World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Fascist atrocities mount as US-backed regime assaults eastern Ukraine

கிழக்கு உக்ரேனில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சி தாக்குதல் நடத்துகையில், பாசிச அட்டூழியங்கள் அதிகரிக்கின்றன

By Alex Lantier
17 July 2014

Back to screen version

கியேவில் உள்ள மேற்கத்திய ஆதரவிலான ஆட்சி, கிழக்கு உக்ரேனிய பிரதான நகரங்களில் உள்ள ரஷ்ய-ஆதரவிலான போராளிகள் குழுக்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்ற நிலையில், முன்னர் எதிர்ப்பாளிகளின் பிடியிலிருந்ததும் கியேவினால் சமீபத்தில் கைப்பற்றப்பட்டதுமான ஸ்லாவ்யான்ஸ்க் நகரிலிருந்து நிறைய சவக்குழிகள் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. அங்கே அந்த அரசாங்கத்தின் தாக்குதல், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் கட்டவிழ்ந்து வருகிறது, அவை உக்ரேனிய எதிர்ப்பு போராளிகள் குழுக்களுக்கான எந்தவொரு ஆதரவையும் மாஸ்கோ கைவிடுமாறு செய்வதற்கு அதை நிர்பந்திக்கும் வகையில் நேற்று இன்னும் கூடுதலான தடைகளை விதித்தன.

கியேவ் ஆட்சியின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரி லெசென்கோ நேற்று கூறுகையில், “எதிர்ப்பு போராளிகளின் நூற்றுக் கணக்கான உடல்கள்" ஆழமில்லாத சவக்குழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அவற்றில் சில சவக்குழிகள் "பயங்கரவாதிகளால் தோண்டப்பட்டு இருந்ததாகவும்" அவர் குறிப்பிட்டார்இறந்து போனவர்களில் சிலர் ஸ்லாவ்யான்ஸ்க் முற்றுகையின் போது கொல்லப்பட்டிருந்தார்கள் என்பதும், அந்நகரை கியேவ் படைகள் கைப்பற்றுவதற்கு முன்னர் சக எதிர்ப்பு போராளிகளால் அந்த உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன என்பதும் வெளிப்படையாக இருக்கிறது. லெசென்கோ மேற்கொண்டு தகவல்களை அளிக்க மறுத்துவிட்டார்.

ஸ்லாவ்யான்ஸ்க் மீதான கியேவ் ஆட்சியின் குண்டுவீச்சு சந்தேகத்திற்கு இடமின்றி நூற்றுக் கணக்கானவர்களைக் காயப்படுத்தி இருந்தது என்பதோடு, அது ஒன்றுதிரட்டி இருந்த தீவிர-வலது உக்ரேனிய தேசியவாத போராளி குழுக்கள் ஸ்லாவ்யன்ஸ்க்கில் அரசியல் படுகொலை மற்றும் பயங்கர நடவடிக்கைகளை நடத்தி வருகின்றன என்பதை அந்த ஆட்சி அளிக்கும் சொந்த புள்ளிவிபரங்களே எடுத்துக் காட்டுகின்றன. அந்நகரை கைப்பற்றியதும், அவர்கள் எதிர்ப்பு போராளிகள் குழுக்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்தவர்கள் உட்பட, உதவிகள் அளித்தவர்கள் அல்லது ஆதரவளித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 25இல் இருந்து 35 வயது வரையிலான எல்லா ஆண்களையும் கைது செய்திருந்தார்கள்.

செவ்வாயன்று, உள்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஆண்டன் ஜிராஷ்சென்கோ தெரிவிக்கையில், எதிர்ப்பு படைகளுக்கு ஆதரவு வழங்கியதற்காக இரண்டு ஸ்லாவ்யான்ஸ்க் பாதிரியார்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார். “ஸ்லாவ்யான்ஸ்க்கில் இரண்டு பாதிரியார்களின் ஒரு சவக்குழியை நாங்கள் கண்டோம், அவர்கள் உக்ரேனிய தேசியவாதிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருந்தனர்," என்று ஜிராஷ்சென்கோ தெரிவித்தார். அந்த பாதிரியார்களின் சிதைந்த எஞ்சிய பகுதிகள் இருந்த அதே சவக்குழியில் அந்த பாதிரியார்களில் ஒருவரின் இரண்டு மகன்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.

பல மரபார்ந்த பாதிரியார்களை உக்ரேனிய தேசியவாதிகள் அச்சுறுத்தி உள்ளனர், அடித்துள்ளனர் அல்லது கடத்தி உள்ளனர் என்பதை ஒடெசா டயோசிஸ் கிறிஸ்துவ மடம் உறுதிப்படுத்தியது, அவர்களில் பலர் மாஸ்கோவிற்கு மிக நெருக்கமானவர்களாக கருதப்படுகிறார்கள். உக்ரேனிய தேசியவாத குழுக்களால் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் மாஸ்கோவிற்குத் தப்பிச் சென்றுள்ள, ஒடெசா டயாசிஸ் செயலாளரான கிறிஸ்துவ தலைமை மதகுரு ஆண்ட்ரி நோவிகோவ் கூறுகையில், “அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து வந்தால், நான் நிச்சயமாக கூறுகிறேன், அது உக்ரேனில் மாஸ்கோ தந்தைவழி சமூகத்தை ஸ்தூலமாக நிர்மூலமாக்கும்," என்று தெரிவித்தார்.

ஸ்லாவ்யான்ஸ்க் முற்றுகையின் போது உயர்மட்ட கியேவ் அதிகாரிகள் வழங்கிய அறிக்கைகளே, Right Sector மற்றும் அஜோவ் இராணுவ படை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய பாதுகாப்புப் படை போன்ற பாசிச போராளிகள் குழுக்கள் உட்பட அதன் தீவிர-வலது சக்திகள் நடத்திய அப்பாவி மக்களின் படுகொலைகளை எண்ணிக்கையின்றி ஒரு வெற்று காசோலையைப் போன்று எடுத்துக்காட்டுகின்றன.

அவரது படைகள் எதிர்ப்பு போராளிகளை "நிர்மூலமாக்கும்" என்று ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ சூளுரைத்தார். இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஆக்கிரமிப்பு ஐரோப்பாவில் எதிர்ப்பு போராளிகளுக்கு எதிராக நாஜிக்களால் பயன்படுத்தப்பட்ட அதே மாதிரியான தந்திரோபாயங்களோடு, அவரது ஆட்சிக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு பழிக்கு பழியாக விகிதாசாரமற்ற முறையில் படுகொலை செய்வதற்கு பொறோஷென்கோ அழைப்புவிடுத்தார், அவர் கூறுகையில், “ஒவ்வொரு சிப்பாயின் உயிரிழப்புக்காகவும், அந்த போராளிகள் அவர்களின் சொந்த டஜன் கணக்கான மற்றும் நூற்றுக் கணக்கான போராளிகளை விலையாக கொடுக்க வேண்டியதிருக்கும்," என்றார்.

உக்ரேனிய ஆட்சியும், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அதன் ஆதரவாளர்களும் எந்த மாதிரியான பாசிச நாசங்களைக் கிழக்கு உக்ரேனிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு வருகிறார்கள் என்பதை அஜோவ் இராணுவப் படைபிரிவு மீதான ஒரு பிபிசி செய்தி தெளிவுபடுத்துகிறது. அஜோவ் இராணுவ படைப்பிரிவுடன் சேர்ந்து தற்போது சண்டையிட்டு வரும் ஒரு வெள்ளையின பேரினவாதியும் மற்றும் ஸ்வீடன் இராணுவத்தின் முன்னாள் சிப்பாயுமான மிக்கேல் ஸ்கில்ட்டை அது நேர்காணல் செய்தது. ஸ்கில்ட் கூறுகையில், ஸ்வாஷ்திகா முத்திரைகளை அணிந்த "தேசியவாத சோசலிஸ்ட்டுக்களை" அந்த இராணுவ படைப்பிரிவு உள்ளடக்கி இருக்கிறது என்றும், ஆனால் அங்கே "தாராளவாதிகளும் இருக்கிறார்கள், இருந்தபோதினும் அவர்கள் எவ்வாறு அதற்குள் வந்தார்கள் என்பது எனக்கு தெரியவில்லை," என்றார்.

பில்லினிய செல்வந்தரான இகோர் கொலோமோயிஸ்கியால் (Igor Kolomoisky) நிதியுதவி வழங்கப்பட்டு, சர்வதேச அளவில் வரவழைக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ள ஆட்களைக் கொண்ட அஜோவ் இராணுவ படைப்பிரிவானது, சமூக தேசிய கூட்டமைப்பின் (Social National Assembly - SNA) தலைவரான ஆண்ட்ரி பிலெட்ஸ்கியின் தலைமையில் உள்ளது. SNAஇன் இணையதள அறிவிப்பு அதன் நோக்கத்தைக் குறிப்பிடுகையில், கலப்பின பாலியல் உறவுகளைக் "கடுமையாக தண்டிப்பதும்" மற்றும் "உக்ரேனை மேற்கொண்டு விரிவாக்குவதற்காக தயாரிப்பு செய்வதும் மற்றும் சர்வதேசியவாத ஊக வணிக மூலதனத்தின் மேலாதிக்கத்திலிருந்து ஒட்டுமொத்த வெள்ளையினத்தையும் சுதந்திரம் அடைய செய்வதற்காக போராடுவதும்," அதன் நோக்கங்களாகும் என்று குறிப்பிடுகிறது.

BBCஆல் தொடர்பு கொள்ளப்பட்ட போது, கியேவ் ஆட்சி அஜோவ் இராணுவப் படைப்பிரிவை நியாயப்படுத்தியது. ஜிராஷ்சென்கோ கூறுகையில், “சமூக தேசிய கூட்டமைப்பு ஒரு நவ-நாஜி அமைப்பல்ல," என்று உரைத்தார். அஜோவ் இராணுவப் படைப்பிரிவில் இருக்கும் உக்ரேனியர்கள்-அல்லாதவர்கள், “பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களின் போராட்டத்தில் போராளிகளின் வீரதீர சாதனைகளை எழுதுவதற்காக ஸ்வீடன், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் இருந்து வந்துள்ள இதழாளர்கள்" ஆவார்கள் என்று அவர் வாதிட்டார்.

உக்ரேனில் பாசிசவாத அட்டூழியங்கள், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய சக்திகள் மீதான ஒரு குற்றப்பத்திரிகைகளாக உள்ளன, ரஷ்ய-சார்பிலான உக்ரேனிய ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சைக் கவிழ்ப்பதற்காக தீவிர-வலது சக்திகளின் தலைமையில் கியேவில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய ஆதரவிலான ஆர்ப்பாட்டங்களைப் பகிரங்கமாக அவை ஊக்குவித்திருந்தன. யானுகோவிச்சினது கலகம்-ஒடுக்கும் பொலிஸை நசுக்கவும் மற்றும் பெப்ரவரி 22 ஆட்சிக்கவிழ்ப்பின் மூலமாக மேற்கத்திய சார்பிலான ஆட்சியை நிறுவுவதற்கும் Right Sector மற்றும் ஏனைய பாசிசவாத போராளிகள் குழுக்களைக் கட்டியெழுப்பி இருந்த நிலையில், மேற்கத்திய அரசாங்கங்களும், ஊடகங்களும் அந்த பாசிசவாதிகளின் குற்றங்களை இப்போது மூடிமறைத்து வருகின்றன.

யானுகோவிச்சிற்கு எதிரான வலதுசாரி, ஐரோப்பிய ஒன்றிய சார்பிலான எதிர்ப்பை ஜனநாயகத்திற்கான ஒரு இயக்கமாக சித்தரித்துக் காட்டி (பார்க்கவும்: "ஏகாதிபத்தியத்திற்கான சேவையில் வலது-சாரி புத்திஜீவிகள் கியேவில் கூடுகிறார்கள்), பெப்ரவரி 22 ஆட்சிக்கவிழ்ப்பையும் மற்றும் கியேவ் போராட்டங்களையும் ஆதரித்ததில் மேற்கத்திய தலையீட்டைப் புகழ்ந்திருந்த "மனித உரிமைகளுக்கான" ஏகாதிபத்தியத்தின் ஆலோசகர்களினது பாசாங்குத்தனத்தை, ஸ்லாவ்யான்ஸ்க் நகர அட்டூழியங்கள் இன்னும் மேலதிகமாக அம்பலப்படுத்துகின்றன. கியேவ் ஆட்சியின் குற்றங்கள் மீது அவர்கள் மவுனமாக இருப்பது, ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசவாத பிற்போக்குத்தனத்தின் முகவர்களாக அவர்கள் வகித்த பாத்திரத்தை மேலுயர்த்திக் காட்டுகிறது.

கிழக்கு உக்ரேனில் கியேவ் ஆட்சி அதன் உள்நாட்டு யுத்தம் மற்றும் அரசியல் பயங்கரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில், கியேவ் ஆட்சிக்கான அவற்றின் ஆதரவை மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் அதிகரித்து வருகின்றன. நேற்று, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் கூட்டத்தில் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அறிவித்தார்.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான Rosneft; வங்கியியல் துணை நிறுவனங்களைக் கொண்ட மிகப் பெரிய இயற்கை எரிவாயு நிறுவனமான Gazprom; சுதந்திரமான இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனமான Novatek; மற்றும் அபிவிருத்தி கடன்கள் வழங்கும் Vnesheconombank உள்ளடங்கிய நிறுவனங்கள், அந்த முறைமைகளில் இலக்கில் வைக்கப்பட்டிருந்த நிறுவனங்களாகும். அந்த தடைகள், கிழக்கு உக்ரேனிய நகரங்களான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்கில் பிரிவினைவாத குழுக்களுக்கு எதிராகவும் திருப்பி விடப்பட்டு இருந்தன. இத்தகைய நிறுவனங்கள் அமெரிக்காவிடம் இருந்து கடன் வாங்குவதை மற்றும் அமெரிக்க நிதியியல் அமைப்பை அணுகுவதை இந்த தடைகள் தடுக்கின்றன.

ஒபாமா கூறுகையில், “இந்த தடைகள் முக்கியமானவை என்பதோடு, அவை இலக்கிலும் வைக்கப்பட்டிருக்கின்றன," என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில், அமெரிக்க நிறுவனங்களினது "நிரம்பி வழியும்" தாக்கங்களை மட்டுப்படுத்துவதற்காக அவை வடிவமைக்கப்பட்டு இருந்ததாக தெரிவித்தார்.

உக்ரேனிய அரசாங்க படைகள் தொடர்ந்தும், ஆத்திரமூட்டும் வகையிலும் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் குண்டு வீசியிருக்கின்ற போதினும், ஒபாமா எரிச்சலூட்டும் விதமாக உக்ரேனிய நெருக்கடிக்கு மாஸ்கோவைப் பொறுப்பாக்கினார். “உண்மையில் ரஷ்ய-உக்ரேனிய எல்லையோரத்தில் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிப்பதற்கு ரஷ்யா பொறுப்பேற்றிருக்கிறது என்ற வெறும் வார்த்தைகளை அல்ல, நாம் திடமான நடவடிக்கைகளைப் பார்த்திருக்க வேண்டும்," என்று அவர் தெரிவித்தார். (பார்க்கவும்: “உக்ரேனிய படைகள் ரஷ்ய எல்லையோர நகரில் குண்டுவீசியதும் மாஸ்கோ அதன் விடையிறுப்பில் அச்சுறுத்துகிறது")

நேற்று புருசெல்ஸில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், “கிரிமியாவை இணைத்துக் கொண்டதற்கும் மற்றும் கிழக்கு உக்ரேனை ஸ்திரமின்மைப்படுத்துவதற்கும் ரஷ்ய கொள்கை-முடிவெடுப்போரைப் பொறுப்பாக்குவதற்காக, பொருட்களையோ அல்லது நிதியியல் ஒத்துழைப்பையோ ஆக்கபூர்வமாக வழங்குகின்ற தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள்" மீது தடைகளை விதித்தார்கள். பயணங்களுக்கான தடை மற்றும் 72 ரஷ்ய தனிநபர்களையும், நிறுவனங்களையும் பாதிக்கும் வகையில் சொத்துக்கள் முடக்கம் ஆகியவையும் அந்த தடைகளில் உள்ளடங்கும்.

"உக்ரேனிய நிலைமை ஏற்க முடியாதளவிற்கு உள்ளது," என்று தெரிவித்த பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன், “அந்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு ரஷ்யாவால் முறையாக மதிக்கப்படவில்லை," என்று தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரங்கள் மிக நெருக்கமாக பிணைந்துள்ள போதினும் கூட, ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகளை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் முன்னெடுத்தார்கள். அந்த இரண்டு பொருளாதாரங்களும் ஆண்டுக்கு 300 பில்லியன் டாலுக்கு அதிகமாக வர்த்தகம் செய்து வருகின்ற நிலையில், இந்த பரந்த தடைகள் அப்பிராந்தியம் முழுவதிலும் ஒரு பொருளாதார பொறிவின் அபாயத்தைத் தூண்டிவிடுகிறது.

ரஷ்யாவிற்கான ஐரோப்பிய ஒன்றிய ஏற்றுமதிகள் 11 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்திருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ரஷ்யாவின் ஏற்றுமதிகள் 9 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் கண்டறிந்த ஐரோப்பிய புள்ளிவிபர நிறுவனமான யூரோஸ்டேட் வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, உக்ரேனிய நெருக்கடி ஏற்கனவே ஐரோப்பிய பொருளாதாரத்தின் மீது ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.