தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா Ukraine alleges Russian “invasion” of Crimea as Obama warns of “costs” ஒபாமா “விளைவுகள்” பற்றி எச்சரிக்கையில் ரஷ்யா கிரிமியா மீது “படையெடுக்கிறது” என உக்ரேன் குற்றம்சாட்டுகின்றது
By Chris Marsden Use this version to print| Send feedback அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா வெள்ளி மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, ரஷ்யா உக்ரேனில் “இராணுவச் செயல்கள் பற்றிய தகவல்களை” கண்டித்து, “எத்தகைய இராணுவத் தலையீட்டிற்கும் விலை கொடுக்க வேண்டும்” என எச்சரித்தார். இக்கருத்துக்கள் உக்ரேனில் அமெரிக்க / ஐரோப்பிய தூண்டுதல் பெற்ற ஆட்சிமாற்றம் மேற்குசக்திகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான ஒரு மோதலாக வளரக்கூடும் என அச்சுறுத்துகின்றது. ஒபாமாவின் வெள்ளை மாளிகை அறிக்கை, உக்ரேனில் மேற்குசக்திகளால் நிறுவப்பட்ட “இடைக்கால அரசாங்கம்” ரஷ்யா “படையெடுப்பை” ஆரம்பிக்கின்றது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் அதன் உதவிக்கு வருமாறு அழைப்புவிடுத்தற்கு சற்று பின்னர் வந்துள்ளது. புதிய உள்துறை மந்திரியும், தன்னலக்குழுவின் யூலியா தீமோசென்கோவின் தந்தைநாட்டு கட்சி உறுப்பினருமான ஆர்சென் அவாகோவ் கிரிமியாவிலுள்ள செபெஸ்டோபோல் சர்வதேச விமான நிலையம் ரஷ்யப் படைகளால் தடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இவர் பேஸ்புக்கில் “நடப்பதை நான் ஆயுதமேந்திய படையெடுப்பு என்று கருதுகிறேன். அனைத்து சர்வதேச உடன்பாடுகளையும் நெறியையும் இது மீறுகிறது. ஒரு இறைமை பெற்ற நாட்டின் பிராந்தியத்தின் மீது ஆயுதமேந்திய குருதி கொட்டலை நேரடியாக இது தூண்டுகிறது.” என எழுதினார். இவருடைய வார்த்தைகள் உக்ரேனில் மேற்கு இராணுவத் தலையீட்டை நியாயப்படுத்தும் போலிக்காரணம் வழங்கும் நோக்கத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவர் புடாபெஸ்ட் உடன்பாடு என்ற 1994 உடன்பாடு பற்றி குறிப்பிடுகின்றார். இவ்வுடன்படிக்கை அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதம மந்திரி ஜோன் மேஜர் மற்றும் ரஷ்யாவின் போரிஸ் யெல்ட்சின், உக்ரைனின் லியோனிட் குச்மா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டதின் விதிகளைக் கூறுகிறார். அது உக்ரேன் அதன் அணுவாயுதங்களை கைவிடுவதற்கு ஈடாக உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. புடாபெஸ்ட் உடன்படிக்கையின் முதல் விதி கூறுவது: “அமெரிக்கா, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியம், வட அயர்லாந்து ஆகியவை உக்ரேனுக்கான அவற்றின் பங்களிப்பை உத்தரவாதம் செய்கின்றன.... இருக்கும் உக்ரேனின் எல்லைகள், இறைமை, சுதந்திரம் இவை மதிக்கப்படும்.” 2004 முதல் 2008 வரை மாஸ்கோவில் பிரித்தானிய தூதராக இருந்த சேர் டோனி பிரென்டன், ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததாக தெரிந்தால், பின் “இந்த உடன்பாடு சட்டபூர்வமான கடமைப்பாட்டை கொண்டது என்ற முடிவிற்கு நாங்கள் வந்தால், போர் ஒரு விருப்புரிமையாக இருக்கும்” என எச்சரித்தார். உக்ரேனின் தேசிய பாதுகாப்புக் குழுவின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவரான ஆண்ட்ரி பருபிய் (Andriy Parubiy) மாஸ்கோ கிரிமிய விமான நிலையங்களில் ஆயுதமேந்திய குழுக்களை வைத்து கட்டுப்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். “இவை தனித்தனிக்குழுக்கள்.... கிரெம்ளினால் கட்டுப்படுத்தப்படுபவை” என்று பருபிய் கூறினார். பருபிய் தீவிர வலது ஸ்வோபோடாவின் முந்தைய அமைப்பான உக்ரேன் சமூக-தேசிய கட்சியின் இணை நிறுவனராவர். ரஷ்ய சார்புடைய தன்னலக்குழுக்களுடன் நெருக்கமாகப் பிணைந்திருந்த ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆட்சியை வீழ்த்திய ஆட்சிச்சதிக்கு தலைமை தாங்கிய வலதுசாரி ஆயுதக்குழுக்களை அவர் வழிநடத்தினார். இந்த ஆயுதக்குழுக்களில் ஸ்வோபோடா உறுப்பினர்களுடன் பாசிச Right Sector உறுப்பினர்களும் இருந்தனர். பருபியின் துணைவராக Right Sector இன் தலைவர் டிமிட்ரோ யாரோஷ் (Dmytro Yarosh) உள்ளார். தந்தைநாட்டு கட்சியின் இடைக்கால ஜனாதிபதி ஒலெக்சாந்தர் ருர்ஷிநோவ் வியாழன் அன்று கிரிமியா பற்றிக்குறிப்பிட்டு “துருப்புக்கள் நடமாட்டம், குறிப்பாக வெளியில் இருந்து வரும் துருப்புக்கள் நடமாடினால் அது இராணுவ ஆக்கிரமிப்பு எனக் கருதப்படும்” என்று எச்சரித்தார். நேற்று ருர்ஷிநோவ் ஆயுதப்படைகளின் தலைவர் அட்மிரல் யூரி இலினை பதவி நீக்கம் செய்தார். கிரிமியாவிற்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்துவதை சாதகமாக்கும் வகையில் அவசரகாலநிலை அறிவிக்கப்படலாம் என்று பருபிய் கூறினார். கிரிமியாவின் நிர்வாக மையமான சிம்ஃபெர்போலில் இராணுவ போர் உடைகளை அணிந்தவர்கள் முக்கிய விமான நிலையத்தில் இரவோடிரவாக ஆயுதமேந்திய குழுக்களாக வந்தனர். சில வர்த்தக பயணங்களைக் கையாளும் ஒரு இராணுவ விமான நிலையமான செவெஸ்டோபோல் விமான நிலையத்தில் “அடையாளம் தெரியாத” 300 பேர் வந்துள்ளதாக தெரிகிறது. நபர்கள் இராணுவத் தரங்களை குறிப்பிடாத ரஷ்ய அடையாளச் சீருடைகளை அணிந்திருந்ததாக தகவல்கள் வந்துள்ளன. கீயேவில் இருந்து புறப்படும் விமானங்களை தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், ரஷ்ய ஆயுதமேந்திய நபர்களை கொண்ட விமானங்களினதும் ஹெலிகாப்டர்களினதும் போக்குவரத்து உள்ளதாக தகவல் வந்துள்ளது. செவெஸ்டோபோலில் மையம் கொண்டுள்ள ரஷ்ய கருங்கடல் கப்பற்படை, கடற்படையையும் அதனுடன் தொடர்புடைய வெளிச்சாவடிகளை பாதுகாப்பதற்கும் “பயங்கரவாதத்திற்கு எதிரான” நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் எல்லையில் படைகுவிப்பதுடன் தொடர்பற்றது என மேற்கோளிடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரகம் இந்த நடவடிக்கைகள் இருதரப்பு உடன்பாடுகளுக்கு இணங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. உக்ரேனிய ஜனாதிபதியின் சிறப்பு தெற்கு தீபகற்பத்தின் பிரதிநிதி செர்ஜிய் குனிட்சின்னிடம் இருந்து வியத்தகு கூற்று வந்துள்ளது. அவர் மாஸ்கோ 2,000 படையினரை சிம்ஃபெரோபோலுக்கு அருகே உள்ள இராணுவ விமானத் தளத்தில் நிலைநிறுத்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். வியாழன் அன்று ரஷ்ய சார்பு ஆயுதக்குழுக்கள் பிராந்திய பாராளுமன்றம் மற்றும் பிற அரசாங்கக் கட்டிடங்களை கைப்பற்றினர். சிம்ஃபெரோபோல் விமானநிலையத்திற்கு வெளியே இருந்தவர்கள் தாங்கள் ரஷ்ய சார்பு Unity Party ஐ சேர்ந்தவர்கள், புதிய கிரிமிய நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் அங்குள்ளதாகத் தெரிவித்தனர். கிரிமிய மக்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் அல்லது ரஷ்ய மொழி பேசுபவர்கள். நேற்று பைனான்சியல் டைம்ஸ், “கிட்டத்தட்ட ஒரு வாரமாக கீயேவிலுள்ள கிரிமிய எதிர்ப்பாளர்கள் தலைநகரின் மைய மைதான் சதுக்கத்தில் இருப்பவர்களுக்கு எதிராக தயாரிப்பு நடவடிக்கைகளை நடத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களை சுயமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுதக்குழுக்களாக அணிதிரட்டியுள்ளது” எனக் கூறியுள்ளது. நேற்று உக்ரேன் எல்லையில் இராணுவ உத்திப் பயிற்சிகள் தொடர்ந்தன. 80க்கும் மேற்பட்ட போர் ஹெலிகாப்டர்கள் உள்ளடங்கிய புதன் அன்று தொடங்கிய இப்பயிற்சிகள் கிரிமியாவில் உடனடிதாக்கம் எதையும் கொண்டிருக்கவில்லை. ரஷ்யாவும் எச்சரிக்கைக்காக எல்லைக்கு அருகே போர்விமானங்களை நிறுத்தியுள்ளது. “குடிமக்களின் உரிமைகள் மீறப்பட்டால் கடுமையான சமரசத்திற்கு இடமில்லாத பதிலடி கொடுக்கப்படும்” என்றும் எச்சரித்துள்ளது. கீயேவ் நியமித்துள்ள பிராந்திய பிரதமர் அனட்டோலி மோஹிலியோவிற்குப் பதிலாக வியாழன் அன்று ரஷ்ய வணிகர் அலெக்சி சாலிய் நியமிக்கப்பட்டார். கிரிமியாவின் சுதந்திரம் பற்றிய சர்வஜனவாக்கெடுப்பு மே 25ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது உக்ரேன் முழுவதும் நடக்க இருக்கும் திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி, உள்ளூர் தேர்தல்கள் நடைபெறும் நாளாகும். ரஷ்யச் சட்டம் இயற்றுபவர்கள் வெள்ளியன்று இரு சட்டவரைவை அறிமுகப்படுத்தினர். இவை ரஷ்ய கூட்டமைப்பில் புதிய பிராந்தியங்கள் இணைக்கப்படுவதை எளிமைப்படுத்தும் மற்றும் உக்ரேனியர்களுக்கு ரஷ்ய குடியுரிமை கிடைக்க வழிவகுக்கும். அதிகாரத்தில் இருந்து கட்டாயமாக அகற்றப்பட்டபின் முதல்தடவை பகிரங்கமாகத் தோன்றிய யானுகோவிச் ரஷ்யாவில் இருந்து உரையாற்றி, நாட்டின் சட்டபூர்வதலைவர் தான்தான் என்றும் “உக்ரேனின் வருங்காலத்திற்கு தொடர்ந்து போராடுவேன்... எவரும் என்னை அகற்றவில்லை. என் உயிர், எனக்கு மிக வேண்டிய நெருக்கமானவர்களின் உயிர்களுக்கு நேரடி ஆபத்து என்பதால் நான் உக்ரேனை விட்டு வெளியேறினேன்” என்றார். கிரிமியா பிரிவினைக்குத் தான் ஆதரவு கொடுக்கவில்லை என்ற யானுகோவிச், உக்ரேன் “ஒன்றாக, பிரிவினை இல்லாமல்” இருக்க வேண்டும் என்றார். “கிரிமியக் குடிமக்கள், தேசியவாதிகள், குண்டர்களுக்கு அடிபணிந்து இருக்க விரும்பவில்லை” என்றும் சேர்த்துக் கொண்டார். தன்னை அதிகாரத்தில் மீண்டும் இருத்த, தான் ரஷ்ய இராணுவ ஆதரவு கோரப்போவதில்லை என்ற அவர் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்றுவரை மௌனமாக இருப்பதில் “வியப்புற்றுள்ளதாகவும்” கூறினார். அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெர்ரி ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் ரஷ்யா “உக்ரைனின் பிராந்திய இறைமையை மதிக்கும்” என்று தன்னிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளார் என்றும் இது ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு கடந்த வாரம் புட்டின் கொடுத்த உறுதியை எதிரொலிக்கிறது என்றும் கூறினார். ஆனால், இத்தகைய அறிக்கைகள் இராணுவ மோதலை தவிர்க்கவில்லை. முழுப் பிராந்தியமும் உறுதி குலைந்துள்ளதுடன், உக்ரேனில் உள்நாட்டுப்போர் என்னும் ஆபத்தை கொண்டுவந்திருப்பது மட்டும் இல்லாமல், முக்கிய சக்திகளுக்கு இடையே நடக்க இருக்கும் என்னும் பரந்த மோதல் என்னும் ஆபத்தும் உள்ளது. வாஷிங்டன், ஊழல் மிகுந்த தன்னலக்குழு மற்றும் பாசிசக் கும்பல்களுடன் சேர்ந்து கொண்டுவந்துள்ள ஆட்சிசதி, ரஷ்யாவை அதன் இருப்புடன் தொடர்புபட்ட தன்மைகொண்டுள்ள விடயங்களில் நேரடியாக அமெரிக்கா, ஐரோப்பிய சக்திகளுடன் நேரடி எதிர்ப்பிற்கு கொண்டு சென்றுள்ளது. செவெஸ்டோபோல் கடற்படைத்தளத்தை இழக்கும் சாத்தியம் உட்பட, உக்ரேன் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய ஆதிக்கத்திற்குள் விழுவது புட்டினுக்கு மிகவும் ஆபத்தானதாகும். ஆனால், ஒபாமா நிர்வாகத்தினதும் மற்றும் அதன் நட்பு கூட்டினரின் விழைவுகள் இத்துடன் நிற்கப்போவதில்லை. போலந்தின் வெளியுறவு மந்திரி ராடோஸ்லா சிக்ரோஸ்கி (Radoslaw Sikorski), கீயேவில் ஆட்சிசதியை ஒழுங்கமைப்பதில் முக்கிய பங்கை கொண்டிருந்தார். இது, இரண்டாம் உலகப் போருக்கு முன் அதை ஆண்ட போலந்தின், உக்ரேன் பிராந்தியத்தின் மீது அது நீண்டகாலமாக கொண்டுள்ள விருப்பங்களையும் இன்னும் முக்கியமாக அமெரிக்காவின் அரசியல்கூட்டு என்னும் பங்கையும் பிரதிபலிக்கிறது. Solidarity தொழிற்சங்க இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 1981 வேலைநிறுத்தத்தில் மாணவனாக பங்கு பெற்றபின், சிக்ரோஸ்கி ஐக்கிய இராச்சியத்தில் அரசியல் தஞ்சம் பெற்றிருந்தார். ஆக்ஸ்போர்டில் அவர், மேற்கின் ஒரு அரசியல்/பாதுகாப்பு சொத்தாக வளர்க்கப்பட்டார். பின்னர் அவர் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள American Enterprise Institute இல் நிரந்தர ஆராய்ச்சியாளாரானார். புதிய அத்லாந்திக் முன்னெடுப்பின்-New Atlantic Initiative- நிர்வாக இயக்குனராகவும், வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமெரிக்க குழுவின் -American Committees on Foreign Relations- ஆலோசகர் குழுவில் உறுப்பினரும் ஆனார். ராய்ட்டர் தகவல்கள் கூறுவது: “போலந்து அரசாங்கம், முன்னாள் சோவியத் நாடுகளான உக்ரேன், பெலாரஸ், ஜோர்ஜியா, மோல்டோவா போன்றவற்றில் பொது சமூக திட்டங்களுக்கு நிதியளிக்கின்றது. பெரும்பாலான நிதியுதவிகள் சிக்ரோஸ்கியின் அமைச்சரகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. போலந்து அரசாங்கத்தின் நிதியை பெறுபவற்றில், பெலரஸ்ஸில் இருந்து செயல்படும் எதிர்த்தரப்பு தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளன. இது அங்கு போலந்தின் செல்வாக்கை வளர்க்கிறது. உக்ரேனுக்குப்பின் இது ரஷ்யாவிற்கும் மேற்கிற்கும் இடையே அடுத்த மோதலாக இருக்கலாம்.” கிரிமியாவில் நிர்வாகக் கட்டிடங்களை கைப்பற்றியிருப்பது “கடுமையான நடவடிக்கை”, என விவரித்த சிக்ரோஸ்கி, “இதைச் செய்தவர்களையும், இதை அனுமதித்தவர்களையும் நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் இப்படித்தான் பிராந்திய மோதல்கள் ஆரம்பிகின்றன.” என்றார். ஜோர்ஜியாவும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாட்டிற்கு நிற்கிறது. இதைத்தான் அவை தன்னை அகற்றும் நடவடிக்கை எனக்கருதி, உக்ரேனில் யானுகோவிச் தடுக்க முயன்றார். பாதுகாப்பு மந்திரி இராக்லி அலசனியா ரஷ்யாவை உக்ரேன் நிராகரித்தது குறித்து பின்வருமாறு கூறினார். “உக்ரேனுக்கு வேறு வழியில்லை. இது புட்டினுக்கு முதல் மூலோபாய தோல்வியாகும். இது கிழக்கு ஐரோப்பாவில் ஒரு பெரும் பூகோளஅரசியல் திருப்பமாகும்.” இது இப்பிராந்தியத்தில் உள்ள மற்றைய நாடுகளுக்கு தைரியம் கொடுத்து, ஒரு தொடர்ச்சியான விளைவை கொள்ளும் என்றார். இந்த வாரம் முன்னதாக ஜோர்ஜியாவை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவரும் அமெரிக்க உதவியை உறுதியளித்து கெர்ரி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். |
|
|