World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The bombing of eastern Ukraine

கிழக்கு உக்ரேனில் குண்டுவீச்சு

Peter Schwarz
16 July 2014

Back to screen version

கிழக்கு உக்ரேனில் டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க் நகரங்களுக்கு எதிரான கியேவ் அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளானது, தங்களைத்தாங்களே அங்கே நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் வெறுமனே ஒரு சில ஆயிர ரஷ்ய பிரிவினைவாதிகளுக்கு எதிராக மட்டுமே திருப்பி விடப்பட்டதல்ல. பயன்படுத்தப்பட்டு வரும் அந்த அணுகுமுறைகள் மறுமுனையைக் குறிவைத்திருக்கின்றன.

அதிவிரைவு போர் விமானங்கள், ராக்கெட் ஏவும் உபகரணங்கள் மற்றும் பலமான ஆயுத தளவாடங்களைக் கொண்டு மக்கள்தொகை நிரம்பிய அந்த பகுதிகள் மீது குண்டு வீசப்படுகிறது; உக்ரேனிய ஜனாதிபதி பொறோஷென்கோவும் பிரதம மந்திரி யாட்சென்யுக்கும் பேரச்சமூட்டும் இரத்தஆறு ஓடச்செய்யும் நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடுத்து வருவதோடு, சிப்பாய்களையும் தூண்டிவிட்டு வருகிறார்கள்; மற்றும் பாசிச ஆதிக்கம் கொண்ட தேசிய பாதுகாப்பு படை நிறுவப்பட்டிருப்பது, கியேவ் ஆட்சியின் அரசியல் மற்றும் சமூக நோக்கங்களை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் அனைவரையும் அச்சமூட்டுவதையும், மிரட்டுவதையும் நோக்கமாக கொண்டிருக்கிறது.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பெல்கிரேடின் மீதான நேட்டோ குண்டுவீச்சுக்குப் பின்னர் முதல்முறையாக, ஒரு மில்லியன் மக்கள் வசிக்கும் மற்றொரு ஐரோப்பிய நகரத்தின் மீது -டொனெட்ஸ்க் மீது- கனரக ஆயுதங்களோடு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சில பார்வையாளர்களைப் பொறுத்த வரையில், உக்ரேனிய படைகளின் நடவடிக்கைகள் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒத்திருக்கின்றன, இன்னும் சிலரைப் பொறுத்த வரையில், ரஷ்ய இராணுவத்தால் செச்சென் தலைநகரான குரோஸ்னி அழிக்கப்பட்டதோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது. இத்தகைய ஒப்பீடுகளின் பொருந்தியதன்மையை ரஷ்ய ஆதாரங்கள் மட்டும் உறுதிப்படுத்தவில்லை, மாறாக நேரில் பார்த்த மேற்கத்திய இதழாளர்களின் செய்திகளும் உறுதிப்படுத்துகின்றன.

முற்றுகையிட்டுக் கைப்பற்றப்பட்ட ஸ்லாவ்யான்ஸ்க் நகரத்திற்கு ஒரு செய்தியாளரை அனுப்பியிருந்த Süddeutsche Zeitung பத்திரிகை செய்தியின்படி, சுமார் 120,000 மக்களோடு, 1,500 வரையிலான வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன. மே மாத தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு நாளும், துப்பாக்கி சூட்டில் அல்லது குண்டுவீச்சில் கொல்லப்பட்ட மக்களின் குறைந்தபட்சம் பத்து உடல்கள், பிரதே பரிசோதனை நிலையத்திற்கு வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த மக்களுக்கு உணவு மறுக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகங்கள் வாரக் கணக்கில் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. 500 குடும்பங்கள் வெறும் 100 ரொட்டி பொட்டலங்களோடும், அவர்களின் காய்கறி தோட்டங்களில் என்ன கிடைக்கிறதோ அதனோடு மட்டும் கொண்டு இரண்டரை மாதங்களுக்கு உயிர்வாழ விடப்பட்டிருந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.   

இப்போதோ டொனெட்ஸ்கில் வசிக்கும் 1.5 மில்லியன் மக்கள் அதே கதியை முகங்கொடுக்கின்றனர். பிரதம மந்திரி யாட்சென்யுக்கும் ஜனாதிபதி போறோஷென்கோவும் இரக்கமின்றி நடந்து கொள்ள உக்ரேனிய துருப்புகளை வலியுறுத்தி வருகிறார்கள்.

அந்த கிளர்ச்சியாளர்களை "மனித தரத்திற்கு குறைந்தவர்கள்" என்று குறிப்பிட்டதோடு, அவர்களை "நசுக்கி அழிக்கவும்" யாட்சென்யுக் அழைப்புவிடுத்தார். கொல்லப்பட்ட ஒவ்வொரு உக்ரேனிய சிப்பாய்களுக்கும் விலையாக அவர்கள் அவர்களின் தரப்பிலிருந்து நூறு பேரை இழக்க வேண்டியதிருக்கும் என்று பொறோஷென்கோ கிளர்ச்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார், அவரது அச்சுறுத்தல்கள் இரண்டாம் உலக யுத்தத்தின் போது பிரிவினைவாதிகளால் கொல்லப்பட்ட ஒவ்வொரு சிப்பாய்களுக்காகவும் டஜன் கணக்கான பிணைகைதிகளைச் சுட்டுக் கொன்ற நாஜிக்களின் நடவடிக்கை முறைகளை நினைவுபடுத்துகின்றன.

சில மேற்கத்திய அரசாங்கங்கள் இன்னும் நிறைய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துமாறு பொறோஷென்கோவுக்கு அழைப்புவிடுப்பதை அவற்றின் கடமையாக உணர்ந்துள்ளன. அவை அவற்றின் சொந்த தடங்களை மூடிமறைக்கவே அவ்வாறு செய்கின்றன. உக்ரேனிய ஜனாதிபதி அன்றாடம் தொடர்பு கொண்டு வரும் வாஷிங்டன், பேர்லின் மற்றும் வார்ஷோ உடன் அவரது ஒவ்வொரு நகர்வையும் விவாதிக்கிறார். மேற்கத்திய இராணுவ வல்லுனர்கள் அவருக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். திங்களன்று அவர் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட உக்ரேனிய-போலாந்திய-லித்துவேனிய படையை உருவாக்குவது குறித்து போலாந்து பிரதம மந்திரி டோனால்ட் தஸ்குடன் விவாதித்திருந்தார், இந்த பரிந்துரை விரைவிலேயே எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட இருக்கிறது.

கியேவ் ஆட்சி அதன் சொந்த நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்பிற்கு எதிராக எந்தமாதிரியான காட்டுமிராண்டித்தனத்தைக் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறதோ, அது அதன் மேற்கத்திய ஆதரவாளர்களும் மற்றும் அதுவுமே பின்பற்றும் கொள்கைகளில் இருந்து எழுகிறது. பில்லியனர் பொறோஷென்கோ உக்ரேனிய செல்வந்த தட்டுக்களின் கூட்டணியை சர்வதேச மூலதனத்திற்குள் உள்ளடக்குகிறார்.

அவர்கள் ரஷ்யா உடனான அந்நாட்டின் நூற்றாண்டுகால பழமையான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை உடைக்கவும், ஏகாதிபத்திய சக்திகளின் கட்டளைகளுக்கு ரஷ்யாவை மண்டியிடச் செய்யவும், உக்ரேனிய செல்வ வளங்களையும் மற்றும் அதன் தொழிலாள வர்க்கத்தையும் சுரண்ட ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு கூட்டு உடன்படிக்கையில் அவருக்கு முன்னர் அப்பதவியில் இருந்த விக்டொர் யானுகோவிச் கையெழுத்திட மறுத்த பின்னர், அவரை பதவியிலிருந்து வெளியேற்றிய மேற்கத்திய ஆதரவிலான பெப்ரவரி 22 ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் மூலமாக பொறோஷென்கோ அலுவலகத்திற்குள் நுழைந்திருந்தார். அதன் பின்னர் மக்களின் பெரும் பிரிவினர்கள் வாக்களிப்பதை தவிர்த்திருந்த நிலைமைகளின் கீழ் அல்லது தீவிர வலது சக்திகளால் மிரட்டப்பட்டு இருந்த நிலைமைகளின் கீழ் பொறோஷென்கோ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, அந்த புதிய ஜனாதிபதி அந்த ஆட்சிகவிழ்ப்பு சதியில் ஒரு பிரதான பாத்திரம் வகித்த அதிதீவிர-தேசியவாத மற்றும் பாசிச சக்திகளின் மீதே தங்கியிருக்கிறார். அவர் அரசாங்கத்தை மாற்றி அமைக்கவும் இல்லை, புதிய நாடாளுமன்ற தேர்தல்களுக்கு உத்தரவிடவும் இல்லை. தேசியவாத பாதர்லாந்து கட்சி தொடர்ந்து முக்கிய இடத்தைத் தக்க வைத்திருப்பதோடு, அதன் ஜனாதிபதி வேட்பாளர் யூலியா திமொஷென்கோ வெறும் 13 சதவீத வாக்குகளே பெற்றிருந்த போதினும், அது ஏழு மிக முக்கிய அமைச்சகங்களுக்கு தலைமை ஏற்று இருக்கிறது. பாசிச ஸ்வோபோடா கட்சியின் வேட்பாளர் ஓலெஹ் தியாஹ்ன்பொக் வெறும் 1.1 சதவீத வாக்குகளே பெற்றிருந்த நிலையில், அது மூன்று மந்திரிகளைக் கொண்டுள்ளது. 

இராணுவப் படைகள் தொடக்கத்தில் அவற்றின் சொந்த மக்கள் மீதே சுடுவதைக் கருதி பின்வாங்கியது. அப்போதிருந்து அதிதீவிர-வலதுசாரிகளும், பாசிசவாதிகளும் அவர்களோடு கோர்த்துவிடப்பட்டார்கள். ஸ்வாஷ்திகா சின்னத்தோடு அலங்கரிக்கப்பட்ட கியேவில் உள்ள Right Sectorஇன் அலுவலகங்களைப் பார்வையிட்ட இதழாளர்கள், அந்த குழுக்களின் நூற்றுக் கணக்கான அங்கத்தவர்கள் கிழக்கில் டோன்பாஸில் இராணுவத்தோடு சேர்ந்து சண்டையிட்டு வருகிறார்கள் என்று பெருமையோடு கூறுகின்றனர். பொறோஷென்கோவின் கொள்கைகள் தொழிலாள வர்க்கத்தின் மீது பேரழிவுகரமான தாக்கங்களைக் கொண்டிருப்பதால், அவர்களை ஒடுக்க அவருக்கு இத்தகைய படைகள் அவசியப்படுகிறது.

தற்போது கையெழுத்தாகி உள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டு உடன்படிக்கை, சோவியத் காலத்தில் கட்டப்பட்ட டொனெட்ஸ் பேசினின் எஃகு மற்றும் நிலக்கரி தொழில்துறைக்கும் மற்றும் ரஷ்யாவிற்கும் இடையிலான தொடர்புகளைப் பிரிக்கிறது. அது தற்போது பிரான்சின் லுரேன் மற்றும் ஜேர்மனியின் ரூஹர் பகுதிகளில் காணப்படும் ஒருவித பாரிய வேலை வாய்ப்பின்மையை போல, அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ஒரு தொழில்துறையற்ற பாலைவனமாக மாற்றிவிட அச்சுறுத்துகிறது.   

பல உக்ரேனியர்கள், குறிப்பாக ரஷ்ய மூலங்களைக் கொண்டவர்கள், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆக்கிரமிப்புகள் ரஷ்யா உடன் ஒரு போரைக் கொண்டு வருமெனவும், அது ஒரு அணுஆயுத உலக போரைத் தூண்டிவிடுமென்றும் சரியாகவே அஞ்சுகிறார்கள்.

அனைத்திற்கும் மேலாக, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு அந்நாடு அடிபணிய வேண்டுமென அந்த கூட்டு உடன்படிக்கை கோருகிறது. பெரும்பாலான உக்ரேனிய ஏழைகளைப் பொறுத்த வரையில், அவர்களுக்கு இது இன்னும் ஆழமான வறுமையைக் குறிப்பதோடு, எவை இல்லாமல் அவர்கள் உயிர் வாழ முடியாதோ அந்த சமூக நலன்கள் வெட்டப்படுவதையும் குறிக்கிறது.

முற்றிலுமாக இந்த பிற்போக்குத்தனமான கொள்கைகளை, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நோக்கிய படிகளாக ஊக்குவிப்பதும், செல்வந்த பொறோஷென்கோவையும் அவரது அதிதீவிர வலது ஆதரவாளர்களையும் ஜனநாயக பிரபலங்களாக பெருமைப்படுத்துவதும் ஜேர்மன் சமூக ஜனநாயகவாதிகள், பசுமை கட்சியினர் மற்றும் இடது கட்சியிடம் விடப்பட்டிருக்கிறது. 

கிரீஸ் மற்றும் ஏனைய நாடுகளில் ஏற்கனவே வெளிப்படையாக இருப்பது உக்ரேனிய சம்பவங்களில் உறுதி செய்யப்படுகின்றன: அது என்னவென்றால், நெருக்கடியின் ஆழங்களில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்திடம் உழைக்கும் மக்களுக்கு வழங்க சமூக சீரழிவு, சுரண்டல் மற்றும் யுத்தங்களைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதே ஆகும்.

ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான ஒரு போராட்டத்தில் ஐரோப்பிய தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதே இந்த முட்டுச்சந்தில் இருந்து வெளிவருவதற்கான ஒரே வழியாகும். சோசலிச அடித்தளத்தில் தொழிலாளர்களின் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதன் மற்றும் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்துவதன் மூலமாக மட்டுமே, யுத்தம் மற்றும் தேசியவாத மோதல்களுக்குள் செல்வதிலிருந்து அந்த கண்டத்தைத் தடுக்க முடியும் என்பதோடு, அதன் செழிப்பான ஆதார வளங்கள் மற்றும் உற்பத்தி சக்திகளை, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கூட்டணியோடு, ஒட்டுமொத்தமாக சமூகத்தின் நலனுக்காக அபிவிருத்தி செய்வதற்கும் மற்றும் பயன்படுத்துவதற்குமான நிலைமைகளை உருவாக்க முடியும்.