தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
ஆசியாவில் யுத்த அபாயம்
Peter Symonds Use this version to print| Send feedback கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸில் "கிழக்கு சீனக்கடலில் யுத்தப் போக்கை முடிப்பீர்” என்ற தலைப்பில் வெளியான ஒரு தலையங்கம், ஜப்பான் மற்றும் சீனாவிற்கு இடையில் ஏற்படக்கூடிய ஒரு மோதல் குறித்து ஆளும் வட்டாரங்களில் அதிகரித்துவரும் எச்சரிக்கை உணர்வை எடுத்துக்காட்டியது. “யுத்தத்திற்கான சாத்தியக்கூறு, உலகம் முகங்கொடுத்து வருகின்ற மிகப் பெரிய பாதுகாப்பு அபாயங்களில் ஒன்றாக வேகமாக அதிகரித்து வருகிறது,” அந்த இரண்டு அரசுகளும் "மோதலை குறைக்க ஒன்றும் செய்வதாக இல்லை" என்று அது அறிவித்தது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலக பொருளாதார மாநாட்டில் ஜப்பான் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே வழங்கிய கருத்துக்களின் மீது FT ஒருமுனைப்பட்டிருந்தது. அதில் அவர், கிழக்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய போட்டியை முதலாம் உலக யுத்தத்திற்கு முன்னர் பிரிட்டனுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான போட்டியோடு வெளிப்படையாக ஒப்பிட்டு காட்டி இருந்தார். “ஜப்பானிய பிரதம மந்திரி ஐரோப்பாவின் 1914 உடன் எந்தவொரு ஒப்பீட்டையும் வழங்குவது அதிர்ச்சியூட்டுவதாகவும், எரியூட்டுவதாகவும் உள்ளது,” என்று அந்த தலையங்கம் குறிப்பிட்டது. ஜப்பானில் சென்காயு என்றும் சீனாவில் தியாவு என்றும் அறியப்படும் கிழக்கு சீன கடலில் உள்ள பாறைக்குன்றுகளின் மீது எழுந்துள்ள பிராந்திய உரிமைகோரும் பிரச்சினையே பதட்டங்களுக்கான உடனடி மூலக்காரணமாக உள்ளது. இருந்த போதினும், அப்பிராந்தியம் முழுதும் உள்ள ஏனைய பிரச்சினைகளோடு சேர்ந்து, இந்த அபாயகரமான வெடிப்பு புள்ளியை தூண்டிவிடுவதற்கான முக்கிய பொறுப்பு ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பில்" தங்கி உள்ளது. இந்த மூலோபாயம் சீனாவைப் பொருளாதாரரீதியில் மற்றும் இராஜாங்கரீதியில் தனிமைப்படுத்துவதை, மற்றும் அதை இராணுவரீதியில் சுற்றி வளைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. பிராந்திய பிரச்சினையில் "நடுநிலையோடு" இருப்பதாக போலித்தனமாக கூறி வருகின்ற அதேவேளையில், தீவுகள் மீதான ஒரு யுத்த சம்பவத்தில், அமெரிக்கா அதன் கூட்டாளியான ஜப்பானை ஆதரிக்கும் என்று வாஷிங்டன் மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது. அனைத்திற்கும் மேலாக, “முன்னெடுப்பின்" பாகமாக, ஒபாமா நிர்வாகம் ஜப்பானில் அதன் இராணுவ அடித்தளங்களை மறுக்கட்டமைப்பு செய்துள்ளதோடு, ஜப்பானை மீள்-இராணுவமயமாக்கம் செய்ய உற்சாகப்படுத்தி வருகிறது. 2014இல் ஆசியா, அதிர்ச்சியூட்டும் விதத்தில் 1914 ஐரோப்பாவை ஒத்திருக்கிறது. பிரதான சக்திகளுக்கு இடையில் எழுந்த அடக்கவியலா பிராந்திய மேலாதிக்க போட்டியிலிருந்து முதலாம் உலக யுத்தம் எழுந்தது. அப்போதைய தலைசிறந்த மார்க்சிஸ்டுகளான லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, அது — முதலாளித்துவத்தின் மரண ஓலத்தின் சகாப்தமான — ஏகாதிபத்திய சகாப்தம் திறந்து கொண்டதைக் குறித்தது. 2008இல் வெடித்த உலகளாவிய நிதியியல் நெருக்கடி, மோசமடைந்துவரும் உலகப் பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், ஒரு நூற்றாண்டிற்கு முந்தைய பயங்கரங்களை உருவாக்கிய எந்தவொரு அடிப்படை முரண்பாடுகளையும் முதலாளித்துவம் தீர்க்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா என ஒரு ஆக்கிரமிப்பு யுத்தம் மாற்றி இன்னொரு ஒரு யுத்தத்திற்குள் கடந்த தசாப்தத்தில் இறங்கி உள்ளது. அத்தோடு அதன் முன்கூட்டிய இராணுவ மேலாதிக்கத்தின் மூலமாக சார்புரீதியில் அதன் பொருளாதார வீழ்ச்சியை சரிகட்டும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில் பல்வேறு ஆத்திரமூட்டல்கள் மற்றும் சூழ்ச்சிகளில் இறங்கி உள்ளது. ஒபாமா ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டதும் மற்றும் ஆசியாவை நோக்கிய அவரது "முன்னெடுப்பும்", அமெரிக்க ஸ்தாபகத்திற்குள் இருந்த இந்த ஆழ்ந்த கவலைகளைப் பிரதிபலிப்பதாக இருந்தது: அதாவது, மத்திய கிழக்கு மீது புஷ் நிர்வாகத்தின் ஒருமுனைப்பானது, அதன் மலிவு உழைப்பு தளங்கள் உட்பட ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு குழிபறித்துவிட்டது, அனைத்திற்கும் மேலாக சீனாவின் பெருநிறுவன இலாபங்களுக்கு அவ்விடம் மையமாக மாறி இருந்தது என்பனவாகும். அமெரிக்கா, ஒபாமாவின் கீழ், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற அதன் கூட்டாளிகளை சீனா உடனான அவற்றின் பிரச்சினைகளில் கூடுதலான எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்க ஊக்குவித்தது; அமெரிக்க விமான மற்றும் கடற்படைகளின் 60 சதவீதத்தை இந்தோ-பசிபிக் பகுதிக்குள் "மறுசமன்" செய்ய தொடங்கியது; மற்றும் அதன் யுத்த தயாரிப்புகளின் பாகமாக ஆஸ்திரேலியா மற்றும் ஏனைய ஆசிய-பசிபிக் நாடுகளுடன் புதிய இராணுவ தளங்கள் அமைக்கும் ஏற்பாடுகளை ஸ்தாபித்து வருகிறது. அமெரிக்காவின் "முன்னெடுப்பு" ஜப்பானில் வலதுசாரி அபே அரசாங்கத்தின் எழுச்சியை பேணி வளர்க்க உதவியுள்ளது. ஓராண்டு இடைவெளிக்குள் அந்த அரசாங்கம் ஒரு தசாப்தத்தில் முதல்முறையாக இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளதோடு, ஆயுதமேந்திய ஜப்பானிய படைகளின் மீது அரசிலமைப்பின் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர நகர்ந்துள்ளது. யுத்தத்தில் இறந்தவர்களுக்கான அந்நாட்டின் இழிபெயர்பெற்ற யாசூகூனி நினைவுமண்டபத்திற்கு கடந்த மாதம் ஆத்திரமூட்டும் விதத்தில் அபே விஜயம் செய்தார். அது 1930கள் மற்றும் 1940களில் ஜப்பானிய இராணுவவாதத்தின் ஒரு பிரமாண்ட அடையாள சின்னமாக விளங்குகிறது. அபே ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களால் உந்தப்பட்டு வருகிறார், அது ஆசியாவில் ஒரு பிரதான சக்தியாக அதன் இடத்தை விட்டுகொடுக்க தயாராக இல்லை. டாவோஸில் அவர் வழங்கிய உரையில், “ஜப்பானை சூரியன் அஸ்தமனமாகும் ஒரு நாடென்று" வல்லுனர்கள் கூறியதற்கு மறுப்பாக, "ஒரு புதிய உதயம்" பிறக்கிறது என்று அபே அறிவித்தார். அவரது உரையின் இரண்டு கருப்பொருட்கள் சம அளவில் ஆக்ரோஷமாக இருந்தன – ஒன்று சீனா மீதான மெல்லிய-பூசிமொழுகிய விமர்சனங்கள், அத்தோடு சேர்ந்து மற்றொன்று போட்டியாளர்களுக்கு குழிபறிக்க வடிவமைக்கப்பட்ட மற்றும் "உலகில் வியாபாரத்திற்கு மிகவும் நேசமான இடங்களில்" ஒன்றாக ஜப்பானை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட அதிரடியான பொருளாதார முறைமைகள். சீனாவை 1914 ஜேர்மனியோடு இணைத்ததன் மூலமாக, அபே பெய்ஜிங்கை ஓர் ஆபத்தான புதிய அச்சுறுத்தலாக சித்தரிக்க முயல்கிறார். எவ்வாறிருந்த போதினும், ஜேர்மனியைப் போல், சீனா ஓர் ஏகாதிபத்திய சக்தி அல்ல. அதன் பொருளாதார விரிவுக்கு இடையில், அது வெளிநாட்டு பெருநிறுவன முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தை முற்றிலும் சார்ந்திருக்கும் ஒரு மலிவு உழைப்பு தளமாக, அத்தோடு தற்போதைய நிதியியல் மூலதனத்தின் மையமாக உள்ளது. இராணுவரீதியில், அமெரிக்கா அதிகளவில் மிக மிஞ்சிய பலம் பெற்றுள்ளது. அதன் உலகளவில் விரிந்துள்ள இராணுவத் தளங்கள் மற்றும் கூட்டணிகளின் வலையம், உலகில் எங்கு வேண்டுமானாலும் சீனாவின் நலன்களை அச்சுறுத்தக் கூடும். கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவால் கட்டங்கட்டப்பட்ட விதத்தில், சீனா ஒருபுறம் தலைமை பிரதான சக்திகளுக்கு மேலதிகமாக பொருளாதார விட்டுக்கொடுப்புகளை வழங்கி விடையிறுப்பு காட்டியுள்ளது, அதேவேளையில் மறுபுறம் சீன நிலப்பரப்பிற்கு அருகில் உள்ள கடல்பகுதிகளில் அதன் உரிமைகோரல்களை வலியுறுத்தியும் மற்றும் அதன் இராணுவ செலவினங்களை அதிகரித்தும் உள்ளது. பெய்ஜிங் ஆட்சி அதன் இராணுவ ஆயத்தங்களை நியாயப்படுத்த மற்றும் மூன்று தசாப்த கால முதலாளித்துவ மீட்சியால் உருவான அதீத சமூக பதட்டங்களில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப அது ஜப்பானிய-விரோத தேசியவாதத்தை தூண்டி வருகிறது. அதிகரித்துவரும் யுத்த ஆபத்து மீது கவனத்தைக் குவித்துள்ள அதேவேளையில், பைனான்சியல் டைம்ஸ் தலையங்கம், “இரண்டு தரப்பும் ஆரவாரமான போர்ப்பறையை நிறுத்தி, ஒன்றோடொன்று பேச்சுவார்த்தைகள் நடத்துமாறு" ஒரு பயனற்ற முறையீட்டை வழங்கியதைத் தவிர, வேறெந்த தீர்வையும் வழங்கவில்லை. தற்போதைய மோதலை அமெரிக்க "முன்னெடுப்பு" தூண்டியுள்ளதென்ற உண்மையை உதாசீனப்படுத்தி விட்டு, அமைதி மற்றும் நியாயத்தின் குரலாக வாஷிங்டன் தலையிடுவதற்கு அந்த தலையங்கம் முறையிட்டது. அபே மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் "மிகவும் கால தாமதம் ஆவதற்கு முன்னர் இறுதிப் போர்களத்திலிருந்து விலகி செல்லும் ஒரு பாதையை காண வேண்டும்," என்று முடித்திருந்தது. எவ்வாறிருந்த போதினும், 1914இல் இருந்ததைப் போல, யுத்த உந்துதலானது 2008 உலகளாவிய முறிவை அடுத்து முழுப் பலத்தோடு வெடித்த முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளால், அதாவது உலகளாவிய பொருளாதாரம் மற்றும் காலங்கடந்த தேசிய அரசு அமைப்புமுறைக்கு இடையிலான, மற்றும் உற்பத்தி கருவிகளின் தனியுடைமை மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கு இடையிலான முரண்பாடுகளால், எரியூட்டப்பட்டு வருகிறது. திவாலான இலாப அமைப்புமுறையை இல்லாதொழிப்பது மற்றும் சமூகத்தை ஒரு சிறிய செல்வந்த மேற்தட்டின் பெரும் இலாபத்திற்காக அல்லாமல், பரந்த பெரும்பான்மை மக்களின் சமூக தேவைகளைப் பூர்த்தி செய்யும் அடிப்படையில் சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பது மட்டுமே மனிதயினத்திற்கு தயாரிப்பு செய்யப்பட்டு வரும் பேரழிவைத் தடுப்பதற்கான கருவிகளாக உள்ளன. இந்த உடனடி பணியை செய்து முடிக்க, தேசியவாத மற்றும் தேசபக்தியின் அனைத்து வடிவங்களையும் நிராகரித்து, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஐக்கியப்பட்ட ஒரு சர்வதேச யுத்த-விரோத இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதை, மற்றொரு உலக யுத்த ஆபத்துக்கள் அடிக்கோடிடுகின்றன. |
|
|