்கி உள்ள முதலாளித்துவ அமைப்புமுறை உடனான ஒரு மோதல் தவிர்க்க முடியாததாகும். உலக முதலாளித்துவ நெருக்கடி உலகெங்கிலும், குறிப்பாக அமெரிக்காவில் சகிக்கவியலா சமூக சமத்துவமின்மை அளவுகளை உருவாக்கி உள்ளது. சமூக சமத்துவமின்மை ஜனநாயகத்தின் பொறிவிற்கு உந்துவதோடு, அன்னிய நாடுகளின் மீது இரத்தவெறி கொண்ட ஆத்திரமூட்டும் அமெரிக்க இராணுவவாத விஸ்தரிப்போடு சேர்ந்து, ஒரு பொலிஸ் அரசை நோக்கி திரும்புகிறது. தவிர்க்கவியலாதபடிக்கு சர்வாதிபத்தியம், பாரிய வறுமை மற்றும் உலக யுத்தத்திற்கு இட்டுச் செல்லும் இந்த நிகழ்ச்சிப்போக்கை நிறுத்தும் மற்றும் மாற்றும் ஒரே கருவியாக, ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஐக்கியம் மட்டுமே உள்ளது. |
|
|