சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கையின் வடக்கில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு அதிகரிக்கின்றது

By Vimal Rasenthiran
24
July 2014

Use this version to printSend feedback

ஜூலை 15 அன்று, யாழ்ப்பாண குடாநாட்டின் தீவுப் பகுதியான காரைநகரில், ஊரிக் கிராமத்தில் இலங்கை கடற்படையின் குழுவினரால் பதினோரு வயது தமிழ் பாடசாலை சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்றொரு ஒன்பது வயது குழந்தைக்கும் இதே கதி நேர்ந்துள்ளது. சமீபத்திய குற்றமானது நாட்டின் யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பாதுகாப்புப் படையினரின் இத்தகைய பல துஷ்பிரயோகங்களில் புதியதாகும், மற்றும் இது பிராந்தியத்தில் நிலவும் இராணுவ ஒடுக்குமுறையின் ஒரு பாகமுமாகும்.

காரைநகர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருவதோடு ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக முன்னெடுத்த நீண்ட கால இனவாத யுத்தத்தால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறுமி பாடசாலைக்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது, கடற்படை சிப்பாய்களால் கடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். ஒரு முதியவர் இதை அறிந்து அவளை காப்பாற்ற சத்தமிட்ட போது, கடற்படை வீரர்கள் அந்த இடத்தை விட்டு ஓடினர். பின்னர் அவர் ஆடைகளை அணிவித்து உறவினர்களுக்கும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளார். சிறுமி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போக்குவரத்து இல்லாததால் அவள் சுந்திரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்துக்கு தினமும் மூன்று கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருந்தது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, 2009 மே மாதம் புலிகளின் இராணுவத் தோல்வியின் பின்னர், தனது இராணுவம் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ், "மனிதாபிமான" மற்றும் "அபிவிருத்தி" நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்று கூறிக்கொள்கின்ற நிலைமையிலயே இது இடம்பெற்றுள்ளது.

குற்றத்தை மூடி மறைப்பதற்கான உடனடி முயற்சியில், கடற்படையும் மற்றும் அதனுடன் இணைந்த துணை படைக் குழுவும் ஆளும் கூட்டணியின் பங்காளியுமான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (.பி.டி.பி), அச்சுறுத்தல் வழிமுறைகளை பயன்படுத்தின. காரைநகர் பிரதேச சபை உறுப்பினரும் .பி.டி.பி. அமைப்பாளருமான ரஜனி என்றழைக்கப்படும் வி. கண்ணன், "பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம், குறிப்பிட்ட கடற்படை வீரர்கள் இடம் மாற்றம் செய்யபட்டுள்ளனர்" என்று உறவினர்களிடம் கூறியுள்ளார். "அவர்களிடம் இருந்து ஏதாவது உதவி பெற்றுத் தருவதாகவும்" அவர் வாக்குறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவளின் தந்தை நடராசா, தனது மகள் மற்றும் குடும்பமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நியாயம் கிடைப்பதற்கான முயற்சிகளை விட அச்சுறுத்தல்களையே அதிகம் எதிர்கொள்வதாகவும் விளக்கினார். "கடற்படையினர் இதில் தமக்கு தொடர்பு இல்லை என்று அறிவிக்குமாறு கூறுகின்றனர். நாங்கள் அன்றாடம் கடற்படை புலனாய்வுத்துறையினரின் அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பை எதிர்கொள்கின்றோம். சில நேரம் அவர்கள் அடிப்பது போன்று நெருக்கமாக வருகின்றனர். அச்சம் காரணமாக நாங்கள் வீட்டில் இருப்பதில்லை. கடந்த ஞாயிறன்று இரண்டு நபர்கள் என் உறவினர் வீட்டுக்கு கத்தி மற்றும் ஆயுதங்களுடன் வந்து எங்களை வெளியே வரசொல்லி சிங்களத்தில் கத்தியுள்ளனர். நாங்கள் அங்கு இருக்கவில்லை. அதனால் தப்பினோம்," என்று அவர் கூறினார்.

மக்களின் எதிர்ப்பு அதிகரித்த போது, ஏழு கடற்படை சிப்பாய்கள் ஜூலை 18 அன்று கைது செய்யப்பட்டனர். அந்த சிறுமியால் அடையாள அணிவகுப்பில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் வழக்கத்திற்கு மாறாக அவர்கள் மூன்றே நாட்கள் சிறை வைக்கப்பட்டு பினணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு ஜூலை 25 வரை ஒத்தி வைக்கப்பட்டது. மன அழுத்தம் மற்றும் பீதியின் காரணமாக அந்த சிறுமியால் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாமல் போயிருக்கலாம், அல்லது தமது பாதுகாப்பு பற்றிய அச்சத்தினால் அவளது உறவினர்கள் அவளை அடையாளம் காட்ட வேண்டாம் என அவளுக்கு அறிவுறுத்தியிருக்கலாம்.

அதே சமயம், வடக்கில் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தலையீடு செய்யும் மற்றும் தண்டனையில் இருந்து விலக்களிப்புடன் செயற்படும் பாதுகாப்புப் படைகள், வழக்குகளை தமக்கேற்றவாறு கையாளும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைகள் மீது கொடுக்கப்பட்டுள்ள கடத்தல்கள், காணாமற்போதல்கள், கொலைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் பற்றிய புகார்கள் ஒழுங்காக விசாரிக்கப்படுவதில்லை மற்றும் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதும் இல்லை. இந்த வழக்கும் அதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.

கடற்படையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தொழிலாளியின் படி, கூட்டத்தில் பேசிய அதிகாரி கடற்படை சிப்பாய்களின் எந்த தொடர்பையும் மறுத்தார், ஆனால் சம்பவத்துக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இது போன்ற பிரச்சினைகளை தடுக்க இரவில் ரோந்து செல்ல இரண்டு போலீசார் மற்றும் மூன்று கடற்படையினரை நியமிப்பதாக அந்த அதிகாரி உறுதியளித்தார். "அவர்கள் பகல் நேரமே இப்படி நடந்துகொண்டால் இரவில் ஊருக்குள் காவல் செய்தால் பிரச்சனை இன்னும் கூடும் என்று" அந்த தொழிலாளி கூறினார்.

முழு வடக்கிலும் இருப்பது போல், காரைநகரிலும் இராணுவம் மற்றும் கடற்படையின் பல காவலரண்கள் மற்றும் மினி முகாம்களும் இருப்பதோடு மக்கள் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான மக்கள் உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்டதுடன் மற்றும் இடம்பெயர்ந்த சில குடும்பங்களே மீளக்குடியமர்ந்துள்ளன. ஊரிக் கிராமத்தில் சுமார் 400 ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மீன்பிடி தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலான குடும்பங்கள் கூலி வேலை செய்து தங்களது அன்றாட செலவுகளை சமாளித்துக்கொள்கின்றன. பெரும்பாலான குடும்பங்கள் சுகாதார வசதிகள் அற்ற ஓலை வீடுகளில் வாழ்கின்றன. கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. கிராம மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பெற இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். ஊரியில் ஒரு ஆரம்ப பள்ளி மட்டுமே உள்ளது. இரண்டாம் தர மாணவர்கள் சில சமயம் பற்றைக் காடுகளையும் கடந்து நான்கு கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

ஆரம்பத்தில் நடராசாவின் ஐந்து பேர் கொண்ட குடும்பம் வன்னிக்கு இடம்பெயர்ந்தது. அங்கு 2009ல் போரின் இறுதி நாட்களில் அகப்பட்டுக்கொண்டது. இப்போது அவரது குடும்பம் ஊரியில் ஒரு ஓலை வீட்டில் மீளக்குடியேறியுள்ளது. பிறப்பிலேயே காது கேளாத நடராசா மீன்பிடி தொழில் மூலம் மாதம் 3,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கின்றார். அவரது மனைவி கூலி வேலைகள் செய்து குடும்பத்தை சமாளிக்கின்றார்.

இந்த மக்களின் நிலை குறித்த அரசாங்கத்தினதும் தமிழ் அரசியல் கட்சிகளதும் அலட்சியம், அவர்களது வாழ்க்கை நிலைமைகளில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. வட மாகாண சபையில் தற்போது ஆட்சி செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் அதன் உறுப்பினர்கள் ஊரிக் கிராமத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் மட்டுமே, அங்கு தண்ணீர் தட்டுப்பாடு இருப்பது பற்றி அறிந்துகொண்டது. இப்போது தமிழ் கூட்டமைப்பு, மக்களின் முறைப்பாடுகளை தணிப்பதற்காக பவுசர் மூலம் குடிநீர் வினியோகிக்கின்றது.

கொழும்பு அரசாங்கத்திற்கு அழுத்தத்தை அதிகரிக்க இந்த சம்பவத்தைப் பற்றிக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், பெரும் வல்லரசுகளுக்கு முறையீடு செய்ய ஒரு மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்தன. தமிழ் முதலாளித்துவத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கூட்டமைப்பு, தமிழ் முதலாளித்துவ தட்டின் நலன்களை தக்கவைத்துக்கொள்ள கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை அடைய முயற்சிக்கின்றது. இதற்காக, அரசாங்கத்தின் யுத்த குற்றங்கள் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து .நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை முன்வைப்பதன் மூலம் கொழும்பு மீது அமெரிக்க தலைமையிலான பெரும் வல்லரசுகள் திணித்துள்ள அழுத்தத்திலேயே கூட்டமைப்பும் தங்கியிருக்கின்றது. இந்த அழுத்தங்கள், தமிழ் மக்கள் மீதான அக்கறையினால் அன்றி, சீனாவிடம் இருந்து கொழும்பு அரசாங்கத்தை தூர விலகச் செய்வதற்காகவே திணிக்கப்படுகின்றன.

ஏனைய நாடுகளின் மீது படையெடுத்து இதே போன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ள ஏகாதிபத்திய சக்திகளிடம் முறையீடு செய்வது பயனற்றதாகும். இராணுவ அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அணிதிரளுமாறு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம்களுமாக தொழிலாள வர்க்கத்துக்கு அழைப்பு விடுப்பதே ஒரே வழியாகும் -இந்த கொள்கையை கூட்டமைப்பு முழுமையாக எதிர்க்கின்றது. சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) மற்றும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் (புகக) மட்டுமே, தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பிரச்சாரம் செய்யும் ஒரே அமைப்பாகும்.