தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் Australia: Rejected Tamil asylum seeker sets himself on fire ஆஸ்திரேலியா: அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழர் தீ மூட்டிக்கொண்டார்By Will
Morrow Use this version to print| Send feedback ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பிற்போக்கு அகதி விரோத ஆட்சியின் மேலும் ஒரு துன்பகரமான விளைவாக, கடந்த புதனன்று அகதி அந்தஸ்துக்கான தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின்னர், உடனடியாக நாடுகடத்தப்படும் நிலையை எதிர்கொண்ட இலங்கைத் தமிழ் அகதி, தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஜனார்த்தனன் என்னும் அந்த இளைஞன், கோமாவில் கவலைக்கிடமான நிலையில் சிட்னி நகரின் கொண்கோட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 98 வீதம் உடலில் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் 70வீதமான காயங்கள் கடுமையானவை. தோலின் பல பகுதிகளை வெட்டி அகற்றுவதிலும் ஒட்டுவதிலும் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ மூட்டிக்கொள்வதற்கு முதல் நாள், அகதிகள் பரிசீலனை மன்றிடமிருந்து ஜனார்த்தனனுக்கு ஒரு கடிதம் கிடைத்தது. முந்தைய முடிவுக்கு மாறாக அவரது வேண்டுகோள் இரத்துச் செய்யப்பட்டு அவருக்கு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 20 வயதான ஜனார்த்தனன், 2012 ஜுனில் ஆஸ்திரேலியா வந்ததுடன் மூன்று மாதங்களுக்கு மேலாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து, ஒரு தற்காலிக விசாவில் விடுவிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஒரு அலுவலக சுத்திகரிப்பாளராக பணியேற்றிருந்தார். 20,000க்கும் அதிகமான அகதிகள் ஆஸ்திரேலியாவில் இத்தகைய தற்காலிக விசா வழங்கப்பட்ட நிலையில் உள்ளனர். முன்னைய தொழிற் கட்சி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நடவடிக்கைகளின் கீழ், 2012 ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் வருபவர்களுக்கு தொழில் செய்வதற்கு உரிமை கிடையாது. அவர்கள் நன்கொடைகளிலேயே தங்கியிருக்கத் தள்ளப்பட்டனர். அந்த அவநம்பிக்கையான செயலுக்கு ஜனார்த்தனன் தள்ளப்பட்ட சூழ்நிலைபற்றி அவரது நன்பர் பாலசிங்கம் பிரபாகரன் விளக்கினார். “தான் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படலாம் என்ற உண்மையான அச்சம் அவருக்கு இருந்தது” என்று பிரபாகரன் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குக் கூறினார். “செவ்வாய் அன்று கடிதம் கிடைத்ததிலிருந்து அவர் மனக்குழப்பம் அடைந்திருந்தார்... தன்மீது பெற்றோலை ஊற்றிக்கொள்வதற்கு முன்னர் அவர் சிறிதளவு பெற்றோலை குடித்தும் இருந்தார். அருகில் கப்பல் தரிப்பிடத்தில் இருந்த தொழிலாளர்கள் உதவிக்கு வந்தனர். நீரை ஊற்றி தீயை அனைத்தனா.” ஜனார்த்தனனின் தற்கொலை முயற்சியானது இன்றைய தேசிய-தாரான்மை கூட்டரசாங்கத்தினதும் முன்னைய தொழிற் கட்சி அரசாங்கத்தினதும், ஆஸ்திரேலியாவுக்குள் அகதிகளை நுழைய விடுவதில்லை என்னும் தீவிர கொள்கைகளின் விளைவாகும். அகதி அந்தஸ்து கோரி வரும் தமிழர்கள் “உண்மையான அகதிகள்” அல்ல, மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் இலங்கை அரசின் எதேச்சாதிகாரத்தில் அவர்கள் எவ்வித ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகவில்லை என இந்த இரு அரசாங்கங்களுமே பொய் கூறி வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய அரசுத் தலைவர்களின் மகாநாட்டில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் டொனி அபோட், ராஜபக்ஷவின் அரசையும் நாட்டில் “சுதந்திரம்” மற்றும் “சுபீட்சம்” எனப்படுபவை பற்றியும் பாராட்டினார். “சில சந்தர்ப்பங்களில் சிக்கலான சூழ்நிலைகளில் கடினமான விடயங்களும் நிகழ்வதுண்டு” எனக் கூறி, கொழும்பு அரசாங்கம் சித்திரவதைகளை பயன்படுத்துவதையும் அவர் நியாயப்படுத்தியிருந்தார். (பார்க்க: ஆஸ்திரேலிய பிரதமர் சித்திரவதைகளை நியாயப்படுத்தி இலங்கை அரசை பாராட்டுகின்றார்.”) ஐநா தகவல்கள் படி சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்ட, 2009ல் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது பெற்ற இராணுவ வெற்றியின் பின்னர், தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட திட்டமிட்ட வழிமுறைகள், அரசாங்கத்தினால் தொழிலாள வர்க்கத்தின் மீதும் பரதந்தளவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பலாத்கார ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் அரசியல் எதிரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுதலும் தொடர்கிறது. இவ்வகையான ஒடுக்குமுறைகளும் வறுமையின் கொடுமையும் தாங்க முடியாத நிலையிலேயே பலர் ஆஸ்திரேலியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் தப்பிச் செல்கின்றனர். (பார்க்க: அகதிகள் எதற்காக ஆஸ்திரேலியாவுக்கு செல்கின்றனர் என்பதை இலங்கை நிருபர் விளக்குகிறார்.) பெரும்பாலும் அகதிகள் உயர்ந்த வட்டியில் பெரும் தொகை பணத்தை கடன்களாக பெற்றும், தமது வீடுகள் உடைமைகளை விற்றும் சேர்த்த பணத்திலேயே இவ்வாறு பிரயாணம் செய்கின்றனர். இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அகதிகள் சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்படுகின்றனர். ஆஸ்திரேலிய மனிதவுரிமைகள் சட்ட நிலையம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோத குடியேற்ற வாசிகள் ஒன்று தொடக்கம் ஐந்து வருடங்கள் வரையிலான சிறைவாசத்திற்கும் 50,000 ரூபா தொடக்கம் 200,000 ரூபா வரையிலான தண்டப் பணத்தினை செலுத்துவதற்கும் ஆளாவார்கள் எனக் கூறுகிறது. ஜனார்த்தனனின் தீ குளிப்பு ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்ட பல தமிழ் அகதிகள் அவநம்பிக்கையுடன் செய்து கொண்ட பல தற்கொலை முயற்சிகளில் ஒன்றாகும். அவற்றுள் பின்வருவனவும் அடங்கும். இரு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் வில்லிவுட் தடுப்பு நிலையத்தில் 2011 அக்டோபரில் தற்கொலை செய்து கொண்டார். இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதாக அறிவித்த நிலையில் 42 வயதுடைய ஒருவர் 2012 அக்டோபரில் தற்கொலை முயற்சி செய்தார். இலங்கையிலுள்ள மனைவி மகளுடன் அகதி அந்தஸ்துக்காக காத்திருந்த ஒரு அகதி, தனது இரண்டாவது தற்கொலை முயற்சியின் பின்னர் பிறிமன்ரில் வைத்தியசாலையில் 2013 ஜனவரியில் காலமானார். விக்டோரியா, மெல்போனில் 2013 அக்டோபரில் 37 வயது அகதி ஒருவர் தூக்கில் தொங்க முயற்சித்தார். முன்னர் தொழிற் கட்சி செய்ததைப் போலவே, அபோட்டின் அரசாங்கமும் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகள் செல்வதை தடுக்க இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது. அகதிகளின் படகுகளை இடைமறிப்பதிலும் புலனாய்வுத் தகவல்களை வழங்குவதிலும் இலங்கை படையினருக்கு ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் பயிற்சி வழங்குகின்றனர். கடந்த நவம்பரில், தொழிற் கட்சி முன்னாள் வெளியுறவு அமைச்சர் பொப் கார் அறிவித்த முடிவில், அகதிகளின் படகுகளை இடைமறிக்க உதவும் இரு கடற்படை ரோந்து படகுகளை ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வழங்குவதை அபோட் உறுதிப்படுத்தினார். 2012 ஜனவரியில் இருந்து, 8,300 இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர். மேலும் 4,500 பேர்களை இலங்கை அதிகாரிகள் இடைமறித்து தடுத்துள்ளனர். 2012 அக்டோபர் தொடக்கம் குறைந்தபட்சம் 1,100 பேர், குறிப்பாக தொழிற் கட்சி அரசாங்கத்தினால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த செப்டெம்பரில் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன், “இலங்கையில் இருந்து வர முயற்சிப்பவர்கள் எமது கடல் எல்லைக்கு அப்பால் தடுக்கப்பட்டு அனைவரும் திருப்பி அனுப்பப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு” நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிப்பதை தடுக்கும் பொருட்டு, எதேச்சதிகாரமான முறையில் “விரிவான சோதனைக்கு” உட்படுத்தப்படுகின்றனர். ஆஸ்திரேலிய மனிதவுரிமைகள் சட்ட நிலையம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “தஞ்சம் கோருவோரை ‘பரிசோதனைக்கு உட்படுத்தி’ இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான தீர்மானம், சுயாதீனமான மேற்பார்வைக்கு அல்லது மீளாய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இந்த நடவடிக்கைகளில், அண்மைக்காலத்தில் வந்தவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்காமல், அவர்களுக்கு உள்ள உரிமைகள் பற்றி அவர்களுக்குக் கூறாமல் அவர்களை விசாரனைக்கு உட்படுத்தப்படுத்துவதும் அடங்கும்.” ஜனார்த்தனனின் தற்கொலை முயற்சிக்கான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பிரதிபலிப்பு, அற்பத்தனமானவையாகவும் சினமூட்டுபவையும் இருந்தன. மிகுந்த வேதனையளிக்கும் விடயம் எனத் தெரிவித்த குடிவரவு அமைச்சார் மொறிசனின் பேச்சாளர், “இலங்கை தூதரகத்துடனான பங்களிப்புடன் இந்த இளைஞனுக்கு தகுந்த பாதுகாப்பையும் உதவியையும் அரசாங்கம் வழங்கும்” எனத் தெரிவித்தார். உண்மையில், தஞ்சம் கோருவதற்கு அகதிகளுக்கு உள்ள அடிப்படை சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை அவர்கள் பயன்படுத்தாமல் தடுப்பதற்கு வேண்டுமென்றே வகுக்கப்பட்ட கொள்கையின் விளைவே இந்த துன்பகரமாக சம்பவமாகும். சர்வதேச தொழிலாள வார்க்கத்தின் மிகவும் பாதிக்கப்படத்தக்க பிரிவினருக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ள இக்கொடூரமான கொள்கையானது, சமூக மற்றும் பொருளாதார நிலைமைள் மோசமடையும் நிலையில் ஆஸ்திரேலிய உழைக்கும் மக்களுக்கு எதிராக அடக்குமுறை வழிமுறைகளை பயன்படுத்துவதற்கான ஒரு முன்நடவடிக்கையாகும். |
|
|