World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி The acquittal of HSH Nordbank: Capitalist class justice in Germany எச்எஸ்எச் நோர்ட்பேங்கின் குற்ற வழக்கிலிருந்து விடுதலை: ஜேர்மனியில் முதலாளித்துவ வர்க்க நீதிBy Ulrich Rippert “பெரிய மீனை விட்டு சிறிய மீனைப் பிடிக்கும்" ஒரு பழமொழி, முதலாளித்துவத்தின் கீழ் இருக்கும் நீதித்துறை அமைப்புமுறையின் வர்க்க குணாம்சத்தினது ஒரு முக்கிய தன்மையை எடுத்துரைக்கிறது. எச்எஸ்எச் நோர்ட்பேங்க் வழக்கில் வழங்கப்பட்ட சமீபத்திய தீர்ப்பு, நிதியியல் பிரபுத்துவத்தின் குற்றகரமான சூழ்ச்சிகளைத் தண்டிக்க ஜேர்மனியின் நீதித்துறை மறுத்திருப்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. கடந்த புதனன்று ஹம்பேர்க் மாவட்ட நீதிமன்றம் அந்த வங்கியின் மொத்த ஆறு முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்களையும் குற்ற வழக்கிலிருந்து விடுவித்தது. முன்னாள் தலைமை செயலதிகாரி டிர்க் ஜென்ஸ் நோன்னென்மாஹர் மற்றும் முன்னாள் இயக்குனர் ஹன்ஸ் பேர்கெர் மீது குறிப்பாக தீவிர நம்பிக்கை துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கும் கூடுதலாக, முன்னாள் கடன் சந்தை செயலதிகாரி ஜோஹென் பிரிட்றிச்சும், நோன்னென்மாஹரும் கணக்குவழக்கு முறைக்கேட்டிற்காக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர். ஒரு ஆண்டு வரையில் நீடித்திருந்த அந்த வழக்கின் போது, அந்த வங்கியின் குற்றஞ்சாட்டப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் முற்றிலுமாக பொறுப்பற்ற விதத்தில் நடந்திருந்ததாக உறுதி செய்யப்பட்டது. குறிப்பிட்ட விதிகளை மீறியும், மற்றும் இருப்புநிலை கணக்கை மாற்றி எழுதியும், பத்து மில்லியன் கணக்கான யூரோக்களின் இழப்பிற்கு அவர்கள் பொறுப்பாக இருந்தார்கள். HSHஇன் முதன்மை உரிமையாளர்களாக உள்ள ஜேர்மன் பெடரல் மாநிலங்களான ஹம்பேர்க் மற்றும் ஷ்லிஸ்விக்-ஹோல்ஸ்டைன், அந்த இழப்புகளுக்காக 10 பில்லியன் யூரோ அளவிற்கு உத்தரவாதங்களை அளித்ததோடு, அந்த வங்கியைப் பொறிவிலிருந்து தடுக்க 25 பில்லியன் யூரோ இழப்பீட்டை ஏற்றுக் கொண்டன. HSH கண்காணிப்பு குழு இந்த வசந்தகாலத்தில் அறிவிக்கையில், அந்த வங்கி இன்னமும் நெருக்கடியில் இருப்பதாகவும், முந்தையதை விட இன்னும் கூடுதலாக 1.3 பில்லியன் யூரோ அளவிற்கு வரி செலுத்திவோரிடமிருந்து பணம் தேவைப்படுமென்றும் அறிவித்தது. இருந்த போதினும், நீதிமன்றம் குற்றச்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது. பிரதிவாதிகள் தெளிவாக அவர்களின் கடமை தவறி நடந்திருக்கின்ற போதினும், அவர்கள் ஒரு குற்றகரமான குற்ற வழியில் அதை செய்யவில்லை என்ற சுருக்கமான அறிவிப்போடு அந்நீதிமன்றம் அதன் தீர்ப்பை நியாயப்படுத்தியது. “தண்டிக்கத்தக்க குற்றத்தை மன்னிக்கும் பகுதியை" கடந்து செல்லவில்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. ஒவ்வொரு சட்டமீறலும் அல்லது நிர்வாக சட்டவிதிமுறை மீறலும் தண்டிக்கப்பட வேண்டியதில்லை என்பது நீதிபதியின் கண்ணோட்டமாக இருந்தது. "ஒரு தண்டிக்கத்தக்க குற்றத்தை மன்னிக்கும் பகுதியைக்" கடக்கவில்லை என்ற நீதிமன்றத்தின் கருத்து ஏதோவொரு விதத்தில் பின்வரும் உண்மைகளில் இருந்து எழுவதைப் பார்க்க முடிகிறது: 2003 கோடையில் ஹம்பேர்க் மாநில வங்கி மற்றும் கியேல் பிராந்திய வங்கியின் ஒருங்கிணைப்போடு HSH நோர்ட்பேங்க் உருவாக்கப்பட்டது. இரண்டு வங்கிகளுமே பிராந்தியத்தின் சிறிய-மத்தியரக வணிகங்களுக்கு நிதியுதவி அளிக்க சர்வதேச மூலதன சந்தைக்குள் செயல்படும் ஒரே வங்கியாக மாற்றப்பட்டிருப்பதாக கருதப்பட்டது. அந்த ஒருங்கிணைப்பிற்கு முன்னரே, அவ்விரு வங்கிகளுமே ஏற்கனவே வர்த்தக செயல் வகைமுறைகளில் (derivatives) பலமாக ஈடுபட்டிருந்ததோடு, பெருநிறுவனங்களிலும், அத்தோடு நிதி மேலாண்மை, சர்வதேச பத்திர ஊகவணிகம் மற்றும் முதலீட்டு வங்கியியல் ஆகியவற்றிலும் கூடி வேலை செய்து வந்திருந்தன. 2007இன் மத்திய வாக்கில், HSH நோர்ட்பேங்க் AG, அதன் கணக்கில் பெரும் கடன் மற்றும் பங்கு பத்திர நெறிமுறைமீறல்களைக் கொண்டிருந்த நிலையில், அந்நிலைமை அமெரிக்காவின் குறைந்த பிணையுள்ள நெருக்கடியை ஒட்டி அதன் பரிமாற்றத்தன்மையை அச்சுறுத்தியது. இத்தகைய "பிரச்சினையான பத்திரங்களை" இனியும் விற்க முடியாது என்பதால், HSH நிர்வாக குழு அவற்றை ஒன்றாக திரட்டி, “கணக்கில் வராத சிறப்பு கூறுகள்" என்று ஒதுக்கி வைத்தது. ஒட்டுமொத்தமாக, இந்த பரிவர்த்தனைகள் 17.3 பில்லியன் அளவிற்கு இருந்தது. 2007இன் இலையுதிர் காலத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறு பேரும் "ஒமேகா 55" என்ற குறிப்பெயரைக் கொண்டு ஒரு நடவடிக்கையில் இந்த விற்கமுடியா உடைமைகளை "ஒப்பந்த சேவையில் வழங்குவதில்" (outsourcing) ஈடுபட்டனர். லெஹ்மென் பிரதர்ஸின் திவால்நிலைமையை தொடர்ந்து, ஒட்டுமொத்த அமளியும் அம்பலப்பட்டதோடு, வங்கியை அழிக்க அச்சுறுத்தும் அளவிற்கு 158 மில்லியன் யூரோ அளவுக்கு பரிமாற்றத்தன்மை நெருங்கி கொண்டிருந்தது. விக்கிபீடியாவின் தகவல்படி, HSHஇன் இழப்புகளும் மற்றும் மறைக்கப்பட்ட கணக்குகளும் செப்டம்பர் 2008இல் சுமார் 1.1 பில்லியன் யூரோவாக இருந்தது. “வங்கி மற்றும் நிதியியல் சுமைகள் (இலாபம்-நஷ்ட கணக்கும் அதனோடு சேர்ந்து மறுமதிப்பு கையிருப்பும்) அதன் கணக்கில் சுமார் 2.4 பில்லியன் யூரோவாகும்," என்று அந்த இணைய தகவல் களஞ்சியம் குறிப்பிடுகிறது. ஹம்பேர்க் மற்றும் ஷ்லிஸ்விக்-ஹோல்ஸ்டைன் மாநிலங்களில் இருந்து கிடைத்த நேரடியான நிதியுதவிகள் மற்றும் பில்லியன் கணக்கான யூரோக்கள் சம்பந்தப்பட்ட உத்தரவாதங்கள் மூலமாக மட்டுமே அந்த வங்கி காப்பாற்றப்பட்டது. SoFFinஇல் இருந்து, அதாவது ஜேர்மன் அரசாங்கத்தின் சிறப்பு நிதியியல் சந்தை ஸ்திரப்பாட்டு நிதியிலிருந்து பிணையெடுப்பு வழங்குவதற்கு அந்த வங்கியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒரு முறையீடு செய்திருந்த நிலையில், HSH இயக்குனர்களின் சம்பளம் அதிகபட்சமாக ஆண்டுக்கு 500,000 யூரோ என்று முடிவு செய்யப்பட்டது. இருந்த போதினும், தலைமை செயலதிகாரி நோன்னென்மாஹர் ஒரு சிறப்பு போனஸாக 2.9 மில்லியன் யூரோவைப் பெறுகிறார் என்று 2009இன் கோடையில் அறிவிக்கப்பட்டது. இந்த "பக்கவாட்டு உடன்படிக்கையானது", ஷ்லிஸ்விக்-ஹோல்ஸ்டைன் நிதி மந்திரி ரைனெர் விகார்டும் (கிறிஸ்துவ ஜனநாயக கட்சி - CDU) உள்ளடங்கி இருந்த, HSH நோர்ட்பேங்கின் தலைமை குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. வங்கியாளர்களுக்கான சட்ட பாதுகாப்பு செலவுகளை HSH ஏற்றிருந்த நிலையில், “அந்த வழக்கின் செலவுகளை அரசு கருவூலமே ஏற்குமென்று" குறிப்பிட்டு நீதிபதி அவரது விடுதலை தீர்ப்பை நிறைவு செய்திருந்தார். |
|