தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The day the US shot down Iran Airlines Flight 655 ஈரான் ஏர்லைன்ஸ் விமானம் 655ஐ அமெரிக்கா சுட்டுவீழ்த்திய அந்தநாள்
By
Niles Williamson Use this version to print| Send feedback அமெரிக்க அரசாங்கம் எந்தவொரு உறுதியான ஆதாரத்தையும் இதுவரையில் வழங்கவில்லை என்ற நிலைமைகளின் கீழும், கிழக்கு உக்ரேனில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவைக் குற்றஞ்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் விரைந்துள்ளன. இந்த துயரகரமான சம்பவத்திற்கும் மற்றும் சோவியத்தினது Su-15 உளவு விமானத்தால் 1983இல் கொரிய ஏர்லைன்ஸ் விமானம் 007 வீழ்த்தப்பட்டதற்கும் இடையிலான ஒப்பீடுகளை வரைவதே, ரஷ்யாவிற்கு எதிரான இந்த பிரச்சார நடவடிக்கையின் ஒரு சிறப்பம்சமாக இருக்கிறது. வெள்ளியன்று, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் "MH17 சுட்டுவீழ்த்தப்பட்டது" என்ற தலைப்பிலான ஒரு தலையங்கத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினைத் தாக்குவதற்காக குற்றஞ்சாட்டியதோடு, அந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பை வரையறுத்திருந்தது, அது குறிப்பிடுகையில், கொரிய ஏர்லைன்ஸ் விமானம் 007ஐ போலவே நேற்றைய சம்பவமும், ஒரு "அறநெறிரீதியிலான திருப்புமுனை" என்று எழுதியது. “பனிப்போர் சகாப்தத்திற்கு மிகப் பிந்தைய காலத்தில்" மேற்குலகம், உக்ரேனை பிரத்யேகமாக ரஷ்ய நலன்களின் பரப்பெல்லைக்குள் வைத்து பார்த்திருக்கக் கூடாது என்று ஜேர்னல் ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்தது. MH17 வீழ்த்தப்பட்டதன் மீது நிலவும் நிச்சயமற்றதன்மைக்கு இடையே, இருக்கின்ற சாத்தியக்கூறுகளில் இருந்து ஒரு சாத்தியக்கூறு ஊடகங்களால் முற்றிலும் விதிவிலக்காக தவிர்க்கப்பட்டுள்ளது, அது என்னவென்றால் அமெரிக்கா மற்றும் ஜேர்மன் ஆதரவிலான கியேவில் உள்ள ஆட்சியுமே கூட அந்த சம்பவத்திற்குப் பொறுப்பாக இருக்கலாம் என்பதாகும். அப்பாவி மக்களுக்கு எதிராக அதுபோன்றவொரு கொடூரமான நடவடிக்கையை அமெரிக்க அரசாங்கம் உத்தரவிடாது என்று யோசிப்பவர்கள், 290 பேர் கொல்லப்பட்ட ஈரான் ஏர் விமானம் 655 சுட்டுவீழ்த்தப்பட்ட இழிவுகரமான விவகாரத்தைக் கருத்தில் எடுத்துப் பார்க்க வேண்டும். 1988, ஜூலை 3இல், ஈரான்-ஈராக் யுத்தம் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருந்த போது, பாரசீக வளைகுடாவிற்கு வர்த்தக கப்பல்கள் உள்ளேயும் வெளியேயும் போய் வருவதைப் பாதுகாப்பதற்காக என்ற போலிச்சாக்கில் எடுத்திருந்த ஒரு நடவடிக்கையின் பாகமாக, அமெரிக்க கடற்படையின் டிகோன்டிரோக (Ticonderoga) ரக கப்பலான USS வின்சென், ஹோர்மஸ் ஜலசந்தியில் நிறுத்தப்பட்டிருந்தது. ஈரானிய ஆட்சிக்கு எதிரான அந்த கொடூரமான எட்டாண்டு கால யுத்தத்தில், அமெரிக்கா ஈராக்கிய ஜனாதிபதி சதாம் உசேனின் தரப்பிற்கு, பணம், ஆயுதங்கள் மற்றும் இராணுவ உளவுத் தகவல்களை வழங்கி தலையீடு செய்து வந்தது. விமானம் 655 சுட்டுவீழ்த்தப்படுவதற்கு நாற்பது நிமிடங்களுக்கு முன்னால், வின்சென்னில் இருந்த ஹெலிகாப்டர்களில் ஒன்று, ஒரு உளவுவேலை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதினும், ஈரானிய கடல் எல்லையில் இருந்த ஈரானிய துப்பாக்கி-தாங்கிய படகுகளை நோக்கி உள்நோக்கத்தோடு சுட்டது. பின்னர் அந்த துப்பாக்கி ஏந்திய படகுகளை வின்சென் ஈரானிய கடல் எல்லைக்கு உள்ளேயே பின்தொடர்ந்து சென்றது. சமிக்ஞைகளை அனுப்பி வந்த ஒரு விமானத்தை ஒரு இராணுவ விமானமாக அந்த கப்பல் குழுவினர் அடையாளம் கண்டதாகவும் மற்றும் அந்த விமானம் வேகமாக அவர்கள் இருந்த கப்பலை நோக்கி வந்து கொண்டிருந்ததாகவும்; இரத்தந்தோய்ந்த அமெரிக்க ஆதரவிலான ஷாவின் ஆட்சி காலத்திலிருந்து ஈரானிய தளவாடங்களில் இன்னமும் எஞ்சியிருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய யுத்தவிமானங்களில் ஒன்றான, மிகச் சிறிய F-14 டோம்கேட் விமானத்தின் அந்த சமிக்ஞைகளைக் கொண்டு கப்பல் குழுவினர் மிகப் பெரிய ஏர்பஸ் A300 விமானமென்று தவறாக புரிந்து கொண்டதாகவும் அமெரிக்க அரசாங்கம் வாதிட்டது. வின்சென் அந்த விமானத்திற்கு பல எச்சரிக்கைகளை இராணுவ அலைவரிசையில் அனுப்பியது, ஆனால் அதுவொரு பயணிகள் விமானம் என்பதால் அத்தகைய எச்சரிக்கைகளுக்கு அதனால் விடையளிக்க முடியவில்லை. விமானம் 655 அந்த கப்பலில் இருந்து பன்னிரெண்டரை மைல் தொலைவில் இருந்த போது, தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் இரண்டு SM-2MR ஏவுகணைகள் அந்த கப்பலில் இருந்து செலுத்தப்பட்டன, இரண்டுமே அந்த விமானத்தைத் தாக்கி, அதை வானிலேயே வெடித்து சிதறடித்தது, அதிலிருந்த அனைவரும் கொல்லப்பட்டார்கள். அந்த தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஜனாதிபதி ரோனால்ட் ரீகன், வின்செனின் கப்பல் குழுவினரால் விமானம் 655 சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒரு "முறையான பாதுகாப்பு நடவடிக்கையாக" குறிப்பிட்டார். "அவர்களின் படைப்பிரிவுகள் உயிர் பயத்தில் நிலைகுலைந்து போயிருந்ததை நம்புவதற்கு" அந்த கப்பலில் இருந்த தளபதிகளுக்குப் "போதிய காரணங்கள் இருந்ததால், அவர்கள் தற்காப்புக்காக சுட்டதாக" கூறி, இராணுவ கூட்டுப்படைகளின் தலைமை தளபதி அட்மிரல் வில்லியன் ஜெ. கிரோவ், ஜூனியர், அந்த பயணிகள் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதை நியாயப்படுத்தினார். அந்த தாக்குதலைச் சுற்றியிருந்த சூழ்நிலைகளைக் குறித்து அமெரிக்க அராசங்கம் தொடக்கத்தில் வெளியிட்ட வாதங்கள் பொய்யானவை என்பது பின்னர் இறுதியில் வெளியானது. விமானம் 655 மிகத் தெளிவாக அதுவொரு பயணிகள் விமானம் என்பதை அடையாளம் காண்பதற்குரிய சமிக்ஞைகளை அனுப்பி இருந்தது, மேலும் அது தாக்குவதற்காக வின்செனை நோக்கி நெருங்கி வந்தது என்றில்லாமல், அதை விட்டு விலகிச் சென்றுக் கொண்டிருந்தது. இதை துல்லியமாக அந்த கப்பல் குழுவினர், அந்த தாக்குதலுக்கு சற்று முன்னதாக பெற்றிருந்தார்கள் என்பதை அந்த கப்பலில் இருந்த மின்னணு பதிவுகள் எடுத்துக்காட்டின. இறுதியாக பெண்டகன் அந்த தாக்குதலின் இறுதி காரணத்தை மனித தவறாக காரணம் காட்டியதோடு, கப்பலில் இருந்த யாரொருவர் மீதோ அல்லது அமெரிக்க கடற்படையில் வேறெங்கும் இருந்த எவர் மீதோ அது ஒருபோதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மரணகரமான தாக்குதலின் போது வின்செனில் இருந்து கட்டளையிட்ட அதிகாரி மூன்றாம் வில்லியன் சி. ரோஜர்ஸூக்கு, 1990இல், “மிகச் சிறந்த சேவைகள் மற்றும் சாதனைகளுக்காக அசாதாரண போற்றத்தக்க நடவடிக்கைக்கான" திறமைக்குரிய படையணி (Legion of Merit) விருது வழங்கப்பட்டது. அமெரிக்க அரசாங்கம், அந்த கப்பலில் இருந்த 18-பேர் கொண்ட அந்த குழுவினர் "திடீர் நிலைமைக்குரிய தவிப்பை", அதாவது பயணிகள் விமானத்தை சுட்டுத் தள்ளுவதற்கு அவர்களை இட்டுச் சென்ற அனைவரையும் நிலைகுலைய செய்த ஓர் உளவியல்ரீதியிலான சூழ்நிலையை அனுபவித்தார்கள் என்று வாதிடும் அளவிற்குச் சென்றது. ஈரான்-ஈராக் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடந்து வந்த பேச்சுவார்த்தைகளில் ஈராக்கிற்கு இன்னும் சாதகமான நிபந்தனைகளை சேர்ப்பதற்காக ஈரானிய அரசாங்கத்தைப் பயமுறுத்துவதற்கான அமெரிக்க இராணுவத்தின் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக, ஈரானிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவம் இருந்தது என்பதே ஒரு மிகவும் சரியான வரையறையாக இருக்கிறது. ஐநா-பேரம்பேசிய எந்தவொரு உடன்படிக்கையை அயத்துல்லா கொமேனி முன்னதாக எதிர்த்தாரோ, ஈரானின் ஏர் விமானம் 655 அழிக்கப்பட்டதற்கு வெறும் 15 நாட்களுக்குப் பின்னர், அதே உடன்படிக்கையை அவர் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார். பாரசீக வளைகுடாவில் இருந்தபோது, அவற்றின் அதிநவீன ஆயுத அமைப்புமுறைகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்த அமெரிக்க கடற்படையின் மற்றும் வின்சென் கப்பல் குழுவினயின் விருப்பமே, விமானம் 655ஐ சுட்டுவீழ்த்துவதில் பங்களிப்பு செய்தது என்று 1990இல் ஈரானிய அரசாங்கத்தால் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்திற்கு ஒரு சுருக்கவுரை சமர்பிக்கப்பட்டது. பயணிகள் விமானத்தைச் சுட்டுவீழ்த்திய நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறி இருந்ததாக வாதிட்ட ஈரான், அவ்விதத்தில் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து முழு நஷ்டஈடைக் கோரியது. இறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 61.8 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க 1996இல் ஒப்புக் கொண்ட போதினும், அமெரிக்க அரசாங்கம் உயிர்பறித்த அந்த தாக்குதலுக்கான பொறுப்பை ஒருபோதும் ஏற்கவில்லை என்பதோடு, அந்த சம்பவத்திற்காக ஈரானிய அரசாங்கத்திடம் அது உத்தியோகபூர்வமாக மன்னிப்பும் கோரவில்லை. |
|
|