World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japan’s Shinzo Abe cloaks militarism inpeace” pledges to Australian parliament

ஜப்பானின் ஷின்ஜோ அபே ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் "சமாதான" வாக்குறுதிகளுக்குள் இராணுவவாதத்தை மூடி மறைக்கிறார்

By Nick Beams
8 July 2014

Back to screen version

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே அளித்த இன்றைய உரையானது, ஜப்பானின் அரசியலமைப்பில் சமாதானத்திற்கான சட்டவிதிகள் என்றழைக்கப்படுபவைகளுக்கு "மறுவிளக்கம்" அளிக்க அவரது அரசாங்கம் எடுத்த முடிவிற்கு பின்னால் இருக்கும் இராணுவவாத நிகழ்ச்சிநிரலையும், அதன் கூட்டாளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அவர்களோடு சேர்ந்து எதிர்தாக்குதல் நடவடிக்கை எடுப்பதில் அந்நாட்டின் இராணுவப் படைகளை அனுமதிப்பதையும் அடிக்கோடிடுகிறது.

ஒரு வாரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட மறுவிளக்கத்திற்குப் பின்னர் அபே அளித்திருக்கும் முதலாவது முக்கிய உரையான அதில் "சமாதானம்", “ஜனநாயகம்" மற்றும் "சட்டத்தின் ஆட்சி" போன்ற சூளுரைகள் நிரம்பியிருந்தன. ஆனால் அடிப்படை உள்ளடக்கமானது, அபேயின் வெளிப்படையான கடப்பாடுகளிலும் மற்றும் அவர் பயன்படுத்திய பல்வேறு குறிச்சொற்களிலும் இரண்டிலும் வெளிப்பட்ட விதத்தில், தெளிவாக இருந்தது. அதாவது, ஜப்பான் அப்பிராந்தியத்திலும் மற்றும் உலக அரங்கிலும், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுடன் சேர்ந்தும், சுயேட்சையாகவும் இரண்டு விதத்திலும் பலவந்தமாக அதன் நலன்களை முன்னெடுக்கும் என்பதாகும்.

ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கு இடையே ஒரு "புதிய சிறப்பு உறவுகள்" என்று அவர் எதை குறிப்பிட்டாரோ அதைப் பலமுறை குறிப்பிட்டுக் காட்டி அபே கூறுகையில், பொதுவான "பாதுகாப்பு விவகாரங்களைக்" கையாள அவ்விரு நாடுகளும் ஒரு "ரக்பி விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பைப்" போல நகரும் என்று தெரிவித்தார்.

இந்த சொற்கள் நடவடிக்கைகளால் ஆதரிக்கப்பட்டன. ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திட்டதற்கு அப்பாற்பட்டு (இது ஜப்பானுக்கும் ஒரு முன்னேறிய பொருளாதாரத்திற்கும் இடையிலான முதல் ஒப்பந்தமாகும்), அவ்விரு நாடுகளும் இராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பரிவர்த்தனை செய்யும் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டு உள்ளன. உலகின் அதிநவீன மற்றும் மிகப்பெரிய அணுஆயுதமல்லாத நீர்மூழ்கி கப்பல்களான ஜப்பானின் டீசலில் இயங்கும் சோர்யு-ரக ஊர்திகளை மையமாக கொண்ட ஒரு புதிய நீர்மூழ்கிகப்பல் பிரிவை ஆஸ்திரேலிய கப்பற்படைக்காக கூட்டாக உருவாக்குவது இராணுவ கூட்டுறவின் ஒரு முக்கிய அம்சமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானில் பரந்தளவில் எதிர்க்கப்பட்ட, அவரது அரசாங்கத்தினது அரசியலமைப்பு மறுவிளக்கமானது "அமைதிக்கான ஒரு செயலூக்கம் சார்ந்த பங்களிப்பாகும்" என்று அபே வலியுறுத்தினார். உண்மையில் அது ஒபாமா நிர்வாகத்தின் சீனாவிற்கு எதிரான ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பை சாக்காக பயன்படுத்தி, இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் முழுவதிலும் ஜப்பானிய இராணுவ நடவடிக்கைக்கு சட்டபூர்வதன்மை அளிக்க நோக்கம் கொண்டதாகும்.

நாங்கள் சட்டத்தின் ஆட்சியைத் தாங்கிப்பிடிக்கும் ஒரு சர்வதேச ஒழுங்கமைப்பை கட்டுவதற்கு," “பசிபிக் பெருங்கடலில் இருந்து இந்திய பெருங்கடல் வரையில் பரந்த கடல் பிரதேசத்தை, மற்றும் அங்கே இருக்கும் வான் எல்லையை, சுதந்திரமானதாக கட்டுப்பாடில்லாததாக ஆக்குவதற்கு," "வேலை செய்யும் ஒரு நாடாக ஜப்பானை உருவாக்க விரும்புகிறோம்,” என்று அபே அறிவித்தார்.

தென் சீனக் கடலில் பெய்ஜிங்கின் பிராந்திய உரிமைகோரல்கள் "சுதந்திர கடல்வழி போக்குவரத்திற்கும்" “சட்டத்தின் ஆட்சிக்கும்" ஆபத்தாகும் என்ற அடிப்படையில் சீனாவிற்கு எதிராக ஆசியாவில் அதன் இராணுவ ஆயுதமயமாக்கலை நியாயப்படுத்துவதற்கு வாஷிங்டனால் பயன்படுத்தப்பட்ட அலங்கார சொற்களை அபேயின் அறிக்கை எதிரொலித்தது.

அரசியலமைப்பு மறுவிளக்கத்தை விளங்கப்படுத்துகையில், நீண்டகாலமாக ஜப்பான் "தன்னிலே ஆழ்ந்து போயிருந்தது" ஆனால் இப்போது உலகின் அமைதிக்காக செயல்படுவதற்காக இன்னும் மேலதிகமான பாத்திரம் வகிப்பதற்கு தீர்க்கமாக இருக்கிறது. ஆஸ்திரேலியா உடனான உறவு "நமது இரண்டு நாடுகளுக்கும் ஒரு கூட்டாளியான அமெரிக்காவுடன் கை கோர்ப்பதிலும்" உதவும் என்றார்.

நாடாளுமன்ற உரையை தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அப்போட்டுடன் அவர் கையெழுத்திட்ட ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களைப் புகழ்ந்துரைக்கையில், அது பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையை (Trans Pacific Partnership – TPP) நடைமுறைப்படுத்துவதை நோக்கிய ஒரு படியாகும் என்று அபே தெரிவித்தார், இந்த TPP உடன்படிக்கையை தான் அமெரிக்கா "முன்னெடுப்பின்" ஓர் உள்ளார்ந்த பொருளாதார உட்கூறாக கருதுகிறது.

எவ்வாறிருந்த போதினும் இந்த இரண்டு குறிப்புகளுக்கும் அப்பாற்பட்டு அமெரிக்கா குறித்து அங்கே மற்றொரு குறிப்பும் இருந்தது. இப்போதைய நிலையில் முன்னெடுப்பின் கட்டமைப்பிற்குள் ஜப்பான் சென்றுக் கொண்டிருக்கின்ற போதினும், அதன் சொந்த பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முன்னெடுக்க டோக்கியோ முயன்று வருகிறது என்பதையும் அபே பேச்சின் ஊடாக சூசகமாக குறிப்பிட்டார்.

அபே உரையின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், அன்னிய நாடுகளில் இராணுவவாதத்திற்கும் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கும் இடையிலான உறவை ஸ்தாபித்ததாகும்.

ஆங்கிலத்தில் அவரது இந்த மூன்றாவது பிரதான உரையை வழங்குவதில் அவருக்கு இருந்த சிக்கல்களுக்கு இடையிலும், அபே அவரது உள்நாட்டு பொருளாதார நிகழ்ச்சிநிரலைக் குறிப்பிடும் போது மிகவும் உயிரோட்டம் பெற்றார். அவர் தன்னைத்தானே "பிரத்யேக நலன்களை" வெட்டும் ஒரு "வெட்டுக் கருவியாக" வர்ணித்துக் கொண்டார். அவரது அபேனோமிக்ஸ் என்றழைக்கப்படும் "மூன்றாவது அம்பு" வணிகத்தின் ஒட்டுமொத்த பகுதிக்கும் நெறிமுறைகளைத் தளர்த்துவதையும், மற்றும் தொழிலாளர்களின் நிலைமைகளின் மீது தாக்குதல்களுக்கு வழிகளைத் திறந்துவிடுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

அபேயை வரவேற்று அபோட் பேசுகையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகள் பொருளாதார வளமைக்கு பங்களிப்பு செய்துள்ளதாக தெரிவித்தார். எவ்வாறிருந்த போதினும் அவரது உரை நிச்சயமாக ஒரு இராணுவ தொனியைக் கொண்டிருந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஜப்பானிய போர்க்கப்பல் முதல் உலக போர் வெடித்த போது ஆஸ்திரேலிய துருப்புகளை மத்திய கிழக்கிற்கு கூட்டிச் சென்ற கப்பற்படை பாதுகாப்பின் பாகமாக இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

பலமாக வேரோடிய கருத்துக்களைச் சமாளிக்க அது கைகொள்ளும் "அரிய தைரியத்தைக்" குறிப்பிட்ட பின்னர்—இது ஜப்பானிய அரசியலமைப்பின் முந்தைய விளக்கத்தை மாற்றுவது மீதான ஒரு தெளிவான குறிப்பாகும்—"நம்முடைய பிராந்தியத்தில் இன்னும் மேலதிக தகைமை கொண்டு ஒரு மூலோபாய கூட்டாளியாக" மாறுவதற்கு ஜப்பான் எடுத்த முடிவை அவர் வரவேற்பதாக அபோட் தெரிவித்தார்.

வாஷிங்டனின் "முன்னெடுப்புக்கு" அவரது அரசாங்கத்தின் பொறுப்புறுதியை அடிக்கோடிட்டு அபோட் அறிவிக்கையில், கடந்த 50 ஆண்டுகளாக ஆசியாவில் பரந்த பொருளாதார மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் அப்பிராந்தியத்தில் "அமைதி மற்றும் ஸ்திரப்பாட்டிற்கு" உத்தரவாதமளிப்பதில் அமெரிக்கா வகித்த பாத்திரமாகும்,” என்றார்.

அரசியலமைப்புக்கு மறுவிளக்கம் அளிக்கப்பட்ட பின்னர் இது அபே வழங்கும் முதல் முக்கிய உரை என்ற நிலையில், ஜப்பானிய இராணுவவாதத்திற்குத் திரும்பும் முடிவின் மீது சீனாவின் அச்சங்களைத் தணிக்க அது அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருந்தது. ஆனால் அவர் அதை தேர்ந்தெடுக்கவில்லை.

ஜப்பான் உடனான ஆஸ்திரேலியாவின் கூட்டணி "யாருக்கு எதிராகவும் நோக்கம் கொண்டதல்ல" என்று கூறி, அபேக்கு வரவேற்பளிக்கையில் அபோட் சீனாவை இராஜாங்கரீதியில் சமாதானப்படுத்தும் ஒரு துணுக்கை உபயோகித்தார், ஆனால் அபே அத்தகைய ஒரு கருத்தையும் கூட வெளிப்படுத்தவில்லை.

சீனா மீதான மவுனம், ஆயிரமாயிர விடயங்களைப் பேசுகிறது. கிழக்கு சீனக் கடலில் மக்கள் வசிக்காத ஒரு பாறைக் குன்றுகளின் தொகுப்பான சென்காயு/தியாவு தீவுகள் மீது ஜப்பான் மற்றும் சீனாவுக்கு இடையிலான பிராந்திய பிரச்சினை கடந்த ஆண்டின் போது ஒரு வெளிப்படையான இராணுவ மோதலாக வெடிக்கும் அளவிற்கு பல முறை அச்சுறுத்தி உள்ளது. ஜப்பானிய மற்றும் சீன இராணுவ போர் விமானங்களும், போர் கப்பல்களும் ஒருசில கணங்களுக்குள் ஒன்றோடொன்று மோதலில் ஈடுபட வந்துள்ளன.

ஜப்பான் மற்றும் சீனாவிற்கு இடையே விளிம்பிற்கு வந்து நிற்கும் போரானது, அபே அவரது உரையை தொடங்கும் போது கூறிய "அமைதிக்கான சூளுரை" வெற்றுத்தனமானது என்பதை அம்பலப்படுத்துகிறது. தவறுக்கிடமின்றி இரண்டாம் உலக யுத்தத்தைக் குறிப்பிடுகையில், கடந்த நூற்றாண்டின் "பிழைகள்" மீண்டும் நடக்காது என்று அவர் அறிவித்தார். யதார்த்தத்தில், ஜப்பான் மற்றொரு பேரழிவு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விடக்கூடிய ஆசியாவின் வெடிப்பு புள்ளிகளின் மையத்தில் இருக்கிறது.