தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் Shinzo Abe’s Australian visit: Another step toward war ஷின்ஜோ அபேயின் ஆஸ்திரேலிய விஜயம்: யுத்தத்தை நோக்கிய மற்றொரு படியாகும்
By Nick
Beams Use this version to print| Send feedback ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் நேற்றைய உரை, சீனாவிற்கு எதிரான யுத்த தயாரிப்புகளில் மற்றொரு முக்கிய படியைக் குறிப்பதோடு, அதில் ஆஸ்திரேலியா தீர்க்கமான மூலோபாய முக்கியத்துவத்தை ஏற்று வருகிறது. அமெரிக்காவும் அப்போதைய தொழிற் கட்சியும் அமெரிக்க கடற்படை தளத்தை டார்வினில் அமைக்க உடன்பட்டிருந்த நிலையில் (அதுபோன்றவொரு ஏற்பாடு இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததற்கு பின்னர் செய்யப்பட்ட முதல் ஏற்பாடாகும்), நவம்பர் 2011இல், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தளத்திலிருந்து தான் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் ஆசியாவை நோக்கிய "முன்னெடுப்பை" உத்தியோகபூர்வமாக அறிவித்தார். சுமார் மூன்றாண்டுகளுக்கு பின்னர், ஜப்பான் ஒரு விரிவாக்கப்பட்ட இராணுவ பாத்திரம் வகிப்பதற்கு உதவும் வகையில் அந்நாட்டின் அரசியலமைப்பிற்கு கடந்த வாரம் "மறுவிளக்கம்" அளித்ததற்குப் பிந்தைய அவரது முதல் முக்கிய உரையை வழங்க, அபேயும் அதே இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒபாமாவின் விஜயம் திடமான இராணுவ நடவடிக்கைகளை உள்ளடக்கி இருந்ததைப் போலவே, அபேவும் தகவல், தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஆஸ்திரேலியாவுடன் ஒரு இராணுவ கூட்டுறவு உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். அவர் எதை ஆஸ்திரேலியாவுடன் ஒரு "புதிய" மற்றும் "சிறப்பு நட்புறவு" என்று அழைக்கிறாரோ அதனோடு "மறுவிளக்கம்" அளிப்பதற்கான முடிவைத் தொடர்புபடுத்தியமை அபேயினது உரையில் இருந்த மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஜப்பானிய அரசியலமைப்பின் அமைதிக்கான சட்டவிதிகள் என்றழைக்கப்பட்டவைகளின் கீழ், ஜப்பானிய இராணுவ படைகள் "சுய-பாதுகாப்பிற்கு" அப்பாற்பட்டு வேறெதிலும் ஈடுபடக்கூடாது என்று உத்தியோகபூர்வமாக தடுக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது அவை அப்பிராந்தியத்திலோ அல்லது உலகின் வேறெங்கேயுமோ உள்ள கூட்டாளிகளோடு கூட்டு நடவடிக்கையில் ஈடுபட முடியும். இந்த மாற்றம் வாஷிங்டனில் வரவேற்கப்பட்டிருகிறது, அங்கே அமெரிக்க பசிபிக் படைபிரிவிற்குப் பொறுப்பான முன்னாள் அட்மிரல் டென்னிஸ் பிளேயர் கூறுகையில், “இது வெகு விரைவாகவே வந்திருப்பதோடு", "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்புக்கு தெளிவான ஆதரவையும்" வழங்குவதாக தெரிவித்தார். திங்களன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் எழுதுகையில், அங்கே ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிற்கு இடையே அப்பிராந்தியத்தில் "கடற்படைகளுக்கும் விமானப்படைகளுக்கும் இடையே, காயங்களை ஏற்படுத்தக் கூடிய, சாத்தியமான துப்பாக்கி சூடு சம்பவங்களோடு,” "கடல்வழி முட்டிமோதல்கள்" வேண்டுமானால் இருக்கக்கூடும் என்று குறிப்பிட்ட பிளேயர், ஒரு பரந்த மோதல் ஏற்படாதென்று வாதிட்டார். ஆனால் உண்மையில் அதுபோன்ற "சம்பவங்கள்" வேகமாக ஒரு இராணுவ மோதலைத் தூண்டிவிடக்கூடும். ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அப்போட் அந்த "மறுவிளக்கத்தை" வரவேற்றதுடன், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான நேற்றைய சம்பிரதாயமான நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையில், "ஜப்பான் நீண்டகாலமாக தன்னிலே ஆழ்ந்து போய் இருந்துள்ளது," ஆனால் இப்போது அது "அமைதியை விரிவாக்குவதற்காக நிறைய செயலில் இறங்க தீர்க்கமாக உள்ளது," என்றார். அதிகரிக்கப்பட்ட சீன தன்முனைப்பை முகங்கொடுத்திருப்பதால், உள்ளதை உள்ளபடியே வைத்திருக்க அங்கே அதிகளவிலான ஜப்பானிய இராணுவ நடவடிக்கைகள் அவசியப்படுகின்றன என்ற வாதத்தின் அடிப்படையில் இந்த வலியுறுத்தலின் திரிக்கப்பட்ட தர்க்கம் அமைந்துள்ளது. உண்மையில் விவகாரம் இதற்கு தலைகீழாக இருக்கிறது. பிராந்திய பதட்டங்களோ அமெரிக்காவின் ஆக்ரோஷமான ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பால் தூண்டிவிடப்பட்டுள்ளன. சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினைகளை முக்கிய இராணுவ வெடிப்பு புள்ளிகளாக உயர்த்தி விடுவதும் அதன் உட்கூறுகளில் ஒன்றாக இருந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் அபே அளித்த உரை குறித்து வெளியான செய்திகள், அவரது உரை சீனா உடனான பதட்டங்களை அதிகரிக்க காரணமாக மாறும் என்பதைச் சுட்டிக் காட்டியிருந்த போதினும், ஜப்பானின் மீள்-இராணுவமயமாக்கல் மற்றும் ஆஸ்திரேலியா உடனான அதன் நெருக்கமான மூலோபாய மற்றும் இராணுவ உறவுகள் இரண்டையுமே பெருநிறுவன ஊடக ஸ்தாபகம் ஆதரித்து வருகின்றன என்பதைத் தலையங்க கருத்துரைகள் தெளிவுபடுத்தின. இன்றைய ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவ்வியூ தலையங்கம், இராணுவ பிரச்சினையை முற்றிலுமாக கைவிட்டதன் மூலமாக அதன் ஆதரவை எடுத்துக்காட்டியது. அதற்கு பதிலாக அது புதிய ஜப்பான்-ஆஸ்திரேலிய வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தானதன் மீது ஒருமுனைப்பட்டிருந்தது, அந்த உடன்படிக்கை "பெரிதும் வெற்றிகரமான ஒரு பொருளாதார கூட்டுறவிற்கு மற்றொரு பரிமாணத்தைச் சேர்க்கும்" என்று அது எழுதியது. மேர்டோக்கிற்கு சொந்தமான ஆஸ்திரேலியன் இதழில் வெளியான ஒரு தலையங்கம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரப்பாடு மற்றும் செல்வ செழிப்பை ஊக்குவிப்பதற்கு உதவும் வகையில், “ஒருகாலத்தில் இராணுவமயப்பட்டிருந்த" ஜப்பான் "சீரிய சர்வதேச பிரஜையாக" மாறியிருக்கிறது என்ற அபோட்டின் வாதத்தை மீண்டும் எடுத்துரைத்தது. "சீனாவிற்கு எதிரான ஒரு வலையமைப்பைக் கட்டியமைக்க" ஆஸ்திரேலியாவைப் பயன்படுத்தி வருவதாக அபேயைக் குற்றஞ்சாட்டியதோடு, அவரது விஜயம் "புதிய ஸ்திரமின்மையை தோற்றுவிக்கும்" என குறிப்பிட்ட சீன அரசின் செய்தி நிறுவனம் சின்ஹூவாவில் (Xinhua) வெளியான ஒரு கருத்துரையை ஆஸ்திரேலியன் இதழ் மேற்கோளிட்டு இருந்தது. அதுபோன்ற வாதங்கள் உள்நாட்டில் வேண்டுமானால் சிறப்பாக செயல்படும் என்றாலும், "பரந்த அரங்கில் சிறிதும் உபயோகப்படாது" என்று ஆஸ்திரேலியன் குறிப்பிட்டது. இந்த முன்முயற்சியற்ற கைத்துறப்பானது அபேயின் பிரதம மந்திரி பதவியின் கீழ் தொடங்கப்பட்டு இராணுவவாதத்திற்கு திரும்பியதை மற்றும் அரசியலமைப்பின் மறுவிளக்கம் மூலமாக அபே எந்த சூழ்நிலைகளில் அழுத்தம் அளித்துள்ளாரோ அவற்றை மூடிமறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. கடந்த மாதம் அபே அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அந்த அறிக்கை இரண்டாம் உலக யுத்தத்தில் பெண்களை பாலியல் அடிமைகளாக இராணுவம் பயன்படுத்தியதற்காக 1993இல் ஜப்பானிய அரசாங்கம் மன்னிப்பு கோரியிருந்ததா என்பதன் மீது சந்தேகங்களை எழுப்புகிறது. அந்த பெண்கள் "பலவந்தமாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்" என்பதை உறுதிப்படுத்த "சாத்தியப்படவில்லை" என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஐந்து "வல்லுனர்களின்" குழு வாதிட்டது. பதவியேற்றதற்கு பின்னரில் இருந்து அபே அரசாங்கம், இராணுவவாதம் மற்றும் தேசியவாதத்தை ஊடகங்கள் ஊக்குவிப்பதை உறுதிப்படுத்த முனைந்துள்ளது. தேசிய ஒளிபரப்பு நிறுவனமான NHK பொதுக்குழுவில் அபேயின் நியமனங்களில் ஒருவரான நியோக்கி ஹியாதுகா, அதி-வலதுசாரி ஜப்பானிய மீளமைப்புவாத கட்சியின் (Japanese Restorationist Party) ஒரு பகிரங்க ஆதரவாளர் ஆவார். 1937 நான்கிங் படுகொலையை ஹியாதுகா நிராகரிக்கிறார், அந்த சம்பவத்தில் படுகொலை, கற்பழிப்பு மற்றும் சேதங்கன் என வாரக்கணக்கில் நீண்டிருந்த ஒரு வெறியாட்டத்தில் 300,000 வரையிலான சீன பொதுமக்களும், சிப்பாய்களும் கொல்லப்பட்டனர்—அவரது அந்த வலியுறுத்தல் இனப்படுகொலையை மறுப்பதற்கு ஒப்பானதாகும். அபே அவரே கூட கடந்த டிசம்பரில் யுத்த குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உட்பட ஜப்பானிய யுத்தத்தில் மரணம் அடைந்தவர்களுக்கான யாசூகூனி நினைவிடத்திற்கு விஜயம் செய்ததன் மூலமாக அதிதீவிர-வலது சக்திகள் உடனான அவரது தொடர்புகளைப் பலப்படுத்த முனைந்திருந்தார். ஏப்ரலில் அவர் ஒபாமா ஜப்பானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக அந்த நினைவிடத்திற்கு மதரீதியிலான சமர்பணங்களை அனுப்பி வைத்தார். இரண்டாம் உலக போரில் ஜப்பானியர்களின் கரங்களில் தங்களின் வாழ்வை இழந்த ஆஸ்திரேலிய சிப்பாய்களுக்கு அபே தெரிவித்த "ஆழ்ந்த இரங்கல்களுக்காக" ஊடகங்களிடம் பலமான வரவேற்பு வருவதை அந்த வரலாறு தடுத்துவிடவில்லை. அவரது ஆலோசகர்களால் மிக கவனமாக தயாரிக்கப்பட்ட ஒரு உரையில் அபே விசேஷமாக பப்புவா நியு கினியாவின் மூர்க்கமான மோதல் காட்சியான காகோடாவையும் (Kokoda) மற்றும் யுத்த கைதிகளின் ஒரு இழிவுகரமான மரண அணிவகுப்புகளுக்கு கொடுக்கப்பட்ட பெயரான சாண்டாகனையும் (Sandakan) குறிப்பிட்டார். அவரது நயமான அணுகுமுறை விரும்பிய விளைவை ஏற்படுத்தி இருந்தது. "சாண்டாகன். அது ஆசிய-பசிபிக் யுத்தத்தின் மிகப் பெரிய கொடூரமாகும்," என்று சிட்னி மார்னிங் ஹெரால்டின் கட்டுரையாளர் டோனி ரைட் எழுதினார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் இரங்கல்களைக் கூறி, அந்த இடத்தின் பெயரை உபயோகிக்கும் ஒரு ஜப்பானிய பிரதம மந்திரியும் இங்கே இருக்கிறார். அதை விட்டு நகர்ந்து போன ஒரு உலகத்தில், அதற்காக நேரம் ஒதுக்க ஒரு கணம் இருந்தது," என்று குறிப்பிட்டார். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னரில் இருந்து நிச்சயமாக உலகம் நகர்ந்துள்ளது தான், ஆனால் அந்த மோதலுக்கு இட்டுச் சென்ற அத்துணை முரண்பாடுகளும் திரும்பி வந்துள்ளன, மேலும் எட்டுக்கும் அதிகமான தசாப்தங்கள் கடந்து போயிருக்கும் நிலையில் அதிகரித்துவரும் ஜப்பானிய இராணுவவாதத்தின் குவிமையமாக மீண்டும் சீனாவே வந்திருக்கிறது. கடந்த ஜனவரியில் உலக பொருளாதார விவாத கூட்டத்தில் கலந்து கொண்டபோது அபே, அவரது அரசாங்க நிலைப்பாட்டிற்கு சர்வதேச ஆதரவைப் பெறும் முயற்சியில், சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான பதட்டங்களை முதலாம் உலக யுத்தத்திற்கு முன்னர் பிரிட்டன் மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான விரோதங்களோடு தொடர்புபடுத்தினார். லோவி பயிலகத்தின் (Lowy Institute) சர்வதேச பாதுகாப்பு திட்டத்தின் இயக்குனரான ரோரி மெட்கால்ப் ஆஸ்திரேலியன் பைனான்சியல் ரிவியூவிற்கு எழுதுகையில், கான்பெர்ராவிலிருந்து பரந்த உலகிற்கு "ஒரு சேதியை அனுப்புவதற்கான" அபேயின் முடிவை 2011 ஒபாமாவின் உரையோடு தொடர்புபடுத்தினார். மெட்கால்ப் அந்த "வரலாற்று மறுவிளக்கத்தை" ஜப்பானின் ஒரு "வழக்கமான பாதுகாப்பு தோரணையை" நோக்கிய ஒரு படியாக புகழ்ந்துரைத்தார். அவர் தொடர்ந்து எழுதுகையில், அந்த மறுவிளக்கம் "சர்ச்சைக்கு உள்ளாகி" இருந்தது, அதுவும் குறைந்தபட்சமாக இல்லை "ஏனென்றால் அது ஒரு பொதுஜன கருத்திற்குட்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ அரசியலமைப்பு மாற்றத்திற்குட்பட்ட சாத்தியமில்லாத பாதையை ஓரங்கட்டி விட்டது என்பதால் ஆகும்," என்று குறிப்பிட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது முற்றிலுமாக ஜனநாயக விரோதமானதாகும் என்பதோடு ஜப்பானிய தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஆசிய முழுவதிலும் உள்ள பரந்த மக்களின் எதிர்ப்பிற்கு மேலே திணிக்கப்பட்டதாகும். மெட்கால்ப் மற்றும் ஏனையவர்களின் கொள்கை நிகழ்ச்சி நிரலோடு பொருந்தாத ஏனைய சூழ்நிலைகளாக இருந்திருந்தால், அவர்கள் அபேயின் நடவடிக்கைகளை ஒரு "ஆட்சி கவிழ்ப்பு சதியாக" அல்லது "சர்வாதிகாரத்தை நோக்கிய ஒரு படியாக" கண்டித்திருப்பார்கள். இருந்த போதினும் அபேயின் நிலைப்பாடு ஆஸ்திரேலிய அரசியல் ஸ்தாபகத்தின் மேலதிக ஆக்ரோஷ மற்றும் இராணுவ நோக்குநிலையோடு பொருந்தி உள்ளது. அதனால் தான் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய மக்களுக்காக தயாரிக்கப்பட்டு வரும் அதன் தாக்கங்கள் மற்றும் பேரழிவுகளை மூடிமறைக்க வேலை செய்து வரும் ஊடக பண்டிதர்களால் அது மவுனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. |
|
|