World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா US steps up pressure on Russia amid growing risk of war over Ukraine உக்ரேன் மீது போர் என்னும் பெருகும் ஆபத்தின் மத்தியில் அமெரிக்கா ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்கிறது
By Stefan Steinberg வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் உக்ரேன் நெருக்கடி குறித்து ரஷ்யா மீது அழுத்தங்களை முடுக்கிவிடுகையில் ஐரோப்பாவில் போர் ஆபத்து மற்றும் பெரிய பொருளாதார அதிர்ச்சிகள் நேற்றும் தொடர்ந்தன. உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான இராணுவ மோதல் தொடர்ந்து பெருகும் தன்மையைக் கொண்டுள்ளது. ஒரு பாசிச தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பில் கடந்த மாதம் கியேவில் ஆட்சிக்கு வந்த மேற்கத்திய ஆதரவு, ரஷ்ய எதிர்ப்பு ஆட்சி, ஒரு சாத்தியமான போரை எதிர்பார்த்து, 1 மில்லியன் இருப்பு இராணுவத்தினருக்கு அணிதிரள்வு உத்தரவுகளை அனுப்பிவைத்துள்ளது. ரஷ்யப் படைகள், கியேவ் ஆட்சிக்கு எதிராக தீபகற்பத்தை கட்டுப்பாட்டில் கொள்வதற்கு உக்ரேனில் ரஷ்ய மொழி பெரும்பாலான மக்களால் பேசப்படும் பகுதியான கிரிமியா மீது தொடர்ந்து படர்கின்றன, இங்கு செவெஸ்டோபோலில் ரஷ்ய கடற்படையின் கருங்கடல் தலைமையகமும் உள்ளது. மாஸ்கோ, கெர்ச் ஜலசந்தி வழியாக கிரிமியாவிற்கு துருப்புக்களை அனுப்புவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. உக்ரேனிய ஆதாரங்கள், கருங்கடல் கடற்படை தளபதி அலெக்சாந்தர் விட்கோ தீபகற்பத்தில் உள்ள உக்ரேனிய படைகள் இன்று காலைக்குள் சரணடைய வேண்டும் இல்லையேல் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கின்றன. ஆனால் ரஷ்ய அரசாங்கம் இந்த அறிக்கையை “அபத்தம்” என உதறித்தள்ளிவிட்டது. உக்ரேனிய நெருக்கடி பற்றி, ஐ.நா. பாதுகாப்புக்குழுவில் விவாதிக்க கூடிய அவசர கூட்டத்தில் பிரதான சக்திகளுக்கு இடையே கடுமையான கருத்துப்பறிமாற்றங்கள் இருந்தன. ரஷ்ய தூதர் விடாலி சுர்க்கின், அகற்றப்பட்ட உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச், “உக்ரேனின் பெரும் குழப்பத்தில் இருந்து மக்களைக் காக்க” ரஷ்யாவை தலையிடுமாறு எழுதிய கடிதத்தை வாசித்தார். உக்ரேனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள், ரஷ்ய எதிர்ப்பு தீவிர பாசிச சக்திகளால் தாக்கப்படும் அச்சத்தில் உள்ளனர் என்றும், அவை மேற்கத்திய ஆதரவு கொண்ட கியேவ் ஆட்சியில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர் என்றும் வலியுறுத்தினார். அமெரிக்க தூதர் சமந்தா பவர், ரஷ்ய வாதங்களை அப்பட்டமாக உதறித்தள்ளி, “ரஷ்ய இராணுவ நடவடிக்கை ஒரு மனித உரிமைகள் பாதுகாப்புப் பணி அல்ல. இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும்” என்று அறிவித்தார். G-7 குழுவின் முக்கிய தொழில்துறை நாடுகளின் தலைவர்கள் கிரிமியாவில் ரஷ்ய நடவடிக்கைகளை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். G-7 தலைவர்கள் “தற்போதைக்கு” சொச்சினில் நடக்கவுள்ள வரவிருக்கும் G-8 (G7 + ரஷ்யா) உச்சிமாநாட்டிற்கான தயாரிப்புக்களை இரத்து செய்துள்ளனர். புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நேற்று கியேவிற்கு பயணித்த அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரி, உக்ரைனில் அதன் பங்கிற்காக, G8 இல் அதன் இடத்தை இழக்கும் ஆபத்தை மாஸ்கோ கொண்டுள்ளது என்று எச்சரித்தார். கெர்ரிக்கு முன்னால் பிரித்தானிய வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக், திங்களன்று கியேவிற்குப் பயணித்திருந்தார். அவர், நிலைமை “21ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மிகப் பெரிய நெருக்கடி என்பது உறுதி” என்றும், கிரிமியாவில் ரஷ்ய நடவடிக்கைகளுக்கு “எந்த நியாயமும் இல்லை” என்றும் கூறினார். உக்ரைனுக்கு செல்வதற்கு முன்பு கெர்ரி நிருபர்களிடம் வெள்ளை மாளிகை ரஷ்யாவிற்கு எதிராக பரந்த பொருளாதாரத் தடைகளை பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். ரஷ்யா “பின்வாங்கவில்லை” என்றால், “இறுதியில் ரஷ்ய வணிகத்தின் சொத்துக்கள் முடக்கப்படல், விசாத் தடைகள், வணிகத் தடை ஆகியவைகூட இருக்கலாம்” என்றார். “அமெரிக்க வணிகம் பின்வாங்கப்படும், ரூபிளின் மதிப்பு சரியும்” என்றும் NBC செய்தியின் “Meet the Press” நிகழ்வில் கெர்ரி அச்சுறுத்தினார். பெயரிட விரும்பாத மூத்த அமெரிக்க அதிகாரி பைனான்சியல் டைம்ஸிடம் கூறினார்: “ரஷ்யர்கள் இங்கே தப்புக் கணக்கு போட்டுள்ளனர். பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்கு உட்படும்.... அமெரிக்கா, G-7 ல் மற்ற நாடுகள், நேட்டோவின் மற்ற நாடுகள், உலகத்தின் பரந்த பிரிவுகள் ஒன்றாகச் செயல்படுகின்றன, ரஷ்யாவை தனிமைப்படுத்துவதை நீங்கள் காணலாம்” என்றார். அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் Jen Psaki, ரஷ்யாவிற்கு எதிரான பரந்த பொருளாதார தடைகள் “வரக்கூடும் சாத்தியம் உள்ளது என்பதில்லை, அநேகமாக வரும்” என்றார். ஐரோப்பா முழுவதும் பங்குச் சந்தைகள், பொருளாதாரத் தடைகள் அல்லது நேரடி மோதலில் இருந்து விளையும் பொருளாதாரச் சீர்குலைவு பற்றிய அச்சத்தால் தீவிரமாகச் சரிந்தன, ஏற்கனவே உலகப் பொருளாதார நெருக்கடியால் அதிர்ச்சியில் உள்ள ஐரோப்பிய பொருளாதாரங்களுக்கு, ரஷ்ய இயற்கை எரிவாயு அளிப்புக்கள் நிறுத்தப்படும் சாத்தியம் இருப்பது என்பதுதான் மிகப் பெரிய கவலை. திங்கள் காலை ரூபிள் 2.9 சதவீத மதிப்பை இழந்து ஒரு டாலருக்கு 36.90 ரூபிள்கள் என ஆயிற்று; ரஷ்ய பங்குச் சந்தைகள் 9.4 சதவீதம் சரிந்தன. ரஷ்ய மத்திய வங்கி அதன் சேமிப்புக்களைக் காக்கும் பொருட்டு உடனே அதன் முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்தியது. பங்குச் சந்தைகளில் மிகப் பெரிய வீழ்ச்சிகளில் ஒன்று பெரும் இயற்கை எரிவாயு நிறுவனம் காஸ்ப்ரோமினால் பதிவு செய்யப்பட்டது; அதன் பங்குகள் 10.7 சதவீதம் சரிந்தன. பல மேற்கத்திய ஐரோப்பிய சந்தைகளும் தீவிரமாக சரிந்தன. ஜேர்மனியின் DAX குறியீடு 3.44% சரிந்தது; பிரான்சின் CAC-40, 2.66% சரிந்தது— இது வங்கி, எரிசக்தி, வாகன தொழில் மற்றும் நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ளது; அவை ரஷ்ய சந்தையில் பெரும் பங்குகளை கொண்டவை, வணிகம் நிறுத்தப்பட்டால் பாதிப்பிற்கு உட்படும். கியேவில் உக்ரேனிய பங்குச் சந்தை 11.6% சரிந்தது, அதன் நாணயம் ஹிர்வ்நியா அமெரிக்க டாலருக்கு எதிராக புதிய குறைவை எட்டியது. உக்ரேன் திவால் விளிம்பில் உள்ளது; அதன் கடனை தவிர்க்க கிட்டத்தட்ட 35 பில்லியன் டாலர்கள் அதற்கு தேவை. இதில் கிட்டத்தட்ட பாதிப் பணம் 15 பில்லியன் டாலர்கள் மேற்கத்திய வங்கிகளுக்கு கொடுக்கப்பட வேண்டும். ஞாயிறன்று, அமெரிக்க திறைசேரி செயலர் Jack Lew, சர்வதேச நாணய நிதியத்தை உதவிக்கு அழைக்குமாறு கியேவுக்கு கூறினார். “அமெரிக்கா அதன் இருதரப்பு, பலதரப்பு பங்காளிகளுடன் சேர்ந்து உக்ரேனுடைய தேவைக்கு அதிக அளவு உதவியை அளிக்கும்” என்றார். ஆனால் IMF உடைய நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட், உக்ரேனுக்கான துல்லியமான நிதிய உதவி குறித்த விவாதத்தை, IMF அதிகாரிகள் உக்ரேனின் கணக்கை மதிப்பாய்வு செய்யும் வரை ஒத்தி வைப்பதாக தெரிவித்தார். இத்தகைய உதவிப் பொதிகள், பணிநீக்கங்கள், ஓய்வூதியங்கள், சமூகநலச்செலவு வெட்டுக்கள் என உக்ரேனிய தொழிலாள வர்க்கத்தின் மீதான ஆழ்ந்த தாக்குதல்களை அடித்தளமாக கொண்டிருக்கும் – இந்த உண்மை மேற்கத்திய ஆதரவு கொண்ட கியேவ் ஆட்சியின் வலதுசாரித் தன்மையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்நிகழ்வுகள் உலக முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் பொறுப்பற்ற கொள்கை குறித்த பெரும் குற்றச்சாட்டாகும். லெஹ்மன் பிரதர்ஸ் சரிவுடன் தொடங்கிய ஒரு உலக நிதிய கரைப்பின் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மற்றும் வாஷிங்டன், பேர்லின் மற்றும் அவற்றின் நட்பு நாடுகள் சிரியா மீது கிட்டத்தட்ட குண்டுபோடுவதில் ரஷ்யாவுடன் மோதலைத் தூண்டிய ஒரு அரை ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் உலக முதலாளித்துவம் போர் மற்றும் நிதியச் சரிவின் விளிம்பில் நிற்கிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பேரழிவுதரும் விளவுகளை உலகம் நேருக்கு நேர் காணத்தொடங்கியுள்ளது; அது ஏகாதிபத்திய சதிகளின், ஆத்திரமூட்டுதல்களின் மற்றும் ஏகாதிபத்தியத்தின் கைக்கருவிகளாக செயல்படுகின்ற தீவிர வலதுசாரி சக்திகளின் எழுச்சியால் பாதிக்கப்படக்கூடிய நிலைக்கு இப்பிராந்தியத்தை தள்ளியுள்ளது. முதலாளித்துவ மீட்பின் விளைவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பை தொடர்ந்து அரச சொத்தை திருடி தங்களை வளப்படுத்திக்கொண்ட தன்னலக்குழுக்களின் கருவியான புட்டினின் ஆட்சி, அமெரிக்கா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஆத்திரமூட்டல்களுக்கு ஒரு முற்போக்கான பதிலை கொடுப்பதற்கு திறனற்று உள்ளது. ரஷ்ய தேசியவாதத்தை தூண்டியுள்ளதுடன் இணைந்து இராணுவ நடவடிக்கைக்கு அவர் திரும்பியுள்ளது, கியேவில் பாசிச ஆதரவு கொண்ட உக்ரேனிய தேசியாத பிற்போக்குத்தனத்தை ஒத்ததாகவே உள்ளது; குறுங்குழுவாத மோதல் வெடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, 1990களில் யூகோஸ்லாவிய உடைவை தூண்டிய ஏகாதிபத்திய நிகழ்வுகளை தொடர்ந்த இரத்தக் களரியை அற்பமானதாக்கிவிடும். தேவைப்படுவது என்னவெனில், ஏகாதிபத்தியம் மற்றும் உக்ரேனிய மற்றும் ரஷ்ய ஆளும் வர்க்கத்திற்கு எதிராக, உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட சுயாதீன இயக்கத்தின் அபிவிருத்தியாகும். உக்ரேன் நெருக்கடி, ஏகாதிபத்திய சக்திகள் தங்களுக்கிடையே கொண்டுள்ள பிளவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது; இவை தந்திரோபாய பிரச்சினைகள் மற்றும் உக்ரேனில் பெரிய IMF பிணை எடுப்பு / அல்லது தலையீடுகள் என இருந்தால், யார் அந்த செலவுகளைச் செய்வது என்ற வினாவையும் கொண்டு வருகிறது. ஜேர்மனிய வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மெயர், ரஷ்யாவை G-8 ல் இருந்து அகற்றும் அமெரிக்க பிரேரணையை எதிர்த்தார்; ஜேர்மனிய தொலைக்காட்சியில் அவர் கூறியது: “G-8 குழு ஒன்றில்தான் மேற்கத்தைய அரசுகள் நேரடியாக ரஷ்யாவுடன் பேசுகின்றன; எனவே இந்த ஒரே குழுவையும் நாம் உண்மையில் தியாகம் செய்ய வேண்டுமா?” ஜேர்மனிய சான்ஸ்லர் மேர்க்கெல் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் வார இறுதியில் நடத்திய தொலைபேசி உரையாடல், கெர்ரி வெளியிட்ட அச்சுறுத்தல்களைவிட சமரச ஒலிக்குறிப்பைக் கொண்டிருந்தது. கிரெம்ளின் அறிக்கையின்படி, “புட்டினும் மேர்க்கெலும் உக்ரேனில் உள்ள சமூக அரசியல் நிலைமையை சீராக்க உதவும் நோக்கத்துடன், இருதரப்பு ஆலோசனைகளை (அவர்கள் வெளியுறவு அமைச்சரகத்தின் மூலம்) தொடர்வது மற்றும் பலதரப்பு ஆலோசனைகளையும் தொடர்வதென ஒப்புக் கொண்டனர்.” ஜேர்மனி, மாஸ்கோவுடன் விரிவான வர்த்தக உறவுகளை கொண்டுள்ளது; அதன் இயற்கை எரிவாயு தேவைகளில் 40 சதவீதமும் மற்றும் அதன் கச்சா எண்ணெயில் 33 சதவீதமும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ரஷ்யாவுடனான ஒரு முழு அளவிலான மோதல் என்பது, ரஷ்யாவில், பேர்லினின் பரந்த நலன்களை அச்சுறுத்தும் என்பது மட்டும் இல்லாமல், கிழக்கு ஐரோப்பா முழுவதும் அதன் வணிக நடவடிக்கைகளையும் பாதிக்க செய்யும். ஆயினும்கூட, பேர்லினும் பிற ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களும் ஒற்றுமையாக உக்ரேனில் பாசிசத் தலைமையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பை பாராட்டியுள்ன; யானுகோவிச், புட்டின் மற்றும் பிற வலதுசாரி கிழக்கு ஐரோப்பிய ஆட்சிகளுடன் உள்ள அதிருப்தியை பயன்படுத்தி, தங்கள் சொந்த ஏகாதிபத்திய நலன்களை உறுதிப்படுத்த விழைக்கின்றன. |
|