தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German Left Party defends drive to war ஜேர்மன் இடது கட்சி யுத்த உந்துதலை நியாயப்படுத்துகிறது
By Christoph Dreier Use this version to print| Send feedback இடது கட்சியின் நாடாளுமன்ற துணை தலைவர் டீற்மார் பார்ட்ஷ், கடந்த வெள்ளியன்று Tagesspiegel நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில், ஜேர்மன் அரசாங்கத்தின் ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கைக்கு அவரது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கள் விமர்சனங்களுக்கு எதிராக அரசாங்கத்தைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டிருப்பதோடு, யுத்த எதிர்ப்பாளர்களுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தின் பாகமாக உள்ளன. அந்த நேர்காணலில் பார்ட்ஷ் மீண்டுமொருமுறை இடது கட்சிக்கும், சமூக ஜனநாயக கட்சிக்கும் (SPD) இடையே ஒரு கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். பார்ட்ஷின் கருத்துப்படி, பல விடயங்களில், அனைத்திற்கும் மேலாக வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் அவர்களுக்கு இடையே கணிசமான உடன்பாடு இருந்திருக்கிறது. அவர் கூறுகையில், “வெளியுறவு கொள்கையின் காரணமாக அடுத்த மத்திய தேர்தல் ஆண்டான 2017இல், இடது கட்சிக்கும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான ஒரு கூட்டணி தோல்வியுறாது,” என்றார். வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் (SPD) போலவே, "மிகவும் செயலூக்கத்துடனான ஜேர்மன் வெளியுறவு கொள்கையை" அவர் ஆதரிப்பதாக தெரிவித்தார். பார்ட்ஷ் மிக வெளிப்படையாக ஜேர்மன் படையின் இராணுவ தலையீடுகளையும் சேர்த்து குறிபிட்டார். “ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களின் கட்டமைப்பிற்குள்ளே ஜேர்மனி பொறுப்பேற்றிருக்கும் தலையீடுகளை, ஒரேயிரவில் எந்த அரசாங்கமும் இரத்து செய்துவிட முடியாது,” என்று தெரிவித்த அந்த துணைத் தலைவர், “அதுபோன்ற திட்டங்களை நீடிப்பதன் மீது நாடாளுமன்றம் முடிவெடுக்கும் போது அந்த முடிவுகள் அறிவிக்கப்படும். எப்போதும் ஒவ்வொரு விடயமாக படிப்படியாக தான் செய்யப்படும்,” என்றார். ஆனால் எந்த "குறிப்பிட்ட விடயத்தோடு" இடது கட்சி உடன்பட்டுள்ளது என்பதைக் குறித்து பார்ட்ஷ் குறிப்பிடவில்லை. இந்த ஆண்டின் ஏப்ரலில் அவரது பாராளுமன்ற பிரிவின் நான்கு சகாக்களோடு சேர்ந்து சிரியா பிரச்சினையில் ஜேர்மன் படையின் ஒரு வெளிநாட்டு தலையீட்டிற்கு ஆதரவாக அவர் வாக்களித்திருந்தார். இப்போது அவர் வெளியுறவுத்துறை மந்திரியின் இராணுவவாத கொள்கைகளுக்கு அவரது ஆதரவை அளித்து இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். இடது கட்சியின் வேலைத்திட்டத்தோடு ஸ்ரைன்மையர் நிறைய பொதுவான விடயங்களைக் கொண்டிருப்பதாக பார்ட்ஷ் வலியுறுத்தினார். ஜேர்மன் இராணுவவாதத்தின் புத்துயிர்ப்பிற்குப் பின்னால், சமூக ஜனநாயகக் கட்சிக்கும் மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியத்திற்கு இடையேயான கூட்டணியில் ஸ்ரைன்மையரே உந்துசக்தியாக இருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இராணுவ தடைகள் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதாக அறிவித்த ஸ்ரைன்மையர், பூகோள அரசியலை மீது ஜேர்மனி வெறுமனே கருத்துகள் தெரிவிப்பதையும் விட, பெரிதும் சக்தி வாய்ந்திருப்பதாக அறிவித்தார். ஐரோப்பாவிலும் மற்றும் உலகளாவிய அளவிலும் ஜேர்மன் இன்னும் மேலதிகமாக தலைமையை எடுக்க வேண்டுமென அழைப்புவிடுத்து மே இறுதியில் அவர் ஒரு இணைய தளத்தைத் தொடங்கி வைத்ததோடு, ஒரு ஆக்ரோஷ வெளியுறவு கொள்கையையும் ஊக்குவித்து வருகிறார். அதே நேரத்தில், உக்ரேனில் பாசிச ஸ்வோபோடா கட்சி மற்றும் ஏனையவர்களோடு கூடி உக்ரேன் நெருக்கடி தொடர்பாக, ஸ்ரைன்மையர் ரஷ்யாவை நோக்கி ஒரு ஆக்ரோஷமான போக்கை நடைமுறைப்படுத்தி இருந்தார். பார்ட்ஷ் இப்போது அதுபோன்ற கொள்கைகளுக்கு உத்தியோகபூர்வமாக இடது கட்சியின் ஒப்புதல் முத்திரையை வழங்கி வருகிறார். இடது கட்சி நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்தி வரும் ஆனால் மூடி மறைக்க முயன்று வரும் சில விடயங்களை அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். அந்த கட்சி பல ஆண்டுகளாக ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் ஒரு உள்ளார்ந்த பாகமாக இருந்துள்ளது. கடந்த இலையுதிர் காலத்தில் ஸ்ரெபான் லீபிச், கிரிகோர் கீசி மற்றும் பௌல் ஷ்சேபர் உட்பட பல முக்கிய கட்சி உறுப்பினர்கள், “ஒரு இடது வெளியுறவுக் கொள்கை: சீர்திருத்தத்திற்கான முன்னோக்குகள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொகுப்பை பிரசுரித்தனர். அதில் அவர்கள், அரசாங்க வெளியுறவு கொள்கைக்கு முழு உடன்பாடு தெரிவித்திருந்ததோடு, படைகளின் இராணுவ தலையீட்டிற்கும், சர்வதேச அளவில் ஜேர்மனி பெரும் பாத்திரம் வகிக்கவும் அழைப்பு விடுத்திருந்தனர். இது ஸ்ரைன்மையரினது நிலைப்பாட்டிற்கு அடித்தளமாக சேவை செய்துள்ளதும், அரசாங்கத்தால் நிதியுதவி வழங்கப்பட்டதுமான ஒரு மூலோபாய ஆய்வறிக்கையை உருவாக்குவதில் லீபிச் ஈடுபாடு காட்டியதோடு அதே போக்கை பின்தொடர்ந்தார். அரசாங்க வெளியுறவு கொள்கைக்கு பார்ட்ஸின் பகிரங்கமான ஒப்புதல், அவரது நேர்காணலுக்கு சில நாட்களுக்கு முன்னர் அரசியல்வாதிகளால் மற்றும் ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டதும், யுத்த உந்துதலை விமர்சிக்கும் விமர்சகர்களுக்கு எதிரானதுமான ஒரு நேரடி பிரச்சாரத்தோடு இணைந்துள்ளது. முன்னதாக பெரிதும் அறியப்படாத உள்ளூர் இடது கட்சி அரசியல்வாதி நோர்பேர்ட் முல்லர் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்கை ஒரு "அருவருப்பான யுத்தவெறியர்" என்று குறிப்பிட்டதற்குப் பின்னர், அவர் (முல்லர்) கூர்மையாக விமர்சிக்கப்பட்டதோடு வழக்கை எதிர்கொள்ள வேண்டியதிருக்குமெனவும் அச்சுறுத்தப்பட்டார். கௌவ்க் முன்னதாக ஜேர்மனியின் பலமான இராணுவ தலையீடுகள் குறித்து பேசியிருந்தார். இடது கட்சி தலைமை, முல்லருக்கு எதிரான பிரச்சாரத்தில் இணைந்து கொண்டதோடு, பிராண்டன்பேர்க் மாநில சட்டமன்றத்தின் அந்த பிரதிநிதியிடமிருந்து தன்னைத்தானே உறுதியாக தூர விலக்கி கொண்டது. முல்லர் "தவறாக குறிப்பிட்டிருந்ததாக" இடது கட்சியின் மத்திய நாடாளுமன்ற தலைவர் கிரிகோர் கீசி அறிவித்தார். கௌவ் ஒரு "அருவருப்பான யுத்தவெறியர்" கிடையாது என்றார். இடது கட்சி தலைவர் பேர்ன்ட் ரிக்சிங்கரும் அந்த அறிக்கையிலிருந்து தன்னைத்தானே தூர விலக்கி கொண்டு, இராணுவ தலையீடுகள் மீதான விவாதம் "நிபுணத்துவத்தோடும், (ஜனாதிபதி) அலுவலக அந்தஸ்திற்கு அவசியமான மரியாதைகளோடும் விவாதிக்கப்பட வேண்டுமென" அறிவித்தார். இடது கட்சி முல்லரிடமிருந்து தன்னைத்தானே விலக்கிக் கொள்ள மட்டும் இந்த கருத்தினை தேர்ந்தெடுக்கவில்லை, மாறாக முல்லரின் கருத்து "ஜேர்மன் ஜனாதிபதியை அவமானப்படுத்துவதாகும்" என்ற வாதத்தையும் ஆதரித்தது. அது போன்ற கருத்துக்கள் குற்றவியல் சட்டவிதியின் 90வது பிரிவின்படி ஐந்து ஆண்டுகள் சிறைக்காவல் தண்டனைக்குரியதாகும். போட்ஸ்டாம் மாநில வழக்கறிஞர் நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகின்ற நிலையில், அரசியல் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் உறுதியான நீதித்துறை நடவடிக்கைகளைக் கோரியுள்ள போதினும், கீசியும் அவரது சகாக்களும் யுத்த எதிர்ப்பாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு அவர்களின் ஆதரவை சமிக்ஞை செய்திருக்கிறார்கள். பார்ட்ஷ் இப்போது வெளிப்படையாக இடது கட்சி ஏன் இந்த நிலைப்பாட்டை எடுத்தது என்பதை விவரித்து வருகிறார். அக்கட்சி முல்லருக்கு எதிரான பிரச்சாரத்தை, ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் ஆதரவாளர்களாக அவர்களின் நம்பகத்தன்மையை எடுத்துக்காட்ட பயன்படுத்தியது. அதன் சொந்த அங்கத்தவர்களைக் கையாண்ட விதத்தோடு, மக்களின் யுத்த எதிர்ப்பு உணர்வுக்கு எதிராக இரக்கமின்றி செயல்படவும் அது தயாராக இருப்பதை எடுத்துக்காட்டி வருகிறது. இது முழுவதுமாக அக்கட்சியின் வரலாறோடு பொருந்தி உள்ளது. கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் மேற்கின் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உயர்மட்ட அடுக்குகளில் இருந்து எழுந்த அக்கட்சி, தொழிலாளர்களை ஒடுக்குவதில் ஒரு நீண்ட பாரம்பரியங்களைக் கொண்டிருக்கிறது. 1989இல் SED/PDSஇன் அப்போதைய தலைவரும், அரசாங்க தலைவருமான ஹான்ஸ் மோட்ரோவ் (Hans Modrow) குறிப்பிட்டதைப் போல, அந்நாட்டினை ஆளும் இயலுமையை பாதுகாத்துக்கொள்ள அப்போது முதலாளித்துவ மீட்சியை ஒழுங்கமைப்பதே அதன் கடமையாக பார்த்தது. அப்போதிருந்து அக்கட்சி மக்கள் மீது சமூக தாக்குதல்களைத் திணிக்க பல மாநில அரசாங்கங்களுக்குள் ஒருங்கிணைந்துள்ளது. இப்போதோ அது (இடது கட்சி) மத்திய அரச மட்டத்தில் அதே பாத்திரம் வகிக்க தயாராகி வருகிறது. ஜேர்மன் இராணுவவாதத்தை பாதுகாப்பது என்பது அமைச்சரவையில் அதனது இருக்கையை பெற்றுக்கொள்வதற்கான முன்நிபந்தனையாக உள்ளது. |
|
|