தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை இலங்கையில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களும் தமிழ் மற்றும் முஸ்லீம் முதலாளித்துவ அரசியலும்By V.
Sivagnanan Use this version to print| Send feedback இலங்கையில் கடந்த மாதம் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக அதிவலதுசாரி பொது பல சேனாவின் தலைமையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் சம்பந்தமாக பரவலாக வெகுஜனங்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சியடைந்திருந்தது. தமிழ் மற்றும் முஸ்லீம் முதலாளித்துவ அரசியல் கட்சிகள், இந்த இனவாத தாக்குதல்களுக்கு மூலகாரணமான அரசாங்கத்தின் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவிடமே நீதியைப் பெற்றுத்தருமாறு அழைப்புவிடுப்பதுடன் நிறுத்திக்கொண்டன. இதற்கு அழுத்தம் கொடுக்குமாறு ஏகாதிபத்தியங்களுக்கும் அழைப்பு விடுத்தன. இந்த தாக்குதல்கள் அரசாங்கத்தினதும் அரச படைகளினதும் அனுசரணையுடன் நடத்தப்பட்டவை என்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜனாதிபதி இராஜபக்ஷவின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய இராஜபக்ஷ, கடந்த வருடம் பொது பல சேனாவினால் உருவாக்கப்பட்ட “பௌத்த தலைமைத்துவ கல்லூரியில்” பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றி இருந்தார். அவர் அங்கு “இந்த பௌத்த குருமார் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கின்றனர், இவர்கள் யாருக்கும் பயப்படாத அல்லது ஒருவரதும் சந்தேகத்திற்கும் உட்படாதவர்கள்” என்று அறிவித்திருந்தார். ஜனாதிபதி இராஜபக்ஷவை சந்தித்த, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் (ஸ்ரீலமுகா), அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள், தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதற்கான வாக்குறுதிகளை பெறுவதுடன் திருப்திபட்டுக்கொண்டதன் மூலம், தமது அமைச்சர் பதவிகளை தக்கவைத்துக்கொண்டனர். இந்த முஸ்லிம் முதலாளித்துவத் தட்டுக்கள், அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் தங்களது சிரப்புரிமைகளை தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றன. ஆரம்பத்தில் அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக அச்சுறுத்திய ஸ்ரீலமுகா தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பின்னர், அரசாங்கத்தில் அங்கம் வகித்தால் அதிகம் செய்ய முடியும் என்று கூறி பின்வாங்கிக்கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லீம் கவுன்சிலின் உப தலைவர் ஹில்மி அஹமத், பாதுகாப்புச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், “அளுத்கமவிலும் பேருவளையிலும் நடந்த வன்முறைகள், உருவாக்கப்பட்டிருந்த உறுதி நிலையினையும் முதலீட்டாளார்களின் நம்பிக்கையினையும் அழித்தொழித்து விட்டது. ஸ்ரீலங்காவினராகிய நாம் வன்முறை எந்த விதமான வடிவத்திலும் ஒருபோதும் உருவாகாமல் இருப்பதனை உறுதி செய்ய இணைந்து செயல்பட வேண்டும். அத்துடன் ஸ்ரீலங்கா ஒரு சமாதானமான, உறுதியான, பல மத, பல கலாச்சாரமான தேசம் என்ற தோற்றத்தினை மீண்டும் கட்டியெழுப்ப ஆதரவு வழங்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார் . இது, இந்த சகல கட்சிகளும் இலங்கை முதலாளித்துவத்தினதும் முதலீட்டாளர்களதும் நலன்களை மட்டுமே பிரதிநித்துவம் செய்கின்றன என்பதை தெளிவாகக் காட்டுகின்றது. இந்த அரசியலில் இருந்து வேறுபட்டிராத தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் மற்றும் அமைப்புகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், தமிழ் முதலாளித்துவத்தின் அரசியலுக்கு இலாபம் தேடுவதை இலக்காகக் கொண்ட, வஞ்சகத்தனமான அரசியல் கணிப்புக்களை கொண்டவை ஆகும். கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடனான பேரம் பேசலில் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கைப் பெற்றுக்கொள்வதன் மூலம், தமிழ் முதலாளித்துவத் தட்டினரின் சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்ள எதிர்பார்க்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது பெரும் வல்லரசுகளின் கவணத்தை குவியப்படுத்த முஸ்லிம்-விரோத தாக்குதல்களை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது. முஸ்லிம் மக்களை இணைத்துக்கொள்வதன் மூலம் கொழும்பின் மீது அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் அழுத்தத்தை உக்கிரமாக்க முடியும் என அது கணக்கிடுகின்றது. பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பு அரசாங்கத்தின் இனவாத யுத்தத்துக்கு முழுமையாக ஆதரவளித்த அமெரிக்கா, யுத்தத்தின் முடிவில் இலங்கை இராணுவம் இழைத்த போர் குற்றங்கள் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடத்துமாறு இப்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானங்களைக் கொண்டுவருவது, தமிழ் மக்கள் மீதான அக்கறையினால் அல்ல. மாறாக, புலிகளின் இராணுவத் தோல்வியின் பின்னர் இலங்கை சீனாவுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவில் இருந்து இராஜபக்ஷவை தூர விலகச் செய்வதற்காகவே ஆகும். தாக்குதல்களை அடுத்து யாழ்ப்பாண பேருந்து நிலையத்தின் முன்னால் தமிழ் கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளும் ஒரு “கவனஈர்ப்பு” ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தன. டசின் கணக்கான கட்சித் தலைவர்களும், அவர்களின் நெருங்கிய வயதான ஆதரவாளர்களுமாக இருநூறுக்கும் மேற்படாதவர்களே இதில் பங்குகொண்டிருந்தனர். இத்தகைய தாக்குதல்களை நிறுத்துமாறும் தாக்குதல்காரர்களை கூண்டில் ஏற்றுமாறும் இராஜபக்ஷவுக்கு பயனற்ற அழைப்பு விடுக்கும் கோஷங்கள் இங்கு எழுப்பப்பட்டன. தமிழ் முதலாளித்துவ கட்சிகளின் அரசியலை நிராகரிப்பதன் வெளிப்பாடாக, யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறியுள்ள முஸ்லீம்கள் உட்பட்ட பெரும்பான்மையான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ் கூட்டமைப்பு முஸ்லீம் மக்களை தமிழ் மக்களோடு ஐக்கியப்படுமாறு அறிக்கைகளூடாக அழைப்பும் விடுத்தது. “தமிழ் கூட்டமைப்பின் இந்த நேசக்கரத்தை முஸ்லிம்கள் நன்றாகப் பற்றிக் கொள்ள வேண்டும்” “முஸ்லிம்களின் பாதுகாப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போராட்டத்தில்தான் தங்கியுள்ளது” என ஆலோசனை வழங்கும் பல கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இந்த அழைப்பை முஸ்லீம் உழைக்கும் மக்கள் நிராகரித்தமை, அவர்கள் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் ஐக்கியத்தினை நிராகரிப்பதாக ஆகாது. பதிலாக, பாரம்பரிய தமிழ் முதலாளித்துவத்தின் முஸ்லீம்-விரோத அரசியலையே அவர்கள் நிராகரித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள், 1990ல் ஒரே இரவில் வடமாகாணத்தின் பலபாகங்களில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றியமையும், கிழக்கில் அவர்களை படுகொலை செய்தமையுமே, அவர்களை சிங்கள இனவாத அரசாங்கங்களை ஆதரிக்கும் முஸ்லீம் கட்சிகளின் பக்கம் திருப்பியது. அந்த நடவடிக்கைகளில் அன்று புலிகளின் ஊதுகுழலாக இருந்த இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பொறுப்பு ஒன்றும் குறைவானதில்லை. புலிகளின் மிச்ச சொச்சங்களில் ஒன்றான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என அழைக்கப்படுவதன் பிரதமர் விசுவநாதன் உருத்ரகுமாரனின் அறிக்கை, “தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் ஒன்றாக இணைந்து போராடவேண்டிய உன்னதமான தருணம் வந்துவிட்டது என்பதனை நாம் விரைந்து சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்” என்று தெரிவித்தது. அது அவரது குழுவோ அல்லது ஏனைய குழுக்களோ தங்களது பாரம்பரியமான முஸ்லீம் விரோத அரசியலினை கைவிட்டதினை காட்டவில்லை. இனப் படுகொலைகளுக்கு எதிராக, ஏகாதிபத்திய அரசுகளின் தலையீட்டில் ஒரு போர்குற்ற விசாரணையை கோரி மேற்கு நாடுகளின் தலைநகரங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னும் காலத்திற்கு காலம் ஆர்ப்பாட்டம் செய்யும் இந்த குழுக்கள், முஸ்லீம்கள் மீதான இனவாத தாக்குதல்கள் தொடர்பாக மௌனம் சாதித்தே வந்துள்ளன. மேற்கு நாடுகளில் முஸ்லிம்-விரோத தாக்குதல்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தவர்கள் தமது மனிதநேய எண்ணங்களின் உயர்ந்த தன்மையை காட்டிய போதிலும், அவற்றின் ஏற்பாட்டாளர்களின் அரசியல் நோக்கங்கள், இராஜபக்ஷாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஏகாதிபத்தியத்தின் ஆதரவைத் தேடுவதையே குறியாகக் கொண்டிருந்தன. இதனால் இவை புலம்பெயர்ந்துள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் உழைக்கும் மக்களை பெருமளவில் அணிதிரட்ட இலாயக்கற்றிருந்த அதேவேளை, போருக்கும் இனவாதத்திற்கும் எதிரான தொழிலாளர்களையும் பரந்துபட்ட மக்களினையும் நிராகரித்தன. நியூயோர்க்கில் ஐ.நா. தலைமை செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த “வட அமெரிக்காவில் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் சங்கம்” (The Association of Sri Lankan Muslims In North America) என்ற அமைப்பு, “சர்வதேச சமூகமே பாதிக்கப்படும் முஸ்லிம்களை பாதுகாக்க குரல் கொடு”, “எங்களுக்கு அரசாங்கம் வேண்டுமே தவிர பொது பல சேனா அல்ல“, என்ற சுலோகங்களை முன்வைத்தது. இதே அமைப்பு வெள்ளை மாளிகையின் வலைத் தளத்தில், “திரு. ஜனாதிபதி இலங்கையில் மத சிறுபான்மையோர் மீதான தாக்குதல்களை நிறுத்து! பொது பல சேனாவின் வெறுப்பு நடவடிக்கைகளை தடை செய்!“ என்று ஜனாதிபதி ஒபாமாவுக்கு வேண்டுகோள் விடுக்கும் ஒரு கையெழுத்து பிரச்சாரத்தினையும் ஆரம்பித்துள்ளது. லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்திய, பிரித்தானியாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு (Sri Lanka Muslim Diaspora Initiative SLMDI-UK), “முஸ்லிம்களின் பாதுகாப்புக்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் டேவிட் கமரூன் மூலமாக வலியுறுத்தும் நோக்குடனும்” “இனி இவ்வாறான இனவாதம் எப்போதுமே வராத வரை சர்வதேசத்தில் எமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்து, இனவாதத்துக்கு எதிரான சர்வதேச தலையீட்டைக் கவரும் பணியை செய்யும் தேவை உணரப்பட்டு” இந்த பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தது. போராட்டம் தமது கட்டுப்பாட்டை மீறுவதை தவிர்க்கும் முகமாக, “எமது ஊழியர்கள் வழங்குகின்ற சுலோகங்கள் கொடிகள் மற்றும் பேனர்கள் தவிர வேறெதுவும் அனுமதியின்றி பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது” என அது அறிவுறுத்தியிருந்தது. சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னிணியில் (ஜேவிபி) இருந்து பிரிந்த சம உரிமை இயக்கத்தினரும் லண்டனிலும் பிரான்சிலும் கண்டன நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். “ஐ.நா உடனடியாக நடவடிக்கை எடு!“ “திரு. ஜனாதிபதி சமாதனம் உருவாக்குவதற்கு எங்களுக்கு உதவி செய்!” என்று அவர்கள் ஏகாதிபத்தியங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். கனேடிய தமிழ் எழுத்தாளர் மற்றும் கலைஞர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம்களும் பங்குபற்றியிருந்தனர். "சர்வதேசமே சிறுபான்மை மக்களுக்கு தோள் கொடு!“, “சர்வதேச சமூகமே எங்களுக்கு உடனடியான பதில் தேவை!“, “கனடா பொது பல சேனாவை தடைசெய்!“ போன்ற சுலோகங்களை அவர்கள் ஏந்தியிருந்தனர். கடந்த தசாப்தத்தில் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளின் அரசாங்கங்கள், “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்", "மனித உரிமைகள்" பாதுகாப்பு, "பேரழிவு ஆயுதங்கள்" களைவு என்ற பொய்களை அடித்தளமாகக் கொண்டு பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றொழித்து, மில்லியன் கணக்கான மக்களை அகதிகளாக்கியுள்ளன. இந்த ஆட்சியாளர்கள் உள்நாட்டில் வாழ்க்கைத் தரங்களை மூன்றாம் உலக நாடுகளின் மட்டத்திற்கு தரம்குறைக்கும் தாக்குதல்களை முன்னெடுக்கின்றனர். மேற்குறிப்பிடப்பட்ட அமைப்புகள், இத்தகைய ஏகாதிபத்திய சக்திகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் அவற்றின் சொந்த குற்றங்களை மூடி மறைத்து அவற்றுக்கு ஜனநாயகப் போர்வையை போர்த்தும் அதே வேளை, இத்தகைய இனவாத தாக்குதல்கள் முதலாளித்துவ அமைப்பு முறையினது விளைவுகள் என்பதையும் மூடி மறைக்கின்றன. இராஜபக்ஷ அரசாங்கம் பெரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கியுள்ள நிலையிலேயே இந்த முஸ்லிம்-விரோத தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 1948ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காகவும் முதலாளித்துவ ஆட்சிக்கு முண்டு கொடுக்கவும் இனவாதத்தை நாடி வந்துள்ளன. கல்வி, சுகாதாரம் உட்பட நலன்புரி சேவைகளை வெட்டித் தள்ளி மக்களின் வாழ்க்கைத் தரங்களை சீரழிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை அமுல்படுத்திவரும் இராஜபக்ஷ அரசாங்கமானது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களினதும் தொடரும் போராட்டங்களை எதிர்கொண்டு வருகின்றது. அனைத்து வர்க்கப் போராட்டங்களில் இருந்தும் இலங்கையின் முதலாளித்துவ அரசினை பாதுகாத்துக்கொள்ள செயற்படும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் முதலாளித்துவக் கட்சிகளில் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது. அதேபோல், நவ சமசமாச கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) போன்ற போலி இடதுகள், வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கூட்டாக செயற்படுவதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளன. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள், தமது அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வென்றெடுக்கவும் தமது வர்க்க சகோதரர்களான சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதனது இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் (சோசக) மட்டுமே யுத்தம் மற்றும் இனவாதத்தின் தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்பை தூக்கி வீசி, அதை சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் பதிலீடு செய்வதற்காக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுகின்றன. இந்த வேலைத் திட்டத்தின் மூலம் மட்டுமே சகல மக்களதும் அடிப்படை ஜனநயாக உரிமைகளை பாதுகாக்க முடியும். |
|
|