World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The crisis in Ukraine

உக்ரேனிய நெருக்கடி

International Committee of the Fourth International
3 March 2014

Back to screen version

அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் வடிவமைக்கப்பட்ட வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் கிரீமியாவில் ரஷ்யாவின் தலையீடு ஆகியவற்றை தொடர்ந்து உக்ரேனில் வெடித்துள்ள நெருக்கடி, இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் மிகவும் ஆபத்தான சர்வதேச மோதலை உருவாக்கி உள்ளது. 1930களில் இருந்து இதுவரையில் பார்த்திராத விதத்தில், ஏறத்தாழ இரவோடு இரவாக, இறுதி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதோடு, இராணுவ படைகள் ஐரோப்பாவில் பெரும் உஷார்நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை, 20ஆம் நூற்றாண்டின் யுத்தங்கள் மற்றும் புரட்சிகளின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக கூறப்பட்ட அனைத்து வாதங்களும் கடந்த சில நாட்களின் சம்பவங்களால் சுக்குநூறாக தகர்க்கப்பட்டுள்ளன. 20ஆம் நூற்றாண்டு "முற்றுப் பெறாத நூற்றாண்டாகும்." அதன் தீர்க்கப்படாத பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளே தற்போதைய நூற்றாண்டின் வெடிப்பார்ந்த பதட்டங்களின் அடியில் உள்ளன. முதலாம் உலக யுத்தம் வெடித்து ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் மற்றும் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதில் இருந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னர், மனிதகுலம் மீண்டும் உலக யுத்தம் மற்றும் பாசிச ஆபத்துக்களை முகங்கொடுத்துள்ளது.

உக்ரேனில் நெருக்கடி தீவிரமடைந்ததற்கான பிரதான பொறுப்பு அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் மீது தங்கி உள்ளது. அவ்விரு நாடுகளுமே, அவற்றின் ஐரோப்பிய ஒன்றிய கூட்டாளிகளுடன் இணைந்து, ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஊழல் ஆட்சியின் மீதிருந்த மக்கள் அதிருப்தியை தீவிர-வலதுசாரி தேசியவாத மற்றும் பாசிச சக்திகளின் பின்னால் திசைதிருப்ப திட்டமிட்டு தலையீடு செய்தன. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதும் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை சார்ந்த ஓர் ஆட்சியை, ரஷ்யாவை பூகோள-அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தும் மற்றும் சுற்றி வளைக்கும் அவற்றின் நன்கு அபிவிருத்தி செய்யப்பட்ட திட்டங்களில் பங்களிக்க விருப்பமுடைய ஓர் ஆட்சியை நிறுவுவதுமே அவற்றின் முழு நோக்கமாக இருந்தது.

ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்கெல் வலதுசாரி எதிர்ப்புக்குழு தலைவர்களை சந்தித்தார். அவரது கட்சி, கிறிஸ்துவ ஜனநாயக யூனியன், முன்னாள் குத்துச்சண்டை வீரர் விடாலி கிளிட்ஷ்கோவின் உதார் (Udar) கட்சிக்கு நிதியுதவி அளித்து ஆதரித்தது. ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட அதிகாரிகள் ஸ்வோபோடா கட்சி பாசிசவாதிகளோடு மற்றும் ஆயுதமேந்திய Right Sector கும்பல்களோடு கியேவின் மத்திய சதுக்கத்தில் அணிவகுத்து சென்றனர்.

ஐரோப்பா மற்றும் ஆசியாவிற்கான அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செயலர் விக்டோரியா நூலாந்து, கீவ்விற்கு குறைந்தபட்சம் நான்குமுறை விஜயம் செய்தார். அவர் நவ-பாசிசவாத "போராட்டக்காரர்களோடு" இணைந்திருந்ததோடு, எதிர்ப்புக்குழு பிரபலங்களான கிளிட்ஷ்கோ, அர்செனி யாட்சென்யுக் மற்றும் இழிபெயர்பெற்ற யூத-விரோத ஸ்வோபோடா தலைவர் ஓலெஹ் தியாஹ்ன்பொக் ஆகியோரையும் சந்தித்தார். அந்நாட்டில் அமெரிக்க கைப்பாவை சக்திகளை உருவாக்க 1990களில் இருந்து அமெரிக்கா உக்ரேனுக்குள் 5 பில்லியன் டாலரைப் பாய்ச்சி இருந்தது என்பதையும் அந்த பெண்மணி டிசம்பரில் ஒப்புக் கொண்டார்.

உக்ரேனிய தூதர் ஜியோஃபெரி பியாட் உடனான நூலாந்தின் வெளியில் கசிந்த தொலைபேசி உரையாடலில், அவர்கள் யானுகோவிச்சை கவிழ்த்த பின்னர் யாட்சென்யுக்கை பதவியிலிருத்துவது குறித்து விவாதித்திருந்தனர். அது வாஷிங்டன் எந்தளவிற்கு அந்நாட்டின் சம்பவங்களில் சூழ்ச்சி செய்து வந்ததென்பதை அம்பலப்படுத்தியது.

கேள்விக்கு இடமில்லாத வகையில் பிழைத்திருப்பதற்கான ஓர் அச்சுறுத்தலை ரஷ்யா எதிர்கொண்டுள்ளது. விஸ்தரிக்கப்பட்டு வரும் மாஸ்கோவ் விரோத கூட்டணிக்குள் உக்ரேன் இணைவதென்பது, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் ஸ்திரப்பாட்டைக் குலைப்பது போன்ற மிக கடுமையான பாதிப்புகள் ரஷ்யாவிற்கு ஏற்படக்கூடும். அடுத்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் ரஷ்யாவின் சுற்றுவட்டத்தில் மட்டும் கட்டவிழாது, மாறாக அதன் எல்லைக்குள்ளேயே நடக்கும். ஊக்குவிப்பதற்கும், நிதியுதவிகள் மற்றும் ஆயுத உதவிகள் வழங்குவதற்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு "மனித உரிமைகளின்" மீது புதிய காரணங்களைக் கண்டறிவதில் எந்த சிரமமும் இருக்காது.

எவ்வாறிருந்த போதினும், ரஷ்யா எதிர்கொண்டுள்ள ஆபத்துக்களைஅவை அதன் உடைவை மற்றும் அரை-காலனித்துவ அந்தஸ்திற்கு அதைத் தாழ்த்தும் அளவிற்கு அச்சுறுத்துகின்ற நிலையில்புட்டினின் ஆட்சி இராணுவ பலத்தில் தங்கியிருப்பதன் மூலமாக கடந்து வருவதென்பது ஒருபுறம் இருக்க, அதை குறைத்துவிடவும் முடியாது. புட்டினின் நடவடிக்கைகளுக்கு எந்தவொரு ஆதரவும் அளிக்க முடியாது. அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு அவர் காட்டும் விடையிறுப்பில் எந்தவொரு முற்போக்கான உள்ளடக்கமும் கிடையாது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர் அரசு தொழில்துறையைச் சூறையாடி தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொண்ட செல்வந்த மேற்தட்டுக்களை புட்டின் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரது ஆட்சி உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்கோ அல்லது அந்நாட்டிற்குள்ளே உள்ள முற்போக்கான உணர்வுகளுக்கோ எந்தவொரு முறையீடும் செய்ய இலாயகற்று உள்ளது. அதற்கு மாறாக, உக்ரேனிய பாசிசவாதிகள் மற்றும் அவற்றின் அமெரிக்க மற்றும் ஜேர்மன் ஆதரவாளர்களால் தூண்டிவிடப்பட்ட உள்நாட்டு மற்றும் பிரிவினைவாத யுத்த அபாயங்களுக்கு மேலும் வலுச்சேர்க்கும் விதத்தில், அவர் ரஷ்யாவிலும் மற்றும் கிழக்கு உக்ரேனிலும் பேரினவாதத்தை தூண்டிவிட முனைந்துள்ளார்.

அந்த நெருக்கடி குறித்து வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி போன்ற அமெரிக்க செய்தி தொடர்பாளர்களின் அறிக்கைகளில் போலித்தனம் மற்றும் வஞ்சகத்தின் வாடை வீசுகிறது. ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்உக்ரேனிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறியதற்காக" மற்றும் "உக்ரேனில் மற்றும் பரவலாக அப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தல்" ஏற்படுத்தி இருப்பதற்காக, வாரயிறுதியில், கெர்ரி ரஷ்யாவிற்குக் கண்டனம் தெரிவித்தார்.

பேரழிவுகரமான ஈராக்கிய ஆயுதங்கள் குறித்த பொய்களின் அடிப்படையில் ஈராக் மீது ஆக்கிரமிப்பு நடத்த ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷிற்கு ஒப்புதல் வழங்க 2002இல் வாக்களித்த அதே கெர்ரி அறிவித்தார், “முற்றிலுமாக ஜோடிக்கப்பட்ட [ஒரு] போலிக்காரணத்தைக் கொண்டு மற்றொரு நாட்டில் தாக்குதல் நடத்தியதன் மூலமாக நீங்கள் 21ஆம் நூற்றாண்டிற்குரிய விதத்தில் அல்லாமல், 19ஆம் நூற்றாண்டு பாணியில் நடந்து கொண்டிருக்கிறீர்கள்," என்றார். இத்தகைய அறிக்கைகளுக்கு "முதன்மை" ஊடகங்களிடமிருந்து எந்த கேள்வியும் வரவில்லை என்ற உண்மையானது, பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவ எந்திரத்தோடு முற்றிலுமாக ஒருங்கிணைந்துள்ளன என்பதை மற்றும் அவை அரச பிராச்சார பீரங்கிகளாக பாத்திரம் வகிக்கின்றன என்பதை அடிக்கோடிடுகிறது.

ஆனால் வாஷிங்டனின் கடந்தகால நடவடிக்கைகள் அதனைஅதுவே வெளிப்படுத்திக் காட்டுகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் மட்டும், பனாமா, கிரனாடா, சோமாலியா, ஹைட்டி, சூடான், சேர்பியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், யேமன் மற்றும் லிபியாவில் அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்துள்ளது அல்லது குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது அல்லது அரசாங்கங்களை தூக்கி வீசி உள்ளது. அது ஈரானுக்கு எதிராக படுகொலைகள் மற்றும் இணையவழி தாக்குதல்களை நடத்தி உள்ளதோடு, சிரிய அரசாங்கத்தை தூக்கியெறிய பாரியளவில் தலையீடு செய்து வருகிறது.

அமெரிக்கா எந்தவொரு நாட்டின் இறையாண்மை உரிமையையோ அல்லது பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான உரிமையையோ ஏற்பதில்லை. உலகில் எங்கேனும் ஒரு நாடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூறையாடும் நலன்களுக்கு எதிராக திரும்புகிறதென்றால், அந்நாடு தாக்குதலுக்கு அல்லது ஆட்சி மாற்றத்திற்கு இலக்கில் வைக்கப்படுகிறது.

கியேவில் மற்றும் மேற்கத்திய உக்ரேனில் பாசிச மேலாதிக்கம் கொண்ட எதிப்பு இயக்கத்தில், சிறிதளவில் கூட ஜனநாயக உள்ளடக்கம் கிடையாது. அந்த எதிப்புக்களில் மேலாதிக்கம் செலுத்தி வரும் அதிதீவிர தேசியவாத சக்திகள், இரண்டாம் உலக யுத்தத்தில் மில்லியன் கணக்கான உக்ரேனியர்களைப் படுகொலை செய்த நாஜி ஆக்ரமிப்பாளர்களோடு தங்களைத்தாங்களே கூட்டு சேர்த்துக் கொண்ட உக்ரேனிய பாசிசவாதிகளுக்குப் பின்னால் தங்களின் அரசியல் வழித்தடத்தைப் பின்தொடர்கின்றன. ஸ்வோபோடா மற்றும் வலது பிரிவுக்கு (Right Sector) முன்பிருந்தவை அந்நாட்டின் யூத மக்களை நிர்மூலமாக்குவதில் உதவி புரிந்தவையாகும். புதிய வலதுசாரி அரசாங்கத்தை நிறுவியதில் இருந்து, கியேவில் யூதர்கள் மீதான பாசிச தாக்குதல்கள் குறித்த செய்திகள் அதிகரித்திருக்கின்றன.

ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவ மற்றும் உக்ரேன் மீது துல்லியமான கட்டுப்பாட்டைப் பெற இத்தகைய சக்திகளைப் பயன்படுத்துவதில், வாஷிங்டனும் பேர்லினும் பல்வேறு இன மற்றும் மத குழுக்களுக்கு இடையிலான வெடிப்பார்ந்த பதட்டங்களைத் தூண்டி வருகின்றன. இந்த நடவடிக்கை, இதே போன்று அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் ஆதரவோடு தூண்டிவிடப்பட்ட, 1990களில் யூகோஸ்லாவியாவின் உடைவை உள்ளடக்கி இருந்த இரத்தக்குளியலைக் கூட மிகச் சிறியதாக மாற்றிவிடும் அளவிற்கு அச்சுறுத்துகின்றது.

குறிப்பாக ஜேர்மனியின் பாத்திரம் மிக அச்சுறுத்தலாக உள்ளது. உக்ரேனுக்குள் புதுப்பிக்கப்பட்ட உந்துதலோடு, அது முதலாம் உலக யுத்தம் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்த ஜேர்மன் ஏகாதிபத்திய மரபிற்கு புத்துயிரூட்டி வருகிறது. அவ்விரு யுத்தங்களுமே உக்ரேனுக்குள் ஜேர்மன் துருப்புகளின் ஆக்கிரமிப்பை மற்றும் பாரிய அட்டூழியங்களைக் கண்டன. உக்ரேனுக்குள் அதன் தலையீடானது, ஜேர்மன் இராணுவவாதத்திற்கு புத்துயிரூட்ட வேண்டுமென்று பகிரங்கமாக அழைப்புவிடுத்துள்ள ஜேர்மன் அதிகாரிகளின் மற்றும் ஹிட்லர் மற்றும் நாஜிகளுக்கு வாக்காலத்து வாங்கும் முன்னணி கல்வியாளர்களின் அறிவிப்புகளோடு பொருந்தி நிற்கிறது.

உக்ரேனில் அமெரிக்க-ஜேர்மனின் ஆட்சி மாற்ற நடவடிக்கையானது, சோவியத் ஒன்றிய உடைவிற்கு பின்னர் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள முன்னாள் சோவியத் குடியரசுகளை, நேட்டோ போன்ற அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கம் பெற்ற இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் வடிவமைப்புகளுக்குள் ஒருங்கிணைப்பதற்காக தொடர்ந்து நடந்துவரும் பரந்த உந்துதலின் பாகமாக உள்ளது. இதில் ஜோர்ஜியா மற்றும் உக்ரேனில் மேற்கத்திய தரப்பால் ஒத்து ஊதப்பட்ட "நிற புரட்சிகளும்" உள்ளடங்கும்.

உக்ரேனில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு இந்த பிரச்சாரத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். உக்ரேன் மீது அமெரிக்காவின் துல்லியமான கட்டுப்பாடு, அமெரிக்கா அல்லது அமெரிக்காவோடு இணைந்த துருப்புகளை ரஷ்யாவின் மேற்கத்திய எல்லையில் நேரடியாக நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறை திறந்துவிடுகிறது. அது கிழக்கு மத்தியதரைக் கடல், பால்கன்கள் மற்றும் மத்திய கிழக்கிற்கான மாஸ்கோவின் ஒரே கடல்வழி பாதையாக உள்ள கிரீமியாவில் ரஷ்யாவின் கருங்கடல் கடல்படையை அச்சுறுத்துகிறது. மேலும் அது ஜோர்ஜியாவை நேட்டோவிற்குள் தள்ளுவதற்கும் பயன்படுத்தப்படலாம் என்பதோடு ரஷ்யாவிற்குள் உள்ள பல்வேறு இன மற்றும் மத சிறுபான்மையினரின் பிரிவினைவாத மற்றும் சுயாட்சிகோரும் கிளர்ச்சிகளுக்கு எரியூட்டவும் பயன்படுத்தப்படலாம்.

இது கிரீமியாவிற்குள் ரஷ்யாவின் தலையீடு அரசியல்ரீதியில் திவாலானது என்ற உண்மையை மாற்றிவிடாது. புட்டின் ஆட்சி முதலாளித்துவ மீட்சியின் ஓர் அங்கமாக உள்ளது மற்றும் 1917 அக்டோபர் புரட்சியால் ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாளர் அரசின் பொருளாதார மற்றும் சமூக அடித்தளங்கள் ஸ்ராலினிசத்தின் கரங்களில் சிதைந்ததின் மற்றும் தூக்கி வீசப்பட்டதன் விளைபொருளாக உள்ளது. அது ஏகாதிபத்தியத்திடமிருந்து நிஜமான சுதந்திரத்தைப் பெற்றிராத ஒரு தரகு ஆட்சியாக உள்ளது.

அது ரஷ்ய தொழிலாளர் மீது காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளை திணித்தும், அரசியல் அதிருப்திகளை ஒடுக்கியும், மற்றும் உள்நாட்டில் சமூக எதிர்ப்பை திசைதிருப்பும் ஒரு முயற்சியில் ரஷ்ய பேரினவாதத்தை தூண்டிவிட்டும் வருகின்ற சூழ்நிலைகளின் கீழ், உக்ரேனில் அதனால் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அழைப்பை விடுக்க முடியாது.

ரஷ்யாவிற்குள்ளும் மற்றும் சர்வதேச அளவிலும் 1991 சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன் பேரழிவுகரமான விளைவுகளை, உக்ரேனிய சம்பவங்களில் உலகம் கண்டு வருகிறது. இந்த விளைவுகள் சோவியத் தொழிலாள வர்க்கத்திடமிருந்து அரசியல் அதிகாரத்தை பறித்த ஸ்ராலினிச ஆட்சியால் பின்தொடரப்பட்ட தேசியவாத கொள்கைகளின் மற்றும் அக்டோபர் புரட்சி எதை அடித்தளத்தில் கொண்டிருந்ததோ அந்த உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை மறுத்தளித்ததன் உச்சக்கட்ட விளைவாகும்.

1917 புரட்சிக்கு இட்டுச் சென்ற பிரச்சினைகளில் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிரான ரஷ்யாவின் போராட்டமும் ஒன்றாக இருந்தது. ஆனால் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டியதன் மூலமாக மட்டுமே இதை வெற்றிகரமாக போராடி வென்றெடுக்க முடிந்தது. முதலாம் உலக யுத்தத்தில் ஏகாதிபத்திய சூறையாடல்களில் இருந்து ரஷ்யாவை தேசியவாதத்தால் காப்பாற்ற முடியவில்லை என்றால், இன்று அது தூண்டிவிடும் முயற்சிகள் அனைத்தும் மிகவும் பிற்போக்கானதும் மற்றும் இயலாமையானதுமாகும்.

சோவியத் ஒன்றியத்தின் சிதைவு ரஷ்யாவை ஓர் அரை-காலனித்துவ அந்தஸ்திற்கு தாழ்த்துமென்ற ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கையை நினைவுகூர்வது மதிப்புடையதாக இருக்கும். 1930களில், ஸ்ராலினிச ஆட்சி மற்றும் அந்நாட்டில் இருந்த அனைத்து சோசலிச பிரிவுகளுக்கு எதிரான அதன் படுபயங்கர ஆட்சிமுறை நிலைமைகளின் கீழ், ஒரு சுதந்திர சோவியத் உக்ரேன் என்னும் கோசத்தை ட்ரொட்ஸ்கி எழுப்பி, ஒரு முதலாளித்துவ அடித்தளத்தில் சுதந்திரம் பெறுவது மிகவும் பிற்போக்கான தாக்கங்களை மட்டுமே கொண்டிருக்கும் என்று அவர் வலியுறுத்தினார். அனைத்திற்கும் மேலாக ஒரு முதலாளித்துவ உக்ரேன், பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு விளையாட்டு பொருளாக இருக்கும் என்பதை விட வேறொன்றுமாக இருக்க முடியாது என்றார். அந்த வரிகள் அப்போது எவ்வாறு பொருந்தியதோ, இன்றும் அவை அவ்வாறே பொருத்தமாக உள்ளன.

கியேவ் எதிர்ப்புக்களை ஒரு உண்மையான ஜனநாயக இயக்கமாக மற்றும் புரட்சிகர இயக்கமாகவே கூட ஊக்குவித்துள்ள அனைத்துவிதமான தாராளவாத மற்றும் போலி-இடது அரசியல் அமைப்புகள் மற்றும் பிரசுரங்களை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு கண்டனம் செய்கிறது. அவை, அதுவொரு தொழிலாள வர்க்க இயக்கமல்ல என்ற உண்மையை வேண்டுமென்றே மூடி மறைத்துள்ளன. அவை இரண்டாம் உலக யுத்தத்தில் நாஜிகள் மற்றும் யூத இனப்படுகொலைகளுக்கு ஒத்துழைத்த சக்திகளோடு அந்த தலைவர்களுக்கு இருந்த தொடர்புகளை மறைக்க முனைந்துள்ளன.

ரஷ்யாவை துண்டாட மற்றும் பரந்த பிராந்தியங்கள் மற்றும் ஆதார வளங்கள் மீது நேரடியான கட்டுப்பாட்டைப் பெறுவதற்கான ஏகாதிபத்திய திட்டங்களுக்கான விடையை, ரஷ்ய தேசியவாதத்தை ஊக்குவிப்பதில் இருந்து காண முடியாது. அதுமட்டுமின்றி நீண்டகாலமாக துயரை அனுபவித்துவரும் உக்ரேனிய மக்களின் துயரங்களையும் கூட உக்ரேனிய தேசியவாதத்தை ஊக்குவிப்பதன் மூலமாக தீர்க்க முடியாது. உக்ரேனில் வெடித்துள்ள நெருக்கடி, தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அதன் சொந்த நலன்களை உறுதிப்படுத்துவதற்கான அவசியத்தை உடனடியாக முன்னிறுத்துகிறது. அதுபோன்றவொரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக போராடும் ஒரு புரட்சிகர தலைமை இல்லாததே, அமெரிக்கா மற்றும் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்பட்ட, நிதியுதவிகள் பெற்ற பாசிச சக்திகளின் கரங்கள் உயர உதவி உள்ளது.

ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உக்ரேனிய மற்றும் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதே இந்த நெருக்கடிக்கான விடையாக உள்ளது. உக்ரேன் ஒரு சக்தி வாய்ந்த புரட்சிகர வரலாறைக் கொண்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டில், உக்ரேனில் பிறந்த மார்க்சியவாதிகள் தேசியவாத வேலைத்திட்டத்தை நிராகரித்ததோடு, அதற்கு மாறாக சர்வதேசியவாத தொழிலாள வர்க்க வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். அவர்களில் தலைசிறந்தவராக லியோன் ட்ரொட்ஸ்கி இருந்தார்.

உக்ரேன், ரஷ்யா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், சோசலிச புரட்சிக்கான உலகக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவைக் கட்டியெழுப்புவதன் மூலமாக இத்தகைய தலைச்சிறந்த பாரம்பரியங்களுக்கு திரும்ப வேண்டும்.