World Socialist Web Site www.wsws.org |
Pro-Western Ukrainian opposition stokes up civil war மேற்கத்தைய-சார்பு உக்ரைனிய எதிர்க்கட்சி உள்நாட்டுப் போரைத் தூண்டுகிறதுBy Stefan Steinberg மேற்கத்தைய-சார்பு உக்ரைனின் வலதுசாரி எதிர்த்தரப்பு சக்திகள் நாட்டை முழு உள்நாட்டுப்போருக்கு ஒருபடி நெருக்கமாக நேற்று தள்ளியுள்ளனர். மேலும் அது ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சினால் முன்வைக்கப்பட்ட சலுகைகளை நிராகரித்து அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்த எதிர்த்தரப்பு, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கூறும் சிக்கனக் கொள்கைகளை வலியுறுத்த உறுதி கொண்ட ஒரு ஒரு தீவிர வலதுசாரி நிர்வாகத்தை நிறுவும் நோக்கத்தை கொண்டுள்ளது. கீயேவில் எதிர்ப்பாளர்கள் நேற்று மீண்டும் கலகப்பிரிவுப் பொலிசாருடன் மோதியதுடன், எதிர்ப்புக்களின் மையமாகவுள்ள சுதந்திர சதுக்கத்திற்கு அண்மையிலுள்ள ஒரு கலாச்சார மண்டபத்தையும், பாதுகாப்புப் படையினருடன் ஒரு கடுமையான போருக்குப் பின் ஆக்கிரமித்தனர். எதிர்ப்பாளர்கள் மத்திய கீவில் உள்ள கீயேவ் நகரவை அரங்கு, தொழிற்சங்கங்கள் கட்டிடம், அக்டோபர் அரண்மனை, உக்ரைனா விடுதி, விவசாய அமைச்சரகம் மற்றும் உக்ரைனிய இல்லம் ஆகிய குறைந்தப்பட்சம் 6 கட்டிடங்களை முழு அல்லது பகுதிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். சனிக்கிழமை அன்று ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் தான் பல சலுகைகளை கொடுக்கத் தயார் என்று பலமாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அதிகரிக்கும் அடக்குமுறை மற்றும் ஒரு ஜனநாயக விரோத ஆர்ப்பாட்ட-எதிர் சட்டத்தை இயற்றியபின் அறிவித்தார். எதிர்த்தரப்பின் இரு தலைவர்களான ஆர்சேனி யாட்சென்யுக் மற்றும் விட்டாலி கிளிட்ஷ்கோவை பிரதம மந்திரி, துணைப் பிரதம மந்திரி என முறையே அறிவிப்பதாகவும் யானுகோவிச் முன்மொழிந்தார். யாட்சென்யுக் தாய்நாடு (Batkivshchyna) கட்சியின் ஒரு தலைவராவார். இது சிறையில் இருக்கும் தன்னலக் குழுத் தலைவர் ஜூலியா திமோஷெங்கோவினால் தலைமை தாங்கப்படுகின்றது. ஒரு முன்னாள் உக்ரைன் தேசிய வங்கியின் தலைவரும், முந்தைய ஜனாதிபதி விக்டர் யுஷ்செங்கோவின் கீழ் வெளியுறவு மந்திரியாகவும் இருந்த இவர் ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நாணயமும் கோரும் சிக்கனக் கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான உறுதியான ஆதரவாளராவார். முன்னாள் குத்துச்சண்டை வீரர் விட்டாலி கிளிட்ஷ்கோ உக்ரைனிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் ஆவார். இது ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் அதன் சிந்தனைக்குழு கொன்ராட் அடிநோவர் அறக்கட்டளையினால் தோற்றுவிக்கப்பட்டது. இந்த வாரம், கிளிட்ஷ்கோ எதிர்த்தரப்புக் கூட்டணியில் மூன்றாம் முக்கிய கட்சியாக இருக்கும் நவ-பாசிச ஸ்வோபோடோவுடன் ஒத்துழைப்பை தீவிரமாக பாதுகாத்தார். இது தீவிர தேசியவாதி ஓலேக் தியானிபொக்கின் தலைமையில் உள்ளது. இந்த ஆதரவை அவர் கார்டியன் செய்தித்தாளுக்குக் கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். சனிக்கிழமை மாலை, கிளிட்ஷ்கோ கீயேவின் மத்திய சுதந்திரச் சதுக்கத்தில் கூடிய கூட்டம் ஒன்றில் எதிர்த்தரப்புக் கூட்டணிக் கட்சிகள் அரசாங்கத்திடம் இருந்து வந்த சலுகைகளை நிராகரித்துவிட்டன என்றார். ஜனாதிபதி விக்கடர் யானுகோவிச் பதவியில் இருந்து அகலும் வரை ஆர்ப்பாட்டங்கள் தொடர வேண்டும் என்றும் மக்களிடம் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே கடந்த புதன் அன்று கிளிட்ஷ்கோ யானுகோவிச் அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்களை விரிவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். எதிர்ப்பாளர்கள் உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளைக் கொலை செய்ய முயலலாம் என்றும் அடையாளம் காட்டியுள்ளார். இவர் செய்த ட்வீட் செய்தியில்: “விக்டர் யானுகோவிச் அவர்களே, சீஸெஸ்கோ, கடாபி சென்ற பாதையில் செல்லாதீர்கள்” என எழுதினார். இது ருமேனிய ஸ்ராலினிச சர்வாதிகாரி நிக்கோலாய் சீஸெஸ்கோ 1989ல் ருமேனியாவில் முதலாளித்துவ மீட்பின் போது கொல்லப்பட்தும் மற்றும் லிபிய சர்வாதிகாரி 2011ல் லிபியாவில் நேட்டோ போர் இறுதியில் கொல்லப்பட்டது பற்றிய குறிப்பு ஆகும். சனிக்கிழமை அவர் ஆட்சிமாற்றத்திற்கு விடுத்த புதிய அழைப்பு நவ-பாசிச துணை இராணுவ அமைப்புக்கள் கீயேவிலும் நாடு முழுவதும் கடுமையான வன்முறையில் பங்கு கொண்டதற்குப்பின் வெளிவந்துள்ளன. அரசாங்க எதிர்ப்பாளர்கள் குறைந்தபட்சம் நாட்டில் ஒன்பது பிராந்தியங்களில் உள்ளூர் அதிகாரக் கட்டிடங்களை ஆக்கிரமித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் தலைநகருக்கு 200 கி.மி. தென்மேற்கே உள்ள வின்யிட்சியா நகரத்தில் ஒரு நகரசபை கட்டிடத்தை முற்றுகையிட்டு நுழைந்தனர். இதேபோன்ற முயற்சிகள் சனிக்கிழமை கீயேவிற்கு கிழக்கில் போல்டவாவிலும் மற்றும் பெலாருஸ் எல்லைக்கு அருகே வடக்கில் செர்னிகோவில் மேற்கொள்ளப்பட்டன. மேற்கு நகரமான லெவீவில் தீவிரவாத தேசியவாத சக்திகளின் மரபார்ந்த வலுவான கோட்டையில் எதிர்ப்பாளர்கள் கடந்த வாரத்தில் இருந்து உள்ளூர் அரசாங்க அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ளனர். Channel 4 News தகவல்படி, “சுயாட்சி தேசியவாதிகளை” கொண்ட வலது பிரிவுக் குழு (Right Sector group) தீவிர வலதுசாரி கால்பந்து குண்டர்குழுக்களை அணிதிரட்டி இருப்பதாகவும், இவர்களே பொலிசுடன் மோதலில் முதல் வரிசையில் இருப்பவர்கள் என குறிப்பிட்டது. கிட்டத்தட்ட 500 வலதுபிரிவு ஆயுததாரிகள் எதிர்ப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட அரசாங்க கட்டிடங்களுள் இருப்பதாக கூறப்படுகின்றது. ஒரு உக்ரைனிய தகவல் ஒன்று Channel 4 News இடம் வலது பிரிவு தெருக்களில் மிக வன்முறைமிக்க சக்தியாக உள்ளது என்றார். “இவர்கள் ஸ்வோபோடாவில் இருந்து பிரிந்திருந்தாலும், பல நடவடிக்கையாளர்கள் மூலம் அதனுடன் பல பிணைப்புக்கள் கொண்டிருந்தாலும், எந்தக் குழுவினாலும் கட்டுப்படுத்தப்படவில்லை.... அவர்கள்தான் பெற்றோல் குண்டுகளை பொலிசாரை கொல்வதற்கு எறிந்ததுடன், சுதந்திர சதுக்கத்தில் மிக வன்முறைமிக்க பிரிவினருமாவர்.” உக்ரைன் நாட்டுப்பற்றுக் குழுவில் (Patriot of Ukraine group) இருந்து துணைப்படையினரும் ஆர்ப்பாட்டங்களில் முக்கியமாக உள்ளனர். இது ஸ்வோபோடாவின் முன்னாள் பாராளுமன்றப் பிரிவு ஆகும். இதன் குண்டர்கள் சமீபத்திய எதிப்புக்களில் உள்ள புகைப்படங்களில் காணப்படுவதுடன், சங்கிலிகளையும் செங்கல்களையும் ஆயுதமாக கொண்டுள்ளதுடன், தங்கள் கேடயங்களில் பாசிச அடையாளங்களையும் பதித்துவைத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் முக்கிய பிரதிநிதிகளும் உக்ரேனிய எதிர்ப்புக்களில் நேரடியாக தலையிட்டிருப்பது நாட்டை இரண்டாகப் பிரித்து உள்நாட்டுப் போரைத்தூண்டும் ஆபத்தை அச்சுறுத்துகின்றன. உயர்மட்ட அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் அமெரிக்க செனட்டர் ஜோன் மெக்கெயின், ஜேர்மனிய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் எல்மர் பிரோக் ஆகியோர் உக்ரைன் எதிர்ப்பாளர்களைச் சந்தித்து அரசாங்கத்திற்கு எதிரான அவர்களுடைய பிரச்சாரத்திற்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர். தேசியவாத, வெளிப்படையான பாசிச சக்திகள் மேற்கு உக்ரைனில் தாக்குதலை நடத்தியுள்ளபோது, யானுகோவிச்சின் ஆதரவாளர்கள் ஜனாதிபதியின் கிழக்கு அதிகாரத்தளமான டோனெட்ஸ் துறைமுக நகரங்கள் பலவற்றில் தெருக்களுக்கு வந்துள்ளனர். விரிவாகும் மேற்கத்தைய ஆதரவுடைய ஆர்ப்பாட்டங்கள் யானுகோவிச்சிற்கு முக்கிய ஆதரவுகொடுக்கும் ரஷ்யாவுடன் நேரடி மோதலை தூண்டக்கூடும். இது இப்பிராந்தியத்திற்கும் உலகிற்கும் இது கணிப்பிடமுடியாத விளைவுகளை உருவாக்கும். ஆயினும்கூட, மேற்கத்தைய அதிகாரிகளும் செய்தி ஊடகமும் எவ்வித கவனமுமின்றி தொடர்ந்து மோதலை விரிவாக்க அழுத்தம் கொடுக்கின்றன. புதன் அன்று ஒரு தலையங்கத்தில் நியூயோர்க் டைம்ஸ் கடந்த வாரம் அமெரிக்க வெளிவிவகாரத்துறை முக்கிய உக்ரைனிய அரசியல்வாதிகளுக்கு எதிராக அறிவித்த தடைகளை வரவேற்று, அவை “நல்ல நடவடிக்கை” எனக்கூறி, ஆனால் “இன்னும் அதிக நடவடிக்கைகள்” தேவை என்று கூறியுள்ளது. உக்ரைனில் மிகவும் பிற்போக்குத்தன சக்திகளைக் கட்டவிழ்த்து அதை உள்நாட்டுப்போர் விளிம்பில் நிறுத்தியபின், மேற்கு ஆளும் உயரடுக்குகளின் பிரிவுகள் இப்பொழுது தங்கள் ஏகாதிபத்திய நலன்களுக்காக உக்ரைனுக்குள் இன்னும் தீவிரமாக தலையீடு செய்யக்கூடியதின் மதிப்பீடுகளை விவாதிக்கிறன. அதன் ஞாயிறு பதிப்பில் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை பின்வருமாறு சுட்டிக்காட்டிக் குறிப்பிடுகிறது: “ஐரோப்பாவின் எரிசக்தி விநியோகங்களில் பெரும்பாலானவை உக்ரைன் மூலம் வருகிறது. வியாழன் அன்று மேற்கு பிராந்தியங்களூடாக குறுக்கே செல்லும் குழாய்த்திட்டங்களும் உள்ளூர் அரசாங்கங்களும் யானுகோவிச் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் சிக்கின.” ஜேர்னல் கூறுகிறது: “மூலோபாய யதார்த்தம் வாஷிங்டன் மட்டும்தான் உக்ரைனை மாஸ்கோவின் செல்வாக்கிலிருந்து வெளியேற்றும் முயற்சிக்கு தலைமை தாங்கலாம் என்பதாகும்.” ஐரோப்பிய ஒன்றியம் “பிளவுற்று, உறுதியற்று உள்ளது” என்று குற்றம்சாட்டும் இது, முடிவாக “1990களின் ஆரம்பத்தில் பால்க்கன் ஐரோப்பாவினால் தவறாக கையாளப்பட்டதுடனான கவலைக்குரிய ஒப்புமைகள் மிகவும் தொலைதூரத்தில் அல்ல.” எனக் கூறியுள்ளது. இன்றைய உக்ரைனின் நிலைமையை ஜேர்னல் 1990களின் பால்கன் போர்களுடன் ஒப்பிட்டு இருப்பது உக்ரைனில் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியக் கொள்கையின் ஆபத்துக்களை சுட்டிக்காட்டுகிறது. நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கு இடையே பினாமிப் போர்களை கட்டவிழ்த்தல் அல்லது நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நேரடிப் போரை கொண்டுவரக்கூடிய ஒன்று கொசொவோ போரின்போது 1999ல் பிரிஸ்டினா விமான நிலையத்திற்கு அருகே கிட்டத்தட்ட நடந்தது. |
|