World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Equality and the Fourth of July

சமத்துவமும் ஜூலை நான்காம் தேதியும்

Joseph Kishore
4 July 2014

Back to screen version

ஜூலை நான்காம் தேதியானது, 238 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் பிரிட்டனிலிருந்து அவற்றின் பிரிவினையை அறிவித்த 13 காலனித்துவ நாடுகளின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்ட சுதந்திர பிரகடனம் ஏற்கப்பட்ட கொண்டாட்டகரமான நாளைக் குறிக்கிறது.

வரலாற்றில் அந்த சுதந்திர பிரகடனம், எந்த மக்களுக்கு ஐக்கிய அமெரிக்க அரசுகள் என்றானதோ அவர்களுக்கு மட்டுமல்லாது, மாறாக ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு முக்கிய திருப்புமுனையைக் குறித்தது. பிரிட்டிஷ் முடியாட்சியிடமிருந்து அவர்களின் மீள முடியாத அந்த உடைவை அறிவிக்கையில், அதன் ஸ்தாபகர்கள் அறிவொளியின் மிகவும் முற்போக்கான கருத்துருக்களை நடைமுறையில் கொண்டு வர முயன்றார்கள்.

1776இன் கோடையில் பிரகடனப்படுத்தப்பட்ட அந்த கோட்பாடுகளில் சமத்துவமே மையமாக இருந்தது. “இந்த உண்மைகளையே நாங்கள் சுயவிளக்கமாக ஏற்கிறோம், என்று அறிவிக்கும் அந்த ஆவணத்தின் இரண்டாவது பத்தி, “அனைத்து மக்களும் சமமாக சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்களை விட்டு அந்நியப்படுத்த முடியாத குறிப்பிட்ட உரிமைகளோடு அவர்களின் சிருஷ்டிகர்த்தாவினால் அவர்களுக்கு பெரும்பேறு அளிக்கப்பட்டிருக்கிறது, அத்தகைய உரிமைகளில் உயிர் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சிக்கான தேடல் ஆகியவையும் உள்ளடங்கும், என்று குறிப்பிடுகிறது.

அமெரிக்க புரட்சியின் தீவிரத்தன்மை குறித்து கருத்துரைக்கையில், வரலாற்றாளர் கோர்டன் வூட் இவ்வாறு குறிப்பிடுகிறார், “சமத்துவம் என்பது உண்மையில் மிகவும் தீவிரமான மற்றும் மிகவும் பலம் வாய்ந்த சித்தாந்த சக்தியாக புரட்சியில் கட்டவிழ்கிறது,எந்தவொரு புரட்சியாளர்களும் உணர்ந்திராத அளவிற்கு மிகப் பெரிய சாத்தியத்திறனுக்கு" அது முறையீடு செய்வதோடு, அது "அமெரிக்க சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் ஊடாக அதீத சக்தியோடு வெளிப்படும், என்று எழுதினார். சமத்துவம் குறித்த கருத்துக்கள், இன்று வரை தொடந்து கொண்டிருக்கும் அதிர்வுகளில், மக்களின் நனவில் ஆழமாக உட்பொதிந்துள்ளன.

புதிய உலகின் புரட்சியானது, எங்கெங்கிலும் பகட்டான தனிச்சலுகைகளுக்கும் மற்றும் ஏதேச்சதிகார அதிகாரத்திற்கும் ஒரு ஆபத்தை முன்னிறுத்தியது என்பது அதை முன்னெடுத்தவர்களாலும் மற்றும் அதை எதிர்த்தவர்களாலும் மிக மிக தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டு இருந்தது. சுதந்திரத்திற்கான யுத்தம் பிரெஞ்சு புரட்சிக்கும் மற்றும் அந்த சகாப்தத்தின் அனைத்து பெரும் ஜனநாயக புரட்சிகளுக்கும் எச்சரிக்கை மணியாக ஒலித்தது என்று மார்க்ஸ் பின்னர் குறிப்பெழுதினார்.

அமெரிக்க புரட்சியானது ஒரு முதலாளித்துவ ஜனநாயக புரட்சியாகும். அதுவோ அல்லது அதை முன்னெடுத்தவர்களோ அந்நாளின் சமூக நிலைமைகளைக் கடந்து வரவில்லை. அவ்விதத்தில், அந்த வரலாற்று சம்பவம் அதன் தலைச்சிறந்த ஆதரவாளர்களால் அமைக்கப்பட்ட தலைச்சிறந்த கருத்துக்களோடு உயிர் வாழ முடியவில்லை. இருந்தபோதினும், அமெரிக்க புரட்சியும்—மற்றும், குறிப்பாக, சுதந்திரப் பிரகடனமும்—அதற்குப் பின்னர் அமெரிக்க வரலாற்றில் வந்த ஒவ்வொரு முற்போக்கான அத்தியாயத்திலும் தங்கி இருந்தது. உண்மையில், “அனைத்து மக்களும் சமமாக சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறார்கிறார்கள் என்ற அந்த கருத்தைத் தான்" ஆப்ரகாம் லிங்கன் எண்பத்தி ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், உள்நாட்டு யுத்தத்தின் மத்தியில், அடிமைத்தனத்தின் காட்டுமிராண்டித்தனமான அமைப்புமுறையை ஒழிக்க, கெட்டிஸ்பேர்க் யுத்தகளத்தில் அவர் வழங்கிய புகழ்பெற்ற உரையின் போது குறிப்பிட்டார்.

இன்றைய அமெரிக்காவின் சமூக, அரசியல் மற்றும் கலாச்சார நிலையோ, ஜூலை 4ஆம் தேதியில் நினைவுகூரப்பட்டு கொண்டாட்டப்பட்ட அந்த கோட்பாடுகளை பரிகசிக்கிறது.

சமத்துவமின்மையோ அமெரிக்க வாழ்வின் முக்கிய கூறுபாடாக உள்ளது. ஏதேச்சதிகார கோட்பாடு மறுபிறப்பெடுத்துள்ளது. தற்போதைய ஆட்சியாளர்கள் வேண்டுமானால், மேதமைக்குரிய பட்டங்களையும், பதவிகளையும், தனிச்சலுகைகளுக்கான உத்தியோகபூர்வ பிரகடனங்களையும் மறுஸ்தாபிதம் செய்து கொள்வார்கள்—சந்தேகத்திற்கிடமின்றி அங்கே ஏற்கனவே அவ்வாறு செய்வதற்கான தந்திரங்களை சிலர் செய்து வருகிறார்கள்.

சமத்துவமின்மை எனும் புற்றுநோய் ஒவ்வொரு ஆளும் தேசிய ஸ்தாபகத்தையும் பீடித்துள்ளதுவெள்ளை மாளிகை, இதற்கு தலைமை கொடுக்கும் ஜனாதிபதி முற்றிலுமாக அவரது அரசியல் வாழ்வின் அடித்தளத்தில் பல கோடி மில்லியனராக மாறி உள்ளார்; காங்கிரஸ், இது பல கோடி மில்லியனர்களின் கூட்டத்தால் நிரம்பி உள்ளது; உச்ச நீதிமன்றம், இதில் இருக்கும் ஒன்பது நீதியரசர்களில் எட்டு பேர் பல கோடி மில்லியனர்களாக இருக்கிறார்கள். சுருக்கமாக கூறுவதானால் மத்திய அரசாங்கத்தின் மொத்த மூன்று பிரிவுகளும் தங்களைத்தாங்களே அமெரிக்க சமூகத்தின் மிகப் பணக்கார 1 சதவீதத்தினரின் பாகமாக கொண்டிருக்கும் தனிமனிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மேலும் அங்கே ஊடகங்களும் இருக்கின்றன, அதிலே அரசு மற்றும் பெருநிறுவன நிதியியல் மேற்தட்டின் நலன்களுக்குச் சேவை செய்யும் பிரச்சாரத்தை உபச்சாரம் செய்கின்றவர்களுக்கு ஆண்டுதோறும் அவர்களின் விசுவாசமான சேவைக்காக மில்லியன் கணக்கான டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகின்றன.

அமெரிக்க பிரபுத்துவம் பெரிதும் நிதியியல் மோசடி மூலமாக செல்வச் செழிப்பிற்கு வளர்ந்துள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், அது அதன் வெறிபிடித்த ஊகவணிகத்தின் மூலமாக ஒரு பூகோளமயப்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தூண்டிவிட்டது. நேற்று டோவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி அதன் 118 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக 17,000 புள்ளிகளைத் தாண்டி இருந்தது. நிதியியல் வணிகர்கள், பெடரல் சேர்மேன் ஜானெட் யெலனின் கருத்துக்களால் குதூகலித்தார்கள், அவர் புதனன்று சந்தைகளுக்குள் பணம் பாய்ச்சுவது தொடர்ந்து நீடிக்குமென அறிவித்திருந்தார். இந்த அதிகரிப்பு மீதான களிப்பு பரந்த பெரும்பான்மை மக்களின் சமூகச் சீரழிவு மற்றும் வீழ்ச்சின் மீதேறி வருகிறது. அமெரிக்க முன்னுதாரணத்தால் தூண்டுதல் பெற்றிருந்த 1789 பிரெஞ்சு புரட்சிக்கு முந்தைய நாட்களில் பிரபுத்துவம் குறித்து வர்ணிக்க, தலைச்சிறந்த டோம் பெய்ன் பயன்படுத்திய வார்த்தைகள் நினைவிற்கு வருகின்றன: “அவர்கள் தோகை இறகுகள் விழுகிறதே என்று பரிதாபப்படுகிறார்கள், ஆனால் செத்துக் கொண்டிருக்கும் பறவையை மறந்துவிடுகிறார்கள், என்றார்.

ஏதேச்சதிகார கோட்பாடு இப்போது அமெரிக்க கொள்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நிலவுகிறது. உலகளாவிய அளவில் அது சூறையாடுவதை மற்றும் ஆக்கிரமிப்பதன் அடிப்படையில் அமைந்த ஒரு குற்றகரமான வெளியுறவு கொள்கையான ஈவிரக்கமற்ற இராணுவவாதத்தில் வெளிப்பாட்டைக் காண்கிறது. அதிகளவில் பொறுப்பற்ற கைதுறப்புகளோடு அமெரிக்க ஆளும் வர்க்கம் அது விழி திறந்து பார்த்த இடங்களில் எல்லாம் பேரழிவுகளையும், குழப்பங்களையுமே விட்டுவைத்து, தொடர்ச்சியாக பல யுத்தங்களை நடத்தி உள்ளது. ஈராக்கிய படையெடுப்பின் பத்துக்கும் மேலான ஆண்டுகளுக்குப் பின்னர் அது மத்திய கிழக்கில் மிகவும் முன்னேறிய ஒரு சமூகங்களில் ஒன்றை ஒன்றுமில்லாததாக ஆக்கி இருப்பதோடு, அமெரிக்க துருப்புகளும், ஆளில்லா டிரோன்களும் மற்றும் இராணுவ போர் விமானங்களும் மீண்டுமொருமுறை அங்கே முன்னேறிச் செல்கின்றன—அதுவும் ஒபாமா நிர்வாகம் உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யா உடனும், தெற்கு பசிபிக்கின் எண்ணெய் வளமிக்க பிராந்தியங்களில் சீனா உடனும் யுத்தத்தைத் தூண்டிவிட்டு வருகின்ற நிலையில் இது நடக்கிறது.

சமூக சமத்துவமின்மையின் உயர்ந்த அளவுகள் ஜனநாயகத்திற்குப் பொருந்தாது. அது சுதந்திரப் பிரகடனத்திலிருந்து ஊற்றெடுத்து வந்த ஜனநாயக கோட்பாடுகள் மீதும் மற்றும் விசாரணைக்குட்படுத்துதல், பேச்சு மற்றும் பத்திரிகை சுதந்திரம், காரணமின்றி சோதனையிடல் மற்றும் கைப்பற்றுதலுக்கு எதிரான தடை, மதமும் அரசும் பிரிந்திருப்பது போன்ற உரிமைகள் சாசனத்தில் உள்ளடங்கி இருந்த ஜனநாயக கோட்பாடுகளின் மீதும் முன்னொருபோதும் இல்லாத அளவிலான தாக்குதலில் வெளிப்படுகிறது.

ஜனநாயக ஸ்தாபகங்களுக்குள் என்ன மிஞ்சியிருக்கிறதோ அவையும் ஒரு பிரமாண்ட இராணுவ-உளவுத்துறை-பொலிஸ் எந்திரத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளன. ஆளும் ஸ்தாபகத்திற்குள், மிகவும் அடிப்படையான ஜனநாயக கருத்துருக்கள் கூட இப்போது கிடையாது. அமெரிக்க பிரஜைகளை விசாரணையின்றி படுகொலை செய்யும் உரிமையை ஜனாதிபதி அறிவிக்கிறார், அதுமட்டுமின்றி அது அரசு எந்திரத்திற்குள் எந்தவொரு ஆழமான எதிர்ப்பையும் உருவாக்கவில்லை. சுமார் 2 மில்லியன் அமெரிக்கர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்று சமூக சமத்துவமின்மையின் பாரிய வளர்ச்சியே அதிகரித்துவரும் மக்கள் கவனத்தின் குவிமையமாக உள்ளது. அங்கே "ஏதாவது செய்ய" வேண்டுமென்ற வெற்று, சிரத்தையற்ற மற்றும் உண்மையற்ற அழைப்புகள் உள்ளன, அதேவேளையில் பணக்காரர்களில் சிலர் தொடுவானத்தைப் "புரட்டி போட வேண்டுமென" நரம்பு புடைக்க பேசுகிறார்கள். ஆனால் இந்த "ஏதாவது செய்ய வேண்டுமென்பது" ஒன்றும் செய்வதில்லை என்பதைக் குறிக்கிறது. சமூக சமத்துவமின்மையின் அனைத்து உத்தியோகபூர்வ விவாதங்களிலும், தோற்றப்பாட்டளவில் கூட சமத்துவமின்மைக்கான அடிப்படைக் காரணமான முதலாளித்துவம் குறித்து குறிப்பிடப்படுவதில்லை.

உண்மை என்னவென்றால் அமெரிக்காவில் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு மிகைமிஞ்சி திரண்டிருக்கும் செல்வ வளத்தை திரும்பி எடுக்க இப்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் எதையும் செய்யவும் முடியாது அல்லது செய்யப்படவும் முடியாது.

சமூக சமத்துவத்திற்கான போராட்டத்திற்கு இன்று, முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டுவதும், வங்கிகளையும் மற்றும் பெரிய பெருநிறுவனங்களையும், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ், பொது உடைமையின் அடிப்படையில் கொண்டு வர ஒரு சோசலிச அமைப்புமுறையை ஸ்தாபிப்பதும் அவசியமாகும். சமத்துவவாத கருத்துக்களை மற்றும் ஜூலை நான்காம் தேதியின் புரட்சிகர பாரம்பரியங்களை உண்மையாக உள்வாங்கியுள்ள சர்வதேச தொழிலாளர் வர்க்கமே இந்த கடமையை நிறைவேற்ற உள்ளது.