சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Jailed Maruti Suzuki workers in India continue to be denied bail

இந்தியாவில் சிறையிலிருக்கும் மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் பிணைவழங்க மறுக்கப்படுகிறது

By Arun Kumar and Kranti Kumara
30 June 2014

Use this version to printSend feedback

வடக்கு இந்திய மாநிலமான ஹரியானாவின் மாருதி சுஜூகி ஆலையிலிருந்து நூற்றி நாற்பத்தி ஏழு தொழிலாளர்கள், ஆலையின் கொத்தடிமை நிலைமைகளை எதிர்த்தற்காக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சுமார் இரண்டு ஆண்டுகளாக சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய உச்சநீதிமன்றத்திடம் தாக்கல் செய்த அவர்களது பிணைகோரிய முறையீடு, முடிவில்லா சட்ட தடைகளை முகங்கொடுத்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட தொழிலாளர்கள் உடனான ஒரு கைகலப்பில் ஒரு ஆலை மேலாளரை கூட்டாக கொலை செய்ததாக, பொய் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அந்த 147 தொழிலாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மனிதவள மேலாளர் அவினேஷ் தேவ் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தார். அதற்கு தீமூட்டியவர்கள் யார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

அவர்கள் முகங்கொடுத்து வரும் வழக்கு நீதித்துறைக்கு ஒரு ஏளனமாக உள்ளது. மாநில பொலிஸோ, மிகவும் போர்குணமிக்க தொழிலாளர்களைக் கண்டறியவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நிர்வாகத்துடன் கை கோர்த்து வேலை செய்து வருகிறது. தேவ் படுகொலையோடு தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் தொழிலாளர்களிடமிருந்து பொலிஸ் சுய-ஒப்புதலைப் பெற சித்திரவதைகளைப் பயன்படுத்தியது. (பார்க்கவும்: India: Jailed Maruti Suzuki workers subjected to torture). மாநில அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் குற்றகரமான குற்றச்சாட்டுக்களின் நீண்ட பட்டியலின் அடிப்படையில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அந்த தொழிலாளர்கள் தசாப்தங்களுக்கும் சிறையில் அடைக்கப்படுவார்கள்.

தேவ் தொழிலாளர்களின் ஒரு எதிரியாக இருப்பதற்கு மாறாக அவர் அவர்களது போராட்டங்களுக்கு அனுதாபம் காட்டி வந்ததாக தொழிலாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நிறுவனத்தால் கொண்டு வரப்பட்ட அந்த ஆலையின் கைப்பாவை தொழிற்சங்கத்திற்கு எதிரான ஒரு கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் மாருதி சுஜூகி தொழிலாளர்கள் சங்கம் (MSWU) உருவாக்குவதில் அவர் தொழிலாளர்களுக்கு உதவியதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி ஆட்சியிலான மாநில அரசாங்கமும், நீதித்துறையும் இந்தியாவை ஒரு மலிவு உழைப்புக்கான மற்றும் காட்டுமிராண்டித்தனமாக உழைப்பை சுரண்டுவதற்கான ஒரு மூலஆதாரமாக வைக்க தீர்மானகரமாக உள்ளன என்பதோடு, தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பு இல்லாமல் தொடர்ந்தும் அந்நிய பெருநிறுவனங்களால் அதிக இலாபங்களை ஈட்ட முடியுமென்று அவற்றிற்கு உத்தரவாதமளிக்க அவ்விடயத்தைப் பயன்படுத்தி வருகின்றன.

மே 2013இல் தொழிலாளர்களின் பிணை கோரிய முதல் மனுவை நிராகரித்து, மாநில உயர் நீதிமன்ற நீதிபதி அறிவிக்கையில் "தொழிலாளர் கிளர்ச்சிக்கு அஞ்சி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பணத்தை முதலீடு செய்யாமல் போகக்கூடுமென" குறிப்பிட்டார். நீதிபதியின் அறிக்கை ஒரு விதிவிலக்கல்ல மாறாக, அது ஒட்டுமொத்த இந்திய நீதித்துறையின் தொழிலாளர் வர்க்க விரோத மற்றும் முதலீட்டாளர் சார்பு கண்ணோட்டமாக இருந்தது. (பார்க்கவும்: இந்தியாவின் நீதித்துற முதலாளித்துவவாதிகளின் நிகழ்ச்சிநிரலின் மீதுசெயல்படுகிறது

பிணையளிப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுக்களில் இருந்த தொழிலாளர்களுக்கான வழக்கறிஞர்கள் ஜூலை 2013இல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த இளம் தொழிலாளர்கள் முகங்கொடுத்துள்ள ஒடுக்குமுறை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு விரைவாக செயல்படுவதற்கு மாறாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ தொடர்ந்து அவர்களை அலைக்கழித்தார்கள். பிணைகோரும் மனுவை முடிவெடுப்பதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றம், அந்த பழி வாங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் ஹரியானா மாநில சிறப்பு வழக்கறிஞரிடம் இருந்து கருத்துக்களைக் கோரியது.

நேரில் பார்த்தவர்கள் என்று கருதப்படுபவர்களிடம் இருந்து அவர் சாட்சியங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வரையில் எந்த முடிவும் எடுக்க வேண்டாமென அந்த வழக்கறிஞர் வலியுறுத்தினார். உச்ச நீதிமன்றம் அதை ஒப்புக் கொண்டது, அதன் விளைவாக சாட்சியங்களின் முடிவில்லா அணிவகுப்பு நடந்து வந்தது, அது அண்ணளவாக ஒரு ஆண்டுக்கு முடிவை தாமதப்படுத்தி உள்ளது.

மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கான முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ராஜேந்திர பதாக், அவரது கட்சிகாரர்கள் சிக்கியுள்ள சட்ட வலையைக் குறித்து சமீபத்தில் உலக சோசலிச வலைத் தளத்திற்கு கருத்து தெரிவித்தார். “கடந்த பெப்ரவரி 17இல் பிணை கோரியதோடு சம்பந்தப்பட்ட எங்களது மனு உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போது, ஹரியானா மாநில சிறப்பு வழக்கறிஞர் திரு. துல்சி கூறுகையில், நேரில் பார்த்த 23 சாட்சியங்களையும் அவர் விசாரிக்கும் வரையில் தொழிலாளர்களுக்கு பிணை வழங்க கோரக்கூடாதென தெரிவித்தார்.

மருத்துவர்கள் மற்றும் இரண்டு மாநில தொழிலாளர் துறை அதிகாரிகள் உட்பட இதுவரையில் 40 சாட்சியங்கள் உச்ச நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளனர். பிரதான குற்றத்தை "நேரில் பார்த்த" 17-18வது சாட்சிகளால் யார் கொலை செய்யப்பாட்டார் என்பதையோ, எவ்வாறு கொலை செய்யப்பட்டார்கள் என்பதையோ, தேவ் கொலைக்கு காரணமான அந்த தீயை மூட்டியவர்கள் யார் என்பதையோ, அந்த தீ பிடிக்க எது காரணமாக இருந்தது என்பதையோ இருவரில் ஒருவரும் நிரூபணமாக கூற முடியவில்லை என்பதை என்னால் துல்லியமாக கூற முடியும் என்றார்.

அங்கே ஒரேயொருவர், மூத்த ஆலை மேலாளரான பிரசாத் மட்டும் தான் இருந்தார், ஜியாலால் [குற்றஞ்சாட்டப்பட்ட 147 தொழிலாளர்களில் ஒருவர்] தீ வைத்ததை அவர் பார்த்ததாகவும், அவரை பார்த்தால் தம்மால் எளிதாக அடையாளம் காட்ட முடியுமென்றும் கூறினார். பின்னர் நான் அவரை ஜியாலாலைக் காட்டுமாறு கேட்டுக் கொண்ட போது அவர் சுமார் 35 நிமிடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களை திரும்பதிரும்ப கூர்ந்து கவனித்தார். அப்படியிருந்தும் அவரால் ஜியாலாலை அடையாளம் காண முடியவில்லை. உயிர்பறித்த அந்த நெருப்பை மூட்டியவரை அவர் பார்த்ததாக கூறுகின்ற நிலையில் அவரை அடையாளம் காட்ட பிரசாத் நாள் முழுவதையும் எடுத்துக் கொள்ள கூடாது என்பதை நான் சுட்டிக் காட்ட வேண்டி இருந்தது.”

தொடர்ந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களின் ஒடுக்குமுறை மூன்று ஆண்டு வரலாறைக் கொண்டுள்ளது. இளம் தொழிலாளர்களின் எதிர்ப்பையும், மற்றும் ஊதியத்தை உயர்த்துவது, ஒப்பந்த தொழிலாளர் முறையை நெறிப்படுத்துவது மற்றும் வேலையிட நிலைமைகளை மேம்படுத்துவது என அவர்களின் கோரிக்கைகளையும் எதிர்கொண்டுள்ள MSI நிர்வாகம் ஒரு நன்கு-திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தியது. 546 நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் 1,800க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியதன் மூலமாக மிகவும் போர்குணமிக்க தொழிலாளர்களைத் களையெடுக்குவதற்கு நிர்வாகத்தை அனுமதிக்கும் வகையில் ஒரு மாதகால கதவடைப்பும் அதில் உள்ளடங்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அந்த மேலாளர் இறந்த பின்னர், ஆலை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஒரு பட்டியலின் அடிப்படையில் பொலிஸ், "சட்டவிரோதமாக ஒன்று கூடியமை" மற்றும் மேலாளரைக் "கொல்ல சதியில் ஈடுபட்டமை" ஆகியவற்றிற்காக 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் குற்றஞ்சாட்டியது. புதிதாக உருவாக்கப்பட்ட MSWUஇன் ஒட்டுமொத்த தலைமையும் சிறையில் அடைக்கப்பட்டதோடு, 147 தொழிலாளர்கள் பொலிஸ் நிலையத்தில் மூத்த நிறுவன செயலதிகாரிகளின் முன்னிலையில் நீடித்த சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

மாநில நீதிமன்றம் பிணைவழங்க மறுத்ததில் அமைந்திருந்த முன்னுதாரணமான குணாம்சத்தைக் குறித்து பதாக் குறிப்பிட்டார். “147 தொழிலாளர்களின் பிணை மறுக்கப்பட்டமை அச்சுறுத்தலான தாக்கங்களைக் கொண்டிருக்கிறது. MSWUஇன் ஒட்டுமொத்த தலைமையும் 20இல் இருந்து 30 ஆண்டுகள் வரையிலான கடுமையான தண்டனையை முகங்கொடுக்க வேண்டியதிருக்கும். சிறையிலிருக்கும் எஞ்சிய 135 தொழிலாளர்களில் பெரும்பாலானவர்களும் கூட கடுமையான தண்டனையை முகங்கொடுக்கக்கூடும்,” என்றார்.

ஜனவரி 2013இல் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பங்கெடுக்க இருந்த போது கைது செய்யப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான இம்ரான் கான் மட்டும், ஓராண்டுக்கு நெருக்கமாக சிறையில் இருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இம்ரான் கான், முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஜூலை-ஆகஸ்ட் 2012 பொலிஸ் வலையத்திற்குள் சிக்க வைக்கப்பட்ட பின்னர், MSWUக்கு தலைமை கொடுக்க உருவாக்கப்பட்ட இடைக்கால தொழிலாளர் குழுவின் ஓர் அங்கத்தவர் ஆவார். ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட 148 தொழிலாளர்களில் மற்றொருவர் மருத்துவ காரணங்களுக்காக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரலில் தொழிலாளர்கள் பொலிஸ் மற்றும் நிர்வாகத்தை மீறி, மானேசர் மற்றும் குர்காவிற்கு அருகாமையில் உள்ள ஆலைகளில் MSWU தொழிற்சங்கத்திற்கு ஒரு புதிய தலைமையைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடத்தினார்கள். ஆனால் பொய் குற்றம் சுமத்தப்பட்ட தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதை உடைக்கவும் அல்லது பன்னாட்டு பெருநிறுவனங்களின் சுரண்டல் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான நிலைமைகளை உருவாக்கவும் போர்குணம் மட்டுமே போதுமானதல்ல.

மலிவு தொழிலாளர் ஒப்பந்ததாரர்களாக பாத்திரம் வகித்துள்ளதும், அரசாங்கத்தோடு பிணைந்துள்ளதுமான ஸ்ராலினிச மற்றும் ஏனைய பெரிய தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு மாருதி சுஜூகி தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி உள்ள அதேவேளையில், அவை தொழிலாளர்களை ஒடுக்கி வருகின்ற அதே மாநில அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை வைக்குமாறு MSWU தலைவர்களை அறிவுறுத்தி வருகின்றன.

WSWS ஏற்கனவே விளங்கப்படுத்தி இருப்பதைப் போல, மாருதி சுஜூகி தொழிலாளர்கள் குர்காவ்-மானேசர் தொழிற்துறை வளாகத்தில் உள்ள அவர்களின் வர்க்க சகோதர சகோதரிகளை மட்டுமல்ல, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள அவர்களை ஒன்றுதிரட்ட வேண்டும். அதுபோன்றவொரு போராட்டம் சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்ட அரசியல்ரீதியாக சுயாதீனமான ஒரு தொழிலாளர் வர்க்க இயக்கத்தை அபிவிருத்தி செய்ய போராடுவதன் பாகமாக இருக்க வேண்டும்.