World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

The fascist danger in Ukraine

உக்ரேனில் பாசிச அபாயம்

Julie Hyland
6 March 2014

Back to screen version

உக்ரேனில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சிசதியில் பாசிசவாதிகள் ஈடுபட்டதை மறுத்தோ அல்லது அவர்களின் பாத்திரத்தை மட்டுப்படுத்தி, போதியளவிற்கு விபரங்களை வழங்காத விதத்தில் எடுத்துக்காட்டியோ, ஊடகங்களில் ஓர் அரசியல் ரீதியிலான வஞ்சக பிரச்சார தாக்குதல் நடந்து வருகிறது.

உதாரணமாக, “உக்ரேனிய ரஷ்யர்களுக்கு ஓர் உடனடி ஆபத்திருப்பதாக கூறும் புட்டினின் வாதம் அர்த்தமற்றதென" நியூயோர்க் டைம்ஸ் வலியுறுத்தியது. அதேவேளையில் பிரிட்டனின் கார்டியன் கிரிமியாவின் சம்பவங்களை "புரட்சிகர பாசிசவாதிகளின் அணிகளால் நடத்தப்படும் தாக்குதலை தடுப்பதற்கான" ஒரு முயற்சியாக கூறப்படும் வாதங்களை "கற்பனையானவை" என உதறித் தள்ளியது. மேலும் அது தொடர்ந்து குறிப்பிடுகையில், அவ்வாறான சக்திகளை பற்றி உலக ஊடகங்கள் எதையும் காணவும் இல்லை, கேட்கவும் இல்லை," என்று எழுதியது.

இது அப்பட்டமான மூடிமறைப்பதாகும்.

எதார்த்தம் என்னவென்றால், 1945க்குப் பின்னர் முதன்முறையாக, பகிரங்கமாக யூத-விரோத, நாசிச சார்பான ஒரு கட்சி, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் மரியாதையுடன், ஓர் ஐரோப்பிய தலைநகரில் அரசு அதிகாரத்தின் முக்கிய நெம்புகோல்களை கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. அமெரிக்காவினால் நியமிக்கப்பட்ட அர்செனி யாட்சென்யுக் தலைமையிலான மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அந்த உக்ரேனிய அரசாங்கம், பாசிச ஸ்வோபோடா கட்சியை சேர்ந்த ஆறு மந்திரிகளை உள்ளடக்கியுள்ளது.

ஓராண்டிற்கு குறைந்த காலத்திற்கு முன்னர், உலக யூதர்கள் மாநாடு ஸ்வோபோடாவை தடைசெய்ய வேண்டுமென அழைப்பு விடுத்தது. ஆனால் அக்கட்சியின் ஸ்தாபகரும் தலைவருமான ஓலெஹ் தியாஹ்ன்பொக், “உக்ரேனைக் கட்டுப்படுத்துகின்ற ரஷ்ய-யூத மாஃபியாவை" நசுக்க வேண்டுமென்ற அவரது தீர்க்கமான முடிவை மீண்டும் மீண்டும் பேசி வந்த நிலையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கடந்தமாத சதிக்கு தயாரிப்பு செய்ய தொடங்கியதும் அவர்களால் அரவணைக்கப்பட்டார்.

சொபிபரில் (Sobibor) நாஜி படுகொலை முகாம்களில் சுமார் 30,000 மக்கள் கொல்லப்பட்ட குற்றத்திற்கு உடந்தையாய் இருந்ததற்காக ஜோன் தெம்ஜன்ஜுக் (John Demjanjuk) மீது 2010இல் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், தியாஹ்ன்பொக் அவரை ஒரு வீரபிரதாபியாக குறிப்பிட்டார். தியாஹ்ன்பொக்கின் துணை பிரதிநிதி யூரி மிகைல்செஸ்சின் (Yuriy Mykhalchyshyn) ஜோசெப் கோபெல்ஸ் அரசியல் ஆய்வு மையம் என்ற ஒரு சிந்தனைக் கூடத்தை ஆரம்பித்தார்.

உக்ரேனிய ஜனாதிபதிய விக்டர் யானுகோவிச்சை தூக்கிவீசிய மைதான் போராட்டங்களில் ஸ்வோபோடா ஒரு பிரதான அரசியல் சக்தியாக இருந்தது. அந்த ஆட்சிசதிக்கு அதிரடி துருப்புகளை வழங்கியதற்கு கைமாறாக, அதற்கு பிரதான அமைச்சகங்களின் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்வோபோடாவின் இணை-ஸ்தாபகர் ஆன்ட்ரி பரூபி, Right Sectorஇன் தாக்குதல்களுக்கு வழிகாட்டிச் சென்று, அந்த போராட்டங்களில் "பாதுகாப்பு தளபதியாக" செயல்பட்டார். இந்த Right Sector, துணை இராணுவ உக்ரேனிய தேசிய சபை-உக்ரேனிய தேசிய தற்காப்பு அமைப்பு (UNA-UNSO) உட்பட பாசிசவாதிகள் மற்றும் அதிதீவிர வலதுசாரி தேசியவாதிகளின் ஒரு கூட்டணியாகும். ஹிட்லரின் Waffen SS இராணுவ பிரிவைப் போன்று சீரூடை அணிந்த அதன் அங்கத்தவர்கள் செசென்யா, ஜோர்ஜியா மற்றும் ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஊக்கம் கொடுத்தவர்கள் ஆவர்.

பரூபி தற்போது பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஆயுதமேந்திய படைகளை மேற்பார்வையிடும் தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ குழுவின் செயலாளராகியுள்ளார். Right Sectorஇன் தலைவர் திமெத்ரோ யாரோஷ் அவரது துணை செயலராக உள்ளார்.

ஒலெஹ் மாக்னிட்ஸ்கி (அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர்), செர்கே கீவ்ட் (கல்வி மந்திரி), ஆண்ட்ரி மாக்ன்யெக் (சுற்றுச்சூழல் மந்திரி) மற்றும் ஈகோர் ஸ்வார்கோ (விவசாயத்துறை மந்திரி) ஆகியோரைப் போன்று, துணை பிரதம மந்திரி ஒலெக்சாண்டர் செச்சும் ஸ்வோபோடாவின் மற்றொரு முன்னணி நபராவார்.

டிமிட்ரோ புலாடோவ் (இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி) மற்றும் "சமூக ஆர்வ" இதழாளர் டெட்யானா செர்னோவொல் ஆகியோர் UNA-UNSO உடன் இணைந்த ஏனைய நபர்கள் என செய்திகள் குறிப்பிடுகின்றன. டெட்யானா செர்னோவொல் அரசின் ஊழல்-ஒழிப்பு குழுவின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஸ்வோபோடா மற்றும் UNA-UNSOஇன் வீரபிரதாபியும், உக்ரேனிய கிளர்ச்சி இராணுவத்தின் (OUN) தலைவருமான ஸ்டீபன் பாண்டெரா  நாஜி ஒத்துழைப்பாளருமாவார். யூத மக்கள் மீதான கொடூரமான படுகொலைகளில் OUN அப்போது நாஜிக்களுக்கு உதவியது.

2010இல், ஸ்வோபோடாவின் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் மன்றம் பின்வரும் ஒரு அறிக்கையை பிரசுரித்தது: “கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ஓர் உண்மையான உக்ரேனிய உக்ரேனை உருவாக்க... நாம் நாடாளுமன்றவாதத்தை இரத்து செய்ய வேண்டும், அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும், முழு தொழில்துறையையும்  ஊடகங்களையும் தேசியமயமாக்க வேண்டும், ரஷ்யாவில் இருந்து உக்ரேனுக்கு எந்தவொரு இலக்கிய படைப்புகளையும் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்... பொதுப்பணித்துறை சேவை, கல்வி மேலாண்மை, இராணுவம் (முக்கியமாக கிழக்கில்) ஆகியவற்றின் தலைவர்களை முற்றாக மாற்ற வேண்டும், ரஷ்ய மொழி பேசும் அனைத்து புத்திஜீவிகள் மற்றும் உக்ரேனிய வெறுப்பாளர்கள் (Ukrainophobes) அனைவரையும் உடல்ரீதியாக ஒழித்துக் கட்ட வேண்டும் (விரைவாக, ஒரு விசாரணையின்றி சுடவேண்டும். உக்ரேனிய வெறுப்பாளர்களை [Ukrainophobes] பதிவு செய்தல் ஸ்வோபோடாவின் எவரொரு அங்கத்தவராலும் செய்யப்படமுடியும்), உக்ரேனிய-விரோத அரசியல் கட்சிகளின் அனைத்து அங்கத்தவர்களையும் தூக்கிலிட வேண்டும்....” என்று குறிப்பிட்டது.

ரஷ்ய மொழி பேசும் சிறுபான்மையினரின் உரிமைகளை அழிப்பதே புதிய அரசாங்கத்தின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. “பாசிச குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவதைத்" தடுக்கும் சட்டங்களை நீக்கும் நகர்வுகளும் கூட முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்திய நாட்களில், யூதர்கள், ரஷ்ய பாரம்பரிய கிறிஸ்துவர்கள் மற்றும் சட்டத்துறை பிரபலங்களைத் தாக்குவதில் Right Sector பிரதிநிதிகள் மும்முரமாக உள்ளனர். ஒரு Right Sector தலைவரான அலெஸ்சாண்டர் முஜிச்கோ (இவர், “தனது நரம்புகளில் இரத்தம் ஓடும் வரையில் கம்யூனிஸ்டுகள், யூதர்கள் மற்றும் ரஷ்யர்களோடு" சண்டையிடுவதே அவரது இலட்சியமென விவரித்தார்) ரோவ்னொவில் அப்பிராந்திய வழக்கறிஞர் ஒருவரை உடல்ரீதியாக தாக்குவதையும் மற்றும் அவர் அவரது துப்பாக்கியை (Kalashnikov) காட்டி, "எனது எந்திர துப்பாக்கியை யார் எடுக்க விரும்புகிறீர்கள்? எனது துப்பாக்கியை யார் எடுக்க விரும்புகிறீர்கள்? எனது கத்திகளை யார் எடுக்க விரும்புகிறீர்கள்? நான் உங்களுக்கு சவால் விடுக்கிறேன்!” என்று கூவியதோடு, அவர் ரோவ்னொ பிராந்திய நாடாளுமன்ற அங்கத்தவர்களை துப்பாக்கிமுனையில் ஒரு கூட்டத்தை நடத்த நிர்பந்திப்பதையும் இரண்டு யூ-டியூப் ஒளிப்பதிவுகள் காட்டுகின்றன.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு, அவற்றின் ஊடக சேவகர்களோடு சேர்ந்து, இத்தகைய உண்மைகள் மிக நன்றாக தெரியும்.

அதிதீவிர வலதை ஏறத்தாழ இரவோடு இரவாக எழுச்சி பெற்றுள்ள ஒரு மிகச் சிறிய சிறுபான்மையினராக சித்தரிக்கும் அவர்களின் முயற்சிகளும் அதேயளவிற்கு மோசடியாகும். அங்கே உள்ள பல அறிவுசார் ஆவணங்கள், பல தசாப்தங்களுக்கு முன்பிருந்து உக்ரேனில் அதிதீவிர வலதின் பாத்திரத்தை மற்றும் முக்கியத்துவத்தை விவரிக்கின்றன. சோவியத் ஒன்றிய கலைப்பு மற்றும் முதலாளித்துவ மீட்சியை அடுத்து, மீண்டும் அவை எவ்வாறு முதன்முதலில் தலை தூக்கின என்பதை, தீவிர வலது எவ்வாறு செல்வாக்கு பெற்றன என்பதை, பல ஆண்டுகளாக வழிவழியாக அது சித்தாந்தரீதியாக எவ்வாறு தயாரிப்பு செய்திருந்தது என்பதை அந்த ஆவணங்கள் சித்தரிக்கின்றன. இந்த தீவிர வலதின் எழுச்சி குறிப்பிடத்தக்க விதத்தில் மேற்கினால் ஒத்து ஊதப்பட்ட 2004 “ஆரெஞ்ச் புரட்சிக்குப்" பின்னர் தீவிரமடைந்தது.

(சமகாலத்திய உக்ரேனில் ஒழுங்கமைக்கப்பட்ட யூத-விரோதம்: கட்டமைப்பு, செல்வாக்கு மற்றும் சித்தாந்தம், 2006 என்ற நூலில்) பெர் ஆண்டர்ஸ் ரூட்லிங், 1989இல் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு தனியார் பல்கலைக்கழகமான பிராந்தியம் தழுவிய மனிதவள பயிலகம் (MAUP) வகித்த முக்கிய பாத்திரத்தை மேற்கோளிடுகிறார். அது "உக்ரேனிய சமூகத்தின் மிகவும் மேல்மட்டத்தை எட்டுகின்ற ஒரு மிகவும் சிறப்பாக இணைக்கப்பட்ட அரசியல் வலையமைப்பாக செயல்படுகின்றது,” என்கிறார்.

2008இல், அமெரிக்க அரசுத்துறை MAUP'"கிழக்கு ஐரோப்பாவில் மிகவும் உறுதியான யூத-விரோத பயிலகங்களில் ஒன்றாக" பட்டியலிட்டது. உக்ரேனில் வேறெந்த பல்கலைக்கழகங்களையும் விட MAUP பல அரசு அதிகாரிகளை, இராஜாங்கத்துறையினரை மற்றும் நிர்வாகிகளை பயிற்றுவித்துள்ளது" என ரூட்லிங் குறிப்பிடுகிறார்.

MAUPஇன் சிறப்புத்தன்மை என்னவென்றால், போல்ஷ்விசம் மற்றும் அக்டோபர் புரட்சியை "சர்வதேச யூதர்களின்" உருவாக்கமாக கல்விசார் ஆய்வுகளில் சித்தரித்து, அதிதீவிர வலது பிரச்சாரத்தைப் பரப்புவதே ஆகும். இதன் அடிப்படையில், உக்ரேனிய மக்களுக்கு எதிராக ஸ்ராலினிச சர்வாதிகாரத்தின் குற்றங்கள் அதே "யூத சூழ்ச்சியின்" பாகமாக இருந்தன என்று அது வலியுறுத்துகிறது.

ஜூன் 2005இல், MAUPஆல் ஏற்பாடு செய்யப்பட்ட நான்காவது உலகந்தழுவிய மாநாட்டில் பங்கு பெற்றவர்களில் Ku Klux Klanஇன் முன்னாள் தலைவர் டேவிட் டியூக், மற்றும் அதிதீவிர தேசியவாதியும் கனடாவிற்கான முன்னாள் உக்ரேனிய தூதருமான லெவ்கோ லூகியானென்கோவும் உள்ளடங்குவர்.

லூகியானென்கோ சமர்ப்பித்த ஓர் ஆய்வறிக்கை, மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் இறந்த 1932-33 பஞ்சம், யூதர்களால் நடத்தப்பட்ட ஒரு சாத்தானின் அரசாங்கத்தின் வேலையாகும் என்று வாதிட்டது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், உக்ரேனில் இருந்து அனைத்து யூதர்களும் வெளியேற்றப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தனர்.

அந்த சமயத்தில், லூகியானென்கோ ஆரெஞ்ச் புரட்சியின் இரண்டு முன்னணி பிரபலங்களான விக்டொர் யுஷ்சென்கோ மற்றும் யூலியா திமோஷென்கோ உடன் கூட்டு சேர்ந்திருந்தார். பதவியில் இருந்த ரஷ்ய ஆதரவு விக்டொர் யானுகோவிச்சிற்கு எதிராக உக்ரேனிய ஜனாதிபதியின் பதவியைப் எடுத்துக்கொள்ளும் ஒரு பிரச்சாரத்தின் பாகமாக வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகளால் அந்த இருவரும் ஆதரிக்கப்பட்டனர்.

ஜனவரி 2005இல், யானுகோவிச்சின் ஜனாதிபதி பதவியை யுஷ்சென்கோ பிடித்தார். அப்போது அவர் MAUP இயக்குனர்கள் குழுவில் ஒருவராக இருந்தார். திமோஷென்கோவின் தேர்தல் அணியில் லூகியானென்கோ பங்கு வகித்தார். ஜூன் 2005 MAUP மாநாட்டிற்கு சில வாரங்களுக்கு முன்னர் தான், யுஷ்சென்கோ லூகியானென்கோவை "உக்ரேனின் கதாநாயகனாக" மாற்றினார்.

“1917இன் யூத-போல்ஷ்விக் புரட்சிஉக்ரேனின் சிவப்பு பயங்கரவாதம் மற்றும் பட்டிணியின் மூலக்காரணம்" என்ற தலைப்பில், 2005இன் இறுதியில், MAUP ஒரு மாநாட்டை நடத்தியது. ரூட்லிங் ஒரு நல்ல காரணத்தைக் குறிப்பிட்டிருந்தார், “ஆரெஞ்ச் புரட்சியை அடுத்து, ஒழுங்கமைக்கப்பட்ட யூத-விரோதம் உக்ரேனில் ஒரு கணிசமான வளர்ச்சியைக் கண்டது,” என்றார்.

அந்த ஆண்டின் ஜூலையில் பாசிச பிற்போக்கின் துர்நாற்றம் மிகவும் பாரியளவில் இருந்தது. ஆரெஞ்ச் தலைவர்கள் தங்களைத்தாங்களே MAUPஇன் "வெளிநாட்டவருக்கு எதிரான நிலைப்பாட்டை" (xenophobic stance) விலக்கிக் கொள்ள வேண்டுமென அவர்களுக்கு முன்னணி உக்ரேனிய கல்வியாளர்கள் ஒரு முறையீட்டை அனுப்பினர். “யாருடைய செலவில் இத்தகைய பெரியளவிலான யூத-எதிர்ப்பு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன? என்பதை நாங்கள் உயர்மட்ட அரசு அதிகாரிகளிடம் கேட்க விரும்புகிறோம்", “நம்முடைய பிராந்தியத்திற்குள் வெளிநாட்டு இன-அரசியல் மோதல்களைக் கொண்டு வர விரும்பும்  ஒரு "ஐந்தாம் படை" (fifth column ) நம்மிடம் இல்லையா?” என்று அந்த முறையீடு கேள்வி எழுப்பியது.

உக்ரேனின் மூலவளங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெற செல்வந்த மேற்தட்டுக்கள் அழுத்தம் அளித்து வருகின்ற நிலையிலும் மற்றும் ரஷ்யாவை தனிமைப்படுத்தி இறுதியாக காலனித்துவமாக்க உக்ரேன் மீது மேலாதிக்கம் செலுத்தும் அவற்றின் திட்டங்களோடு ஏகாதிபத்திய சக்திகள் முன்னோக்கி அழுத்தம்கொடுத்து வருகின்ற நிலையில், இந்த ஐந்தாம் படையின் இலக்கு சித்தாந்த சூழ்நிலையை பிற்போக்குவாதத்துடன் நச்சூட்டுவதாக இருந்தது.

உக்ரேனில் ஏகாதிபத்திய சக்திகள் யாருக்கு உதவி வருகின்றனவோ மற்றும் துணைபோகின்றனவோ அந்த பிற்போக்குத்தனமான சக்திகளின் உண்மையான கடந்தகாலம் இதுவாக உள்ளது. அந்த பிற்போக்குத்தனமான சக்திகளின் சார்பில் அவை ஐரோப்பாவை, உண்மையில், ஒட்டுமொத்த உலகையும், ஒரு மூன்றாம் உலக யுத்தத்திற்குள் மூழ்கடிக்க தயாரிப்பு செய்து வருகின்றன.