World Socialist Web Site www.wsws.org |
US troops have secretly been deployed to Somalia since 2007 2007 லிருந்து சோமாலியாவில் அமெரிக்க படைகள் இரகசியமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.By
Thomas Gaist சோமாலியாவின் உள் பகுதியில் சில 120 அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் களத்தில் இருக்கின்றனர், இவர்கள் நியமனமானது 2007 முதல் நடைமுறையில் உள்ளது, ஆனால் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்பதை கடந்த வாரம் Reuters செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலில் அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். 2013 அக்டோபரில் சோமாலியாவிற்கு சில ஆலோசகர்களை நியமித்ததை பெண்டகன் வெளிப்படுத்தியிருந்தது, ஆனால் அங்கு 2007 முதல் பெருமளவிலான படைகள் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. 2014 ஜனவரியில் அந்நாட்டில் அமெரிக்க படைகள் இருப்பதை அமெரிக்க ஆபிரிக்க கட்டளையகம் (AFRICOM) ஒப்புக் கொண்டது ஆனால் ஐந்துக்கும் குறைவான படைகளே இருப்பதாகக் கூறியது. BBC யின் சர்வதேச நிரூபரான மார்க் டோயல் இந்த வாரம் ஒரு கட்டுரையில், தான் சமீபத்தில் சோமாலியாவிற்கு சென்றிருந்த போது, வலுவாக ஆயுதமேந்திய மற்றும் “தெளிவான செயல்பாடுடைய” அமெரிக்க படைகளை தனிப்பட்ட முறையில் பார்த்ததாக எழுதியுள்ளார். இவ்வாறு Reuters, புலனாய்வு பத்திரிகை என்ற அடிப்படையிலோ அல்லது சில முக்கியமானவரது இரகசியத்தின் கசிவு என்ற முறையிலோ, சட்ட புறம்பான அமெரிக்க இராணுவ பயன்பாடு என்பதாகவோ அல்லாமல் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளரின் கீழுள்ள அமெரிக்க அரசு அதிகாரியான வெண்டி ஷெர்மேனின் பேச்சினை அடுத்தே அமெரிக்காவின் இருப்பை வெளிப்படுத்தியது. சோமாலியப் பகுதிகளில் பல வருடங்களாக சிறப்புப்படைகள் உள்ளிட்ட அது ”அமெரிக்க இராணுவ பணியாளர்களின் ஒரு சிறிய குழு” என்பதை அவர் வெளிப்படையாக அறிவித்தார். உண்மையில் சம்பந்தப்பட்ட குழுக்களின் எண்ணிக்கையை பெறுவதற்காக பின்பு இந்த செய்தி நிறுவனம் மற்ற அமெரிக்க அதிகாரிகளை தொடர்பு கொண்டது. இப்பகுதி அமெரிக்க ஊடகங்களின் பங்களிப்பின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. சோமாலியாவில் அமெரிக்க படைகளது நேரடி ஈடுபாட்டினை எந்த ஒரு தொலைக்காட்சி ஊடகமும் தெரிவிக்கவில்லை. அமெரிக்க இராணுவ பணியாளர்களின் முக்கியத்துவம் வாய்ந்த படைகளின் இருப்பு குறித்து எந்த வித செய்தியையும் தெரிவிக்காமல் New York Times மற்றும் Washington Post போன்ற செய்தித்தாள்கள் கடந்த ஏழு வருடங்களாக சோமாலியாவிற்கு தொடர்ச்சியாக நிரூபர்களை அனுப்பியிருக்கிறது. ஆபிரிக்காவில் பெருமளவு சிறப்பு படைகளைக் கொண்ட அமெரிக்க இராணுவ செயல்பாடுகள் பற்றிய பரந்த செய்திகளை Post வெளியிட்டிருக்கிறது, அதில் சோமாலியாவில் படைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. பல வருடங்களுக்கு பொதுமக்களுக்கான எந்த வித தகவல் தெரிவிப்புமின்றி, குறிப்பிடும் அளவிலான ”பயிற்சியாளர்கள்” மற்றும் “ஆலோசகர்கள்” அதாவது சிறப்பு படை இராணுவத்தினர்களை நியமித்திருப்பது, அச்சுறுத்தும் கேள்விகளை எழுப்புகிறது. கடந்த பத்தாண்டு காலகட்டத்தில் வாஷிங்டன் வேறு எதை இரகசியமாக நியமித்திருக்கிறதோ? அடுத்த வருடங்களில் ஜனாதிபதியும் அவரது மேல்மட்ட அதிகாரிகளும் எத்தனை புதிய இரகசிய போர்களை தொடுப்பதாக முடிவு செய்வார்களோ? வரம்பற்ற நிறைவேற்று அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்துவரும் ஒரு சர்வாதிகாரத்தால் அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகம் மாற்றம் செய்யப்படுகிறது. நியமனங்கள் இரகசியமாக வைக்கப்படுவதுடன் உண்மையில் பல வருடங்கள் கழித்தே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன. நிர்வாகப் பிரிவு தனக்காக குரல் கொடுப்பதுடன், இராணுவம் மற்றும் புலனாய்வுப் படைகளை கிரகத்தின் எந்த இடத்திலும் நியமிக்கும் உரிமையை செயல்படுத்துகிறது என்பதுடன் இந்த அதிகாரத்தில் எந்த தடையும் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளும்படி கருதுகிறது. இஸ்லாமிய நீதிமன்றங்கள் கூட்டமைப்பின் (ICU) இளைஞர் பிரிவிலிருந்து உருவான ஓர் ஆயுதப்படையும், மதிப்பிடப்பட்ட 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையிலான போராளிகளை இயக்கி வரும் ”தீவிரவாத” குழுவுமான அல் ஷபாப்புடன் போரிடுவதை சாக்காக பயன்படுத்தி வாஷிங்டன் சோமாலியாவில் தனது இராணுவ நியமிப்பை தீவிரப்படுத்த தயாராகிக்கொண்டிருப்பதை அறிக்கைகள் தெளிவாக்குகின்றன. அக்டோபரில், அமெரிக்க சிறப்பு படைகள் பராவி நகரில் அல் ஷபாப் படைகளுக்கு எதிரான ஓர் அதிரடி சோதனையை நடத்தியது. Reuters உடன் பேசுகையில், அமெரிக்க அதிகாரிகள் பின்வருமாறு தெரிவித்தனர்: சோமாலிய தேசிய இராணுவத்துடன் (SNA) அமெரிக்க இராணுவம் அதிக அளவிலான செயல்பாடுகளுக்காக தயாராகி வருகிறது, அது ஏற்கெனவே அமெரிக்க இராணுவ உதவியில் குறைந்தபட்சம் 170 மில்லியன் டாலர்களாவது ஆதாயமடைந்திருக்கிறது. ”எதிர்வரும் நிதி ஆண்டில் SNA உடனான செயல்பாடுகளின் ஒரு சரியான தொடக்கத்தை நீங்கள் காண இருக்கிறீர்கள்” என்று பெயர் தெரிவிக்காத ஒரு அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தார். சோமாலியாவில் ஆபிரிக்க யூனியனின் இராணுவ இலக்கான AMISOM உடன் இணைந்து, அமெரிக்க படைகள் உகாண்டா மற்றும் புருண்டியிலிருந்து இராணுவங்களுக்கு பயிற்சியளிப்பதிலும் தயார்படுத்துவதிலும் இறங்கிவிட்டன. ஆபிரிக்க முனையில் இருக்கின்ற மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடான சோமாலியாவை அமெரிக்க ஏகாதிபத்தியம், மேற்கத்திய சக்திகளுக்கு முன்னால் ஒட்டுமொத்த கண்டத்தையும் அப்பட்டமான காலனி ஆதிக்க சமர்ப்பிப்பு நாடாக மாற்றம் செய்யும் அதன் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, அரசியல் ரீதியாக ஆதிக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. தினசரி பெருமளவிலான எண்ணெய் வாணிபத்துடன் கிரகத்தில் மிகவும் முக்கியமான கடல் வழிகள் சிலவற்றிற்கு அருகாமையில் சோமாலியா அமைந்துள்ளது. செய்திகளின்படி, தலைநகர் மொகாடிஷுவில் அமெரிக்கா ஒரு புதிய மத்திய புலனாய்வு நிறுவனம் (CIA) ஒன்றை அமைத்துள்ளது. 1993 லிருந்து முதல் முறையாக சோமாலியாவிற்கான ஒரு தூதர் நியமிக்கப்படுவார் என்றும் அது பாதுகாப்பு காரணங்களுக்காக என்ற போதிலும், அவர் சோமாலிய எல்லைக்குள் வசிக்க மாட்டார் என்றும் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது. தற்போது சோமாலியாவில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த படைகள் காணப்படுவதுடன் உள்ளூர் இராணுவங்களுக்கான பயிற்சியளிப்பிலும் ஈடுபட்டுள்ளன. சோமாலியாவில் இந்த நாசகரமான சூழ்நிலைக்காக ஏகாதிபத்திய சக்திகள் அல் ஷபாப்பைக் குற்றம் சாட்டும் வேளையில், அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நீண்டகால தலையீடு குறித்து நாட்டினை மோசமாக்கும் அளவிற்கு செயலில் ஈடுபட்டுள்ளன. 1991-ல் அமெரிக்கா 1970 களிலிருந்து சியாட் பாரி ஆட்சிக்கு அளித்து வந்த தனது ஆதரவினை திரும்ப பெற்ற பின் உண்டான சமூக குழப்பங்களுக்கு மத்தியில், அல் ஷபாப்பின் தாயமைப்பான ICU அதிகாரத்திற்கு வந்தது. 1993 ல் உணவு உதவி அளிக்கும் சாக்கில் சோமாலியாவிற்குள் அமெரிக்கா 30 ஆயிரம் படைகளை அனுப்பி, மொகதிஷூவின் நாசகரமான போரினை அடுத்து, அதனை திரும்ப பெறுவதற்கு முன்பாக ஆயிரக்கணக்கான சோமாலியர்களை கொன்றது. பின் 2006 -ல் அமெரிக்கா அந்த நாட்டில் எத்தியோப்பிய தலைமையிலான படையெடுப்பினை ஆதரித்து, இடைக்கால மத்திய அரசுக்கும் ICU விற்கும் இடையே ஒரு போரினை உண்டாக்கி குறைந்தபட்சம் 16,700 குடிமக்களைக் கொன்றதுடன் 1.9 மில்லியனுக்கும் அதிகமானவர்களை இடம் பெயர வைத்தது. |
|