தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை ஐ.நா இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு குழுவை நியமித்தது
By W.A. Sunil Use this version to print| Send feedback ஐ.நா மனித உரிமைகள் ஆணைக் குழு (UNHRC) தலைவர் நவநீதம் பிள்ளை, கடந்த வாரம், 2009ல் பிரிவினைவாத தமிழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி மாதங்களில், இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் பாதுகாப்பு படைகள் செய்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு சர்வதேச விசாரணைக்கு குழுவை அறிவித்தார். கால் நூற்றாண்டுக்கும் மேலான உள்நாட்டுப் போரின் போது, இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்க சார்பு கொலைப் படைகளால் சுமார் 200,000 மக்கள், பிரதானமாக தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஐநா நிபுணர் குழு, ஏனைய பல போர்க் குற்றங்களுக்கும் பொறுப்பான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ், கடைசி மாதங்களில் நடந்த இராணுவத் தாக்குதல்களில் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. ஒரு சர்வதேச விசாரணையை கோரி, கடந்த மார்ச்சில் யுஎன்எச்ஆர்சி கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு அமெரிக்க ஆதரவுடைய தீர்மானத்தை அடுத்தே, இந்த குழு நியமனம் செய்யப்பட்டது. இந்த தீர்மானம், இலங்கை நோக்கிய அமெரிக்கக் கொள்கையில் மேலும் கூர்மையான மாற்றத்தைக் குறித்தது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த இனவாத யுத்தத்தை ஆதரித்தன. இராஜபக்ஷ அரசாங்கம் போரில் வெற்றி பெற ஆயுதங்கள் மற்றும் நிதியும் வழங்கிய பின்னர், போருக்கு பிந்தைய இலங்கையில் சீனா குறிப்பிடத்தக்க செல்வாக்கைப் பெறும் என்பது தெளிவான போதே, அவை போரின் இறுதி கட்டத்தின் போது இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றி விமர்சிக்கத் தொடங்கின. இந்த ஆண்டு வரை, சீனாவில் இருந்து இராஜபக்ஷவை தூர விலகச் செய்வதற்கான அமெரிக்க அழுத்தம், ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுப்பதுடன் நின்றுள்ளது. இது போர்க்குற்ற குற்றச்சாட்டை முன்கொணர்வதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. ஒபாமா நிர்வாகம், சீனாவை இராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்தி இராணுவ ரீதியில் சுற்றி வளைப்பதற்கான அதன் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையை தீவிரமாகத் தொடர்கின்றது. வாஷிங்டன் ஆத்திரமூட்டும் வகையில், ஒரு பரந்த யுத்தத்தை வெடிக்கச் செய்யும் இராணுவ மோதல்கள் ஏற்படக்கூடியவாறு, கடற்பகுதி உரிமை தொடர்பான முரண்பாடுகளில் சீனாவுக்கு எதிராக ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமை ஊக்குவிக்கின்றது. இராஜபக்ஷ அரசாங்கம் பெய்ஜிங் உடனான அதன் நெருக்கமான உறவுகளை முறித்துக்கொண்டு அமெரிக்காவுக்கு துணைநிற்க வேண்டும் என்பதே வாஷிங்டனின் விருப்பமாகும். இலங்கை தொடர்பான மூன்று உறுப்பினர் கொண்ட ஐநா குழுவில் பின்வருவோர் அடங்குவர். பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும் கொசோவோவுக்கான ஐநா சிறப்பு தூதருமான மார்ட்டி ஆடிசாரி, அமெரிக்க ஆதரவுடைய கொசோவோ ஆட்சியை உருவாக்கும் செயல்முறையில் ஈடுபட்டிருந்தவர். முன்னாள் நியூசிலாந்து ஆளுனர் நாயகம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான சில்வியா கார்ட்ரைட், கேமர் ரூஜ் போர் குற்றங்கள் தொடர்பான கம்போடியா நீதிமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர்; பாக்கிஸ்தான் நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர், ஐநா சிறப்புக் கூட்ட அறிக்கையாளராக இருந்தவர். "விசாரணையின் போது ஆலோசனை வழங்குதல் மற்றும் வழிகாட்டுதல் அத்துடன் சுயாதீன சரிபார்ப்பு ஆகிய முறையில் ஒரு உதவி வகிபாகத்தை" இந்தக் குழு வழங்கும் என பிள்ளையின் அலுவலகம் தெரிவித்தது. 12 பேர் கொண்ட விசாரணைக் குழு, ஐநாவின் மூத்த அதிகாரி சாண்ட்ரா பெய்டாசினால் ஒருங்கிணைக்கப்படும். இவர், நேபால், ஹெய்டி, சூடான் மற்றும் சோமாலியாவில் ஐநாவின் முந்தைய தலையீடுகளில் முன்னணி வகிபாகம் ஆற்றியவர். விசாரணைகள் 2015 ஏப்ரல் நடுப்பகுதி வரை பத்து மாதங்கள் நடத்தப்படும். ஐநா மனித உரிமைகள் சபையில் மார்ச் மாதம் கூட்டாக தீர்மானத்துக்கு அனுசரணையளித்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தும், குழுவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மாரி ஹார்ஃப், இலங்கை அரசாங்கம் யுஎன்எச்ஆர்சியுடனும் அதன் விசாரணைகளுடனும் முழுமையாக ஒத்துழைப்பதோடு, "ஜனநாயக ஆட்சி, மனித உரிமைகள், நல்லிணக்கம், நீதி, மற்றும் பொறுப்புடைமை தொடர்பாக நிலவும் அதிகப் பிரச்சினைகளை அணுகுவதற்கு அர்த்தமுள்ள மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று வாஷிங்டன் "பலமாக வலியுறுத்துகிறது" என்று தெரிவித்தார். இந்த அறிக்கைகள் இரட்டை பாசாங்குத்தனம் ஆகும். இரு நாடுகளும் முழுமையாக இலங்கை யுத்தத்தை ஆதரித்ததுடன் அனைத்து உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்களுக்கு அவையும் பொறுபேற்க வேண்டும். வாஷிங்டன் மற்றும் லண்டனும் தசாப்தங்களாக நீளும் பலவகையான போர் குற்றங்களுக்கு பேர் போனவை. உதாரணத்திற்கு சிலவற்றை கூறினால், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா தலைமையிலான படையெடுப்புக்களில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லிபியா மற்றும் சிரியாவில், ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவிலான ஆட்சி மாற்ற நடவடிக்கைகளும் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதும் மேலும் அட்டூழியங்களுக்கு வழிவகுத்துள்ளன. இராஜபக்ஷவின் அரசாங்கம் ஐநா தீர்மானத்தை நிராகரித்துள்ளதோடு இலங்கைக்கு வருகைதரவுள்ள ஆய்வுக் குழு உறுப்பினர்களுக்கு விசா வழங்க மறுத்துவிட்டது. இராணுவ உயர்மட்டத்தினர் மட்டுமன்றி, இராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய இராஜபக்ஷவினதும் உடந்தை தொடர்பான ஆதாரங்கள் உள்ள போதும், போர் குற்றங்கள் தொடர்பாக எந்த பொறுப்பும் ஏற்க அரசாங்கம் இன்னமும் முழுமையாக மறுத்து வருகின்றது. எனினும், குழு விசாரணையை முன்னெடுக்கின்றது. ஜஹாங்கிர் பிபிசிக்கு கூறியதாவது: "ஒரு அரசாங்கத்தின் ஒத்துழையாமை சர்வதேச விசாரணைகளை நிறுத்த முடியாது." "விசாரணைக் குழுவின் முன் வாக்குமூலம் கொடுக்காமல் மக்களை தடுக்கும் முயற்சிகள் தனது சொந்த நிலைமையையே மோசமாக்கும்" என்று அவர் இலங்கை அரசாங்கத்தை எச்சரித்தார். மார்ச் மாதம், தெற்காசியாவுக்கான அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால், ஒபாமா நிர்வாகம் இலங்கை மீது பொருளாதார தடைகளை விதிப்பது பற்றி முடிவு செய்யவில்லை என்றார். இராஜபக்ஷ வழிக்கு வந்தால், வாஷிங்டன் விரைவில் அதன் "மனித உரிமைகள்" கோரிக்கைகளை கைவிடும். எனினும், இல்லை என்றால், மற்ற தேர்வுகளில் ஆட்சி மாற்றமும் உள்ளடங்கக் கூடும்.
இராஜபக்ஷ,
போர்
குற்றங்கள்
மற்றும்
தொழிலாள
வர்க்கத்தின்
வாழ்க்கை
நிலைமைகள்
மீதான
அரசாங்கத்தின்
தாக்குதல்களில்
இருந்தும்
கவனத்தை
திசை
திருப்புவதற்காக,
தேசிய
உணர்வுகளை
தூண்டிவிடுவதன் பேரில்
மேற்கத்திய-விரோத
வாய்ச்சவடால் விடுக்க
ஐநா
விசாரணையை
பயன்படுத்தி
வருகின்றார்.
இராஜபக்ஷ,
தனது
அரசாங்கம்
"சர்வதேச
சமூகத்தினால்"
தண்டிக்கப்படுவதாக
கூறினாலும்,
நாடுகளின்
பெயர்களை
கூறுவதில்லை.
ஜனவரியில், இலங்கை தொடர்பாக ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த தோமஸ் ஆலோசனை குழு என்ற ஒரு நிறுவனம், இலங்கை “இந்து சமுத்திரத்தின் பிரதான கடல் வர்த்தக பாதைகளின் அருகில் அமைந்துள்ளதுடன்” சீனா ஏற்கனவே "நாட்டுக்குள் ஊடுருவியுள்ளது" என்று சுட்டிக்காட்டியது. “அமெரிக்கா உடனான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படுவதை” இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறது என்று தோமஸ் ஆலோசனை குழு தெளிவுபடுத்தியுள்ளது. விசாரணையை நிராகரிக்க பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தமிழ் முதலாளித்துவத்தின் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்த அதே வேளை, ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ), மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பங்காளியான ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் (ஸ்ரீலமுகா) வாக்களிப்பை பகிஷ்கரித்தன. இராஜபக்ஷ அரசாங்கத்துடனான ஒரு "அதிகாரப் பகிர்வு" உடன்படிக்கைக்கு தமிழ் கூட்டமைப்பு அமெரிக்க ஆதரவை பெற முயற்சிக்கின்றது. அதற்கு தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக அக்கறை கிடையாது. அது தனது சொந்த முதலாளித்துவ நலன்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றது. ஸ்ரீலமுகா இதில் வேறுபட்டதல்ல. அரசாங்க-சார்பு பௌத்த அதிதீவிரவாத சக்திகள் அண்மையில் முஸ்லிம்கள் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தியமை, இராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலமுகாவுக்கும் இடையே பதட்டங்களை தூண்டிவிட்டு, அதை பகிஷ்கரிக்க நெருக்கியுள்ளது. ஜேவிபீ மற்றும் யூஎன்பீயைப் பொறுத்தவரை, யூஎன்பீ தமிழர்-விரோத போரை தொடங்கியதுடன், இரண்டு கட்சிகளும் 1983ல் இருந்து கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் இராணுவத் தாக்குதல்களுக்கு ஆதரவு வழங்கி வந்துள்ளன. பெருவணிக பாரம்பரிய கட்சியான யூஎன்பீ, அமெரிக்க நகர்வுகளுக்கு அதன் ஆதரவை சமிக்ஞை செய்து, சர்வதேச விசாரணையை அனுமதிப்பதாக கூறிய அதே வேளை, "ஜனநாயக ஆட்சி அமைப்பையும் நிறுவனங்களையும் மீள ஸ்தாபிக்குமாறு" அரசாங்கத்தை வலியுறுத்தியது. ஜேவிபீ, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஒரு பாரபட்சமற்ற விசாரணையை கோரி பாராளுமன்றத்திற்கு திருத்தங்களை சமர்ப்பித்தது. ஆனால் ஆளும் கூட்டணி அதை நிராகரித்தது. ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக ஜேவிபீ காட்டிக்கொள்வது, அரசாங்கத்தின் மீது பெருகி வரும் மக்கள் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்கான ஒரு சூழ்ச்சியே ஆகும். சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் உழைக்கும் மக்கள், வாஷிங்டன் மற்றும் கொழும்பில் உள்ள போர் குற்றவாளிகளுக்கு எதிராக தமது சொந்த சுயாதீனமான வர்க்க நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அவர்கள், வாஷிங்டன் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளின் மனித உரிமைகள் பற்றிய சூழ்ச்சிகளுக்கு எந்த ஆதரவும் கொடுக்காத அதே வேளை, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அல்லது முதலாளித்துவத்தின் வேறு எந்த பிரிவுக்கும் ஆதரவளிப்பதை நிராகரிக்க வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் மட்டுமே போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் மீது குற்றம் சுமத்தவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் முடியும். தெற்காசியாவிலும் அனைத்துலகிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக –ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை- ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அமைக்கப் போராடுவதே இதன் அர்த்தமாகும். |
|
|