World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The financial bubble economy

நிதியியல் குமிழி பொருளாதாரம்

Andre Damon
28 July 2014

Back to screen version

அமெரிக்க பங்குச் சந்தைகளில் சுமார் இரண்டு மாதங்களின் மிகப் பெரிய வாராந்தர வீழ்ச்சியாக, வெள்ளியன்று அனைத்து மூன்று பிரதான அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளும் சரிந்தன. தொடர்ச்சியாக கிடைத்த மிக பலவீனமான விற்பனை புள்ளிவிபரங்களும், மிகப் பெரிய இணையவழி விற்பனையாளர் அமேசன், மிகப் பெரிய சில்லறை பொருட்களின் விற்பனை நிறுவனம் வோல்-மார்ட், கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட் பரிவரித்தனை நிறுவனம் விசா ஆகிய மூன்று பெருநிறுவனங்களோடு பிணைந்திருந்த செலவுகளின் மீது வந்த பலவீனமான முன்வரைவுகளுமே வெள்ளிகிழமை பங்குகள் விற்கப்படுவதற்கு வினையூக்கியாக இருந்தது.

மிகப் பரந்தளவில், 2009இல் குறைந்தளவில் இருந்த அவற்றின் அளவிலிருந்து, இரண்டு மடங்காகி, சில விடயங்களில் மூன்று மடங்காகி உள்ள, பங்கு மதிப்புகள் மற்றொரு வரலாற்று பொறிவின் விளிம்பில் இருக்கின்றன என்ற ஆளும் வர்க்கத்திற்குள் அதிகரித்து வருகின்ற கவலையைப் பங்குச்சந்தை அதிர்வுகள் பிரதிபலிக்கின்றன.

பங்குச்சந்தைகளின் அசாதாரண உயர்வு முற்றிலுமாக உற்பத்தி நிகழ்முறையில் இருந்து தொடர்பற்று இருக்கிறது என்பதே அமெரிக்க பொருளாதாரத்தின் மிக வெளிப்படையான இரகசியமாகும். அமெரிக்க பொருளாதார வளர்ச்சி முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரிக்கும் குறைவாக, கடந்த ஆண்டு வெறும் 1.8 சதவீதம் மட்டுமே வளர்ந்திருந்தது என்ற போதினும், எஸ்&பி 500 பங்கு குறியீடு 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருந்தது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில், பொருளாதாரம் சுமார் மூன்று சதவீத விகிதத்தில் சுருங்கிய போதினும், அனைத்து மூன்று அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளும் தொடர்ந்து அதிகரித்திருந்தன.

பங்குச் சந்தையின் ஓட்டம் இரண்டு ஒன்றோடொன்று இணைந்த உட்கூறுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது: ஒன்று, தொழிலாள வர்க்கத்திடமிருந்து நிதியியல் மேற்தட்டுக்கு செல்வத்தைத் திட்டமிட்டு கைமாற்றுவது, மற்றொன்று, முக்கியமாக பெடரல் ரிசர்வால் நிதியியல் அமைப்புமுறைக்குள் வரம்பின்றி பணத்தைப் பாய்ச்சுவது என்ற அடிப்படையில் உள்ளது.

பொருளாதார வளர்ச்சியை மேற்கொண்டும் திணறடிக்கும் வகையில், பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் செலவு வெட்டுக்கள் மூலமாக பெருநிறுவன பங்கு விலைகளை ஊதிப் பெருக்க செய்ய வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் பங்குச்சந்தை குமிழி உருவாவதற்கு உதவி உள்ளன. அத்தகைய ஒருங்கிணைப்புகளும், கையகப்படுத்தல்களும் கடந்த ஆண்டில் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதில் ஒரு குறிப்பிடத்தக்க விடயமாக இருப்பது மைக்ரோசாப்டின் அறிவிப்பாகும். நோக்கியாவின் செல்பேசி பிரிவை 7 பில்லியன் டாலரில் அது கையகப்படுத்தியதற்குப் பின்னர், இந்த மாதம் உலகெங்கிலும் உள்ள அதன் 18,000 பணியாளர்களை வேலைநீக்கம் செய்வதாக அது அறிவித்தது.

அமெரிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்காக பெருநிறுவன இலாபங்கள், 1940களின் இறுதியில் இருந்து பின்னோக்கிய புள்ளிவிபரங்களில் வேறெந்த ஆண்டையும் விட கடந்த ஆண்டு மிக அதிகமாக உயர்ந்திருந்தன. ஊக வணிக காய்ச்சலின் ஒரு முறைமை மீண்டுமொருமுறை பெருநிறுவன அமெரிக்காவைப் பற்றி உள்ளது: அதாவது நிறுவனங்கள் இந்த இலாபங்களை முதலீட்டிற்காக அல்லாமல், மாறாக நிர்வாகிகளின் சம்பள உயர்விற்கும், பங்குகளின் ஈவுத்தொகையை உயர்த்துவதற்கும், மற்றும் அவற்றின் சொந்த பங்குகளை வாங்கி விற்பதற்கும் இந்த இலாபங்களைப் பயன்படுத்தி வருகின்றன. பங்குகளை வாங்கி விற்பது இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாதனையளவிற்கு அதன் இரண்டாவது-அதிகபட்ச அளவை எட்டியது, இதற்கு முன்னர் நிதியியல் பொறிவிற்கு சற்று முன்னதாக 2007இன் இரண்டாம் காலாண்டில் அதிகபட்ச அளவை எட்டியிருந்தது.

பங்குச்சந்தை ஓட்டம் மிகத் தெளிவாக ஸ்திரமின்றி இருக்கிறது என்ற உண்மை, சில காலாண்டுகளாகவே கவலையின் புலம்பல்களை உருவாக்கி உள்ளது. “மிகக் குறைந்த வருவாயை உருவாக்கும் சொத்துக்களைத் தேடி, மிக அதிகளவில் பணம் ஓடுவதை மதிப்பீடுகள் எடுத்துக்காட்டுகின்றன என்பது முதலீட்டாளர்கள் மத்தியில் மனக்கவலையை அதிகரிப்பதாக" இந்த மாதத்ததின் தொடக்கத்தில் ஃபிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனம் (Fitch Ratings agency) எச்சரிக்கை விடுத்தது. அந்த தரமதிப்பீட்டு முகமை தொடர்ந்து குறிப்பிடுகையில், இலாபங்கள் மற்றும் நிறுவன பங்குதாரருக்கு கிடைக்கும் வட்டிவிகிதத்தில் தொடர்ந்து வீழ்ச்சி நிலவுவதற்கு இடையே, சந்தைக்குள் என்ன வருகிறதோ அதில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள், வெகு குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக உணருகிறார்கள்," என்று குறிப்பிட்டது.

"அனைத்துமே குமிழி" என்ற நியூ யோர்க் டைம்ஸின் ஒரு கட்டுரையில் இந்த மாதம் ஒரு விமர்சகர், "அங்கே குழப்பத்திற்கு இடமின்றி வெகுசில மலிந்த சொத்துக்கள் மட்டுமே இருக்கின்றன," என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கைகள் சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கமைக்கும் வங்கியால் (BIS) எழுப்பப்பட்ட கவலைகளை எதிரொலித்தது, அந்த வங்கி கடந்த மாதம் குறிப்பிடுகையில், “சந்தைகளில் பணம் புழங்குவதற்கும் பொருளாதார அபிவிருத்திகளின் அடியிலிருக்கும் கூறுகளுக்கும் இடையே ஒரு புதிரான தொடர்பின்மை இருக்கும் உணர்வைத் தடுக்க முடியாமல் இருக்கிறது" என்று முடித்திருந்தது.

ஆமாம், இதுவொரு பங்குச்சந்தை குமிழி தான்" என்ற தலைப்பில் இந்த வாரம் ஒரு குறிப்பைப் பிரசுரித்த ஒரு முன்னாள் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியரும், தற்போதைய முதலீட்டு நிதிய நிர்வாகியுமான ஜோன் பி. ஹஸ்மேனிடம் இருந்து மிகவும் ஆணித்தரமான எச்சரிக்கை வருகிறது. அவர் முடிவாக எழுதினார், “தவறுக்கு இடமின்றி — இதுவொரு பங்குச்சந்தை குமிழியாகும், அதுவும் உயர்ந்தளவில் வளர்ந்த ஒன்றாகும். வரலாற்றுரீதியாக மிகவும் நம்பத்தக்க முறைமைகளின் அடிப்படையில், அது எளிதாக 1972 மற்றும் 1987க்கு அப்பாற்பட்டதாக, 1929 மற்றும் 2007க்கு அப்பாற்பட்டதாக உள்ளது, மேலும் இப்போது இது 2000இன் உச்சத்தில் சுமார் 15 சதவீதத்தில் உள்ளது," என்றார். அவர் முடிக்கையில், “பெடரல் ரிசர்வினால் நிச்சயமாக இந்த குமிழியின் பொறிவைத் தள்ளிப் போட முடியும், ஆனால் தவிர்க்க முடியாமல் விளைவு இதைவிட மோசமானதாக இருக்கும்," என்று முடித்தார்.

அதிகரித்துவரும் பெருநிறுவன இலாபங்களும் பங்கு மதிப்புகளும், பரந்த பெரும்பான்மை அமெரிக்க மக்களின் சமூக நிலைமைகளில் ஒரு பெரும் சரிவை உள்ளடக்கி உள்ளது. ஒரு சமீபத்திய ஆய்வின்படி, பணவீக்கத்திற்கு ஏற்ப ஈடுகட்டப்பட்ட ஒரு சாதாரண அமெரிக்க குடும்பத்தின் நிகர மதிப்பு 2003 மற்றும் 2014க்கு இடையே 36 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்காவில் மத்தியத்தர குடும்ப வருமானம் 2007 மற்றும் 2012க்கு இடையே 8.3 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது, மேலும் உணவு மானிய கூப்பன்களைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 2008க்குப் பின்னர் 70 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது.

அமெரிக்க சமூகம் பாரியளவில் சமூகரீதியில் பின்னோக்கி செல்வதை ஒரு புள்ளிவிபரம் தொகுத்தளிக்கிறது: அதாவது, அமெரிக்காவில் நான்கில் ஒரு குழந்தை உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறது, அதேவேளையில் ஐந்தில் ஒரு குழந்தை பட்டினியில் போகும் அபாயத்தில் உள்ளது.

2008 பொறிவானது அண்மித்தளவில் ஒட்டுமொத்த உலக நிதியியல் அமைப்புமுறையையும் கீழ்நிலைக்குக் கொண்டு வந்ததோடு, மீட்சி இல்லாத ஓர் உலகளாவிய மந்தநிலையைத் தூண்டிவிட்டது. முக்கியமாக பெடரல் அதன் வட்டிவிகிதங்களை பூஜ்ஜியம் அளவிற்குக் குறைத்துள்ளது, வங்கிகள் இலவசமாக பணம் பெறுவதை அனுமதிக்கும் விதத்தில், அது ஆறு ஆண்டுகளுக்கு அண்மித்தளவில் அதே நிலையில் நின்று கொண்டிருக்கிறது. சொத்து வாங்கும் பல்வேறு திட்டங்கள் மூலமாக, பெடரல் 2008இல் இருந்து அதன் இருப்புநிலை கணக்கின் அளவை மூன்று மடங்காக்கி உள்ளது. இதே கொள்கை சர்வதேச அளவில் பின்பற்றப்பட்டு இருப்பதோடு, தொழிலாள வர்க்கத்தை நோக்கி திருப்பிவிடப்பட்ட முன்னொருபோதும் இல்லாத சிக்கன நடவடிக்கைகளும் அதனோடு இணைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த விளையாட்டு என்றென்றும் போய் கொண்டே இருக்க முடியாது. இறுதியாக, நிதியியல் சொத்துக்களின் மதிப்புகள் வீழ்ச்சி அடைந்தே ஆக வேண்டும். அவ்வாறு பொறிவுக்கு வரும் போது ஏற்படும் விளைவுகள் 2008 நிதியியல் உருகுதலில் இருந்ததை விட இன்னும் மேலதிகமாக மலைப்பூட்டும் அளவிற்கு இருக்கும்.

அமெரிக்க ஆளும் மேற்தட்டு வரலாற்றுரீதியில் ஒரு முட்டுச்சந்தை எட்டியுள்ளது. அது ஒரு நெருக்கடியிலிருந்து ஒரு நெருக்கடிக்கு என தடுமாறிக் கொண்டு, எரிபொருளை ஊற்றி எரியூட்டி தீர்த்துக் கட்ட முயன்று வருகிறது. அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு காட்டப்படும் இந்த நடைமுறைவாத, குறுகிய கண்ணோட்ட மற்றும் ஒட்டுண்ணித்தனமான அணுகுமுறை, நிதியியல் மேற்தட்டின் அடிப்படை அங்க இலட்சணத்தின் வெளிப்பாடாகும். இந்தவொரு சமூக அடுக்கு தான் அதன் செல்வத்தை உற்பத்தி நடவடிக்கை மூலமாக அல்லாமல், மாறாக சமூகத்தைக் கொள்ளையடித்ததன் மூலமாக பெருந்திரளாக குவித்துக் கொண்டிருக்கிறது: அதாவது ஓய்வூதிய நிதிகளைச் சூறையாடியும், கூலிகளை வெட்டியும், தொழில்துறை ஆலைகளை மூடியும் மற்றும் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியும் அதைச் செய்திருக்கிறது.

அமெரிக்க முதலாளித்துவத்தின் இந்த உள்ளார்ந்த சமூகப்பொருளாதார நெருக்கடி, அமெரிக்க வெளியுறவு கொள்கையில் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது, அதாவது அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்திற்குள் இருக்கும் ஆளும் வர்க்கமும் அதன் பிரதிநிதிகளும் எதைக் கொண்டு உலகெங்கிலும் மோதலைத் தூண்டிவிடுகிறார்களோ அது அசாதாரண அடாவடித்தனமாக வெளிப்படுகிறது.

உள்நாட்டில் ஒரு பொருளாதார மற்றும் அரசியல் சீரழிவை முகங்கொடுத்து வரும் அமெரிக்க ஆளும் மேற்தட்டு, உலகளாவிய பொருளாதாரத்தில் அதன் இடத்தை உயர்த்தி வைக்க பெரும்பிரயத்தனத்தோடு யுத்தத்தை ஒரு கருவியாக்க முனைகிறது மற்றும் உள்நாட்டு சமூக கோபத்தை யுத்தங்கள் மற்றும் வெளிநாட்டு தலையீடுகளுக்குள் திருப்பிவிட முனைகிறது. பொருளாதார நெருக்கடியின் ஒவ்வொரு கட்டமும் ஏகாதிபத்திய வன்முறையின் ஒவ்வொரு மிகப்பெரிய பெரும் தாக்குதலோடும் இணைந்திருக்கிறது.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கொள்கை, ஒரு ஆழ்ந்த அர்த்தத்தில், முட்டாள்தனமானதாகும். எவ்வாறிருந்த போதினும், அது சமூகரீதியில் நிபந்தனைக்குட்பட்ட பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, இந்த பைத்தியக்காரத்தனம் ஒரு திவாலான பொருளாதார அமைப்புமுறையையும் மற்றும் புரட்சிக்கு முந்தைய ஒரு சமூக ஒழுங்குமுறையையும் வெளிப்படுத்துகிறது.