World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India’s new government moves to implement big business agenda இந்தியாவின் புதிய அரசாங்கம் பெருவணிக நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்த நகர்கிறது
By
Kranti Kumara பதவியேற்ற பின் அதன் முதல் ஆறு வாரங்களில், இந்தியாவின் புதிய பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தலைமையிலான அரசாங்கம் இந்திய மற்றும் சர்வதேச பெருவணிகங்களின் நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்த ஆக்ரோஷமாக நகர்ந்துள்ளது. பரம-வகுப்புவாதியும், சுய-பாணியில் இந்து இரும்புமனிதருமான நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம், பெருவணிகங்களுக்கு மானியங்களையும், வரி வெட்டுக்கள் மற்றும் ஏனைய நன்கொடைகளையும் வாரி வழங்குகின்ற அதேவேளையில், பெருநிறுவனங்கள் இலாபமீட்டுவதற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் எந்தவொரு அல்லது அனைத்து தொழிலாளர் சார்ந்த, சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் சார்ந்த சட்ட விதிமுறைகளையும் அது அகற்ற விரும்புவதை சமிக்ஞை காட்டியுள்ளது. “முதலீட்டாளர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் இல்லை, சிவப்பு கம்பளம்" என்றும், "குறைந்தபட்ச அரசாங்கத் தலையீடும், ஆனால் அதிகபட்ச அரச நிர்வாகமும்" என்றும் இதுபோன்ற கொடூர முழக்கங்களிலிருந்து, மூலதனத்தின் மீதான எந்தவொரு தடைகளுக்கும் மோடி அரசாங்கத்தின் எதிர்ப்பு துல்லியமாக எடுத்துக்காட்டப்படுகிறது. உண்மையில், இவை அனைத்தும் வேலைகளை உருவாக்குவதற்காக பொருளாதார வளர்ச்சியை தூக்கி நிறுத்துவதற்கான மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு முயற்சியாக அரசியல்ரீதியாக தொகுத்தளிப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 5 சதவீதத்திற்கு கீழே உள்ளது. இதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் சந்தை-சார்பு "சீர்திருத்தத்தை" பின்பற்றியதோடு, வாஷிங்டனுடன் ஒரு பூகோளமயப்பட்ட மூலோபாய கூட்டணியை உருவாக்கி இருந்தது. இருந்த போதினும், இந்திய பொருளாதாரம் தேக்கநிலையில் பின்னிக் கொண்ட நிலைமைகளின் கீழ், பாரிய எதிர்ப்பை முகங்கொடுத்திருந்த நிலையில், முதலீட்டாளர்-சார்பு கொள்கைகளில் இன்னும் மேலதிக "பெரு வெடிப்பு" தொகுப்பை நடைமுறைப்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி தயங்குவதைக் குற்றஞ்சாட்டி, இந்திய மற்றும் சர்வதேச பெருவணிகங்கள் அதற்கு எதிராக திரும்பின. குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது பெருநிறுவன இந்தியாவின் நலன்களுக்கு அடிமைத்தனமாக சேவை செய்து வந்ததன் மூலமாக அதன் ஆதரவை வென்றிருந்த மோடி, மக்கள் எதிர்ப்பைத் தோற்கடிக்க அவர் தயாராக இருப்பதை வெளிப்படையாக அறிவித்தார். "நிதியியல் ஒழுங்கமைப்புகளை மேம்படுத்தவும்" மற்றும் "நாட்டை நோய்வாய்பட்டிருக்கும் அதன் பொருளாதார நிலைமையிலிருந்து வெளியே எடுக்கவும்" “கடினமான முடிவுகளும்" “கசப்பான மருந்துகளும்" அவசியப்படும் என்று கடந்த மாதம் கோவாவின் ஒரு கூட்டத்தில் மோடி தெரிவித்தார். “இந்த கடுமையான முடிவுகளால் மக்கள் என்மீது வைத்திருக்கும் நன்மதிப்பு குறையும் என்பது எனக்கு தெரியும், மக்கள் என் மீது கோபமடையலாம், ஆனால் பின்னர் அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள்," என்றார். இதற்கிடையே, மோடியின் நிதித்துறை மந்திரியான அருண் ஜேட்லி, “வெகுஜன கொள்கைகளை"—இது வறுமை ஒழிப்பு மற்றும் ஏனைய சமூக நல திட்டங்களுக்கான பெருவணிகத்தின் ஒரு பூசிமொழுகும் சொல்லாகும்—பின்பற்றியதற்காக முந்தைய அரசாங்கத்தை ஏளனம் செய்துள்ளார். இந்திய மேற்தட்டின் பார்வையில், அதுபோன்ற செலவுகள் ஆதாரவளங்களை "வீணடிப்பதாகும்", அவற்றை அவர்களின் வருவாய்களைப் பெருக்குவதை நோக்கியோ அல்லது இந்திய தொழிலாளர்கள் மற்றும் இயற்கை வளங்களைச் சுரண்டுவதன் மூலம் நிறைய இலாபங்களைப் பிழிந்தெடுக்க அவர்களுக்கு உதவும் உள்கட்டமைப்பு திட்டங்களை நோக்கியோ திருப்பிவிட வேண்டும் என்று அவை எதிர்பார்க்கின்றன. “நீங்கள் முட்டாள்தனமான ஜனரஞ்சகவாதத்திற்கு இடங்கொடுத்து, வரிச்செலுத்துவோருக்கு சுமை ஏற்றுகிறீர்கள்," என்று கடந்த வாரம் ஜேட்லி புது டெல்லியில் கணக்காயர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். “ஜனரஞ்சகவாதத்திற்கு இடங்கொடுக்கும் வகையில் உங்களை நீங்களே அதிக வரிச்செலுத்தும் ஒரு சமூகமாக மாற்றிக் கொள்ள முடியுமா? அவ்வாறு முடியாது," என்றார். அரசாங்கம் ஏற்கனவே பல்வேறு முன்னெடுப்புகளில் அதன் "கசப்பான மருந்துகளை" கொடுக்க தொடங்கிவிட்டது. மோடியின் கோவா உரைக்கு நான்கு நாட்களுக்குப் பின்னர், அரசாங்கம் இரயில் பயணிகளின் கட்டணத்தில் 15 சதவீத உயர்வையும், சரக்கு கட்டணத்தில் 6.5 சதவீத உயர்வையும் அறிவித்தது. தொழில்துறை மற்றும் விவசாய பண்டங்கள் இரண்டிற்கும் இரயில் போக்குவரத்தே ஒரு முதன்மையான போக்குவரத்து வழியாக இருப்பதால், இரண்டாவதின் உயர்வு இன்னும் மேலதிகமாக பணவீக்கத்தைத் தூண்டிவிடும், ஏற்கனவே பணவீக்கம் இரட்டை-இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இந்திய இரயில்வே அமைப்புமுறையின் பரந்து விரிந்த உள்கட்டமைப்பை மேம்படுத்த அந்த இரயில் கட்டண உயர்வில் எந்தவொரு திட்டமும் சேர்க்கப்படவில்லை. எவ்வாறிருந்த போதினும் இந்தியாவில் இரயில்வே விபத்துக்களில் ஆண்டுக்கு 15,000 மரணங்களை ஒரு "படுகொலையாக" குறிப்பிட வேண்டிய நிர்பந்தத்திற்கு சமீபத்தில் அரசாங்க பாதுகாப்பு மேற்பார்வை குழு உள்ளானது. அந்த அறிக்கை குறிப்பிடுகையில், “எந்தவொரு நாகரீகமடைந்த சமூகமும்" “ஒரு படுகொலையை ஏற்றுக் கொள்ளாது," என்று குறிப்பிட்டது. இந்தியாவின் நீண்டகால இரயில்வே துறை நெருக்கடியைத் தனியார்மயமாக்குவதற்காக வாதிடுவதற்கு பயன்படுத்தும் அதன் நோக்கத்தை மோடியின் அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. அதுபோன்றவொரு சூழலில் கட்டணங்கள் இன்னும் மேற்கொண்டு உயரும் என்பது மட்டுமல்ல, மாறாக உள்கட்டமைப்பின் அபிவிருத்திகளும், அவ்வாறு ஏதாவது இருந்தால், முற்றிலுமாக அதிக இலாபத்தை நோக்கி திருப்பி விடப்பட்டிருக்கும். சந்தேகத்திற்கிடமின்றி பிஜேபியின் புதிய மத்திய அரசாங்கத்தோடு ஒருங்கிணைந்த ஒரு நகர்வில், ராஜஸ்தான் மாநில பிஜேபி அரசாங்கம் "நெறிமுறையிட்ட பிரிவு" (regulated sector) என்றழைக்கப்படுவதில் நிரந்தர தொழிலாளர்களுக்கு பதிலாக குறைந்த ஊதிய ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பதிலும் மற்றும் அவற்றின் விருப்பப்படி ஆலைகளை மூடவும் மற்றும் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யவும் பெருவணிகங்களுக்கு அனுமதி அளிக்கும் சட்டமசாதோவை நிறைவேற்றுவதற்கான அதன் விருப்பத்தை அறிவித்தது. ஒரே நேரத்தில் 100க்கு அதிகமான தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கவோ அல்லது ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கவோ தொழில் வழங்குநருக்கு அதிகாரம் வழங்காத, "இறுக்கமான மற்றும் அவற்றிற்கு ஒவ்வாத" இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகங்கள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி வந்துள்ளன. இந்தியாவின் இருஅவை நாடாளுமன்றத்தின் மேலவையில் பிஜேபி மற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத நிலைமைகளின் கீழ், ராஜஸ்தான் மற்றும் சாத்தியமானால் ஏனைய பிஜேபி மாநில அரசாங்கங்கள் தொழிலாளர் நல சட்டங்களை "சீர்திருத்த" அழுத்தம் அளிப்பதென்பது பெருவணிகங்களுக்கு இன்னும் சிறப்பாக சேவை செய்வதற்கேற்ப இந்தியாவின் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தி எழுதும் உந்துதலைத் தொடங்கி வைப்பதற்கு ஒரு பாதையாக உள்ளது. இந்திய அரசியலமைப்பின் கீழ், தொழிலாளர் நலச் சட்டங்கள் போன்ற மத்திய-மாநில கூட்டு சட்ட அதிகாரத்தின்படி, மத்திய அரசாங்கமானது தற்போதிருக்கும் மத்திய சட்டவிதிகளோடு முரண்படும் அல்லது மீறும் மாநில சட்டங்களைக் கூட அவற்றில் கையெழுத்திடுமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைத்து நடைமுறைப்படுத்த முடியும். உள்ளூர் எதிர்ப்புகள் இருந்தாலும் கூட பெருவணிக வளர்ச்சி திட்டங்களுக்கு அழுத்தம் அளிக்கவும் மற்றும் “நெறிப்படுத்துகிறோம்" என்ற பெயரில், சுற்றுச்சூழல் கண்காணிப்புகளை வெட்டவும் அது விருப்பம் கொண்டிருப்பதாகவும் கூட மோடி அரசாங்கம் சமிக்ஞை காட்டியுள்ளது. மோடி பிரதம மந்திரி பதவியேற்று சில நாட்களிலேயே, அந்த அரசாங்கம் நர்மதா ஆற்றின் குறுக்கே உள்ள சர்ச்சைக்குரிய சர்தார் சரோவர் அணையின் உயரத்தை இன்னும் 16 மீட்டர் உயர்த்த குஜராத் அரசாங்கத்திற்கு அனுமதி வழங்கியது. மிக முக்கியமாக, சுற்றுச்சூழல் அடிப்படையில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வரும் எதிர்ப்பை சட்டத்திற்கு புறம்பானதாக ஆக்கும் நோக்கத்தோடு அரசாங்கம் ஒரு உளவுத்துறை (IB - Intellignece Bureau) அறிக்கையை கசியவிட்டது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டிருந்த அந்த அறிக்கை, தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தைச் சேதமாக்கக் கூடியளவிற்கு சுனாமி சாத்தியக்கூறு உள்ள பிராந்தியத்தில் அணுமின் ஆலை கட்டுவதற்கும் மற்றும் ஒரிசாவில் பேரழிவுகரமான சுரங்க திட்டங்களுக்கும் எதிரான போராட்டங்களில் மத்தியதட்டு தலைமையிலான 22 NGOகள் சம்பந்தப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டியது. உளவுத்துறை தகவலின்படி, அதுபோன்ற போராட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சியை ஆண்டுக்கு ஏறக்குறைய 3 சதவீதத்திற்கு குறைத்துள்ளன. “மேற்கத்திய நாடுகளின் மூலோபாய நலன்களுக்கு சேவை செய்யும் வகையில், இந்தியாவின் பொருளாதார திட்டங்களுக்கு எதிராக அணுஆலை எதிர்ப்பு போராட்டம் மற்றும் ஏனைய கிளர்ச்சிகளை ஏற்பாடு செய்தமைக்காக" குற்றஞ்சாட்டி, அதுவும் சிறப்பு விமர்சனங்களுக்காக கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் குழுவை உளவுத்துறை அறிக்கை சுட்டிக் காட்டி இருந்தது. அந்த NGOக்கள் வெளிநாட்டு நன்கொடை (நெறிமுறை) சட்டத்தை மீறி இருந்ததாக அந்த அறிக்கை அவற்றைக் குற்றஞ்சாட்டியது, உண்மையில் அந்த சட்டமானது அன்னிய நாட்டிலிருந்து வரும் பணம் அரசின் முடிவுகளைப் பாதிப்பதிலிருந்து தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டதாகும். அந்த உளவுத்துறை அறிக்கை "கசிந்த" உடனேயே உள்துறை அமைச்சகம், கிரீன்பீஸ் அமைப்புக்கு நிதிகளை வழங்க இனிமேல் அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டுமென அனைத்து இந்திய வங்கிகளுக்கும் அறிக்கை அனுப்ப இந்திய ரிசர்வ் வங்கிக்கு (RBI) உத்தரவிட்டது, அந்த பணம் கிரீன்பீஸ் அமைப்பின் தாய் அமைப்பிடமிருந்தும் மற்றும் வெளிநாடுகளில் அதனோடு இணைந்த அமைப்புகளில் இருந்தும் அதற்கு நன்கொடையாக வழங்கப்பட்டதாகும். இந்த வாரத்தின் இறுதியில், ஜேட்லி பிஜேபியின் முதல் வரவு-செலவு திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளார். பிரதான கட்டமைப்பு மாற்றங்கள் அடுத்த ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் தான் செய்யப்படுமென அரசாங்கம் குறிப்பிட்டிருக்கின்ற போதினும், வரவு-செலவு திட்ட பற்றாக்குறையைக் குறைப்பதற்கான மற்றும், குறிப்பாக, எரிசக்தி மானியங்களை நீக்குவதற்குமான அதன் பொறுப்புறுதியை அது எடுத்துக்காட்டும் என்பதையும் அது அறியத் தந்துள்ளது. ஒரு பிற்போக்குத்தனமான தேசிய பொருட்கள் மற்றும் சேவை வரியை (GST) 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதத்திற்கு கொண்டு வருவதற்கான நீண்டகால திட்டங்களையும் முன்னெடுக்க அரசாங்கம் ஏற்கனவே சூளுரைத்துள்ளது. சமீபத்திய அறிக்கைகளின்படி, வரவிருக்கும் ஆண்டுகளில் மோடி அரசாங்கம் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு "சொத்து விற்பனையில்" 11.7 பில்லியன் டாலரை "சுமையாக இறக்க" நோக்கம் கொண்டிருக்கிறது. இது முந்தைய காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் அதன் "தேர்தல் கால" 2014-2015 இடைக்கால வரவு-செலவு திட்டத்தை மார்ச்சில் தாக்கல் செய்தபோது அமைத்த இலக்கான சுமார் 2.2 பில்லியன் டாலரிலிருந்து அதிகரிப்படுகிறது. பாதுகாப்பு மந்திரியாகவும் இரட்டை பொறுப்பு வகிக்கும் ஜேட்லி இராணுவச் செலவுகளை கணிசமாக உயர்த்தவும் மற்றும் இந்தியாவின் இராணுவ தளவாடங்கள் வாங்கும் நடவடிக்கைகளை துரிதபடுத்தவும் கூட உறுதியளித்துள்ளார். இந்தியா ஏற்கனவே உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக விளங்குகிறது. |
|