World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா : உக்ரேன் Ukrainian army prepares siege of Donetsk உக்ரேனிய இராணுவம் டொனெட்ஸிக்கின் முற்றுகைக்கு தயாரிப்பு செய்கிறது
By
Christoph Dreier உக்ரேனிய இராணுவப் படைகள் சனியன்று ஸ்லாவ்ஜன்ஸ்க் நகரை அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னர், புதிய பாதுகாப்பு மந்திரி வலேரி கேலேதே (Valeri Geletey) கூறுகையில், கிழக்கு உக்ரேனின் இரண்டு பிரதான நகரங்களான டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க்கு எதிரான தாக்குதலும் தொடரும் என்றார். இராணுவத்தினது கொடூரமான மூலோபாயம், பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த மோதலுக்கு ஒரு அமைதியான தீர்வை நிராகரித்த கேலேதே, அந்நாட்டின் கிழக்கில் உள்ள பிரதான நகரங்களைக் கடந்த மூன்று மாதங்களாக கட்டுப்பாட்டில் கொண்டிருந்த ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகள் சரணடைய வேண்டுமென கோரி வருகிறார். "போராளிகள் அவர்களின் ஆயுதங்களை நிரந்தரமாக துறந்து வந்தால் மட்டுமே இப்போது பேச்சுவார்த்தைகள் சாத்தியமாகும்," என்று பாதுகாப்பு மந்திரி தெரிவித்தார். இவ்விதத்தில், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரிகளோடு சேர்ந்து கடந்த புதனன்று அவர் முடிவு செய்திருந்த ஒரு உடன்படிக்கையை கேலேதே மீறுகிறார், போர்நிறுத்தத்திற்காக முன்நிபந்தனைகளின்றி இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்குரியதாக அந்த உடன்படிக்கை அனுமானிக்கபட்டு இருந்தது. மே மாத தொடக்கத்திலிருந்து முற்றுகையிடப்பட்டு இருந்த ஸ்லாவ்யான்ஸ்க்கை (Slavyansk) விட்டு ரஷ்ய-ஆதரவு போராளிகள் சனியன்று வெளியேறி, சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு டொனாட்ஸ்கை நோக்கி பின்வாங்கி இருந்தனர். பாதுகாப்பு படைகளின் ஒரு செய்தி தொடர்பாளர் சமீபத்தில் தெரிவிக்கையில், கோன்ஸ்டான்டினோவ்கா நகரம் (Konstantinovka) தற்போது இராணுவ படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார். வாரக்கணக்கில் முற்றுகையின் கீழ் இருந்ததால் அந்த நகரங்களின் நிலைமை சகிக்க முடியாததாக இருக்கிறது. ஸ்லாவ்யான்ஸ்கியில் இராணுவ குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை தாக்குதலினால், நீண்ட காலத்திற்கு முன்னரே குடிநீர், எரிவாயு மற்றும் மின்சார வினியோகங்கள் இல்லாது போயின. பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. கியேவ் அந்நகரத்திற்கு வழங்கி வந்த நிதித்தொகைகளை நிறுத்திவிட்டதால், பொது சேவைகளின் பெரும் பாகங்கள் அடிமட்டத்திற்கு நின்று போயுள்ளன. அந்நகரில் குடியிருந்த 116,000 பேரில் வெறும் 45,000 மக்கள் மட்டுமே மிஞ்சி உள்ளனர். கியேவ் ஆட்சியின் படைகளின் தாக்குதல்களுக்கு முன்னதாக, யாருக்கெல்லாம் தப்பி வெளியேற வாய்ப்பிருந்ததோ அவர்கள் தப்பி வெளியேறி இருந்தனர். அந்நகரத்திலிருந்து கிடைக்கும் பல வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் குண்டுவீச்சால் அந்நகரம் மிக மோசமாக சேதமடைந்திருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான டாட்டியானா லோக்ஸ்சினாவின் (Tatiana Lokschina) அறிக்கைகள், உக்ரேனிய விமானப்படைகளின் குண்டுவீச்சால் எண்ணிக்கையற்ற அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றன. இப்போது கியேவ் ஆட்சியின் படைகள் டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க் நகரங்களுக்கு எதிராக நகர்ந்து வருகின்றன. அந்த நகரங்கள், ஏற்கனவே பல வாரங்களாக தாக்குதலின் இலக்கில் வைக்கப்பட்டிருந்தன. முறையே 1 மில்லியன் மற்றும் 400,000 குடிமக்களைக் கொண்டிருந்த அந்நகரங்கள், ஸ்லாவ்ஜன்ஸ்க்கை விட குறிப்பிடத்தக்க அளவிற்கு பெரியனவாகும். உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ போறோஷென்கோ டொனெட்ஸ்க் மற்றும் லூஹன்ஸ்க்கைச் "சுற்றி வளைப்பதற்கான" அவரின் விருப்பத்தை அறிவித்தார். “அந்த கொள்ளையர்கள் மண்டியிடும் வரையில் அந்த இடங்களின் மீது முழுமையாக முற்றுகையில் வைத்திருக்க ஜனாதிபதி பெட்ரோ போறோஷென்கோவின் மூலோபாய திட்டம் நோக்கம் கொண்டுள்ளது," என்று ஞாயிறன்று பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவர் மெக்கேல் கோவல் தெரிவித்தார். அந்நகருக்கு உணவு வினியோகிக்க அனுமதி அளித்திருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்ற போதினும், அது போன்ற வாக்குறுதிகளில் எந்தவொரு நம்பிக்கையும் வைக்க முடியாது என்பதை ஸ்லாவ்யான்ஸ்க்கின் அனுபவம் எடுத்துக்காட்டுகிறது. அங்கே நடத்தப்பட்ட முற்றுகை, விரைவிலேயே உணவு மற்றும் மருத்துவ பொருட்களின் பற்றாக்குறைக்கும், ஒரு மனிதாபிமான பேரழிவுக்கும் இட்டுச் சென்றது. உக்ரேனிய இராணுவம் கொடூரமாக தலையீடு செய்யும் ஒரு படையாக மாறியுள்ளது. அமெரிக்கா இந்த ஆண்டின் மார்ச்சிலிருந்து இந்த திட்டத்திற்காக 23 மில்லியன் டாலரை உக்ரேனிய அரசாங்கத்திற்கு வழங்கி உள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கியேவின் மைதான் போராட்டங்களில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்த பாசிச போராளிகள் குழுக்கள், அரசாங்கத்தால் அதனோடும் மற்றும் வழக்கமான இராணுவ பிரிவுகளுக்கு உள்ளேயும் நிறுவப்பட்டுள்ளன. இந்த வசந்த காலத்தில், கிழக்கு உக்ரேனிய ரஷ்ய-சார்பிலான படைகள் அரசு கட்டிடங்களையும், விமான நிலையங்களையும் ஆக்கிரமிக்க தொடங்கிய போது, பல சிப்பாய்கள் அவர்களோடு சண்டையிட மறுத்தனர். அவர்களே கூட கியேவில் உள்ள ஆட்சியின் மீது வெகு குறைவாகவே அனுதாபம் கொண்டிருந்ததால், அவர்கள் உக்ரேனிய மக்கள் மீது துப்பாக்கியால் சுட மறுத்தார்கள். ஆனால் இப்போது உக்ரேனிய அதிகாரிகளும் மற்றும் மேற்கத்திய பத்திரிகைகளும், மக்களுக்கு எதிராக பாரிய படுகொலைகளை நடத்துவதற்குத் தகைமை பெற்ற இராணுவ பிரிவுகளை கியேவ் ஆட்சி வெற்றிகரமாக உருவாக்கி இருப்பதாக பகிரங்கமாக ஊக்குவிக்கின்றன. ரஜூம்கோவ் மைய (Razumkov Center) சிந்தனை கூடத்தின் மைகோலா சுன்குரோவ்ஸ்க்ஹி நியூ யோர்க் டைம்ஸிற்கு கூறுகையில், “அங்கே வசிக்கும் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த, அதுவும் வெறுமனே அங்கே வசிக்கும் மக்கள் மீது மட்டுமல்ல, மாறாக அவர்களின் சொந்த மக்கள் மீதே கூட துப்பாக்கி சூடு நடத்துவதற்கு எதனால் இராணுவம் பயந்திருந்ததோ அந்த உளவியல் தடையை அவர்கள் கடந்து விட்டார்கள்," என்று தெரிவித்தார். கடந்த வாரங்களின் போது, போறோஷென்கோ புதிய மந்திரியாக கடும்-நடவடிக்கையாளர் வலேரி கேலேதேவை நியமித்ததோடு, இராணுவ தலைமை தளபதியையும் மாற்றினார். செவ்வாயன்று டொனெட்ஸ்க் நகரை முற்றுகை இடுவதற்கான தயாரிப்பில், அப்போது அவர் கிழக்கு உக்ரேனிய செயல்பாடுகளுக்கான தலைவரையும் வாசிலி க்ரிஜாக்கைக் கொண்டு மாற்றினார். இந்த அணுகுமுறைகள் முழுவதுமாக அமெரிக்காவினால் ஆதரிக்கப்படுகின்றன. திங்களன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய ஒரு அரசாங்க செய்தி தொடர்பாளர், கிழக்கு உக்ரேனிய நகரங்களின் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்துவதற்கு ஆதரவை வெளிப்படுத்தினார். “உக்ரேனிய அரசாங்கம் உக்ரேனிய நாட்டைப் பாதுகாத்து வருகிறது. அதை செய்வதற்கு அவர்களுக்கு அனைத்து உரிமையும் இருப்பதாக நான் நினைக்கிறேன்,” என்று அவர் ஒரு கேள்விக்கு விடையிறுக்கையில் தெரிவித்தார். செவ்வாயன்று பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் உடனான ஒரு தொலைபேசிவழி கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜனாதிபதி பராக் ஒபாமா கூறுகையில், கிழக்கு உக்ரேனில் பதட்டங்களைக் குறைக்க ரஷ்யா உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவில்லையானால், அதற்கு எதிராக தடைகளை இறுக்குவதற்கு இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். ரஷ்யா அதன் "ஸ்திரப்பாட்டைக் குலைக்கும் நடவடிக்கைகளை" முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றும் மற்றும் உக்ரேன் எல்லையை ஒட்டி இருக்கும் அதன் இராணுவ பிரசன்னத்தைக் குறைக்குமாறும் ரஷ்யாவிற்கு அவர்கள் அழைப்புவிடுத்தனர். நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட மற்றும் வங்கி கணக்கு முடக்கப்பட்ட ரஷ்ய பிரஜைகளின் பட்டியலை விஸ்தரிக்க ஏற்கனவே திங்களன்று தூதர்கள் மட்டத்திலான ஒரு கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த விவகாரத்தின் மீதான முடிவு புதனன்று எதிர்பார்க்கப்படுகிறது. மங்கோலியாவிற்கான அவரது விஜயத்தின் போது, ஜேர்மன் வெளியுறவுத்துறை மந்திரி பிரான்க்-வால்டர் ஸ்ரைன்மையர் கூறுகையில், அந்த மோதலுக்கு எந்தவொரு இராணுவ தீர்வும் இருக்க முடியாது என்றார். “நிலைமையைச் சாந்தப்படுத்த இந்த அவசியமான நடவடிக்கைகள் எடுத்தாகப்பட வேண்டும்," அவர் கூறினார். முன்நிபந்தனைகள் இல்லாமல் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு புதனன்று செய்யப்பட்ட உடன்படிக்கைகளைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தினார். ரஷ்ய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கியேவ் அரசாங்கத்தின் இராணுவ தாக்குதலுக்கு மிக எச்சரிக்கையோடு எதிர்வினை காட்டி இருந்தனர். “அப்பாவி மக்கள் வசிக்கும் இடங்களின் மீது குண்டுகளைப் பொழிவதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென கியேவ் அழைப்பு விடுத்து வருவது முட்டாள்தனமாக உள்ளது," என்று திங்களன்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் இயலாமையோடு அறிவித்தது. “இத்தகைய நிலையில், ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ அரசுகள் கியேவ் அரசாங்கத்தின் குற்றகரமான கொள்கைகளை உரிய விதத்தில் கண்டிக்குமென நாங்கள் நம்புகிறோம்," என்று குறிப்பிட்டது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கியேவ் ஆட்சி என்ன மாதிரியான கொடூரத்தைக் கொண்டு நடந்து வருகிறதோ அது அந்நாட்டின் கிழக்கில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு எதிராக மட்டும் திருப்பி விடப்பட்டதல்ல. அந்நாடு முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்குள் அரசாங்கத்தின் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது. சமீபத்திய வாரங்களில், மானிய உதவித்தொகைகள் குறைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் எரிபொருளின் விலையோ 150 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது; வாடகைகளும் கூர்மையாக மிகவும் உயர்ந்து வருகின்றன. ஐரோப்பி ஒன்றியம் உடனான கூட்டமைவு உடன்படிக்கை (Association Agreement) நிலைமையை இன்னும் மேலதிகமாக தீவிரப்படுத்தி உள்ளது. புருசெல்ஸில் ஒரு சர்வதேச நன்கொடையாளர்களின் மாநாட்டிற்கான ஒரு ஆயத்த கூட்டத்தில், ஐரோப்பிய கமிஷனர் ஸ்ரெபான் ஃபூல தெரிவிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட உதவிகளை உக்ரேன் பெற விரும்பினால், அந்நாட்டிடம் இன்னும் மேலதிகமான சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்தார். "மேற்கொண்டு எந்தவொரு உதவிகளும், நடந்துவரும் சீர்திருத்த முயற்சிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்," என்று ஃபூல கூறினார். வாக்குறுதி அளிக்கப்பட்ட 17 பில்லியன் டாலரில் கியேவ் இதுவரையில் 3.2 பில்லியன் டாலர் மட்டுமே பெற்றுள்ளது. |
|