World Socialist Web Site www.wsws.org |
Are you ready for nuclear war? அணுஆயுத யுத்தத்திற்கு நீங்கள் தயாரா?
David North and Alex Lantier அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான அணுஆயுத யுத்தத்தின் சாத்தியக்கூறு உட்பட்ட யுத்தத்திற்கு நீங்கள் தயாரா? மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 அழிக்கப்பட்டதற்கு பின்னர் ஏற்பட்டிருக்கும் நிகழ்வுகளின் வெளிச்சத்தில் ஒவ்வொருவரும் இந்த கேள்வியை கட்டாயமாக தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ளவேண்டும். விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே பொறுப்பாகும் என்ற அமெரிக்க மற்றும் ஐரோப்பிய குற்றச்சாட்டுக்களால் தூண்டிவிடப்பட்ட இந்த நெருக்கடி, 1962இன் கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர், உலகை ஓர் உலகளாவிய யுத்தத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு வந்திருக்கிறது. ஆனால் இன்றைய நிலைமை ஒருவேளை இன்னும் அதிக அபாயகரமாக இருக்கிறது. ஒரு அரை நூற்றாண்டிற்கு முன்னர், எந்தவொரு தரப்பினரதும் தவறான கணக்கீடும் ஒரு அணுஆயுத மோதலை விரைவுபடுத்தக்கூடுமென்ற அச்சத்தினால் சுற்றிவளைக்கப்பட்ட கென்னடி நிர்வாகம், பேச்சுவார்த்தைகளுக்கான பாதையைத் திறந்து வைக்கவும், சோவியத் தலைவர்களை அவமரியாதைப்படுத்துவதைத் தவிர்க்கவும் முனைந்தது. மறுபுறத்தில், இன்றோ CIA, ரஷ்யா மற்றும் அதன் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு எதிராக ஒரு எரியூட்டும் பிரச்சார நடவடிக்கையைத் திருப்பி விட்டு வருகிறது, இந்த பிரச்சாரம் உலகில் இரண்டாவது மிகப் பெரிய அணுஆயுத தளவாடங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டோடு ஒரு நேரடி இராணுவ மோதலைத் தூண்டிவிட நோக்கம் கொண்டிருப்பதாக தெரிகிறது. பொதுமக்களின் கருத்தோட்டத்தில் ரஷ்ய-விரோத மனஉணர்வைக் கலந்து அசுத்தப்படுத்துவதை நோக்கமாய் கொண்ட மிக கவனமாக பரப்பப்படும் ஒரு பிரச்சாரத்திற்காக சிஐஏ அரசாங்கங்களுக்குள்ளும், ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியிலும் உள்ள அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து ஆதாரவளங்களையும், உடமைகளையும் ஒன்றுதிரட்டி வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்போதைக்கு, MH17 அழிவிற்கு இட்டுச்சென்ற சம்பவங்களின் சங்கிலி தொடர் குறித்து அங்கே எந்தவொரு தீர்க்கமான விளக்கமும் கிடைப்பதாக இல்லை. எதற்காக ஆண்டுதோறும் பத்து பில்லியன் கணக்கான டாலர்கள் வாரி இறைக்கப்படுகிறதோ அந்த அனைத்து பாரிய கண்காணிப்பு தொழில்நுட்பங்களும் அதன் வசம் இருந்தும் கூட, அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் ரஷ்யா தான் இதற்கு பொறுப்பு என்று குற்றஞ்சாட்டுவதற்கு வலுவான ஆதாரத்தில் ஒரு துணுக்கைக் கூட முன்வைக்கவில்லை. ஆனால் MH17 வெடிப்பைச் சுற்றியிருக்கும் ஸ்தூலமான சூழ்நிலைகள் இன்னமும் அறியப்படாமல் இருக்கின்ற அதேவேளையில், எந்த அரசியல் நோக்கங்களுக்காக இந்த துன்பகரமான சம்பவம் உபயோகிக்கப்பட்டு வருகின்றது என்பது மிகவும் தெளிவாகி வருகின்றது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜேர்மனியில் மிகவும் செல்வாக்கான பரந்த விற்பனையைக் கொண்ட மூன்று செய்தியிதழ்களான Time, The Economist, Der Spiegel ஆகியவை ரஷ்யா உடன் ஒரு பலப்பரீட்சை நடத்துவதற்கான கோரிக்கைகளோடும் விளாடிமீர் புட்டினுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுக்களோடும் சேர்ந்த தலைப்பு செய்திகளைப் பிரசுரித்துள்ளன. இந்த தலைப்பு செய்திகளின் மிகவும் அதிர்ச்சியூட்டும் வெளிப்படையான பண்பு அவை உண்மையில் ஒரேமாதிரி இருப்பதாகும். சிஐஏ அவை அனைத்தைத்திற்கும் எழுத்து வடிவம் அளித்துள்ளது. அந்த செய்திகள் ஒரேமாதிரியான அவதூறுகளையும், ஒரேமாதிரியான கட்டுக்கதைகளையும் பயன்படுத்துகின்றன. அவை புட்டினினது "பொய்களின் வலையமைப்பைக்" குற்றஞ்சாட்டுகின்றன. ரஷ்ய ஜனாதிபதியை ஒரு "இழிந்த" பாரிய படுகொலையாளராக சித்தரிக்கின்றன. இத்தகைய மிகவும் செல்வாக்கான செய்தியிதழ்களின் இம்மாதிரியான மொழிப் பிரயோகத்தைக் கொண்டு ரஷ்ய ஜனாதிபதி என்ன செய்யப் போகின்றார்? அவர் இவற்றை எதிர்கொள்ள வேண்டிய பக்கத்தில் இருக்கிறார், முன்னர் இதேமாதிரியான வசைபாடல் பிரச்சாரங்கள் மூலம் சேர்பியாவின் ஸ்லோபோடன் மிலோசிவிக்கிற்கு எதிராக, ஈராக்கில் சதாம் ஹூசைன், லிபியாவில் மௌம்மர் கடாபி, மற்றும் சிரியாவில் பஷர் அல்-அசாத்திற்கு எதிராக இலக்கு வைத்தனர். இந்த பிரச்சார நடவடிக்கைகளின் விளைவைக் குறித்து புட்டினுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். அரசியல்ரீதியாக அடிபணிய செய்ய சேர்பியா மீது குண்டுவீசப்பட்டதோடு, மிலோசிவிக் ஹேக்கிற்கு அனுப்பப்பட்டு, அங்கே அவர் சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். ஈராக் மீது படையெடுக்கப்பட்டு ஹூசைன் தூக்கிலிடப்பட்டார். லிபியா மீதும் படையெடுக்கப்பட்டு, ஹிலாரி கிளிண்டனின் பெரும் கேளிக்கைகளோடு, கடாபி கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு, விசாரணையின்றி கொல்லப்பட்டார். அசாத்தைப் பொறுத்த வரையில், அங்கே அமெரிக்கா ஒரு இரத்தக்களரியான கிளர்ச்சியைத் திருப்பிவிட்டுள்ளது, அதில் 100,000க்கும் அதிகமான சிரியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த வரலாற்றுபதிவுகளோடு, அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் அவரது மரணத்தை விரும்புகின்றன என்று புட்டின் ஒரு முடிவுக்கு வந்தால் அவருக்கு மனநோய் பிடித்திருக்கின்றது என்று அவரை குற்றஞ்சாட்ட முடியாது. எனவே அவரது இந்த நியாயமாக நிரூபிக்கப்பட்ட சந்தேகம் இந்த மோதல் தீவிரமடையும் போது அவரது சொந்த நடவடிக்கையின் போக்கில் என்ன தாக்கத்தைக் கொண்டிருக்கும்? என ஒருவர் கேட்க வேண்டி இருக்கின்றது. இந்த மூன்று தலைப்பு செய்திகளும் மேற்கு ஐரோப்பிய அரசாங்கங்களும், அமெரிக்காவும், புட்டினிற்கும் ரஷ்யாவிற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க தவறியதைச் சுட்டிக்காட்டி இருந்தன. இந்த மூன்று பத்திரிகைகளும் பொறுமையிழந்து ஆத்திரமான ஒரு தொனியில் போதுமான ஆக்ரோஷம் இல்லையென்று கண்டுகொள்கின்றன. அவை அனைத்தும், பேசுவதற்கான நேரம் முடிந்துவிட்டது என்று வாதிடுகின்றன. “MH17 அழிக்கப்பட்டதோடு இராஜாங்க வழிவகைகளும் அழிக்கப்பட்டுவிட்டதாக" Der Spiegel அறிவிக்கிறது. இந்த அறிவிப்பில் இருந்து என்ன கருத்தினை எடுத்துக்கொள்வது? இராஜாங்க வழிவகைகள் தோல்வி அடைந்தால், அது யுத்தம் உடனடியாக நிகழப்போகிறது என்று மட்டுமே அர்த்தப்படுத்த முடியும். “ரஷ்யாவில், தண்டனையில்லாமல் குற்றம்," என்ற அதன் கட்டுரையில், Time இதழ் எழுதுகின்றது ரஷ்யாவை உடனடியாக யுத்தத்தின் மூலம் அச்சுறுத்தாமல், அதற்கு மாறாக அந்த வெடிப்பு சம்பவத்தின் மீதான விசாரணைக்கு புட்டினை உதவுமாறு கோருவதற்காக ஒபாமாவைத் தாக்குகிறது. “இதுதான் நெருக்கடியின் உள்ளடக்கம்: ஒபாமா அதிகபட்சமாக கேட்கக் கூடியதை குறைந்தபட்சமாக தன்னும் புட்டினால் செய்ய முடியாது. அமெரிக்க ஜனாதிபதி எந்தவொரு இறுதிக்கேட்டையும் அறிவிக்கவில்லை, எந்தவொரு சிவப்பு கோட்டையும் வரையவில்லை, எந்தவொரு அச்சுறுத்தலையும் விடுக்கவில்லை," “இறுதிக்கெடு," “சிவப்புகோடுகள்," மற்றும் "அச்சுறுத்தல்கள்" போன்றவற்றை பிரயோகிப்பது யுத்த மொழியாகும். இந்த வார்த்தைகளை வேறு எவ்வாறு வாசிக்க முடியும்? இத்தாலி, பிரான்ஸையும், ஒபாமா நிர்வாகத்தையும் அத்துடன் ரஷ்யாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆதரிக்காததற்காக அமெரிக்க மக்களையும் கூட Time இதழ் தாக்குகிறது: “போரினால் களைத்து போன ஒரு நாட்டின் தலைவராக ஒபாமா, உக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவது உட்பட, அனைத்து இராணுவ சாத்தியக்கூறுகளையும் கைவிட்டுள்ளார். புட்டின் அவருக்கு எதிராக படைகள் அணிதிரள்வதை காணும்போது, நிறைய கவலைப்பட வேண்டியதிருக்காது.." மிகத் தெளிவாக, Time இதழ் இராணுவ சாத்தியக்கூறுகளை மேசையில் வைக்க விரும்புகிறது. "பொய்களின் வலையமைப்பு" என்ற அதன் பிரதான தலையங்கத்தில்,The Economist இதழும், மேற்கின் தயக்கத்தைக் குற்றஞ்சாட்டி இதே எழுத்தோட்டத்தைப் பின்தொடர்கிறது. அது எழுதுகின்றது “ஜேர்மானியர்களும், இத்தாலியர்களும் இராஜாங்க வழிவகைகளைத் திறந்து வைக்க விரும்புகிறார்கள், விதிக்கப்படும் தடைகள் அவர்களின் வர்த்தக நலன்களைக் கீழறுக்கும் என்பது ஒரு காரணம் ஆகும். பிரிட்டன் தடைகளுக்கு அழைப்புவிடுக்கிறது, ஆனால் லண்டன் நகரின் இலாபகரமான ரஷ்ய வியாபாரத்தைக் கெடுத்துக் கொள்ள தயங்குகிறது. அமெரிக்கா கடுமையாக பேசுகிறது ஆனால் புதிதாக ஒன்றும் செய்யவில்லை," இந்த ஒருங்கிணைந்த ஊடக பிரச்சாரம் ஏற்கனவே விருப்பமான விளைவை உருவாக்கி வருகின்றன. செவ்வாயன்று ஒபாமா நிர்வாகமும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரு புதிய கடுமையான தடைகளின் தொகுப்புக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக அறிவித்தன. இந்த நடவடிக்கைகள், Financial Times கட்டுரையாளர் வொல்ஃப்காங் முன்சௌவ் "நிதியியல் யுத்தத்தின் அணுகுண்டு" என்று வர்ணிப்பதை நோக்கிய ஒரு இடைக்கால நடவடிக்கை என அர்த்தப்படுத்தப்படுகின்றது. முன்சௌவ்வின் எழுத்துக்கள் பைனான்சியல் டைம்ஸில் மட்டுமல்ல, Der Spiegel இலும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. இராணுவ அச்சுறுத்தல்களுடன், பொருளாதார குரல்வளையினை அறுப்பதினை ஒன்றிணைப்பதன் மூலமாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவை அரசியல்ரீதியாக ஸ்திரமின்மைப்படுத்துவதை நோக்கி நகர்கின்றன. ரஷ்ய செல்வந்த மேற்தட்டுக்களுக்கு அவை காட்டும் தொடர்ச்சியான குறிப்புகள் தெளிவுபடுத்துவதைப் போல, நிதியியல் தடைகள் புட்டினைத் தூக்கியெறிய அல்லது அவரை படுகொலை செய்யவும் கூட ஒரு சதிவேலையை ஊக்கப்படுத்துமென அவை நம்புகின்றன. வாஷிங்டன் எதிர்பார்த்திருக்கும் ஆட்சி, ரஷ்யாவை ஒரு நவ-காலனித்துவ ஏவலாட்சி அரசாக மாற்றும் என்பதோடு, அதை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அரசியல், பொருளாதார, இராணுவரீதியாக முற்றிலும் மண்டியிடச் செய்யும். ஒருவேளை, புட்டின் அவரது போக்கை மாற்றிக் கொண்டு தன்னைத்தானே அமெரிக்க கோரிக்கைகளுக்கு அனுசரித்து சென்றால், ஊடக பிரச்சாரங்கள் அதற்கேற்ப சரிசெய்து கொள்ளும். ஆனால், சம்பவங்களோ எந்தவொரு சிஐஏ காட்சியிலும் முன்கணிக்கப்படாத ஒரு திசையிலும் நகர முடியும். உலகின் இரண்டாவது மிகப் பெரிய அணுஆயுதக் கிடங்கைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் ஒரு சக்தியான ரஷ்யாவை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்கும் ஒரு கொள்கையின் அசட்டைத்தனம், மலைப்பூட்டுவதாக இருக்கிறது. கிழக்கு ஐரோப்பா மற்றும் கருங்கடல் பிராந்தியம் முழுவதிலும் இராணுவப் படைகள் ஆயத்தப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், மற்றும் உக்ரேனும் ரஷ்ய படைகளும் அவற்றின் எல்லையோரங்களில் குண்டுவீசி வருகின்ற நிலையில், ஒரு தவறான கணக்கீட்டிற்கான சாத்தியக்கூறு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறுகியகால முடிவு எப்படி இருந்த போதிலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளால் பின்பற்றப்படும் இந்த நிகழ்ச்சி நிரலின் நீண்டகால தாக்கம், பிரளயகரமான விளைவுகளோடு தவிர்க்கவியலாமல் யுத்த திசையை நோக்கி இட்டு செல்கிறது. உலக மக்கள் தொகை முகங்கொடுத்து வரும் அபாயங்கள் குறித்து பரந்தளவிலான மக்களுக்கு பெரிதும் தெரியாமல், தீர்மானங்கள் திரைக்குப் பின்னால் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதே தொழிலாளர் வர்க்கம் முகங்கொடுத்து வருகின்ற மிகப் பெரிய அபாயமாக இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வாரம், ஐரோப்பா முழுவதிலும் இருந்த மந்திரிமார்கள், முடியாட்சியாளர்கள், மற்றும் வியாபார நலன்களின் ஒரு சிறிய சூழ்ச்சியாளர்களால் முதலாம் உலக போர் தொடங்கப்பட்டது, யுத்தத்தில் வெற்றிக்காக அனைத்தையும் பணயம் வைப்பதற்கு அவர்கள் எடுத்த முடிவு, பத்து மில்லியன் கணக்கான மக்களின் மரணங்களுக்கு இட்டுச் சென்றது. இன்றோ, அதேபோன்ற சக்திகள் இந்த பூமியையே அழிக்க இட்டுச் செல்லக்கூடிய அளவிலான ஒரு மோதலுக்கான ஒரு உந்துதலை இயக்கி விடுவதற்கு முன் வந்து கொண்டிருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தின் அரசியல்ரீதியில்-நனவுபூர்வமான தலையீடு இல்லாமல், யுத்தத்தை நோக்கிய அந்த இயக்க உந்துதலை தடுப்பதற்கு அங்கே வேறெந்த வழிவகையும் கிடையாது. 1914இல் அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களைப் போலில்லாமல், இன்றைய நவீன அரசாங்கங்கள் பேரழிவிற்கு துணியமாட்டாது என்பதால், ஒரு அணுஆயுத போர் சாத்தியமில்லை என்று யாராவது நம்பினால் அவர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கின்றார். எந்தவிடயத்திலும், இன்று இருக்கின்ற ஆட்சிகள் முன்பிருந்தவை விட அதிகமாக பொறுப்பில்லாமல் இருக்கின்றன. அதிகரித்துவரும் பொருளாதார, சமூக பிரச்சினைகளால் சூழப்பட்டு, அந்த பிரச்சினைகளுக்கு அவற்றிடம் எந்தவொரு முற்போக்கான தீர்வும் இல்லாமல், அவை யுத்த ஆபத்தை கையிலெடுப்பது பிரயோசனமானது என கருதி அதைநோக்கி முன்னொருபோதும் இல்லாதளவிற்கு நாட்டம்கொண்டுள்ளன. இதனால் தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச போர் எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. |
|