World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Former French president Nicolas Sarkozy arrested in corruption case

முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஊழல் வழக்கில் காவலில் வைக்கப்பட்டார்

By Alex Lantier
2 July 2014

Back to screen version

முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியை காவலில் வைத்தும், அவரை விசாரணைக்காக பாரீசிற்கு அருகிலுள்ள நாந்தேர் பொலிஸ் தலைமையகத்தில் 48 மணி நேரம் தடுத்து வைத்தும், பிரெஞ்சு நீதித்துறை நேற்று காலை எதிர்பாராத ஒரு நடவடிக்கையை எடுத்தது.

நேற்றைய நள்ளிரவில் சார்க்கோசியும் அவரது வழக்கறிஞர் தியேரி ஹெர்சோக்கும் சட்டவிரோத செல்வாக்கு துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் மீது குற்றப்பதிவு செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறு குறித்து விவாதிக்க நீதிபதிகளைச் சந்தித்தனர். சார்க்கோசி மீதான பல்வேறு விசாரணைகளின் உள்ளார்ந்த தகவல்களை பெற்றதற்கு உபகாரமாக, அவர்கள் பிரான்சின் தலைமை மேல் முறையீட்டு நீதிமன்றமான கஸ்சஷியோன் நீதிமன்ற (Court of Cassation) வழக்கறிஞரான கில்பேர் அஜிபேருக்கு மொனோக்கோவில் ஒரு அந்தஸ்து மிக்க பதவியைப் பெற உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறார்கள்.

விசாரணைகள் முடிந்த பின்னர், இன்று அதிகாலை, சார்க்கோசி, ஹெர்சோக் மற்றும் அஜிபேர் மீது நீதித்துறை விசாரணைகளை மீறியமை, ஊழலில் ஈடுபட்டமை மற்றும் செல்வாக்கை துஷ்பிரயோகம் செய்தமை ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குற்றப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

சார்க்கோசியின் மக்கள் இயக்கத்திற்கான யூனியனில் (UMP) ஊழல் மோசடிகள் மற்றும் கன்னைப் பூசல்கள் நிலவுகின்ற நிலையில், சார்க்கோசி கைது செய்யப்பட்டமை பிரெஞ்சு அரசு மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் அந்தஸ்திற்கு ஒரு பெருத்த அடியாக இருக்கிறது. அவருக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த ஜாக் சிராக், சட்டவிரோதமாக UMPக்கு நிதியுதவிகள் வழங்கியதற்காக 2011இல் குற்றவாளியாக காணப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு நன்நடத்தை தண்டனை விதிக்கப்பட்டார். பாசிச சர்வாதிகாரியும் நாஜி ஒத்துழைப்பாளருமான மார்ஷல் பிலிப் பெத்தான் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் 1945இல் தேசதுரோக குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டிருக்கும் முதல் பிரெஞ்சு அரசு தலைவர் இப்போது சார்க்கோசி ஆவார்.

சார்க்கோசி மீதான விசாரணைகள், பிரெஞ்சு அதிகாரிகள் கூட்டத்தின் உயர்மட்ட பதவிகளில் இருந்த ஊழலை மட்டும் மேலே கொண்டு வரவில்லை, மாறாக ஆளும் வர்க்கத்திற்குள் வெடித்துவரும் ஆழ்ந்த பிளவுகளையும் மேலெழுப்பி உள்ளன.

2012 ஜனாதிபதி தேர்தலில், சார்க்கோசி சோசலிஸ்ட் கட்சியின் (PS) பிரான்சுவா பிரான்சுவா ஹாலண்ட்டிடம் தோற்றதற்குப் பின்னரில் இருந்து, அவர் தொடர்ச்சியான விசாரணைகளை முகங்கொடுத்துள்ளார். 2007 ஜனாதிபதி போட்டியில் அவர் வெற்றி பெறுவதற்கு, 2011 லிபிய யுத்தத்தில் நேட்டோவினால் கொல்லப்பட்டவரான லிபிய கேர்னல் மௌம்மர் கடாபியிடம் இருந்தோ அல்லது பல கோடி பில்லியனர் லிலியான் பெத்தான்கூரிடம் இருந்தோ சார்க்கோசி சட்டவிரோதமாக நிதியுதவிகளைப் பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளும் அவற்றில் உள்ளடங்கும். கடந்த ஆண்டில் UMPக்குள் கன்னை பூசல்கள் தீவிரமடைந்திருந்த நிலையில், அவரது 2012 பிரச்சாரத்தின் போது செலவு செய்வதற்கான 22.5 மில்லியன் யூரோ சட்ட வரம்புக்கு கூடுதலாக செலவு செய்ததை மறைத்த மோசடி மீதான விரிவான குற்றச்சாட்டுக்களும் அப்போது அங்கே இருந்தன.

இந்த சூழலில், இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகும் முயற்சியை தொடங்குவதற்கு ஒரு படிக்கல்லாக UMPஇன் தலைவர் பதவியை மீண்டும் பெற அவர் முயன்றிருந்தார்.

இப்போதைய இந்த மோசடியானது, UMPக்கு உள்ளேயும் மற்றும் மிகவும் பரந்தளவில் அரசிற்குள்ளேயும், இந்த விசாரணைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டு தீவிரமடைந்து வரும் மோதல்களுக்கு இடையே எழுந்துள்ளது. பெத்தான்கூர் விவகாரத்தில் சார்க்கோசி முகங்கொடுத்து வந்த வழக்கில் கஸ்சஷியோன் நீதிமன்றத்தின் கருத்துக்கள் மீதான விரிவான தகவல்களை அவர்கள் பெற்றிருந்தார்கள் என்பதை ஜனவரி-பெப்ரவரி 2014இல் லிபிய விவகாரத்தை புலனாய்வு செய்து வந்த அதிகாரிகளால் வெளியிடப்பட்ட சார்க்கோசி மற்றும் ஹெர்சோக்கின் தொலைபேசி பதிவுகள் வெளிப்படுத்தி காட்டின. இந்த அடிப்படையில் தான் புலன்விசாரணையாளர்கள் அஜிபேர் மற்றும் ஒரு சக உயர்மட்ட நீதிபதி பாட்ரிக் சசூஸ்ட் உடனான தொடர்புகளைக் கண்டறிந்தனர்.

அதன் வலதுசாரி கொள்கைகளால் ஆழமாக மதிப்பிழந்து ஹாலண்ட் நிர்வாகம் பொறிந்து போயிருக்கும் நிலையில் மற்றும் நவ-பாசிசவாத தேசிய முன்னணி (FN) மேலெழுந்திருப்பதற்கு இடையே இந்த முரண்பாடுகள் பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஹாலண்ட் அவரே மறுதேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். FNஇன் 2017 ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படும் அக்கட்சியின் தலைவர் மரீன் லு பென்னுக்கு UMPஇன் 2017 ஜனாதிபதி வேட்பாளர் முக்கிய எதிர்ப்பாளராக இருப்பார் என்று, குறைந்தபட்சம் தற்போதைக்கு, தோன்றுகிறது.

சார்க்கோசி மீண்டும் அரசியல் வாழ்க்கைக்குத் திரும்புவதைத் தடுக்க அவர் மீதான விசாரணைகள் அரசியல்ரீதியாக தூண்டிவிடப்பட்ட முயற்சிகள் என்று நேற்று சில UMP நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்தனர். “எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, UMP தலைவர் ஆவதற்கு நிக்கோலா சார்க்கோசி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று குறிப்பிட்டு பதினைந்து நாட்களில் அங்கே ஒரு புதிய நீதித்துறை அத்தியாயம்அதுவும் இந்த சாத்தியப்பாடு எப்போதும் எழுப்பப்படுவதைப் போலவே வந்திருக்கிறது,” என்று UMP இன் அதிகாரி செபஸ்டியான் உயீக் தெரிவித்தார்.

எவ்வாறிருந்த போதினும் UMPஇன் உயர்மட்ட தலைமையில் உள்ள சார்க்கோசியின் விரோதிகள், அவர்களும் 2017 ஜனாதிபதி போட்டியில் களமிறங்க பரிசீலிக்கக் கூடும் என்ற நிலையில், நேற்று அவரை ஆதரிக்கவில்லை. முன்னாள் பிரதம மந்திரி பிரான்சுவா ஃபிய்யோன் அந்த விவகாரம் குறித்து ஒரு உத்தியோகபூர்வ அறிக்கை அளிக்கவும் கூட மறுத்துவிட்டார், ஆனால் Libération நாளிதழ் குறிப்பிடுகையில் "மோசடிகள் காரணமாக சார்க்கோசி இனி ஒருபோதும் திரும்பி வரப் போவதில்லை,” என்று ஃபிய்யோன் "தனிப்பட்ட விதத்தில்" அவர்களுக்கு கூறி இருந்ததாக எழுதியது.

சோசலிஸ்ட் கட்சி அதிகாரிகள் அவர்கள் பங்கிற்கு சார்க்கோசியின் விசாரணைக்கு ஆதரவளித்தனர். அரசு செய்தி தொடர்பாளர் ஸ்ரெபான் லு ஃபொல் iTélé க்கு கூறுகையில், “நீதித்துறை விசாரித்து வருகிறது, அது இறுதி வரைக்கும் வர வேண்டும்,” என்றார். அந்த குற்றச்சாட்டுக்கள் அரசியல்ரீதியாக ஊக்குவிக்கப்பட்டதாக கூறும் UMP இன் குற்றச்சாட்டுக்களை உதறி தள்ளி லு ஃபொல் கூறுகையில், “அவ்வாறு கூறுபவர்கள் விடயங்கள் வேறொங்கோ நடந்து வருவது போன்ற பிம்பத்தை அளிக்க விரும்புகிறார்கள்,” என்றார்.

சார்க்கோசி 2017இல் போட்டியிட முடியாது என்பதை அந்த விவகாரங்கள் அர்த்தப்படுத்துவதாக மரீன் லு பென் குறிப்பிட்டார்: “திரு. சார்க்கோசி முற்றிலுமாக நம்பவியலாத அளவிற்கு பல மோசடி குற்றச்சாட்டுக்களை முகங்கொடுத்துள்ளார். இது அவற்றில் ஒன்று தான், மேலும் இது அனேகமாக மிகவும் தீவிரமானது இல்லை. இவை அனைத்தும் சார்க்கோசி அரசியல் வாழ்விற்கு, குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் போது, திரும்புவதற்கான எந்தவொரு திட்டத்தையும் முற்றிலும் மதிப்பிழக்க செய்ய பங்களிப்பு செய்கின்றன,” என்றார்.

சார்க்கோசி மீதான கைது நடவடிக்கை மற்றும் UMPஐ அதிர செய்து வரும் ஊழல்களில் இருந்து என்ன எழுகிறதென்றால் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் திவால்நிலைமையும், பிரான்சில் வர்க்க ஆட்சியின் ஒரு நெருக்கடியும் ஆகும். பிரான்சின் முதலாளித்துவ "இடது" கட்சி அரசாங்கம் மதிப்பிழந்திருக்கின்ற நிலையில், அதன் பாரம்பரிய வலதுசாரி எதிர்பலமான UMP அதிலிருந்து ஆதாயமடைய இலாயகற்று இருக்கிறது என்பதோடு, அதற்கு மாறாக இன்னும் கூடுதலாக அது ஊழல் மற்றும் கன்னை மோதல்களின் குழப்பத்திற்குள் சரிந்து வருகிறது. புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) போன்ற சோசலிஸ்ட் கட்சிக்கு ஆதரவான போலி-இடது கட்சிகள் ஹாலண்ட்டிற்கு எதிராக இடது மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களில் இருந்து வரும் எதிர்ப்பை ஒடுக்க வேலை செய்து வருகின்ற நிலையில், தேசிய முன்னணியும் மற்றும் மரீன் லு பென்னும் பிரதானமாக ஆதாயமடைபவர்களாக உள்ளனர்.

சார்க்கோசியும், அவரது பரிவாரமும் தீவிர குற்றங்களைச் செய்துள்ளன என்பதை நம்ப அங்கே அனைத்து காரணங்களும் இருக்கின்ற போதினும், சார்க்கோசி மீதான குற்றப்பதிவு குறித்து பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு கன்னைகள் எதற்காக சண்டையிட்டு வருகின்றன என்பது நிதி ஊழல்கள் மற்றும் செல்வாக்கு துஷ்பிரயோகம் போன்ற பிரச்சாரத்திற்கு அப்பாற்பட்டு அரசு விவகாரங்களாக இருக்கின்றன. பிரான்ஸ் ஒரு நவ-பாசிச ஜனாதிபதியைக் கொண்டிருக்க வேண்டுமா என்பது போன்ற கேள்விகளை தீர்மானிக்கக் கூடிய விதத்தில், 2017 தேர்தல்களை வடிவமைப்பதன் மீது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நிறைய யுத்தங்களை தொடங்கியும் மற்றும் சமூக வெட்டுக்களில் சார்க்கோசியை விட இன்னும் அதிகமாக பத்து பில்லியன் கணக்கான யூரோக்களைத் திணித்தும் சோசலிஸ்ட் கட்சி அதி வலதிற்கு திரும்பி இருகின்ற நிலையில், UMP குறிப்பாக அதனைஅதுவே ஒரு குழப்பநிலையில் காண்கிறது. நடைமுறைரீதியில் FNஇல் இருந்து வேறுபாடில்லாமல் மாறிவரும் சோசலிஸ்ட் கட்சியை, வலதிலிருந்து எதிர்க்க இலாயகற்று, UMP ஐ எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் ஆழமாக பிளவுபட்டுள்ளது.

கியோம் பெல்டியேரின் Strong Right போக்குகள் போன்ற சில அணிகள், UMP FNஇன் போக்கிற்கு ஏற்றாற் போல் வடிவமைக்க அழுத்தம் அளித்து வருகின்றன. 2012இன் நிதி ஊழல் பிரச்சாரத்தின் மீது ஜோன் பிரான்சுவா கொப்பே பதவி நீக்கப்பட்ட பின்னர் UMP தலைமையைத் தற்காலிகமாக அலைன் ஜூப்பே உடன் சேர்ந்து கூட்டாக எடுத்துக் கொண்ட ஃபிய்யோன் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி ஜோன் பியர் ரஃபாரன் போன்றவர்கள், ஜனநாயகவாதிகள் மற்றும் சுயேட்சைகளின் ஐக்கியம் (UDI) அல்லது ஜனநாயக இயக்கம் (MoDem) போன்ற சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக உள்ள வலதுசாரி கட்சிகளோடு செல்வதற்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

இது UMPக்குள் கடுமையான உள்மோதலுக்கு இட்டு சென்றுள்ளது. கடந்த மாதம், பெல்டியேர் மற்றும் லோரோன்ட் வோக்கியே மற்றும் சார்க்கோசி நிர்வாகத்தின் இரண்டு முன்னாள் மூத்த அதிகாரிகளான ஹென்றி கேய்னோ மற்றும் ரஷீடா டாட்டி ஆகியோர் UDI மற்றும் MoDem உடன் நெருக்கமாக உறவுகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை கண்டித்து ஒரு பகிரங்க முறையீடு வெளியிட்டனர். “எங்களுடைய யோசனைகளை பிரதிபலிப்பதற்கு முன்னதாகவே, MoDem மற்றும் UDI உடன் இணைவதற்கு சிலரால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் பாதையை நாங்கள் எதிர்க்கிறோம். அது செல்லுபடியற்ற ஒன்றுக்குள், ஒரு வகையான சோசலிச தீவிரதன்மையை நோக்கி பீதியோடு பாய்வதாகும், அதில் நாம் நமது கருத்தியல்களைக் காட்டிக் கொடுப்பதை நோக்கி இறுதிப் படியை எடுத்து வைக்கிறோம்,” என்று வோக்கியே வாதிட்டார்.

உண்மையில், ஆளும் மேற்தட்டு கூர்மையாக வலதை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில், PS, UMP மற்றும் FNக்கு இடையிலான கொள்கை வேறுபாடுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. சார்க்கோசி மீதான குற்றப்பதிவானது, பெருந்திரளான உழைக்கும் மக்களிடமிருந்து தம்மை முற்றிலும் விடுவித்துக்கொண்ட ஒரு பிற்போக்குத்தனமான அரசியல் மேற்தட்டுக்குள் இன்னும் மோசமான வன்முறை உட்பூசல்களுக்கே களம் அமைக்கிறது.