தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் US escalates threats against Russia over Ukraine crash உக்ரேனிய விமான விபத்து மீது ரஷ்யாவுக்கு எதிரான அச்சுறுத்தல்களை அமெரிக்கா தீவிரப்படுத்துகிறது
By Alex Lantier Use this version to print| Send feedback மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டதன் மீது ரஷ்யா மற்றும் ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக ஒபாமா நிர்வாகம் அதன் பிரச்சார நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி வருகிறது. MH17 எவ்வாறு விபத்திற்கு உள்ளானது என்பதோ அல்லது அந்த துயரத்தில் ரஷ்யா என்ன பாத்திரம் வகித்தது என்பதோ அமெரிக்காவிற்கு தெரியாது என்பது மிகத் தெளிவாக இருக்கின்ற போதினும் கூட, உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள் ரஷ்ய அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இறுதி எச்சரிக்கைகளை விடுக்க அந்த நெருக்கடியைப் பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, யுத்தம்நாடும் அறிக்கைகளையும் அச்சுறுத்தல்களையும் வழங்கி, ஞாயிறன்று பல்வேறு தொலைக்காட்சிகளில் காட்சியளித்தார். அந்த ஏர்லைன்ஸ் சுட்டு வீழ்த்தப்பட்டதானது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுக்கு ஒரு "சோதனைக் காலம்" என்று அவர் Fox Newsக்கு தெரிவித்தார். MH17ஐ சுட்டு வீழ்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடிய ஆயுதங்களை கிழக்கு உக்ரேனிய சக்திகளுக்கு ரஷ்யா வழங்கியது என்ற அமெரிக்க "விபரத்தையும்" கெர்ரி வழங்கினார். "சிப்பாய்களுக்கான ஆயுதமேந்திய வாகனங்கள், பலரகப்பட்ட ராக்கெட் வீசிகள், டாங்கிகள், ஆயுத தளவாடங்களோடு சுமார் 150 வாகனங்களின் ஒரு ஊர்வலம் அங்கே சில வாரங்களாக நடந்திருந்தது, அவை மொத்தமும் ரஷ்யாவிலிருந்து உக்ரேனின் கிழக்குப் பகுதிக்குள் எல்லையைத் தாண்டி எடுத்துச் செல்லப்பட்டு, பிரிவினைவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டன," என்று கெர்ரி CNNக்கு தெரிவித்தார். “ஆகவே நான் ஆவணப்படுத்தியதையும் விட இன்னும் அதிகமாக, அங்கே பெரும் எண்ணிக்கையிலான ஆதாரங்கள் உள்ளன, இத்தகைய ஆயுதங்களை அவர்களுக்கு வழங்குவதிலும், அவற்றில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் ரஷ்யா சம்பந்தபட்டிருப்பதை அவை சுட்டிக் காட்டுகின்றன," என்றார். கெர்ரியின் வாதங்கள் உண்மையாகவே இருந்தாலும் கூட மற்றும் MH17ஐ சுட்டு வீழ்த்துவதற்கு தகுதியுடைய ஆயுதங்களை ரஷ்யா வழங்கி இருந்தது என்றாலும் கூட, இது உண்மையில் அந்த விமானத்தைக் கிழக்கு உக்ரேனிய சக்திகள் தான் சுட்டு வீழ்த்தின என்பதை நிரூபிக்காது. நியூ யோர்க் பல்கலைக்கழகத்தின் பூகோள விவகாரங்களுக்கான மையத்தின் மார்க் கேலோட்டியைக் குறிப்பிட்டுக் காட்டி CNN குறிப்பிடுகையில், அந்த "ஆதாரம் பெரிதும் சூழ்நிலையைச் சார்ந்தவையாக உள்ளது. நேட்டோவின் படங்கள் உண்மையில் அந்த டாங்கிகள் உக்ரேனுக்குள் நுழைவதைக் காட்டவில்லை," என்று குறிப்பிட்டது. MH17 விமான விபத்தில் ரஷ்யா "குற்றத்திற்குரியதா" என்று CNNஇல் கேட்கப்பட்டதும், கெர்ரி பதிலளிக்க மறுத்துவிட்டார். “உங்களுக்குத் தெரியும், "குற்றத்திற்குரியது" என்பது ஒரு நீதித்துறை சொல் பிரயோகமாகும், மேலும் மக்கள் இங்கே என்ன வாசிக்கிறார்களோ அதைப் பொறுத்து அவர்கள் அவர்களின் சொந்த தீர்மானங்களை எட்ட வேண்டும். அதற்காக தான் நாங்கள் ஒரு முழுமையான விசாரணையைக் கோரியுள்ளோம்," என்றார். கெர்ரியின் கருத்துக்களில் உள்ள அடாவடித்தனம் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. MH17ஐ சுட்டு வீழ்த்துவதற்கு ரஷ்யா உதவி இருக்கக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட இராஜாங்க அதிகாரிகள் மறைமுகமாக குறிப்பிட்டு வருகிறார்கள், அதேவேளையில் ரஷ்யாவிற்கு எதிராக தடைகளுக்கு இட்டுச் செல்லக்கூடியதும் மற்றும் உக்ரேனின் உள்நாட்டு யுத்தத்தை உலகளாவிய யுத்தத்திற்குள் இட்டுச் செல்லக்கூடியதுமான அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இருந்தாலும் கூட, இந்த குற்றச்சாட்டுக்களை அவர் முன்னெடுத்து வருகின்ற போதினும், உண்மையில் என்ன நடந்தது என்பது நிர்வாகத்திற்கு தெரியாது என்பதையும் அவர் ஒப்புக் கொள்கிறார். யதார்த்தத்தில், ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்த வரையில், உண்மையில் என்ன நடந்தது மற்றும் MH17 சுட்டு வீழ்த்தப்பட்டது என்றால் யார் அதை சுட்டு வீழ்த்தினார்கள் என்ற உண்மையைச் சார்ந்த விவகாரங்கள் கவனத்திற்கு அப்பால் இருக்கின்றன. அந்த சம்பவம் நீண்டகால அரசியல் நோக்கங்களுக்கு அழுத்தம் அளிப்பதற்காக கைப்பற்றப்பட்டதாகும். ரஷ்யாவிற்கு அழுத்தம் அளிக்க வாஷிங்டன் நேற்று அந்த பிரச்சினையைத் தொடர்ந்து தனக்கு சாதகமாக சுரண்டியதோடு, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டாளிகளும் அமெரிக்க வெளியுறவு கொள்கையோடு அதே தரப்பில் வந்து நின்றன. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியாவின் அமெரிக்க செனட் உளவுத்துறை கமிட்டி சேர்மேன் டயான் பெய்ன்ஸ்டின், CNNஇல் பேசுகையில், MH17ஐ சுட்டு வீழ்த்தியதை ஒப்புக்கொள்ள புட்டின் "முன்வர வேண்டுமென" முறையிட்டார். அப்பெண்மணி கூறுகையில், “ரஷ்யாவிற்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் மிகத் தெளிவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன என்று நான் கருதுகிறேன். ஆகவே புட்டின் எங்கே நிற்கிறார்? என்பது தான் பிரச்சினை, 'புட்டின் நீங்கள் தான் முன்வர வேண்டும். நீங்கள் உலகத்திற்கு உரைத்தே ஆக வேண்டும். இது தவறுதலாக நடந்திருந்தால், அவ்வாறு தான் நான் கருதுகிறேன், அதை நீங்கள் கூற வேண்டும்' என்று நான் கூறுவேன்," என்றார். ரஷ்யாவிற்கு எதிராக ஆழமான பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் ஃபைய்ன்ஸ்டைன் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார்: “ஐரோப்பா ஒன்றாக சேர்ந்து வர வேண்டுமென நான் நினைக்கிறேன். குறிப்பாக ஜேர்மனி முன்னணியில் இருக்க வேண்டுமென நான் கருதுகிறேன். நாம் தடைகளைத் தொடர வேண்டியுள்ளதென நான் நினைக்கிறேன். உங்களுக்கு பல விடயங்களில் ரஷ்யாவின் உதவி அவசியப்படுவதால் அது சிரமமானது தான்," என்று அவர் தெரிவித்தார். பிரிட்டன், ஜேர்மனி மற்றும் பிரான்ஸூம் அவற்றின் பங்கிற்கு ஞாயிறன்று அறிவிக்கையில், செவ்வாயன்று நடக்கவுள்ள ஐரோப்பிய வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் அந்த விமான விபத்தின் மீது ரஷ்யாவிற்கு எதிரான தடைகளை அதிகரிப்பதற்கு அவர்கள் தயாரிப்பு செய்வார்கள் என்று அறிவித்தன. ரஷ்யா "முறையாக நடந்து கொள்ளவில்லை என்றால் அதுவொரு ஒதுக்கப்பட்ட அரசாக மாறி வருவதற்கான அபாயத்தை எடுக்கிறது," என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை செயலர் பிலிப் ஹாம்மோண்ட் ஞாயிறன்று அறிவித்தார். ரஷ்யாவை நோக்கிய கொள்கையின் மீது ஐரோப்பாவிற்கு இருக்கும் பிளவுகளை—குறிப்பாக, அமெரிக்காவிற்குப் பின்னால் நடைபோடுவதற்கு ஜேர்மன் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளில் இருக்கும் தயக்கம் குறித்து—மறைமுகமாக சுட்டிக் காட்டிய ஹாம்மோண்ட் கூறுகையில், “நம்முடைய ஐரோப்பிய கூட்டாளிகளில் சிலர் குறைந்த உற்சாகத்தோடு இருந்திருக்கிறார்கள், இந்த சம்பவத்தின் அதிர்ச்சி, இப்போது அவர்களிடமிருந்து இன்னும் அதிகமான ஈடுபாட்டைக் கொண்டு வருமென்றும், மற்றும் இது மாதிரி செய்தால் அதற்குரிய பலன்களை அது அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்பதை ரஷ்யர்களுக்கு காட்டி அவர்களை வழிக்குக் கொண்டு வர அவசியப்படும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர்களின் இன்னும் கூடுதலான விருப்பத்தைப் பார்க்கலாம் என்றும் நான் நம்புகிறேன்,” என்றார். ரஷ்யாவிற்கு எதிரான அதன் பிரச்சார நடவடிக்கைகளுக்கு அது அழுத்தம் அளிக்கின்ற அதேவேளையில், அமெரிக்கா உண்மையில் என்ன நடந்தது என்பதை ஒரு பந்தயத்திற்குரிய சூதாட்டமாக மாற்றி வருவதாக தெரிகிறது. “எது உண்மையை அடிப்படையாக கொண்டது, எது வெறுமனே ஊகங்கள் என்பதைப் பிரித்துக் காட்டுவது" மக்களுக்கு அவசியமானதென்று கூறி, வெள்ளியன்று ரஷ்யாவைக் குற்றஞ்சாட்டிய அவரது கருத்துக்களில், ஒபாமாவே கூட MH17இன் விபத்தின் மீது நிறைய "தவறான செய்திகள்" இருப்பது குறித்து ஒரு வினோதமான கூற்றை வழங்கி இருந்தார். MH17இன் விபத்திற்கு ரஷ்யா தான் அரசியல்ரீதியாக பொறுப்பு என்ற அமெரிக்காவின் வாதங்கள் ஒரு வெறுப்பூட்டும் மோசடியாகும். உக்ரேனிய அல்லது ரஷ்ய-ஆதரவிலான படைகளால் செலுத்தப்பட்ட ஒரு ஏவுகணையால் அந்த விமானம் வீழ்த்தப்பட்டு இருந்தாலும் கூட, அந்த துயரத்திற்கான முக்கிய பொறுப்பு வாஷிங்டன், பேர்லின் மற்றும் அவற்றின் ஐரோப்பிய கூட்டாளிகளின் மீதே தங்கியுள்ளது. கிழக்கு உக்ரேனில் ஆக்ரோஷமாக நடந்து வரும் உள்நாட்டு யுத்தத்தில், அந்த அதிவேக விமானம் எந்தவொரு தரப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருந்தாலும் கூட, அது கியேவில் பெப்ரவரி 22இன் பாசிச தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பின் மூலமாக ஒரு அதிவலது, மேற்கத்திய-சார்பிலான உக்ரேனிய ஆட்சியை நிறுவுவதற்கு அவர்கள் வழங்கி இருந்த ஆதரவால் தூண்டிவிடப்பட்டதாகும். அப்போதிருந்து, சிஐஏ அதிகாரிகளும், முன்னதாக பிளாக்வாட்டர் என்றறியப்பட்ட நிறுவனத்தின் கூலிப்படைகளும், மற்றும் ஐரோப்பிய உளவுத்துறை செயல்பாடுகளும், கிழக்கு உக்ரேனிய நகரங்களைத் தாக்கவும், தீவிரப்படுத்தவும், Right Sector அல்லது அஜோவ் இராணுவ படைப்பிரிவு போன்ற உக்ரேனிய பாசிச போராளிகள் குழுக்களோடு மிக நெருக்கமாக வேலை செய்துள்ளன. ஜேர்மன் அதிகாரிகளையும் மற்றும் உளவுத்துறை முகமைகளையும் ஒபாமாவிற்கு தெரிவிக்காமேலே சிஐஏ உளவு பார்த்தது என்று ஏற்கனவே வாதிட்டுள்ள வெள்ளை மாளிகை, இத்தகைய நடவடிக்கைகளைக் குறித்து எந்தளவிற்கு அறிந்து வைத்திருக்கிறது என்பதும் தெளிவாக இல்லை. இவ்வாறான நிலைமைகளின் கீழ், MH17 விபத்து குறித்து ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து வரும் எந்தவொரு அறிக்கையிலும் நம்பிக்கை வைப்பது சாத்தியமில்லாமல் இருக்கிறது. ரஷ்ய-சார்பிலான சக்திகள் அதை சுட்டு வீழ்த்தின என்று கூறப்படுகின்ற நிலையில், மேற்கத்திய உளவுப்படை பிரிவுகளோடோ அல்லது கூலிப்படை குழுக்களோடோ வேலை செய்து வருகின்ற, உக்ரேனிய இராணுவப் படையோ அல்லது பாசிச குண்டர் குழுக்களோ கூட அதை செய்து விட்டு, ரஷ்யாவை-ஆதரிக்கும் சக்திகள் மீது அந்த குற்றத்தைச் சுமத்துவற்கும் அங்கே சாத்தியக்கூறு இருக்கிறது. மிக முக்கியமாக, MH17 விபத்து நடந்த அந்த நேரத்தில் அப்பிராந்தியத்தில் செலுத்தப்பட்ட ஏவுகணை குண்டுகள் குறித்து என்ன அறிக்கைகள் வந்துள்ளனவோ அவற்றில் ரஷ்யா சம்பந்தப்பட்டு இருந்தது என்பதை அல்ல, மாறாக கியேவில் உள்ள அமெரிக்க ஆதரவிலான ஆட்சியே சம்பந்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுக் காட்டுகின்றன. MH17 விபத்திற்கு சற்று முன்னதாக ஒரு SA-17 Buk ஏவுகணைக் குண்டு வீசப்பட்டதை உக்ரேன் மீதிருந்த அமெரிக்க உளவு செயற்கோள்கள் கண்டறிந்தன என்பதை அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய இராணுவ பிரிவுகள் இரண்டுமே Buk ஏவுகணை குண்டுகளை நிலைநிறுத்தி உள்ளன, உண்மையில் அவை சோவியத் ஒன்றியமாக இருந்தபோது வடிவமைக்கப்பட்டவை ஆகும். அதன் பின்னர் கியேவ் ஆட்சி ஒரு Buk ஏவுகணை குண்டு வீசப்படும் ஒரு காணொளியை வெளியிட்டது, MH17ஐ சுட்டு வீழ்த்தியதற்கு பின்னர் கண்டறியப்படுவதிலிருந்து தப்பிப்பதற்கு வெளிவேடமாக, அந்த தாக்குதலுக்கு பின்னர் ரஷ்ய எல்லையை நோக்கி அவசரமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக அது கூறியது. எவ்வாறிருந்த போதினும், NBC Newsஆல் தெரிவிக்கப்பட்ட ரஷ்ய தொலைக்காட்சி செய்திகளின்படி, பிரச்சினைக்கு மையத்தில் இருக்கும் ஏவுகணைவீசியினது வரிசை எண்—312—உண்மையில் உக்ரேனிய இராணுவத்தால் அது செலுத்தப்பட்டு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியது. |
|
|