சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா :  உக்ரேன்

Moscow threatens response after Ukraine forces shell Russian border town

உக்ரேனிய படைகள் ரஷ்ய எல்லையோர நகரில் குண்டுவீசியதும் மாஸ்கோ அதன் விடையிறுப்பில் அச்சுறுத்துகிறது

By Alex Lantier
14 July 2014

Use this version to printSend feedback

மேற்கத்திய உக்ரேனிய நகரங்களான டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க்கை பாதுகாப்பதற்காக ரஷ்ய சார்பு போராளிகள் குழுவிற்கு எதிராக கியேவில் உள்ள மேற்கத்திய ஆதரவிலான உக்ரேனிய ஆட்சியினது துருப்புகளின் தாக்குதலுக்கு இடையே, ஒரு ரஷ்ய எல்லையோர நகரத்தின் மீது உக்ரேன் குண்டுவீசியதற்கு விடையிறுப்பாக ரஷ்ய அதிகாரிகள் பதில் நடவடிக்கைக்கு சூளுரைத்திருந்த நிலையில் இந்த வாரயிறுதியில் பதட்டங்கள் அதிகரித்தன.

கியேவ் ஆட்சியினது எதிர்ப்பின் மையமாக இருக்கும் உக்ரேனிய நகரமான டொனெட்ஸிற்கு அருகில், அதே பெயரில் இருக்கும் ரஷ்ய நகரமான டொனெட்ஸ்க் மீது ஞாயிறன்று குண்டுகள் வீசப்பட்டன. அந்த குண்டுவீச்சில் 46 வயதான நான்கு குழந்தைகளுக்குத் தந்தை ஒருவர் கொல்லப்பட்டதோடு, இரண்டு முதிய பெண்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

கியேவ் ஆட்சிப்படைகளால் ரஷ்ய எல்லை அருகே மீண்டும் மீண்டும் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்த குண்டுவீச்சும் நடந்திருந்தது. சனியன்று, உக்ரேனிய படைகள் இரஷ்யாவிற்கு அருகில் இருக்கும் குய்பஷா (Kuibyshev) மாவட்டத்தில் பல குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியதோடு, அங்கே ரஷ்ய எல்லையோர பாதுகாப்பு படையோடும் ஒரு துப்பாக்கி சண்டையை தொடங்கியது. ஞாயிறன்று, உக்ரேனுக்குள் இருந்த இலக்குகளில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்னரும், அந்த குண்டு வீச்சு நடத்தப்பட்டதற்கு உடனடியாக பின்னரும், உக்ரேனிய போர் விமானங்கள் ரஷ்ய வான் எல்லையை மீறியதோடு, ரஷ்யாவின் டொனெட்ஸ்க்கிற்கு மேலே பறந்து சென்றன.

ரஷ்ய எல்லை இறையாண்மைக்கு எதிரான ஒரு ஆக்ரோஷ நடவடிக்கையாக அது கருதப்பட்டதால் அதற்கு உத்தியோகப்பூர்வ எதிர்ப்பை தெரிவிக்க மாஸ்கோவில் உள்ள உக்ரேனிய வெளிவிவகாரங்களுக்கான பொறுப்பதிகாரியை (chargé d’affaires) ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வரவழைத்திருந்தது. ரஷ்யாவினது ஒரு சாத்தியமான பதிலடியை கியேவ் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று அதன் கடிதம் எச்சரித்தது: “இந்த சம்பவம் ரஷ்ய-உக்ரேனிய எல்லை பகுதியில் மிக அபாயகரமாக பதட்டங்கள் தீவிரப்பட்டிருப்பதற்கு ஆதாரமாகும். மேலும் அது திரும்ப பெற முடியாத அளவிற்கு விளைவுகளை ஏற்படுத்தக் கூடும், அதற்கான முழு பொறுப்பும் உக்ரேனிய தரப்பைச் சார்ந்திருக்கும்,” என்று குறிப்பிட்டது.

உக்ரேனிய குண்டுவீச்சுக்கு ஒரு "கடுமையான மற்றும் உறுதியான பதில்" அளிக்கப்படுமென்று ரஷ்ய துணை வெளியுறவுத்துறை மந்திரி கிரிகோரி கராசின் (Grigory Karasin) தெரிவித்தார்: “இயல்பாகவே, இந்த நடவடிக்கையை ஒரு பதில் நடவடிக்கை இல்லாமல் விட்டுவிட முடியாது. இந்த பிரச்சினை மீதான உக்ரேன் தரப்பு பேச்சுக்கள் தீவிரமாகவும், கடுமையாகவும் போய் கொண்டிருக்கின்றன,” என்றார்.

ஆனால் குண்டுவீச்சிற்கு பொறுப்பேற்க மறுத்த கியேவ் ஆட்சியின் பாதுகாப்பு அதிகாரிகள், அதை ரஷ்ய-சார்பிலான எதிர்ப்பு போராளிகள் குழுவின் மீது சுமத்தினார்கள். “நிச்சயமாக ரஷ்ய கூட்டமைப்பின் எல்லைக்குள் உக்ரேனிய துருப்புக்கள் குண்டுவீசவில்லை. நாங்கள் சுடவில்லை,” என்று உக்ரேனின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் ஆண்ட்ரி லைசென்கோ தெரிவித்தார்.

இருந்த போதினும், கியேவ் ஆட்சி படைகள் மீது குண்டுவீச்சிற்கு டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் (DPR) அதிகாரிகள் கண்டனம் தெரிவித்தனர். “அனைத்து உக்ரேனிய குண்டுவீச்சிற்கும் கண்டனம் தெரிவிப்பது எங்களுக்கு பழக்கமாகி விட்டது,” என்று DPRஇன் துணை பிரதம மந்திரி ஆண்ட்ரி புர்ஜின் ரஷ்யாவின் மாஸ்கோ ஸ்பீக்ஸ் வானொலி நிலையத்திற்குத் தெரிவித்தார்.

டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்கில் நடக்கும் சண்டையினால் அங்கிருந்து வெளியேறி வரும் உக்ரேனிய அகதிகள் ரஷ்யாவிற்குள் வர முயலும் மூன்று முக்கிய எல்லையோர சோதனைசாவடிகள் உட்பட, ரஷ்ய நிலைகளின் மீது கியேவ் ஆட்சி சமீபத்திய வாரங்களில் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷ்ய டொனெட்ஸ்க் மீதான இந்த வாரயிறுதியில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்கு கூடுதலாக, ஜூன் 20இல் நோவோஷேக்டின்ஸ்க் சோதனைச்சாவடியிலும் மற்றும் ஜூன் 28இல் கோகோவோ சோதனைச்சாவடியின் மீதும் பீரங்கி குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருந்தன. ஜூன் 3 மற்றும் ஜூன் 5இல் நோவோஷேக்டின்ஸ்க் சோதனைச்சாவடியின் மீது மீண்டும் குண்டு வீசப்பட்டது. எவ்வாறிருந்த போதினும், இந்த வாரயிறுதி வரையில், ரஷ்யாவில் உக்ரேனிய குண்டுவீச்சினால் எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கவில்லை.

சமீபத்திய குண்டுவீச்சுகளுக்குப் பின்னர், ரஷ்ய அதிகாரிகள் தெரிவிக்கையில், ரஷ்யாவிற்குள் மேற்கொண்டு உள்ளே வரும் உக்ரேனிய அகதிகளைத் தங்க வைக்க, உக்ரேனிய எல்லையிலிருந்து தொலைவில், அவர்கள் இன்னும் அதிக முகாம்களைக் கட்ட இருப்பதாக அறிவித்தார்கள். குறைந்தபட்சம் 22,000 உக்ரேனிய அகதிகள் தற்போது ரஷ்யாவில் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருகிறார்கள், இறுதியாக "நூறு ஆயிரக்கணக்கான" கிழக்கு உக்ரேனியர்கள் போர் களத்திலிருந்து வெளியேறி இருக்கக்கூடுமென DPRஇன் அதிகாரிகள் கடந்த வாரம் எச்சரித்தார்கள்.

ரஷ்ய நிலத்தின் மீது உக்ரேனிய தாக்குதல்களானது, கியேவில் இந்த ஆண்டு பெப்ரவரியில் மேற்கத்திய ஆதரவிலான பாசிச தலைமையின் ஆட்சிக்கவிழ்ப்பிலிருந்து எழுந்த தீவிர-வலது ஆட்சியின் முற்றிலும் ஈவிரக்கமற்ற குணாம்சத்தையும், ரஷ்யா தான் இந்த மோதலை வலிந்து இழுக்கிறது என்ற மேற்கத்திய அரசாங்கங்களால் மற்றும் ஊடகங்களால் ஊக்குவிக்கப்பட்ட பொய்களையும் அம்பலப்படுத்துகின்றன. கிழக்கு உக்ரேனில் எழுந்துள்ள எதிர்ப்பை நசுக்க வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் மிக நெருக்கமாக வேலை செய்து வருகின்ற உக்ரேனிய படைகள், ரஷ்யாவுடன் ஒரு யுத்தத்தைத் தூண்ட அச்சுறுத்தி வருகின்றன.

கிழக்கு உக்ரேனிய நகரங்களைத் தாக்கவும் மற்றும் ரஷ்யா மீது குண்டு வீசவும் அவை டாங்கிகள், அதிவிரைவு போர் விமானங்கள், மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்களை திரட்டி வருகின்ற நிலையில், கியேவ் ஆட்சி அதிகாரிகள் ஒரு இரத்தஆறை உருவாக்க அச்சுறுத்தி வருகின்றனர். கடந்த வாரம் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ போறோஷேன்கோ அவரது படைகளின் இழப்புகளுக்காக அதே விகிதாச்சாரத்தில் அல்லாமல் பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்தார்: “ஒவ்வொரு சிப்பாயின் உயிரிழப்புக்காகவும், அந்த போராளிகள் அவர்களின் சொந்த டஜன் கணக்கான மற்றும் நூற்றுக் கணக்கான போராளிகளை விலையாக கொடுப்பார்கள்,” என்று உரைத்தார்.

மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுடனான அதன் நல்லுறவுகளைத் தக்க வைக்கும் முயற்சியின் பாகமாக, உக்ரேனிய இராணுவத்தை தாக்குவதற்காகவோ அல்லது கிழக்கு உக்ரேனில் அதன் தாக்குதலை நசுக்குவதற்காகவோ இராணுவரீதியில் தலையீடு செய்வது அதன் தற்போதைய கொள்கை இல்லை என்பதை ரஷ்யா மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. இருந்தபோதினும், கிரெம்ளினுக்கு மிக நெருக்கமான பெயர் வெளியிடாத ஒரு ஆதாரம் கார்டியனுக்கு தெரிவிக்கையில், கிழக்கு உக்ரேனில் ரஷ்ய இனத்தவரைப் பாதுகாக்க ஒரு ரஷ்ய இராணுவ தலையீட்டுக்கு இன்னமும் சாத்தியமுள்ளது என்று தெரிவித்தார். “கிழக்கில் 300 பேர் கொல்லப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், புட்டின் நடவடிக்கை எடுக்க கடமைப்படுவார், அது என்றைக்காவது ஒருநாள் நடக்கும் என்று தான் நான் நினைக்கிறேன். நீங்கள் அதை நிராகரிக்க முடியுமென்று நான் கருதவில்லை, நிச்சயமாக முடியாது,” என்று அவர் தெரிவித்தார்.

அதுபோன்றவொரு தலையீடு ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையே ஒரு முழுமையான யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட அச்சுறுத்தும் என்பதோடு, அதில் அதிகளவில் சாத்தியமான உக்ரேனிய தோல்வியைத் தடுப்பதற்காக நேட்டோ தலையீடு செய்யக்கூடும் என்ற நிலையில்அது அணு ஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையிலான யுத்த அபாயத்தை நேரடியாக முன்னிறுத்துகிறது.

கியேவ் ஆட்சியால் அச்சுறுத்தப்பட்டுள்ள இரத்தக்களரியை உருவாக்கும் நடவடிக்கையானது, அதிவலதுசாரி சக்திகள் மற்றும் செல்வாக்கு பெற்ற மத்திய வர்க்க போலி-இடது குழுக்களின் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாக உள்ளது, அவை ரஷ்யா சார்பிலான உக்ரேனிய ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சைப் பதவியிலிருந்து கவிழ்த்த பெப்ரவரி ஆட்சிக் கவிழ்ப்புக்கு இட்டுச் சென்ற கியேவின் சுதந்திர சதுக்கத்தில் (மைதான்) நடந்த ஐரோப்பிய ஒன்றிய சார்பிலான போராட்டங்களில் வாஷிங்டன், பேர்லின் மற்றும் அவற்றின் கூட்டாளிகளால் ஒன்றுதிரட்டப்பட்டவை ஆகும்.

உக்ரேனிய இராணுவ பிரிவுகள் தொடக்கத்தில் கிழக்கு உக்ரேனிய எதிர்ப்பு படைகளைத் தாக்க மறுத்த போதினும், உக்ரேனிய இராணுவத்தை அதன் சொந்த மக்களுக்கு எதிராக யுத்தம் நடத்துவதற்குத் தகைமை பெற்ற ஒரு படையாக மாற்றி அமைப்பதில் கியேவ் ஆட்சியோடு ஏகாதிபத்திய சக்திகள் மிக நெருக்கமாக வேலை செய்துள்ளன. கடந்த மாதங்களில் மைதான் போராட்டத்திற்கு தலைமை வகித்த Right Sector போன்ற பாசிசவாத போராளிகள் குழுக்களும் மற்றும் உக்ரேனின் பில்லியனிய செல்வந்த தட்டுக்களால் நிதியுதவி வழங்கப்படும் தனியார் இராணுவங்களும் கியேவ் ஆட்சியின் தேசிய பாதுகாப்புப் படையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

"அவர்கள் அங்கே வசிக்கும் மக்களை... வெறுமனே அங்கே வசிக்கும் மக்களை மட்டுமல்ல, மாறாக அவர்களின் சொந்த மக்களையே கூட சுடுவதற்கு எதற்காக இராணுவம் பயந்ததோ, அந்த உளவியல்ரீதியிலான தடைகளை அவர்கள் கடந்துவிட்டார்கள். அந்த படைகள் சிறிது மறுகட்டமைப்பு செய்யப்பட்டதும், யார் நம்முடைய மக்கள், யார் எதிரிகள் என்பது தெளிவானதும், அந்த நடவடிக்கைகள் இன்னும் துல்லியமாக மாறி உள்ளன,” என்று கியேவின் ரஜம்கோவ் மைய சிந்தனை கூடத்தின் மிக்கோலா சங்க்ரோவாஸ்கி (Mykola Sungurovskyi) நியூ யோர்க் டைம்ஸிற்கு கடந்த வாரம் தெரிவித்தார்.

உக்ரேனின் பாசிசவாத சமூக-தேசிய கட்சியின் ஒரு ஸ்தாபக அங்கத்தவரான கியேவ் ஆட்சியின் பாதுகாப்பு அதிகாரி ஆண்ட்ரி பருபிய் உடனும் டைம்ஸ் உரையாற்றியது, அவர் சோவியத் ஒன்றியத்தின் ஏனைய முன்னாள் குடியரசுகளுக்கான ஒரு முன்மாதிரியாக, கியேவ் இந்த தாக்குதலைப் பார்ப்பதாக தெளிவுபடுத்தினார்.

"அங்கே ஏனைய பல நாடுகளும் இருக்கின்றன, அவை இன்னும் தயாராகவில்லை—சரியாக கூறுவதானால், அவற்றின் இராணுவ படைகள் தயாராக இல்லை, அவை இதுபோன்றவொரு யுத்தத்திற்கு தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. உண்மையில் நாங்களே குரோஷியா மற்றும் இஸ்ரேல் இரண்டினது அனுபவத்தையும் ஆய்வு செய்தோம், ஆனால் அதனோடு இங்கே நிறைய புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ரஷ்யா இந்த அனுபவத்தை வெற்றிகரமானதாக பார்க்கிறதென்றால், இந்த அனுபவத்தை எந்தவொரு பால்டிக் நாடுகளிலும், பெலாரஸ் மற்றும் கஜகிஸ்தானிலும் கூட, மிக எளிதாக பயன்படுத்த முடியும்," என்று பருபிய் டைம்ஸிற்குத் தெரிவித்தார்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உக்ரேனிலும் மற்றும் அப்பிராந்தியம் முழுவதிலும் ரஷ்யாவின் செல்வாக்கைக் குறைக்க முனைந்துள்ள நிலையில் அவர்களோடு கியேவ் ஆட்சி மிக நெருக்கமாக வேலை செய்து வருகிறது. உக்ரேனிய உள்துறை அமைச்சகத்தின் வலைத் தள தகவலின்படி, தேசிய பாதுகாப்பு படைக்கு நிதி மற்றும் செயல்பாட்டு உதவிகள் குறித்து விவாதிக்க அமெரிக்க அரசுத்துறை அதிகாரி கிரிகோரி கௌஸ்னெர் உக்ரேனுக்கு கடந்த மாதம் பயணித்திருந்தார்.

மிக மோசமான இரத்தஆறை உருவாக்கும் நடவடிக்கைகளில் இருந்து தங்களைத்தாங்களே விலக்கி தூர நிறுத்திக் கொள்ளும் ஒரு முயற்சியில் ஜேர்மனின் அதிகாரிகள் ஒருசில ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வழங்கி வருகின்ற போதினும், அவர்களும் அந்த நடவடிக்கைக்கு அவர்களின் ஆதரவை அளித்துள்ளனர். பொறோஷேன்கோ உடன் கடந்த வியாழனன்று நடந்த ஒரு தொலைபேசி உரையாடலில், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் "அந்த பிரிவினைவாதிகளுக்கு எதிரான அவரது சட்டபூர்வ நடவடிக்கைகளை அர்த்தபூர்வமாக தக்க வைக்கவும் மற்றும் அப்பாவி மக்களைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி பொறோஷென்கோவை வலியுறுத்தியதாக" ஜேர்மன் அரசாங்க செய்தி தொடர்பாளர் ஸ்ரெபன் சைய்பேர்ட் தெரிவித்தார்.

மேற்கத்திய ஏகாதிபத்திய அதிகாரங்களிலோ அல்லது முன்னாள் சோவியத் குடியரசுகளிலோ உள்ள தொழிலாள வர்க்கத்திடமிருந்தும் எந்த ஆதரவும் பெற்றிராத இந்த பிற்போக்குத்தனமான தாக்குதலின் விளைவு, உக்ரேனிய மக்களுக்கான ஒரு பேரழிவாக உள்ளது. கியேவ் ஆட்சி படைகளின் நீண்டகால முற்றுகைக்கு அஞ்சி, டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க் நகரங்களில் இருந்து நூறு ஆயிரக்கணக்கான மக்கள் பொது போக்குவரத்தையோ அல்லது தங்களின் சொந்த வாகனங்களையோ பயன்படுத்தி அந்நகரில் இருந்து வெளியேறி வருகின்ற நிலையில், அந்நகரங்களின் இரயில் மற்றும் பேருந்து பயணச்சீட்டுக்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

புறநகரம் மீதான உக்ரேனிய படைகளின் குண்டுவீச்சில் முப்பது பேர் கொல்லப்பட்ட நிலையில், சனியன்று மெர்யென்காவின் தொழில்துறை டொனெட்ஸ்க் புறநகரின் மக்களை DPR அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக வெளியேற்றத் தொடங்கினார்கள்.

கியேவ் ஆட்சி படைகளோடு சண்டையிட, பெரும் எண்ணிக்கையிலான சுய ஆர்வலர்களை நியமித்து வருவதாக அவர்கள் தெரிவித்தார்கள். “நாங்கள் நிர்பந்தப்படுத்தி ஒன்று சேர்க்கவில்லை. நாங்கள் சுய ஆர்வலர்களை உள்ளெடுத்து வருகிறோம்," என்று DPRஇன் ஆள்சேர்ப்பு துறையின் தலைவர் பாவெல் குபேரிவ் ரஷ்யாவின் ITAR-TASS செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். “கடந்த வாரங்களில், ஆயிரத்திற்கும் மேலான சுய ஆர்வலர்கள் எங்கள் இராணுவத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்," என்றார்.