World Socialist Web Site www.wsws.org |
State of the Union: A bankrupt ruling class talking to itself ஜனாதிபதியின் காங்கிரஸ் உரை: ஒரு திவாலான ஆளும் வர்க்கம் தனக்காக பேசுகிறது
Bill
Van Auken ஜனாதிபதி பராக் ஒபாமாவின் காங்கிரஸ் உரை மோசடி வாதங்கள் மற்றும் வாக்குறுதிகளோடு நிரம்பிய ஒரு எரிச்சலூட்டும் பிரச்சார உரையாக இருந்தது. அதை எவருமே, அமெரிக்க பெடரல் அரசிற்குள்ளே இருந்த அவரது பார்வையாளர்களில் குறைந்தபட்ச பார்வையாளர்கள் கூட, சிறியளவிற்கு கூட நம்ப மாட்டார்கள். ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் இந்த உரை நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே ஓர் இறுகிப்போன சம்பிரதாயமாக, தேசிய சக்திகள் அணிதிரளும் ஒருவித நிகழ்வாக மாறி போயுள்ளது. அதில் அரிதாக தான் சமூக மற்றும் அரசியல் எதார்த்தம் ஊடுருவுகிறது. மில்லியனர்களாக விளங்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பெருவணிகங்களின் பேணி-வளர்க்கப்பட்ட பிரதிநிதிகளால் நிரம்பி இருந்த ஒரு சபையில் செவ்வாய்கிழமை ஒபாமா ஆற்றிய உரையிலிருந்து ஒருவர், ஜனாதிபதியை முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவை ஆளும் நிதியியல் பிரபுத்துவத்தின் முதன்மை பிரதிநிதியாக உணர்ந்திருப்பார். அது மேலும் மேலும் கூறியதையே கூறும் ஓர் அரசியல் பேரவை கூட்டமாக மாறி உள்ளது. அதில் ஆளும் ஸ்தாபகம், மேலதிகமாக உள்ள பெரும்பான்மை மக்களான நாட்டின் உழைக்கும் மக்களின் தேவைகள் மற்றும் கவலைகளை முற்றிலுமாக அலட்சியப்படுத்திவிட்டு, அது தன்னைத்தானே புகழ்பாடி கொண்டு, தனக்காகவே பேசுகிறது. ஒபாமா அந்த உரையை சமூக சமத்துவமின்மைக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்க பயன்படுத்துவார் அல்லது, வாஷிங்டன் போஸ்ட் வரிகளில் குறிப்பிடுவதானால், “ஒரு மக்கள்சார் பொருளாதார நிகழ்ச்சிநிரலுக்காக குடியரசு கட்சியினருக்கு எதிரான ஒரு நீடித்த தாக்குதலைத்" தொடங்குவார் என்ற வீரிய முன் அனுமானங்களோடு, உரைக்கு முந்தைய ஏற்பாடுகளில், ஊடகங்கள் எதிர்பார்ப்புகளை உருவாக்க வேலை செய்து வந்தன. அதற்கடுத்த நாள், “ஒய்யார வீடு கட்டி, உடைத்ததாம் ஓர் எலி," என்ற ஒரு பழைய பழமொழி தான் நினைவுக்கு வந்தது. சில தகவல்களின்படி, ஒபாமாவின் உரையாசிரியர்கள் சமூக சமத்துவமின்மை மீதான குறிப்புகளில் சுரத்தைக் குறைத்து வைக்குமாறு மற்றும் "வாய்ப்புகள்" மீதான கருத்துக்களை — விடாமுயற்சி இருந்தால் யாரும் ஒரு மில்லியனராக முடியுமென்ற ஒரு பழைய ஹொராடொ அல்ஜெரின் பொன்மொழியை — வலியுறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இது, "ஒருசிலர் மற்றவர்களை விட அதிகமாக சம்பாதிப்பார்கள் என்பது அமெரிக்கர்களுக்கு தெரியும், அப்படியானவர்களை தங்களின் சிறந்த முயற்சியால் பெரும் வெற்றி பெறுகிறார்களில் இருந்து நாம் பிரித்து பார்ப்பதில்லை,” என்ற ஒரு ஆறுதலை வோல் ஸ்ட்ரீட் குற்றவாளிகளுக்கு வழங்குவதோடு இணைந்திருந்தது. புதனன்று, நியூ யோர்க் டைம்ஸ், "ஜனாதிபதியின் நலிந்த உரை” (The Diminished State of the Union) என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை பிரசுரித்தது மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டின் தலையங்கம் "ஒபாமாவின் மௌன அழைப்பு" (“Obama's muted call”) என்ற தலைப்பில் இருந்தது. “நம்பிக்கை தரும் துணிச்சல்" நிறைந்த நாட்கள் நீண்ட காலங்களுக்கு முன்னரே போய்விட்டன என்பது அங்கே மறுக்கப்படவில்லை. இந்த பிரதிபலிப்புக்கு விதிவிலக்காக இருந்தவைகளில் ஒன்றாக, உத்தியோகபூர்வ தொழிற்சங்க இயந்திரம் இருந்தது. ஜனாதிபதியின் காங்கிரஸ் உரை நிகழ்வு முடிந்ததும் AFL-CIO தலைவர் ரிச்சார்ட் ட்ரூம்கா ட்வீட்டரில் பின்வருமாறு கருத்தைப் பதிவு செய்தார்: “இன்று வரையிலான #SOTU உரைகளில் தலைசிறந்தது @பராக்ஒபாமாவினுடையது. மத்திய தட்டு வர்க்கத்தை தூக்கி நிறுத்துவதற்கான சரியான அனைத்து புள்ளிகளும் இருந்தன, ஆனால் கூட்டு பேரம் என்ற ஒன்றைத் தவிர.” செவ்வாயன்று இரவு ட்ரூம்கா அந்த சபையில் இடம் பெற்றிருந்தார். அவரது மனைவி மெச்செல்லின் "விருந்தினர்களில்" (இவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் போலி வனப்புரைகளுக்கு அரசியல் முட்டுக்களாக பயன்பட்டார்கள்) ஒருவரான ஒரு பிட்ஜா அங்காடி உரிமையாளரை, அவரது பணியாளருக்கு அவர் குறைபட்ச கூலியை மணிக்கு $10 என உயர்த்தியதற்காக ஒபாமா வாழ்த்திய போது, ட்ரூம்கா மகிழ்ச்சி பொங்க இருந்தது தேசிய தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. ட்ரூம்கா இதை வியாபாரத்திற்கு நல்லதொரு விடயமாக பார்க்கிறார் என்பதில் ஐயமில்லை, பணியாளர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் பணத்தை மீண்டும் பழைய குறைந்தபட்ச அளவிற்கே திரும்ப கொண்டு வரும் விதத்தில், இளகிய மனமுடைய தொழிலாளர்களிடம் இருந்து தொழிற்சங்க சந்தா வசூலிக்க அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு வாய்ப்பின் மீது எச்சில் ஊறியிருக்கும். புதிய அல்லது புதுப்பிக்கப்படும் ஒப்பந்தங்களின் கீழ் பெடரல் ஒப்பந்ததாரர்கள், பணியாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச கூலியாக 10 டாலர்கள் — இது நடப்பில் இருக்கும் ஒப்பந்தங்களுக்கு பொருந்தாது — வழங்க வேண்டுமென்ற ஒபாமாவின் நகர்வு, அவரது மிக துணிச்சலான நடவடிக்கையாக உயர்த்திக்காட்டப்பட்டது. ஏறத்தாழ 250,000 தொழிலாளர்களிடையே, அதேவேளையில் மற்றவர்களை ஏழைகளாகவே இருக்க விட்டு, "வேலையிலிருக்கும் ஏழைகள்" என்று பகுக்கப்பட்ட சுமார் 50 மில்லியன் அமெரிக்கர்களில் ஒரு சிறிய பிரிவினரிடையே தாக்கத்தைக் கொண்டு வரும் என்று அனுமானிக்கப்பட்ட இந்த பரிந்துரையானது, சமத்துவமின்மை, வறுமை மற்றும் பாரிய வேலைவாய்ப்பின்மையை தீர்க்க ஆளும் வர்க்கத்தின் எந்த பிரிவிற்கும் எவ்வித நோக்கமும் இல்லை என்பதற்கு மிக தெளிவான ஆதாரமாக உள்ளது. எதார்த்தம் என்னவென்றால், மேலே உள்ள 1 சதவீதத்தினரான அமெரிக்காவின் தலைமை செயலதிகாரிகளின் சம்பளம் உயர்ந்த வேகத்திற்கு குறைந்தபட்ச கூலி உயர்த்தப்பட்டால், அப்போது அமெரிக்காவில் வறியளவில் சம்பளம் பெறும் தொழிலாளருக்கு ஒரு மணி நேரத்திற்கு 33 டாலரை விட அதிகமாக கிடைக்கும். அதுவே உற்பத்தி உயர்வின் வேகத்திற்கு அது வைக்கப்பட்டால், அது 22 டாலரை விட கூடுதலாக இருக்கும். 2014 “அமெரிக்காவிற்கு ஒரு பிரகாசமான ஆண்டாக" இருக்கும் என்ற வலியுறுத்தலோடு, ஜனாதிபதியின் உரை "பலமாக" இருப்பதாக அந்த உரையில் கடமைக்கென குறிப்புகளும் சேர்க்கப்பட்டிருந்தன. யாரை அவர் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறார்? ஒபாமாவால் காட்டப்படும் போலிக் குறிப்புகளுக்கு இடையிலும், ஒரு கணித்துக்கணிப்பு மாற்றி ஒரு கருத்துக்கணிப்பு, சுமார் மூன்றில் இரண்டு மடங்கு மக்கள் பொருளாதாரம் வலிமையாக இருக்கிறதோ எப்படியிருக்கிறதோ, ஆனால் தங்களின் வாழ்க்கை வீழ்ச்சி அடைந்துவருகிறதென நம்புகின்றனர். கடந்த மாத முடிவில் நடத்தப்பட்ட ஒரு கணித்துக்கணிப்பு மக்களில் பாதிபேர் தங்களின் செலவுகளைக் குறைக்க கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாக, மற்றும் முழுமையாக 36 சதவீதத்தினர் உணவு மற்றும் மருத்துவ செலவுகளைக் குறைத்து வருவதாக கண்டறிந்தது. ஒபாமா அவரது உரையில் சேர்த்திருந்த ஒருசில உண்மையான செய்திகளில் ஒன்றாக இருந்ததென்னவென்றால், “மேல்மட்டத்தில் உள்ளவர்கள் பெரிதாக சிறப்பாக செயல்படவில்லை என்றபோதினும், பெருநிறுவன இலாபங்களும் பங்கு விலைகளும் அரிதான விதத்தில் உயர்ந்துள்ளன" என்ற கண்டுபிடிப்பாகும். அதே மூச்சில், கூலிகள் மந்தப்பட்டிருப்பதை, சமத்துவமின்மை ஆழமடைந்து வருவதை மற்றும் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து கொண்டிருப்பதை குறிப்பிட நிர்பந்திக்கப்பட்டதாக ஜனாதிபதி உணர்ந்தார். அது தற்போதைய நிலைமைகள் நிலையானவை அல்ல என்பதை, விரைவிலேயோ அல்லது பின்னரோ, அது சமூக எழுச்சிகளை உயர்த்தும் என்ற ஆளும் ஸ்தாபகத்திற்குள் அதிகரித்துவரும் அமைதியின்மையின் ஒரு வெளிப்பாடாக உள்ளது. உலகின் 85 மிகப் பெரிய பணக்காரர்கள் 3.5 பில்லியன் ஏழைகளை விட பெரும் செல்வத்தைக் குவித்துள்ளனர் என்று குறிப்பிட்டு கடந்த வாரம் தான் ஆக்ஸ்பாம் அறக்கட்டளை ஓர் அறிக்கை வெளியிட்டது. வளர்ந்த அனைத்து முதலாளித்துவ நாடுகளிலேயே மிகவும் சமமற்று இருக்கும் அமெரிக்காவில், 20 மிக பெரிய செல்வந்தர்கள் 150 மில்லியன் ஏழைகளுக்கு இணையான செல்வத்தைக் கொண்டுள்ளனர். ஒபாமாவின் பதவிக்காலத்தில், மேலே உள்ள 1 சதவீதத்தினர் வருமாய் உயர்வின் 95 சதவீதத்தை ஏகபோகமாக்கி உள்ளது, அதேவேளையில் கீழே உள்ள 90 சதவீத மக்கள் வெறுமனே மேலும் கூடுதலாக வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சமத்துவமின்மையின் இந்த அதிர்ச்சியூட்டும் அளவுகளை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியாக, ஒபாமாவின் உரையில் ஒட்டுமொத்தமாக திரட்டப்பட்டிருந்த சிறிய-முயற்சிகள் மற்றும் வெற்று வாக்குறுதிகள் தாறுமாறாக குவிக்கப்பட்டிருந்ததாக சித்தரிக்கப்பட்டிருந்தது ஏளனத்திற்குரியதாகும். முன்னொருபோதும் இல்லாத சமூக சமத்துவமின்மையின் அரசியல் விளைவுகளைக் கையாள ஒரு சர்வாதிகார பொலிஸ்-அரசு இயந்திரத்தைக் கட்டியமைப்பதன் மூலமாக மிக பிரத்யேக தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியான தேசிய பாதுகாப்பு முகமையின் பாரிய உள்நாட்டு உளவுவேலைகள் எட்வார்ட் ஸ்னோவ்டெனின் வெளியீடுகளால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. கீழே இருந்து வரும் ஒரு சவாலை எதிர்கொள்ள தயாரிப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. பகுப்பாய்வின் இறுதியாக, ஒபாமாவின் ஐந்தாவது காங்கிரஸ் உரை அவரது ஜனாதிபதி பதவிகாலத்தை, அரசியல்ரீதியாக களைத்து போய் நிற்கும் ஒரு சக்தியாக அம்பலப்படுத்தி உள்ளது. முதலாவதாக, வரலாற்றில் மிகப் பெரிய மோசடியை, வோல் ஸ்ட்ரீட் பிணையெடுப்பை நடத்த, அவரது மாற்றத்திற்கான போலி வாக்குறுதிகளின் மீதிருந்த பிரமையைப் பயன்படுத்திய ஒரு ஜனாதிபதியாக அவர் நினைவு கூரப்படுவார். அந்த பிணையெடுப்பு பெரும்பான்மை மக்களின் சமூக செல்வ வளத்திலிருந்து ட்ரில்லியன் கணக்கான டாலர்களை வங்கிகளுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் கைமாற்றி உள்ளது. இரண்டாவதாக, ஒரு பொலிஸ் அரசை கட்டியதும் மற்றும் மிக அடிப்படை ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை அழித்ததும் அவரது மரபாக இருக்கும். 2014 இடைத்தேர்தல் ஓட்டத்திற்கான இந்த இறுதி நாட்களில், தன்னைத்தானே மற்றும் ஜனநாயக கட்சியை ஏழைகளின் பாதுகாவலர்களாக மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக தர்மயுத்தம் நடத்துபவர்களாக சித்தரிக்க முயலும் ஒபாமாவின் முயற்சி, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் ஜனநாயக கட்சியின் தலைவிதியோடு யாருடைய தனிப்பட்ட செல்வசெழிப்பு பிணைந்துள்ளதோ அந்த போலி-இடது கூறுகளை உள்ளடக்கிய ஒரு மெல்லிய மற்றும் தனிச்சலுகைப் படைத்த அடுக்கால் மட்டும் தான் அரவணைக்கப்படும். இன்றைக்கு கொடிய அளவில் வளர்ந்திருக்கும் சமூக சமத்துவமின்மை, முதலாளித்துவ இலாப அமைப்புமுறையோடு மற்றும் அது எதற்கு உயர்வளித்துள்ளதோ அந்த நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியோடு பிரிக்கவியலாதபடிக்கு பிணைந்துள்ளது. அதற்கெதிரான போராட்டம் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே நடத்தப்பட முடியும். வோல் ஸ்ட்ரீட் மற்றும் பெருநிறுவன செல்வந்தர்களின் அழுகிப் போயுள்ள செல்வசெழிப்பைப் பறிமுதல் செய்வதை மற்றும் ஒருசிலரின் இலாப நலன்களுக்காக அல்லாமல் பரந்த பெரும்பான்மையினரின் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய சோசலிச அடித்தளத்தில் சமூகத்தை ஒழுங்கமைப்பதை நோக்கமாக கொண்ட ஒரு தாக்குதலுக்கு தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீனமான பலத்தை ஒன்றுதிரட்ட வேண்டும். |
|