தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
ISIS offensive in Iraq exposes French pseudo-left’s support for Syria war ஈராக்கில் ISISஇன் தாக்குதல் சிரிய யுத்தத்திற்கான பிரெஞ்சு போலி-இடதுகளின் ஆதரவை அம்பலப்படுத்துகிறது
By Alex
Lantier Use this version to print| Send feedback ஈராக்கில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கு எதிராக ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) போராளிகள் குழுவின் தாக்குதல் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியினது (NPA) ஏகாதிபத்திய சார்பு அரசியலை அழிவுகரமாக அம்பலப்படுத்தி உள்ளது. சிரியாவில் அது ஆதரிக்கும் ஒரு யுத்தத்திலிருந்து ISIS பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்களைப் பாதிக்கும் வகையில் ஈராக்கிய யுத்தத்திற்கு திரும்பியதால் மலைத்துப்போன NPA, வெறுப்போடு ISISஐ குற்றஞ்சாட்டி 180 பாகை திரும்பியுள்ளது, அதேவேளையில் அப்பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதும் பேரழிவை உண்டாக்கக்கூடிய வகையில் ஈராக்கில் ஒரு புதிய அமெரிக்க-நேட்டோ யுத்தத்தின் அபாயத்தையும் அது குறைத்துக் காட்டி வருகிறது. “ஈராக்கில் ISISஇன் தாக்குதல்" என்ற தலைப்பில் NPAஇன் ஒரு சிறிய செய்தி ஆய்வு, நெருக்கடியை உருவாக்குவதில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய கொள்கைகள் வகித்த மைய பாத்திரத்தை மூடிமறைக்க முயல்கிறது, அதே கொள்கைகளைத் தான் NPA ஆக்ரோஷமாக ஆதரித்து வந்தது. அது வெறுப்பூட்டும் வகையில் இந்த இரத்தகளரிக்கான பொறுப்பை, ஈராக்கில் உள்ள அமெரிக்காவினது ஷியைட் தலைமையிலான தலையாட்டி ஆட்சியின் மீது சாட்டுகிறது. ஈராக்கிய பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கியால் தான் "நிலைமை அழுகி போய் இருக்கிறது" என்று குறைகூறி எழுதும் NPA, “சிரியாவின் புரட்சியை ஒட்டி, சிரிய ஆட்சியை ஆதரிக்குமாறு ஈரானிடமிருந்து அவர் உத்தரவுகளைப் பெற்றிருந்தார். அவர் [சிரியாவில்] குர்திஷ் எதிர்ப்பை ஆதரித்து வரும் [ஈராக்கிய] குர்திஸ்தானுடன் மோதலுக்கு சென்றார். இறுதியாக, மிதவாத சுன்னிக்களின் அனைத்து பிரதிநிதித்துவங்களையும் நசுக்கியதன் மூலமாக, அவர் சுன்னி போராளிகளை தீவிரவாதிகளை நோக்கி திருப்பி விட்டார்,” என்று எழுதுகிறது. என்னவொரு அருவருப்பான மூடிமறைப்பு! ஈராக்கில் ISIS தலைமையிலான சுன்னி கிளர்ச்சியை எது தூண்டிவிட்டதென்றால், ஒருபுறம், NPA ஆதரிக்கும் மற்றும் வெறுப்பூட்டும் வகையில் ஒரு "புரட்சியாக" புகழும் சிஐஏ தலைமையிலான ஒரு நடவடிக்கையால் சிரியாவில் தீவிரவலது சுன்னி இஸ்லாமியவாத போராளிகளுக்கு கிடைத்த பாரிய ஆயுத உதவிகளும், மறுபுறம், 2003-2011 வரையில் அமெரிக்க யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பால் ஈராக்கில் தோற்றுவிக்கப்பட்ட ஆழ்ந்த இன-குறுங்குழுவாத பதட்டங்களும் தான். அந்த காலப்பகுதியில் தான் வாஷிங்டன் ஈராக்கிய எதிர்ப்பை பலவீனப்படுத்த ஒரு பிரித்தாளும் மூலோபாயத்தை வடிவமைத்து பின்பற்றி வந்தது. 2011இல் சிரிய யுத்தம் வெடித்ததில் இருந்து ISIS போன்ற இஸ்லாமிய சக்திகளுக்கு ஆயுதம் வழங்க ஏகாதிபத்திய சக்திகளுக்கு அழுத்தம் அளித்து வந்த NPA தான், இந்த சமீபத்திய இரத்தக்களரிக்கும் மற்றும் மிக பரந்தளவில் அப்பிராந்தியம் முழுவதிலுமான ஸ்திரப்பாட்டை சீர்குலைத்த சிரிய யுத்தத்தைத் தூண்டிவிடுவதற்கும் நேரடி பொறுப்பாகிறது. வாஷிங்டன் மற்றும் பாரீஸ் சிரியா மீதான ஒரு நேரடி தாக்குதலை அச்சுறுத்திய நிலையில், NPA செய்தி தொடர்பாளரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஒலிவியே பெசன்ஸெநோ கடந்த செப்டம்பரில் RFIக்கு தெரிவிக்கையில், “[பிரெஞ்சு வெளியுறவுதுறை மந்திரி லோரன்ட்] ஃபாபியுஸ் ஒரு தேய்ந்து போன ஒலிநாடா போன்றுள்ளார், அவர் பல மாதங்களாக சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் கருணையோடு சிரிய புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும்,” என்றுரைத்தார். சிரிய எதிர்ப்பிற்குள் ஆயுதங்களைப் பாய்ச்சுவதென்பது ISIS போன்ற அல் கொய்தா இணைப்பு பெற்ற ஜிஹாதிஸ்டுகளுக்கு ஆயுதம் வழங்குவது போலாகும் என்ற ஏகாதிபத்திய வெளியுறவு கொள்கை ஸ்தாபகத்தின் பிரிவுகளால் எழுப்பப்பட்ட கவலைகளையும் கூட பெசன்ஸெநோ நிராகரித்தார். “'அவர்கள் ஜிஹாதிஸ்டுகள் வசம் போவார்கள் என்பதால் நாம் ஆயுதங்களை வழங்க கூடாது' என்று கூறுகிறார்கள், நல்லது, ஆனால் ஏற்கனவே அது தானே நடந்து கொண்டிருக்கிறது,” என்று தெரிவித்த அவர் பகட்டோடு தொடர்ந்து கூறுகையில், “மக்கள் தங்களின் சொந்த விதியை தாங்களே முடிவெடுக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை வைப்பதே ஒரு சர்வதேசவாதியாக என்னுடைய கோட்பாடாகும்,” என்றார். ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் அவர்களின் அரேபிய பங்காளிகளால் ISISக்கு ஆயுதங்கள் வழங்குவதை பெசன்ஸெநோ நியாயப்படுத்தியதும், மற்றும் அதை ஒரு இடதுசாரி "சர்வதேசவாதியின்" நிலைப்பாடாக கொண்டு செல்வதற்கான அவரது முயற்சியும், பிரெஞ்சு போலி-இடதின் அழுகிய பாத்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. ஏகாதிபத்திய சார்பு கல்வியாளர்கள், தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகள் மற்றும் ஊடகங்களால் வழிநடத்தப்படும் அரசியல் தரகர்களின் ஒரு குறுகிய செல்வாக்கு மிக்க அடுக்கிலிருந்து வரும் இவர்கள் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துடன் இணைந்திருக்க முடியும் காலம் வரையில் தீவிரவலது சக்திகளின் இரத்தந்தோய்ந்த நடவடிக்கைகளுக்கு ஒரு மெல்லிய "இடது" வேஷத்தை அளிக்க முயல்கிறார்கள். NPAஇன் இஸ்லாமியவாத பினாமிகள் பெசன்ஸெநோ மற்றும் அவரது கூட்டாளிகள் எதிர்பார்க்காத திசையில் திரும்பியதும், அது இப்போது அந்த சுழற்காற்றின் பயனை அனுபவிக்கிறது. ISISஇன் தாக்குதல் மலிக்கி ஆட்சியைக் கீழறுப்பதோடு பிரான்சின் Total போன்ற எண்ணெய் நிறுவனங்களின் ஈராக்கிய உடைமைகளை அச்சுறுத்துகின்ற நிலையில், NPA அது முன்னர் யாரை பாதுகாத்ததோ அவர்களையே குற்றஞ்சாட்டிக் கொண்டு, அதன் தொனியை மாற்றுகிறது. இப்போது அது எழுதுகையில், “பெண்களைக் கற்பழிப்பது, இமாம்களை படுகொலை செய்வது, இளைஞர்களுக்கு சவுக்கடி கொடுப்பது, குர்திஷ்தானை நோக்கி விரட்டுவது, கிறிஸ்துவர்களை வெளியேற்றுவது, இளம் பெண்களுக்கு நிர்பந்த திருமணம் செய்விப்பது, 1,700 ஷியைட் இராணுவத்தினரை படுகொலை செய்தமை என ISIS அதன் உண்மையான முகத்தைக் காட்டியுள்ளது,” என்று எழுதுகிறது. இந்த கருத்துக்கள் NPAஇன் இழிந்த ஏகாதிபத்திய-சார்பு அரசியலை அம்பலப்படுத்துகிறது. பிரான்சின் முன்னாள் காலனித்துவ பரப்பெல்லையில் பிரெஞ்சு செல்வாக்கை அதிகரிக்குமென NPA நம்பிய ஒரு பிரெஞ்சு ஆதரவிலான யுத்தத்தில் ISIS சண்டையிட்டு வந்த வரையில், அது ISISஆல் மற்றும் அதன் கூட்டாளிகளால் நடத்தப்பட்ட இன படுகொலைகளையும், ஏனைய யுத்த குற்றங்களையும் அக்கறையோடு கண்டுகொள்ளாமல் இருந்தது அல்லது அவற்றை சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மீது சாட்டி வந்தது. NPAக்கு உள்ளே இருக்கும் பிற்போக்குவாதிகளின் நிலைப்பாட்டிலிருந்து, டமாஸ்கஸில் வாஷிங்டன் மற்றும் பாரிஸின் நலன்களுக்கு அடிபணிந்த ஒரு வலதுசாரி தலையாட்டி ஆட்சியை நிறுவ கற்பழிப்பும், படுகொலைகளும் ஒரு அவசியமான அச்சாரமாக ஆகிவிடுகின்றன. ISIS ஈராக்கின் பெரும் பகுதிகளையும் மற்றும் அதன் எண்ணெய் தொழில்துறையையும் கைப்பற்றியதும் NPA அதன் மனப்போக்கை மாற்றி கொண்டதோடு, ஒலிவியே பெசன்ஸெநோ மற்றும் NPA ஸ்தாபகரும் தீவிர கொள்கையுடைய முன்னாள் 1968 மாணவருமான அலென் கிறிவின் (Alain Krivine) போன்ற செல்வாக்கு மிக்க குட்டி முதலாளித்துவவாதிகள் இது Total பங்குபத்திரங்களில் உள்ள அவர்களின் நிதியியல் பங்கை பாதிக்குமோ என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். உடனே NPA அது ஆதரித்து வந்த அதே சிரிய சுன்னி இஸ்லாமிய சக்திகள் இரத்தந்தோய்ந்த மற்றும் கொடூரமான குற்றங்களை நடத்தி வருவதை திடீரென கண்டுபிடித்துவிட்டது. ஈராக்கில் உள்ள சுன்னி இஸ்லாமிய போராளிகள் குழுக்களைக் கண்டிக்கின்ற அதேவேளையில், சிரியாவில் அதன் நடவடிக்கைகளை ஒரு "புரட்சியாக" ஊக்குவிப்பதைத் தொடர்ந்து கொண்டே, மத்திய கிழக்கில் அதன் வெளியுறவு கொள்கை நிகழ்ச்சிநிரலில் கதறி கொண்டிருக்கும் முரண்பாடுகளை பூசி மெழுக அது முயன்று வருகின்ற நிலையில், NPA முற்றிலுமாக அரசியல் ஒத்திசைவின்மைக்குள் வீழ்கிறது. ஈராக்கில் உள்ள சுன்னி போராளிகளின் குற்றங்களை ஒப்புக் கொள்கின்ற அதேவேளையில் அது இந்த தாக்குதல்களுக்கு ISISஇன் பிராந்திய எதிராளிகளான அசாத் ஆட்சி மற்றும் ஈரானை குற்றஞ்சாட்ட முயல்கிறது. ISIS “வெளிப்படையாக அதற்கு எதிரான ஆட்சிகளிடமிருந்து நிதியுதவிகள் பெற்று ஆதாயமடைந்துள்ளது, ஆனால் கட்டார், ஈரான், சிரியா மற்றும் ஏனையவை அப்பிராந்திய மக்களைப் பிளவுபடுத்துவதன் மீது உடன்பாடு கொண்டுள்ளன,” என்று NPA எழுதுகிறது. ஈராக்கின் எல்லைக்கு அப்புறத்தில் சிரியாவில் 100,000 நபர்களின் உயிரைப் பறித்துள்ள ஒரு இரத்தந்தோய்ந்த யுத்தத்தை ISIS போன்ற சுன்னி இஸ்லாமியவாத போராளிகளுக்கு எதிராக நடத்தி வருகின்ற அதேவேளையில், ஈராக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றும் ஒரு சூழ்ச்சியில் ஈரானும் அசாத் ஆட்சியும் இரகசியமாக ISISக்கு ஆதரவளித்து சதி செய்து வருகிறதென்ற NPAஇன் வாதங்கள் அர்த்தமற்றவையாகும். சிரிய எதிர்ப்பு போராளிகள் குழுக்களுக்கு ஆயுதங்களை வாரிவழங்கி வரும் ஏகாதிபத்திய சக்திகளே ISIS தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் உந்துசக்தியாகும், அது அப்பிராந்தியம் முழுவதையும் நிலைகுலைத்துள்ளது. எவ்வாறிருந்த போதினும் இது வெறுமனே சிரியாவில் NPAஇன் இழிவார்ந்த வரலாறை மூடிமறைக்கும் ஒரு முயற்சி என்பதற்கும் அப்பாற்பட்டு இதுபோன்ற அப்பட்டமான பொய்மைகளை NPA வரைவதில் இன்னும் மேலதிகமானவை சம்பந்தப்பட்டுள்ளன. வாஷிங்டன் நூற்றுக் கணக்கான இராணுவ "ஆலோசகர்களை" ஈராக்கிற்குள் அனுப்பி வருகின்ற நிலையில், சம்பவங்கள் ஈராக்கிற்குள் ஒரு புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க-நேட்டோ யுத்தத்தின் திசையில் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் 2003 படையெடுப்பின் போது இருந்ததை விட இன்னும் எவ்வளவோ வெடிப்பார்ந்த உலக நிலைமைகளின் கீழ் சண்டையிடப்படும் அதுபோன்றவொரு யுத்தம், ஈராக்கிற்குள் இருக்கும் கன்னைகளோடு இணைய துருக்கி, ஈரான் மற்றும் சவூதி அரேபியா போன்ற பிரதான பிராந்திய சக்திகளை ஒரு பிராந்திய அல்லது ஒரு உலகளாவிய மோதலிலும் கூட இழுக்கும் வகையில் அச்சுறுத்தும். இந்த உள்ளடக்கத்தில் பார்த்தால், NPA பகுப்பாய்வின் முடிவில் வரும் வரிகள் குற்றகரமாக சுயதிருப்தி அடைகின்றன. அது சாந்தமாக குறிப்பிடுகிறது: “ஒபாமாவைப் பொறுத்த வரையில், அப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கையின் பேரழிவுகரமான இருப்புநிலை கணக்கை எதிர்கொண்டிருக்கையில், அவர் மலிக்கி மற்றும் அவரது முன்னாள் பங்காளிகளுக்கு இடையே ஒரு அரசியல் தீர்வுக்காக ஈராக்கிற்கு உதவியளிக்க நிபந்தனை விதித்துள்ளார், இருப்பினும் அதேவேளையில் ஈரானிய ஆட்சிக்கு நெருக்கமாக நகர்ந்து வருகிறார்,” என்று எழுதியது. ஈராக்கில் சண்டை மற்றும் அமெரிக்க இராணுவ தலையீடு தீவிரமடைந்து வரும் நிலையில், வாஷிங்டனால் மத்தியஸ்தம் செய்யப்படும் மலிக்கி மற்றும் சுன்னி சக்திகளுக்கு இடையிலான ஒரு தற்காலிக சமாதானம் குறித்து வெளிவரும் NPAஇன் ஊகங்கள் முற்றிலும் அர்த்தமற்றவையும், பிற்போக்குத்தனமானதும் ஆகும். ஈராக்கிய கன்னைகளுக்கு இடையே ஒரு தற்காலிக சமாதானத்திற்கான பேச்சுவார்த்தைகளில் ஏகாதிபத்திய சக்திகள் வெற்றி அடைந்தாலும் கூட, அது அப்பிராந்தியத்தில் வன்முறையைத் தீவிரப்படுத்தும் போக்கை நிறுத்தப் போவதில்லை. அது, சிரியாவில் யுத்தம், ஈரானின் அணுசக்தி திட்டம் மீது அதற்கு விடுக்கப்படும் யுத்த அச்சுறுத்தல், மற்றும் ஈராக்கில் ஒன்பது ஆண்டுகால அமெரிக்க ஆக்கிரமிப்பின் கசப்பான மரபுவழி என ஏகாதிபத்தியத்தின் இரக்கமற்ற மற்றும் ஆக்ரோஷமான கொள்கைகளால் தீர்மானிக்கப்பட்டுள்ளது—அதைத் தான் NPA பாதுகாக்கிறது. சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் வாஷிங்டனிடம் இருந்து ஒரு சமாதான கொள்கையை எதிர்கொண்டிருக்க வில்லை, மாறாக ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தின் அவசியத்தை எதிர்கொண்டுள்ளது, அதில் அது NPA போன்ற ஏகாதிபத்திய-சார்பு போலி-இடது குழுக்களை அரசியல் எதிரிகளாக முகங்கொடுக்கும். |
|
|