World Socialist Web Site www.wsws.org |
The political fraud of International Viewpoint’s statement on Ukraine உக்ரைன் குறித்த இன்டர்நேஷனல் வியூபாயிண்ட்டின் அறிக்கையின் அரசியல் மோசடிBy the International
Committee of the Fourth International முன்னாள் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் (United Secretariat) மிச்ச சொச்சங்களை அடக்கிய போலி-இடது அமைப்புகளின் அறிக்கைகளை வெளியிடுகின்ற ஒரு வலைத் தளமான இன்டர்நேஷனல் வியூபாயிண்ட் (International Viewpoint) மார்ச் 2 அன்று, உக்ரைன் நிகழ்வுகள் குறித்த ஒரு ஏகாதிபத்திய-ஆதரவு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிக்கை “நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த” ஒன்று என அது கூறியது. இந்த அறிக்கையுடன் அனைத்துலகக் குழுவை தொடர்புபடுத்துவதென்பது, நவ-பப்லோவாத அமைப்புகளின் வலது-சாரி அரசியலுடன் ட்ரொட்ஸ்கிசத்தை தொடர்புபடுத்துவதன் மூலமாக அதனை மதிப்பிழக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்ட அரசியல் ஆத்திரமூட்டலாகும். ஏகாதிபத்திய உளவு வட்டாரங்களில் “மோசடி அடையாள” (false flag) நடவடிக்கை என்று அறியப்படுவதன் உதாரணமாக இது இருக்கிறது. சோசலிச அரசியலுக்கும் அத்துடன் ICFI பரிந்துரைக்கும் ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத ஒரு அரசியல் நிலைப்பாட்டையே இந்த அறிக்கை முன்வைக்கிறது. இந்தப் பிற்போக்குத்தனமான அறிக்கை, அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் மத்திய உளவு முகமை நடத்துகின்ற ஆட்சி-மாற்ற நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் பெறுகின்ற நோக்கத்துடனான சிடுமூஞ்சித்தன மற்றும் ஏமாற்று வாதங்களைப் பயன்படுத்துகிறது. ICFI உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடுகிறது. WSWS வாசகர்களும் அரசியல் வழிகாட்டலுக்காய் ICFI ஐ எதிர்நோக்குபவர்களும் விழிப்பாக இருக்க நாங்கள் எச்சரிக்கை அளிக்கிறோம்: உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்படாமலும் பிரசுரிக்கப்படாமலும் அனைத்துலகக் குழு எழுதியதாகக் கூறப்படும் எந்த அறிக்கையும் அரசியல் இட்டுக்கட்டலாகவே கருதப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் வரலாறு நன்கறிந்தது, முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டது. 1953 நவம்பரில் அப்போது மிஷேல் பப்லோவும் ஏர்னெஸ்ட் மண்டேலும் தலைமை வகித்த திருத்தல்வாத சர்வதேசச் செயலகத்துடன் (International Secretariat) முறிவு கொண்டதன் விளைவாகவே ICFI உருவாக்கப்பட்டது. பத்து வருடங்களுக்குப் பின்னர் பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் (International Secretariat) தொடர்புபட்டிருந்த அமைப்புகள் எல்லாம் தம்மை ஐக்கிய செயலகம் (United Secretariat) என மறு உருவாக்கம் செய்து கொண்டன. பப்லோவாத அமைப்புக்கும் ICFIக்கும் இடையிலான அரசியல் பிளவுகள் தெளிவாக வரையறையானவை என்பதோடு வரலாற்று ஆவணமானதொரு விடயமாகவும் இருக்கின்றன. 2003 தொடங்கி, பப்லோவாத இயக்கத்திற்குள்ளாக எண்ணிலடங்கா அரசியல் பிளவுகளைக் கண்டபின்னர், இன்டர்னேஷனல் வியூபாயிண்ட் (International Viewpoint) எந்த விளக்கமுமில்லாமல் அனைத்துலகக் குழு என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியது. நான்காம் அகிலத்தின் புரட்சிகர சோசலிசக் கோட்பாடுகள் மீது தன்னை அடித்தளம் இட்டிருக்கும் ஒரேயொரு அமைப்பின் பெயரை இவ்வாறு சட்டவிரோதமாக அபகரித்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவதாய், வகைதொகையற்ற பலதசாப்த கால சந்தர்ப்பவாதத்தின் காரணமாக ஐக்கிய செயலகம் (United Secretariat) என்ற பெயர் முழுமையாக மதிப்பிழந்து போயிருந்தது. இதன் நடவடிக்கைகள் பலவும், அரசு-உளவு அமைப்புகளின் துர்நாற்றம் வீசக் கூடிய அளவுக்கு, சோசலிச அரசியலை ஒத்த எதுவொன்றுக்கும் முற்றிலும் அந்நியமானவையாக இருந்தன. இரண்டாவதாக 1998 பிப்ரவரியில் உலக சோசலிச வலைத் தளம் தொடங்கப்பட்டது முதலாக செல்வாக்கு துரிதமாக வளர்ச்சி காண்பதை கண்டிருக்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை மதிப்பிழக்கச் செய்து விட வேண்டும் என்பதில் பப்லோவாத அமைப்பின் தலைவர்கள் பெரும் கவலை கொண்டவர்களாய் இருந்தனர். இத்தகைய சக்திகளைப் பொறுத்தவரை, நடுத்தர வர்க்கத்தின் சந்தர்ப்பவாதம் எங்கு முடியும் போலிஸ் முகவர்களின் நடவடிக்கைகள் எங்கு தொடங்கும் என்பதைக் கண்டுபிடிப்பது என்பது சாத்தியமில்லாதது, ஏனென்றால் இரண்டுமே அத்தனை நெருக்கமாகப் பின்னிப் பிணைந்தவை. இன்னும் சொன்னால், பப்லோவாத இயக்கத்தை அரசியல்ரீதியாக அம்பலப்படுத்திய போது அதற்குள் அரசின் முகவர்கள் ஊடுருவியிருந்ததை ICFI மிகக் கவனமாக ஆவணப்படுத்தியிருந்தது. உக்ரேன் அறிக்கை, கியேவில் நடந்தேறியிருக்கும் ஏகாதிபத்திய ஆதரவு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு அங்கீகாரம் தேடுகின்ற நோக்கம் கொண்டதாகும். “இப்போதைக்கு [உக்ரைன் எதிர்ப்பு இயக்கத்தில் இருக்கக் கூடிய] ஒழுங்கமைந்த பிரதான அரசியல் சக்திகள் வலது மற்றும் அதிவலதில் இருந்து வந்தவையாக இருக்கின்றன” என்பதை ஒப்புக்கொள்ளும் அந்த அறிக்கை ”அந்த இயக்கத்திற்குள்ளாக ஒரு இடது எதிர்ப்பணியை கட்ட முயலுகின்ற சமூக மற்றும் அரசியல் சக்திகளை நாம் ஆதரிக்கிறோம்” என்று அறிவிக்கிறது. புதிய ஆட்சிக்கு “ஜனநாயக, தேசிய மற்றும் சமூகப் பிரச்சினைகளில் எந்த முற்போக்கான வேலைத்திட்டமும் இல்லை, அத்துடன் ஒரு தொழிலாளர்’ இயக்கமும் அதில் இல்லை” என்பதை அறிக்கை ஒப்புக் கொள்கிறது. ஆனால் பாசிஸ்டுகள் மேலோங்கியிருக்கும் இதே இயக்கத்திற்குத் தான் இந்த அறிக்கையின் உருவாக்குநர்கள் தமது ஆதரவை அறிவிப்பதோடு அதற்குள் பங்குபற்றி வேலை செய்யவும் ஆலோசனையளிக்கின்றார்கள். இன்டர்னேஷனல் வியூபாயிண்டின் அரசியல் நிலைப்பாடு மற்றும் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளுக்கும், ட்ரொட்ஸ்கிசம், நான்காம் அகிலம் அல்லது சோசலிசத்துக்கும் இடையே எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. அனைத்துலகக் குழு என்ற பெயரை அது மோசடியாகப் பயன்படுத்துவதென்பது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் சர்வதேச சோசலிசத்துக்கு எதிராகவும் செலுத்தப்படுகின்ற அரசியல் ஆத்திரமூட்டல் ஆகும். |
|