World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Ex-French President Nicolas Sarkozy denies influence peddling charges

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி செல்வாக்கு துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார்

By Kumaran Ira
5 July 2014

Back to screen version

ஊழல் மற்றும் செல்வாக்கு துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் மீது காவலில் வைத்து, குற்றப்பதிவு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி சார்க்கோசி புதனன்று Europe1 வானொலி மற்றும் TF1 தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளிக்கையில், அந்த குற்றச்சாட்டுக்களை மறுத்ததோடு, பிரெஞ்சு நீதித்துறை "அரசியல் நோக்கங்களால்" உந்தப்பட்டு வருவதாக தாக்கினார்.

செவ்வாயன்று சார்க்கோசி 15 மணி நேரம் பொலிஸ் காவலில் வைக்கபட்டு புதனன்று அதிகாலை இரண்டு நீதிபதிகளின் முன்னால் விசாரிக்கப்பட்டிருந்தார். அவர் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் நீதித்துறை வழிமுறைகளை மீறியமை, ஊழலில் ஈடுபட்டது மற்றும் செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் உள்ளடங்கும்.

சார்க்கோசியின் 2007 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதியுதவிகள் மீது நடந்துவரும் புலனாய்வுகள் குறித்து சார்க்கோசியும் அவரது வழக்கறிஞர் தியேரி ஹெர்சோக்கும் உள்ளார்ந்த தகவல்களைப் பெற்றதற்கு உபகாரமாக, பிரான்சின் தலைமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் ஒரு நீதியரசர் கில்பேர் அஜிபேருக்கு மொனோக்கோவில் ஒரு அந்தஸ்து மிக்க பதவியைப் பெற விதிமுறை மீறி உதவியதாக புலனாய்வாளர்கள் அவர்கள் மீது குற்றஞ்சாட்டி உள்ளனர்.

சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுக்கு எதிராக 2012 ஜனாதிபதி தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டதற்கு பின்னர் முதல்முறையாக ஒரு பிரதானநேர நேர்காணல் ஒளிபரப்பிற்கு வந்திருக்கும் சார்க்கோசி, “என்ன நடந்ததோ அதனால் ஆழமாக அதிர்ச்சி அடைந்திருக்கிறேன்," என்று கூறி, அவர் காவலில் வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

"வேறெந்த அரசியல் நிர்வாகியும் இந்தளவிற்கு நீதியரசர்களாலும், பொலிஸாலும் விசாரிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்," என்றார்.

நீதித்துறை அமைப்பையும், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தையும் தாக்கும் விதமாக, அவர் அந்த குற்றச்சாட்டுக்களை "விசித்திரமான கற்பனை" என்று குறிப்பிட்டதோடு, அது அவரை அவமானப்படுத்த அரசியல்ரீதியாக ஊக்குவிக்கப்பட்ட ஒரு பிரச்சாரத்தின் பாகமாகும் என்றார். “மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாடான நம்முடைய நாட்டில், பல விடயங்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன," என்று அவர் குறிப்பிட்டார். “இந்த விடயங்கள் என்ன என்பதை பிரெஞ்சு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும், மனசாட்சியோடும் சுதந்திரத்தோடும், அதை என்ன செய்ய வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்," என்றார்.

"என்னுடைய மிகவும் உற்ற நெருக்கமான உரையாடல்களைப் பதிவு செய்வது வழக்கமான விஷயமா?" என்று வினவிய சார்க்கோசி, அவரது பிரத்யேக தகவல் தொடர்புகள் மீது பொலிஸின் உள்ளார்ந்த ஊடுருவலின் சட்டபூர்வதன்மை குறித்து கேள்வி எழுப்பினார்—ஆனால் பிரெஞ்சு மக்களுக்கு எதிராகவும், உலக மக்களுக்கு எதிராகவும் அவரது அரசாங்கமும், சோசலிஸ்ட் அரசாங்கமும் இரண்டுமே தான் அதை நடைமுறைப்படுத்தி உள்ளன.

எதுவும் தவறாக செய்யவில்லை என்று சார்க்கோசி மறுத்தார். “நான் குடியரசின் மதிப்பிற்கோ அல்லது சட்டத்தின் ஆட்சிக்கோ முரணாக எந்தவொரு நடவடிக்கையும் செய்யவில்லை," என்று கூறிய அவர், பிரெஞ்சு மக்களின் "நம்பிக்கையை ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை" என்று வாதிட்டார்.

அனுதாபத்தை வென்றெடுக்க சார்க்கோசியின் முயற்சிகள் இருக்கின்ற போதினும், மக்களின் பரந்த பிரிவுகளோ சார்க்கோசிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் நம்பத்தகுந்தவை என்றும், அவர் அரசியல்ரீதியாக இடர்படுத்தப்படவில்லை என்பதிலும் தீர்மானமாக உள்ளன. Le Parisien நாளிதழுக்கான BVA கருத்துக்கணிப்பின்படி, “அவர் ஏனைய பிரஜைகளைப் போலவே தான் நடத்தப்பட்டு வருகிறார் என்று 63 சதவீத பிரெஞ்சு மக்கள் நம்புகின்றனர்."

சார்க்கோசியின் ஊழல் மோசடி பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகம் பரந்தளவில் மதிப்பிழந்து இருப்பதை அடிக்கோடிடுகிறது. சார்க்கோசி ஊழல் செய்தாரா இல்லையா என்ற பிரச்சினைக்கு அப்பாற்பட்டு, சோசலிஸ்ட் கட்சியின் சிக்கன கொள்கைகள் மற்றும் ஏகாதிபத்திய யுத்தங்கள், மற்றும் அதிகரித்துவரும் நவ-பாசிச தேசிய முன்னணியின் செல்வாக்கு ஆகியவை மீது தீவிரமடைந்து வரும் மக்களின் கோபத்தை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்பதன் மீது ஆளும் வட்டாரங்களுக்குள் ஆழ்ந்த பிளவுகள் வெடித்து வருகின்றன.

எதிர்கட்சியான சார்க்கோசியின் ஒருங்கிணைந்த மக்கள் இயக்கம் (UMP), ஊழல்கள் மற்றும் கன்னை மோதல்களால் கிழிந்து போயிருக்கும் நிலையில், சோசலிஸ்ட் கட்சியின் செல்வாக்கு சரிந்திருப்பதைக் கொண்டு அதனால் ஆதாயமடைய முடியவில்லை. Le Monde குறிப்பிட்டதைப் போல, “பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் UMP நிர்வாகிகள், மேயர்கள், கிளை நிர்வாகிகள், பல ஆண்டுகளாக தங்களது பதவிகளில் தங்கி இருப்பவர்கள், தங்கள் கட்சியின் ஊழல்களை, நிதியியல் முறைகேடுகள் என்று கருதப்படுபவைகளை மற்றும் இரகசிய கடன்களை அவர்களின் வாக்காளர்கள் தொடர்ந்து கையிலெடுத்து வருவது குறித்து கோபமடைந்துள்ளனர்."

"சமீபத்திய மாதங்களின் ஊழல்களால் UMP ஒரு சிக்கலான நிலைமையில் இருக்கிறது," என்று கோன்ப்லன்ஸ்-செயின்ட்-ஒனோரினே நகர மேயர் லோரன்ட் புறூஸ் தெரிவித்தார். “பலர் நிக்கோலா சார்கோசிக்கு நன்றி தெரிவிக்கின்றனர், ஏனென்றால் அவர் ஒரு தூண்டுதலை அளித்திருக்கிறார். ஆனால் அங்கே இன்று குறிப்பிட்டளவிற்கு சோர்வு காணப்படுகிறது," என்றார்.

அரசு மதிப்பிழந்து வருவதன் மீது ஆளும் வட்டாரங்களில் ஆழ்ந்த கவலை நிலவுகிறது. அவருக்கு எதிராக திரும்பிய தேசதுரோக குற்றச்சாட்டுகளைக் குறித்து குறை கூறுவதன் மூலமாக சார்க்கோசி நீதித்துறையை அவமதிக்க முயன்று வருவதாக நீதிபதிகள், சோசலிஸ்ட் கட்சி அரசியல்வாதிகள், மற்றும் ஊடகங்களின் பிரிவுகள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. நீதிபதிகள் மன்றத்தின் தலைவர் பிரான்சுவா மார்ட்ரெஸ் Europe1க்கு சார்க்கோசி அளித்த கருத்துக்களை விமர்சித்தார்: “நீதித்துறை அமைப்பை யார் அரசியலாக்கி வருகிறார்கள்? தங்கள் கடமையை அமைதியாக செய்வதற்கு முயலும் விசாரணை நடத்தி வரும் நீதிபதிகளா, அல்லது அதை மதிப்பிழக்க செய்ய நீதித்துறை அமைப்பின் மீது தாக்குதல் நடத்துபவர்களா?," என்றார்.

சோசலிஸ்ட் அரசாங்கம் சார்க்கோசியைப் பாதுகாக்க மறுத்து, அவருக்கு எதிரான வழக்கை ஆதரித்துள்ளது. பிரதம மந்திரி மானுவேல் வோல்ஸ் கூறுகையில், “உண்மைகள் மிகவும் தீவிரமானதாக உள்ளன. அது நீதிபதிகள், உயர் பதவியில் இருக்கும் நீதியரசர்கள், ஒரு வழக்கறிஞர் மற்றும் குடியரசின் ஒரு முன்னாள் ஜனாதிபதியோடு சம்பந்தப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தின் தலைவராக, நான் நீதித்துறை சுதந்திரத்தின் கோட்பாடுகளையும் மற்றும் குற்றமின்மையைத் தீர்மானிக்கும் கோட்பாடுகளையும் மதிக்க வேண்டி இருக்கிறது," என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “அவர்கள் நீதிபதிகளையும், சுய அதிகாரம் பெற்ற நீதியரசர்களையும் விசாரித்து வருகிறார்கள், இந்த விசாரணை நடத்த சொல்லி கோரியது [மக்கள்] அதிகாரங்கள் அல்ல, அவர்கள் சுதந்திரமான முறையில் நடவடிக்கை எடுத்து, அவற்றில் வேலை செய்து வருகின்றன. ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு விவகாரத்திலும், ஒவ்வொரு வழக்கிலும் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா, அல்லது இல்லையா என்பதன் மீது இந்த வகையான சர்ச்சைகள் அங்கே இருந்திருக்கின்றன, ஆனால் நாம் சட்டத்தின் ஆட்சியினது மிக அடிப்படையான கோட்பாடுகளை அடித்தளத்தில் கொண்டிருக்கிறோம்," என்றார்.

சார்கோசியின் விவகாரம் பிரான்சின் ஐந்தாவது குடியரசின் மத்திய கருவியான ஜனாதிபதி பதவியின் கௌரவத்தின் மீது விழுந்த மற்றொரு அடியாக இருக்கிறது. இவருக்கு முன்னர் இருந்த முன்னாள் ஜனாதிபதி ஜாக் சிராக் மீது 2011இல் நிதியியல் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, அடுத்தது ஹாலாண்ட் இப்போது இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய மற்றும் மார்ஷல் பிலிப் பெத்தனின் பாசிச ஆட்சி பொறிவுக்குப் பின்னர் மக்களால் மிகவும் வெறுக்கப்படும் பிரெஞ்சு அரசு தலைவராக இருக்கிறார்.

முன்கணிக்கும் எத்தனையோ முதலாளித்துவ விமர்சகர்களே ஒப்புக் கொண்டிருக்கின்ற விதத்தில், பிரான்சில் என்ன மேலெழுகிறதென்றால் வர்க்க ஆட்சியின் ஒரு நெருக்கடியாகும்.

"ஐந்தாம் குடியரசே செயலிழந்து போயிருக்கும் ஒரு உணர்வு அங்கே நிலவுகிறது," என்று L’Express சஞ்சிகையின் தலைமை பதிப்பாசிரியர் கிறிஸ்தோப் பார்பியே நியூ யோர்க் டைம்ஸிற்கு தெரிவித்தார். “விடயங்களே இதே விதத்தில் நகர முடியாது," என்று தொடர்ந்து குறிப்பிட்ட அவர், பிரான்சின் அரசியல் அமைப்புமுறையின் "ஒரு பெரும் வெடிப்பை" அனுமானிக்கிறார்.

அவர் கூறுகையில், “பிரான்சில் ஒரு புரட்சியோ அல்லது ஒரு யுத்தமோ வரும்போது மட்டும் தான் நாங்கள் அமைப்புமுறையை மாற்றுகிறோம்," என்றார்.